கோபாலய்யங்காரின் மனைவி 1
(பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு 'கண்டதும் காதல்' என்ற கோபால அய்யங்காரின் இலட்சியத்துடன் - ஏன் பிரமை என்றும் கூறலாம் - முடிவடைகிறது. முடிவு பெறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ, என்னவோ? மனிதன், 'காதல் பெண்ணின் கடைக்கண் பணியிலே' அனலை விழுங்கலாம், புளித்த குழம்பையும் குழைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்னவோ? பின் கதையை என் போக்கில் எழுதுகிறேன். பாரதியின் போக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை) டெப்டி கலெக்டர் கோபாலய்யங்கார் தமது மனைவி மீனாட்சியை யழைத்துக் கொண்டு தஞ்சைக்கு வந்து ஒரு மாத காலமாகிறது. ஊரில் எல்லாம் பரபரப்பு, ஒரே பேச்சு, கோபாலய்யங்கார் இடைச்சியைக் கலியாணம் செய்து கொண்டார் என்பதுதான். எல்லாம் கிசுகிசு என்ற பேச்சு. எதிரில் பேச முடியுமா? அதுவும் அந்தக் காலத்தில்; அதுவும் தஞ்சாவூரில். சிலர் போயும் போயும் இடைச்சிதானா அகப்பட்டாள் என்று பேசிக் கொண்டார்கள். படியாதவர்கள், யாரோ இடைச்சியை இழுத்து வந்து வைப்பாக வைத்திருக்கிறார் என்று அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமான் செய்தி என்பதால் வேறு வழியின்றி நம்பிக் கொண்டார்கள். பியூன்களுக்கு அய்யங்கார் என்றால் சிறிது இளக்காரம்; அவர் முதுகுப்புறம் சிரிப்பார்கள். இவ்வளவும் கோபாலய்யங்காருக்குத் தெரியாது. அதாவது தெரிய சந்தர்ப்பம் வைத்துக் கொள்ளவில்லை. வீட்டிலே மீனாட்சிக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்க ஒரு கிறிஸ்துவ உபாத்தினி. முன்பிருந்த பிராமணப் பரிசாரகன் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டான். ஒரு நாள் மீனாட்சி சமைத்தாள். அதாவது அவள் குலாசாரப்படி சமைத்தாள். லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் இத்தியாதி பொருள்களுடன் தன் கைப்பாகமாக மிகுந்த ஜாக்கிரதையுடன் வைத்திருந்தாள். கோபாலய்யங்கார் குடிகாரர் தான்; ஆனால் மாமிச பட்சணியல்ல. மீனாளின் கண்களைப் பார்த்துக் கொண்டு இரண்டு கவளம் வாயில் போட்டார். அவ்வளவுதான். குடலைப் பிடுங்கியது போல் ஓங்கரித்து வாந்தி எடுத்தார். மாமிச உணவின் பாகம் என்ற நினைப்பில் ஏற்பட்டது. மீனாள் பதறித் தன் கணவன் தலையைத் தாங்கினாள். கோபாலய்யங்கார் போஜனப் பிரியர். பசி காதலை வென்றது. அவளை உதறித் தள்ளிவிட்டு வெளியே சென்று சேவகனைக் கூப்பிட்டு, பிராமண குமாஸ்தாவசம் ஹோட்டலில் இருந்து சாப்பாடு தருவித்தார். போஜனமான பிறகுதான் கோபாலய்யங்காருக்குத் தமது காதல் திரும்பியும் வந்தது. "மீனா" என்று கூப்பிட்டுக்கொண்டு உள்ளே வந்தார். "சாமீ" என்று எழுந்தாள் மூலையில் உட்கார்ந்திருந்த காதலி. அவள் கண்களில் இரண்டு துளிகள் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அகழியை எடுத்துக் காண்பித்தது. மீனாட்சி பணிப்பெண்; அதிலும் பயந்த பெண். மருண்ட பார்வை. கணவன் என்ற ஸ்தானத்தில் அவரை வைக்கவில்லை. தனது தெய்வம் என்ற ஸ்தானத்தில், அதாவது தனக்கு எட்டாத ஒரு ஸ்தானத்தில் இருக்கும் ஒரு இலட்சியம் என்று கருதியவள். எட்டாதது என்ற நினைப்பில் பிறந்த பயம் கணவன் இஷ்டப்படி நடக்கத் தூண்டியதேயல்லாது அவரிடம் தன்னை மறந்த பாசம், லயம் பிறப்பித்ததே கிடையாது. "என்ன மீனா! உனக்கு எத்தனை தரம் அப்படிக் கூப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். கண்ணா! இப்படி வா! என்ன இப்படி கறிக்குழம்பு வைத்தாய்?" என்றார். "இல்லிங்களே, இப்படித்தான் எங்க வீட்டிலே பருப்புக் கொளம்பு வைப்பாங்க" என்றாள். "அதை அப்பொழுதே சொல்லி இருக்கக் கூடாதா? ஹோட்டலில் சாப்பாடு எடுத்து வரச் சொன்னால் போகிறது. அது கிடக்கட்டும். இப்படி வா!" அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |