கலியாணி வாணிதாஸபுரம் என்பது ஒரு பூலோக சுவர்க்கம். ஆனால், இந்த சுவர்க்கத்தில் ஒரு விசேஷம். மேலே இருக்கும் பௌராணிகரின் சுவர்க்கம் எப்படியிருக்குமென்று அடியேனுக்குத் தெரியாது. ஆனால் இந்த சுவர்க்கத்தைப் பொறுத்தவரை, இது வாணியின் கடைக்கண் பார்வை ஒரு சிறிதும் படாத இடம் என்று எனக்குத் தெரியும். வாணிதாஸபுரத்திற்குப் போகவேண்டுமானால், ஜில்லா போர்டு ரஸ்தாவைவிட்டு மாமரம் நிறைந்த வாய்க்கால் கரை மீது அரை பர்லாங்கு நடக்க வேண்டும். ரஸ்தாவின் கீழ்ப் பாரிசத்தில் ஊர். அதன் பக்கத்தில்தான், கிழக்கே பார்த்த சிவன் கோயிலில் தொடங்கி, பத்துப் பதினைந்து வீடுகள் உள்ள அக்ரகாரம். பிறகு ஊர்ப் பொட்டல். சற்று வட பாகமாகப் போகும் சந்து, பிள்ளைமார் சந்து. அதற்கப்புறம் மறவர்கள் தெரு. இவ்வளவையும் கடந்துவிட்டால், வேளாளர் தெருவின் தொடர்ச்சியான மறவர் தெருவின் கடைசிக்கு வந்துவிட்டால், வயலும் குளமும். குளம் தடாகமன்று, வெறும் மண் கரையிட்ட ஏரி. சுற்றிலும் கண்ணுக்கெட்டியவரை கழனிகள். வான வளையத்தைத் தொடும் மூலையில் பச்சை மரங்கள்.
வாணிதாஸபுரம், வஞ்சனைச் சுழலிலும் தியாகப் பெருக்கிலும் செல்லும் நாகரிகத்தின் கறைகள் படியாதது. நாயக்கர்கள் காலத்தில் மானியமாகச் சிலருக்குக் கொடுக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அழியாத, மாறுதல் இல்லாத, நித்திய வஸ்துப் போல, பழைய பழகிய பாதைகளிலேயே அது ஓடிக்கொண்டிருக்கிறது. கிராமவாசிகள் உயிர் வாழ்தலைப் பொறுத்தவரை வெளியூருக்குச் செல்லவேண்டிய அவசியம் கிடையாது. செல்வதுமில்லை. வேண்டியதெல்லாம் சாப்பாட்டிற்கும் துணிக்குந்தானே! உடையைப் பொருத்தவரை 'கும்பினியான்' துணி வியாபாரத்தில் அதிக நம்பிக்கை. கிராமவாசிகளுக்கு உலகம் எந்தத் திக்கில் செல்லுகிறது என்ற அறிவும் கிடையாது. அறிய ஆவலும் இல்லை. சனிக்கிழமைச் சந்தைக்கு இலை காய்கறிகளைத் திருநெல்வேலிக்குக் கொண்டு சென்று, விற்று முதல் செய்துவிட்டு, அன்று 12 மணி நேரத்தில் அரைகுறையாகக் கேட்டதை மறு சனிக்கிழமைவரை பேசிக்கொண்டிருப்பதில் திருப்தியடைந்து விடுவார்கள் அந்த மகாஜனங்கள். கோயில் பூஜை, உபாத்திமைத் தொழில், உஞ்சவிருத்தி என்ற சோம்பற் பயிற்சி - இவைதான் அங்குள்ள பிராமண தர்மத்தின் பிரதிநிதிகளின் வாழ்க்கை இலட்சியம். வேளாண்மை என்ற சோம்பர்த் தொழில் அங்குள்ள பிள்ளைமார்களின் குல தர்மம். மறவர்கள் ஏவின வேலையைச் செய்தல், ஊர்க் காவல் என்ற சில்லறைக் களவு உட்பட்ட சோம்பல் தர்மத்தைக் கடைபிடித்தனர். பறைச்சேரி ஊரின் போக்குடன் கலந்தாலும், அல்லும் பகலும் உழைத்து உழைத்து, குடித்து, பேசிப் பொழுதைக் கழித்தது. ஊருக்கு, கிராம முனிஸீப்பு சுந்தரம் பிள்ளை, பண்ணையார் ராமையாப் பிள்ளை, சுப்பிரமணிய பண்டாரம், சிவன் கோயில் அர்ச்சகர் சுப்புவையர் - இவர்கள் எல்லோரும் 'பெரிய' மனிதர்கள். எல்லோரும் ஏக மட்டம்; ஏனென்றால், தற்குறிப் பேர்வழிகள். அவர்களில் 'மெத்தப் படித்தவாள்' என்று கருதப்பட்டவரே பிரமரியை எட்டிப் பார்க்கவில்லை. எழுத்துக் கூட்டி வாசிப்பவர்கள். தமிழ்ப் படிப்புத் தெரியும் என்று கூறுவார்கள். ஆனால் வாழ்க்கைக்கு அவசியமான உலக அநுபவம் உண்டு; 'படித்தவர்'களைப் போல் அவர்கள் வடிகட்டின அசடர்கள் அல்லர். 2 அர்ச்சகர் சுப்புவையர் ஏறக்குறைய மெஜாரிட்டியைக் கடந்துவிட்டவர். குழந்தை குட்டி கிடையாது. தமது 45வது வயதில் 'மூத்தாளை' இழந்துவிட, இரண்டாவது விவாகம் செய்து கொண்டவர். இளையாள் வீட்டிற்கு வந்து சிறிது காலந்தான் ஆகிறது. அவள் சிறு குழந்தை. 16 அல்லது 17 வயதுள்ள கல்யாணி, சுப்புவையரின் கிரகத்தை மங்களகரமாக்கவே அவரது சமையற்காரியாகக் காலம் கழித்தாள். சுப்புவையர் மன்மதனல்லர். அதுவும் 50 வயதில் ஒருவரும் மன்மதனாக இருக்க முடியாது. விதிவிலக்காக ருசியான பக்ஷணங்களுடன் விருந்து சாப்பிடும் யாரும் வயிற்றை ஆலிலை போல் ஒட்டியிருக்கச் செய்ய முடியாது. நரைத்த குடுமியுடன், பஞ்சாங்கத்திற்கு ஒத்தபடி க்ஷவரம் செய்து கொள்வதாகச் சங்கற்பமும் செய்து கொண்டால் நிச்சயமாக எவரும் மன்மதனாக இருக்க முடியாது. சுப்புவையர் சாதுப் பேர்வழி; கோயிலுண்டு, அவருண்டு. வேறு எந்த ஜோலியிலும் தலையிடுகிறதில்லை. வேளைக்கு வேளை நாவிற்கு ருசியாக உணவு கொடுத்து, தூங்கும்பொழுது கால் பிடித்துவிட்டு, தொந்தரவு செய்யாமலிருப்பதே மனைவியின் லட்சணம் என்று எண்ணுபவர். அதிலும் ஏறக்குறைய இருபது வருடங்களாகப் பழகி, திடீரென்று தன்னை விட்டுவிட்டு இறந்துபோன மூத்தாள் மீது அபாரப் பிரேமை. அவருக்கு அது பழக்கதோஷம். அவளைப் போல் இனி யார் வரப்போகிறார்கள் என்ற சித்தாந்தத்தில், கலியாணியின் பாலிய அழகும் சிச்ருஷையும் தெரியாது போய்விட்டன. கலியாணி அவளும் ஏழைப் பெண்தான். உபாத்திமைத் தொழில் பார்த்துவந்த சாமிநாத கனபாடிகளின் மகள். அவ்வூரிலேயே பிறந்து, வெகுகாலமாக மாமாவென்றும் சித்தப்பாவென்றும் அழைத்துவந்த ஒருவரைக் கணவராகப் பெற்றவள். ஏழையாகப் பிறந்தால் அழகாகப் பிறக்கக் கூடாது என்ற விதியிருக்கிறதா? கலியாணியின் அழகு, ஆளை மயங்கியடிக்கும் மோக லாகிரியில் பிறந்த காமசொரூபம் அன்று. நினைவுகள் ஓடிமறையும் கண்கள், சோகம் கலந்த பார்வை! அவளது புன்னகை ஆளை மயக்காவிட்டாலும் ஆளை வசீகரிக்கும். அப்படி வசீகரிக்கப்படாதவன் மண் சிலைதான். சுப்புவையரும் அவர் வழிபடும் லிங்க வடிவத்திலிருக்கும் 'விரிசடைக் கடவுளின்' உருவச் சிலையின் ஹிருதயத் துடிதுடிப்பை ஏறக்குறையப் பெற்றிருந்தார். கலியாணி வாலைப் பருவத்தினள். அதிலும் இயற்கையின் பரிபூரண சக்தியும் சோபையும் கொந்தளிக்கும் நிலையிலுள்ளவள். எதற்கெடுத்தாலும் தன்னை மரக்கட்டையாகக் கருதி, இறந்த மூத்தாளின் பெருமையை நினைத்து உருகும் சுப்புவையரின் எண்ணங்களைத் தன் வசம் திருப்புவது என்று கங்கணம் கட்டிக் கொண்டவள்; அதாவது, உள்ளூர அவளறியாமலே இயற்கை அந்த வேலையில் அவளைத் தூண்டியது. அவர் வார்த்தைகள் அவளது வாலிப அழகின் முகத்திலடித்தன. அவரைக் கவர்ச்சிக்கக்கூடியபடியெல்லாம் தனது பெண்மைக் குணங்களைப் பயன்படுத்தினாள். சுப்புவையர் மசிகிற பேர்வழியாகத் தெரியவில்லை. கலியாணியும் ஒரு பெண்ணாயிற்றே, அவளுக்கும் இயற்கையின் தேவையும் தூண்டுதலும் இருக்குமே என்ற ஞானம் சிறிதும் கிடையாது போயிற்று சுப்புவையருக்கு. அப்பொழுதுதான் சைத்ரிகரான சுந்தர சர்மா அங்கு வந்தார். 3 அப்பொழுது முன்வேனிற்காலம். பனி நீங்கிவிட்டது. வாய்க்காலில் ஜலமும் வற்றிவிட்டது. பயிர்கள் அறுவடையை எதிர்பார்த்துத் தலைசாய்ந்து நின்றன. குளத்தில் நீர் வற்ற இன்னும் இரண்டு மூன்று மாதமாகும். ஊருக்குக் குடிதண்ணீர் குளத்திலிருந்துதான். ஆற்றிற்கு நடக்க முடியாதவர்களும், நடக்கப் பிரியமில்லாதவர்களும், குளத்திலேயே ஜலம் எடுத்துக் கொள்ளுவார்கள். சுந்தர சர்மா அக்ரகாரத்தில் ஒரு காலிக் குச்சு வீட்டில் வாடகைக்கு இருந்துகொண்டு, சாப்பாட்டிற்குச் சுப்புவையர் வீட்டில் வாடிக்கை வைத்துக் கொண்டார். வரும்பொழுது அவர் மனம் களங்கமற்ற மத்தியான வானம் போல் இருந்தது. எப்பொழுதும் குளக்கரையிலோ அல்லது வாய்க்கால் கரையிலோ இருந்துகொண்டு, இரண்டு மூன்று மாட்டுக்காரப் பையன்கள் வேடிக்கை பார்க்கச் சித்திரம் தீட்டிக்கொண்டிருப்பது அவரது பொழுதுபோக்கு. சில சமயங்களில் மத்தியானச் சாப்பாட்டிற்கு வர இரண்டு அல்லது மூன்று மணியாகிவிடும். சில சமயம் காலைச் சாப்பாடு இல்லாமலேயே சென்றுவிடுவார். வருவது எந்த நேரமென்பதில்லை. கலியாணி அவரைத் தனது சகோதரன் போல் பாவித்துவந்தாள். ஆனால், உள்ளம் அவரைக் கண்டவுடன் பயத்தினால் சலிக்கும். அவர் வந்து இரண்டு மூன்று நாட்களுக்கு அவருக்குச் சாப்பாடு போடுவது என்றால் வியர்த்து விருவிருத்து முகஞ் சிவந்துவிடுவாள். காரணம் சர்மா வாணிதாஸபுரத்தினரைப் போல் அல்லாது, சற்று நாகரிகமாகவும் சுத்தமாகவும் உடையணிந்துகொள்வதுதான். ஆனால், அவரது கிராப்புத் தலை கழுத்து வரை வளர்ந்து மறைத்திருந்தாலும், எப்பொழுதும் சீர்குலைந்தே முகத்திலும் காதிலும் கிடக்கும். கறுத்த கண்கள் எப்பொழுதும் எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பது போல எதையாவது நோக்கற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். 4 அன்று சுந்தர சர்மா வருவதற்குச் சாயங்காலமாகிவிட்டது. காலையிலேயே சென்றவர். மத்தியான போஜனத்திற்குக்கூடத் திரும்பவில்லை. வரும்பொழுது நன்றாக இருட்டிவிட்டது. வரும் வழியிலேயே குளத்தில் குளித்துவிட்டு நேராகத் தமது குச்சு வீட்டிற்குச் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு, சுப்புவையரின் வீட்டையடைந்தார். அன்று அவருக்குப் பசி. சுப்புவையர் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்ததால் இவரைக் கண்டதும், "என்ன அய்யர்வாள் பகல்லே கூடச் சாப்பிடல்லை என்று சொன்னாளே; இப்படியிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?... அடியே, சர்மா வந்திருக்கார், இலையைப் போடு! இன்னும் விளக்கை ஏன் ஏற்றிவைக்கவில்லை! நேக்குத் தெரியுமே! அவள் இருந்தா வீடு இப்படிக் கிடக்குமா? பகவான் செயல்!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று, குத்துவிளக்கின் மேல் இருக்கும் மாடக் குழியில் தீப்பெட்டியைத் தேடினார். சமையல் உள்ளிலிருந்த கலியாணியும் கையில் அகல்விளக்குடன் வந்து குத்துவிளக்கை ஏற்றினாள். "என்னடி, விளக்கை ஏன் ஏற்றக் கூடாது? இவ்வளவு நேரமும் என்ன பண்ணினே?" "ஏற்றினேனே! மங்கியிருக்கும் திரியைத் தூண்டாதிருந்துவிட்டதினால் அணைந்துவிட்டது. சாதத்தை வடிச்சுண்டிருந்தேன்!" என்றாள் கல்யாணி. "சரி, சரி! எனக்குத் தெரியுமே! வீடும் வாசலும் கெடக்கிற கெடையைப் பார்த்தால் நன்னாயிருக்கு, பெருக்கிவிட்டுச் சீக்கிரம் இலையைப் போடு!" என்றார். கலியாணியின் முகம் சிவந்தது. அந்நியர்கள் முன்பாகவும் இம்மாதிரிப் பேசுகிறாரே என்று அவள் உள்ளங் கலங்கியது. 'அவர் என்ன நினைப்பார்!' என்ற நாணம், எல்லாம் சுறுக்குச் சுறுக்கென்று தைக்கும் வார்த்தைகள், இவை அவள் உள்ளத்தைக் குழப்பிவிட்டன. சரேலென்று உள்ளே சென்றுவிட்டாள். அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. "இன்று எங்கே போயிருந்தேள்?" என்றார் சுப்புவையர். "அணைக்கட்டுப் பக்கம் போயிருந்தேன். வேலை முடிவதற்கு நேரமாகிவிட்டது. மத்தியானம் வெய்யிலில் வருவானேன் என்று நினைத்தேன். நாளைக்கு அல்லது மறுநாளைக்குக் கொழுந்து மாமலைப் பக்கம் போகலாம் என்று நினைக்கிறேன். போவதை இப்பொழுதே சொல்லிவிட்டால் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லையல்லவா?" என்று சிரித்தார் சர்மா. இதற்குள் கலியாணி கதவோரத்தில் நின்று கொண்டு, "என்ன செய்றேள்? சொம்பில் ஜலம் வைத்திருக்கிறேன்!" என்றாள். "இந்தாருங்கள், கால் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்!" என்று சர்மாவிடம் ஒரு செம்பு ஜலத்தைக் கொடுத்துவிட்டுத் தானும் கால் முகம் கழுவினார். இருவரும் உள்ளே சென்று குத்துவிளக்கின் முன்பு போடப்பட்டிருந்த இலைகளின் எதிரே உட்கார்ந்து கொண்டனர். அன்று இருவருக்கும் பரிமாறுவதென்றால் பிராணன் போவது போலிருந்தது. முதலில் சுப்புவையருக்குச் சாதத்தைப் படைத்தாள். கை நடுங்கியதினால் சிறிது சிதறிவிட்டது. "எனக்குத் தெரியுமே! இப்படிச் சிந்திச் சிதறினால் வாழ்ந்தாற் போல் தான்! பார்த்துப் போடக்கூடாதா? போதும், போதும்!" என்றார். பிறகு மனத்திற்குள்ளாகவே, "அவள் இருந்தால்... கர்ம பலன்!" என்று முனகிக் கொண்டார். இவ்வார்த்தைகள் கலியாணிக்குக் கேட்டன. ஏற்கனவே குழம்பிய மனம் மேலும் கலங்கிவிட்டது கைகள் இன்னும் அதிகமாக நடுங்கின. சர்மாவுக்குப் படைப்பதற்காகக் குனிந்தாள். பதற்றத்தில் தட்டிலிருந்த சாதம் முழுவதும் இலையில் கவிழ்ந்துவிட்டது. சர்மா, 'போதும்' என்று இடைமறித்தார். அவரது புறங்கை மீது ஒரு குவியல் மட்டும் தடைப்பட்டு நின்றது. 'போதும்' என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே தட்டிக்கொண்டிருக்கும் பிரகிருதி அசடா அல்லது அதற்குக் குறும்பா என்று நோக்கினார். அவர் சற்று அண்ணாந்து பார்த்ததும் அவர் எதிர்பார்த்ததற்கு விபரீதமான காட்சி! பயம் - கூச்சத்திலும், குத்து வார்த்தைகளிலும் ஏற்பட்ட பயம் - என்பது முகத்தில் எழுதி ஒட்டியது போல் மிரண்ட பார்வை! அவர் பார்த்ததும் அவளுக்கு இன்னும் மிரட்சி யதிகமாயிற்று. அந்தக் குழப்பத்தில் அவர்கள் கைகள் சந்தித்தன. அவள் கண்களில் ஆறுதலை எதிர்நோக்கும் குழந்தையின் வருத்தம்; அழுகை துடிதுடிக்கும் உதடுகள். ஒரு கணம் இருவரும் ஒரே பார்வையில் அசைவற்றிருந்தனர். மறுகணம் அவள் நிமிர்ந்து திரும்பிப் பாராது வேகமாக உள்ளே சென்றுவிட்டாள். சர்மாவின் உள்ளத்தில் அது ஒரு விலக்க முடியாத சித்திரமாகப் பதிந்தது. மறுபடியும் கலியாணி எத்தனையோ தடவை வந்து பரிமாறினாள். ஆனால், ஒரு கணமாவது சர்மாவைப் பார்க்கவில்லை. ஆனால், சர்மா அவளது உள்ளத்தைத் துருவும் பார்வைகளைச் செலுத்தினார். அவை பாறைகளில் பட்ட கல்லைப் போல் பயனற்றுப் போயின. 'காரணம், காரணம்?' என்று அவர் உள்ளம் அடித்துக் கொண்டது. சாப்பிட்டுவிட்டுப் பேசாது நேரே தமது குச்சு வீட்டிற்குச் சென்று, தமது உள்ளத்துடன் போராடிக் கொண்டிருந்தார். அவரது உள்ளம் கலியாணியைத் தன்னுள் ஐக்கியமாக்கியது. அவள் அழகு சர்மாவின் சைத்ரிகக் கண்களுக்குப் பல நீண்ட காவியங்களாகத் தோன்றிற்று. அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை; தமது கனவுகளுடன் போராடிக்கொண்டிருந்தார். ***** அன்று சாப்பாடு முடிந்தவுடன், சுப்புவையர், வெற்றிலைச் செல்லத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, வெளியே வந்து உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போடலாம் என்று பெட்டியைத் திறந்தார். வெற்றிலை பாக்கு எல்லாம் இருந்தன. ஆனால் சுண்ணாம்பு மட்டும் காய்ந்து காறைக் கட்டியாக இருந்தது. "ஜடம்!" என்று கூறிக் கொண்டே, "அடியே!" என்று உள்ளே தலையை நீட்டிக் கொண்டு கூப்பிட்டார். சமையல் உள்ளில் தனது மனத்துடன் போராடிக் கொண்டிருந்த கலியாணி, "என்ன?" என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தாள். "அட ஜடமே! உனக்கு எத்தனை நாள் சொல்லுவது - செல்லத்தில் எல்லாம் சரியாயிருக்கிறதாவென்று பார்த்து வை என்று? மூணாது இல்லையே! அர்த்த ராத்திரியிலே யார் கொடுப்பார்கள்? போய் ஒரு துளி ஜலம் எடுத்துண்டு வா! ஒன்னைக் கட்டிண்டு அழரதைவிட ஒரு உருவத்தைக் கட்டிண்டு மாரடிக்கலாம். தொலை, சீக்கிரம்." அவளும் போனாள். "குடியும் குடித்தனமும் - எல்லாம் சொல்ல வேண்டியதில்லை!" என்று வைதார். கலியாணி உள்ளே சென்று, ஒரு டம்ளரில் ஜலம் கொண்டு வந்து வைத்துவிட்டு, அவர் பாயையும் தலையணையையும் எடுத்து உதறிக் கூடத்தில் விரித்துவிட்டு, மறுபடியும் உள்ளே சென்று விட்டாள். அன்று பசி வேறா வரப்போகிறது! அவள் மனம் எங்கெல்லாமோ சுற்றியது. சர்மாவைப் பற்றி அடிக்கடி அவளையறியாமல் அவள் உள்ளம் நாடியது. ஆனால், தனது கணவர் அந்நியர் முன்பும் இப்படிப் பேசுகிறாரே என்ற வருத்தம். ஏங்கி ஏங்கி யழுதாள். அழுகையில் ஓர் ஆறுதல் இருந்தது போல் தெரிந்தது. மறுபடியும் "அடியே!" என்ற சப்தம். "என்ன?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து சென்றாள். "இன்னும் சாப்பிட்டு முடியவில்லையா? இந்தக் காலைப் பிடி! அப்பா! முருகா! சம்போ, சங்கரா!" என்று கொட்டாவிவிட்டுக் கொண்டே பாயில் படுத்துக் கொண்டார் சுப்புவையர். "என்னடி, மேலெல்லாம் எச்சல் பண்ராய்? ஓரெழவும் தெரியல்லே, என்ன ஜன்மமடா?" என்றார். கலியாணி சற்று நேரம் மௌனமாக இருந்தாள். அவரிடம் ஒன்று கேட்கவேண்டுமென்று துணிச்சல் பிறந்தது. "பாருங்கோ!" என்றாள். "உம், போதும் பிடித்தது!" என்றார் ஐயர். அவர் கையை மெதுவாக எடுத்துத் தன் மார்பின் மீது வைத்துக் கொண்டு, "அவாள் முன்னெல்லாம் என்னைப் பேசுகிறீர்களே! நான் என்ன செய்துவிட்டேன்?" என்று சிரிக்க முயன்றாள். கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அவள் புன்னகை பரிதாபகரமாக இருந்தது. "எதற்காக? உனக்குப் புத்தி வரத்தான்! என்ன சொல்லியும் ஒன்னும் உறைக்கவில்லையே! அவள் இருந்தாளே, ஒரு குறையுண்டா? எல்லாம் கணக்கா நடந்தது. கிரகலட்சுமி என்றால் அவள்தான். சொன்னால் போதுமா?" "அவள், அவள் என்கிறீர்களே? நான் என்ன செய்துவிட்டேன்? இப்படித் திரும்பிப் பாருங்கோ! இப்படியிருக்கும்பொழுது சொன்னால் கேக்கமாட்டேனோ!" "கையை விடு! எனக்குத் தூக்கம் வந்துடுத்து. என்னைப் படுத்தாதே!" என்று சொல்லிவிட்டுச் சுவர்ப்புறம் திரும்பிக் கொண்டு குறட்டை விடலானார். கலியாணிக்கு நெஞ்சில் சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்தது. தனது ஸ்பரிசம் சிறிதாவது அவரை மனிதனாக்கவில்லையே என்றதில் ஒரு ரோஷம், சிறிது கோபமும் கூட. அன்று முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. அவள் உள்ளம் எண்ணங்களுடன் போராடிக் கொண்டிருந்தது. அன்று முழுவதும் கலியாணிக்குத் தூக்கம் எப்படி வரும்! தூரத்திலே, எங்கிருந்தோ ஒரு வெளிச்சம் தன்னை அழைப்பதுபோல் ஓர் உணர்வு. அது தன்னை வாழ்விக்குமோ அல்லது தகித்துவிடுமோ என்ற பயம் அவளைத் தின்றுகொண்டிருந்தது. கணவர் தன்னிடம் என்ன குறை கண்டார்? ஏன் இப்படி உதாசீனமாக இருக்க வேண்டும்? அதற்குக் காரணம் தனது குறையா அல்லது அவரது... அவருக்குக் குறை எப்படிச் சொல்ல முடியும்? இப்படியே அவள் அன்று முழுதும் தூங்கவில்லை. பாயில் படுத்து புரண்டுகொண்டிருந்தாள். சற்று ஒரு புறமாகப் புரண்ட சுப்புவையர் பிரக்ஞையில்லாது கையைத் தூக்கிப் போட்டார். அது அவள் மார்பில் அம்மிக் குழவி மாதிரிப் பொத்தென்று விழுந்தது. மயக்கம் கலைந்தது. பயம்! பிறகு புருஷனின் கைதான் என்ற உணர்ச்சி. அதில் ஒரு சாந்தி பிறந்தது. அந்தப் போதையில் அவளுக்குக் கண் கிறங்கியது. தூங்கிவிட்டாள். நடைமுறை உலகத்தில் இல்லாவிட்டாலும், கனவு உலகத்திலாவது கணவன் சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருப்பது போல் அன்று அவளுக்குத் தோன்றியது. காலையில் கலியாணி எழுந்திருக்கும்பொழுது என்றும் இல்லாதபடி வெகுநேரமாகிவிட்டது. எழுந்ததும் குடத்தை எடுத்துக் கொண்டு நேராகக் குளக்கரைக்குச் சென்றாள். 5 அன்று இரவு முழுவதும் சுந்தர சர்மாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை என்றால் வியப்பில்லை. இத்தனை நாட்களும் தமது மனத்திரையை விலக்கி அவளைப் பார்க்காததற்கு ஆச்சரியப்பட்டார். அந்த ஆச்சரியம் அவரை எங்கெங்கோ இழுத்துக் கொண்டு சென்றது. அவரோ சைத்ரிகர் - அழகுத் தெய்வத்தின் அடிமை! கலியாணியின் சோகம் தேங்கிய கண்கள் அவருக்குக் கற்பனைக் கதையாக, காவியமாகத் தெரிந்தது. அன்று இரவு முழுவதும் உள்ளம் கட்டுக் கடங்காமல் கொந்தளித்தது. சுப்புவையர், பாவம், அது ஒரு பிரகிருதி. அவர் வசம் கலியாணி பிணிக்கப்பட்டால் விதியின் அற்பத்தனமான லீலைகளை உடைத்தெறிய ஏன் மனம் வராது? அவரை மனிதனாகவே சர்மா நினைக்கவில்லை. அவரது சிறையிலிருந்து அவளை விடுவிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதில் கலியாணியின் சம்மதம் - அதைப் பற்றிக் கூட அவருக்கு அதிகக் கவலையில்லை. அவளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டால்... வாழ்க்கை எவ்வளவு இன்பமாக இருக்கும்! இலட்சியத்திற்கு அவள் எவ்வளவு பெரும் ஊக்கமாக இருப்பாள். மனிதப் புழுக்களே இல்லாத, மனிதக் கட்டுப்பாடற்ற, மனித நாகரிகம் என்ற துர்நாற்றம் வீசாத கானகத்தில் வாழ்க்கையையே ஓர் இன்பப் பெருங்கனவாகக் கழித்தால் என்ன? அன்று முழுவதும் அவர் உள்ளத்தில் ஓடிய எண்ணங்கள் ஒரு நிரந்தரப் பைத்தியக்காரனுடைய உள்ளத்தையும் தோற்கடித்துவிடும். இரவு முழுவதும் விளக்கு அணைக்கப்படவில்லை. மூலையில் சன்னலை யொட்டியிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு விளக்கையே கவனித்துக் கொண்டிருந்தார். விளக்கின் சிமினி கரிபிடித்து மேலே புகையடைந்து வெளிச்சத்தை அமுக்கியது. இரண்டு நிமிஷம் விளக்கு 'பக் பக்' என்று குதித்தது. அவ்வளவுதான், அதுவும் அணைந்துவிட்டது. அறை முழுவதும் இருட்டு. உள்ளே உட்கார்ந்திருக்க முடியவில்லை. மேல் வேஷ்டியை எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே சென்றார் விடிந்துவிட்டது. ஆனால் நட்சத்திரங்கள் மறையவில்லை. கிழக்கே சற்று வெளுப்பு - வெள்ளைக் கீறல் மாதிரி. சர்மாவுக்குக் காலையில் நடப்பது மனத்திற்கு நிம்மதியாக விருந்தது. அவர் வாய்க்கால் கரை வழியாகவே நடந்து கொண்டிருந்தார். சற்றுத் தூரம் சென்றவுடன் வயல் வரப்புகளின் மீது நடக்க ஆரம்பித்தார். தேகந்தான் ஏதோ யந்திரம் மாதிரி நடந்து கொண்டிருந்தது. மனம் மட்டும் தங்குதடையின்றிக் கலியாணியின் பின் சென்று விட்டது. "கலியாணியை அழைத்துச் சென்றுவிட்டால்? அதற்கு இசைவாளா? அதற்கு என்ன சந்தேகம்? பிறகு எங்கு போவது? எங்கு போனால் என்ன மனிதன் இருக்கும் இடத்தைத் தவிர...?" சூரியோதயமாகிவிட்டது. முகத்திற்கு நேரே வெய்யில் விழுந்து கண்கூச ஆரம்பித்ததும், சர்மாவுக்கு 'வெகுதூரம் வந்துவிட்டோம்' என்ற எண்ணம் தோன்றியது. உடனே திரும்பி, குளத்தில் குளித்து விட்டுப் போவதென்று அப்பக்கமாகத் திரும்பி நடந்தார். வெய்யிலின் சூடு நிமிஷத்திற்கு நிமிஷம் அதிகமாகிறது. முதுகு பொசுக்கப்படுவது போல் காலை வெய்யில் தகிக்கிறது. அப்பா! குளக்கரை வந்துவிட்டது. குனிந்துகொண்டு மேட்டில் ஏறி, கரையின் மீது வளர்ந்திருந்த மரத்தடியில் நின்று முகத்தைத் துடைத்துக் கொண்டார். இரண்டு மூன்று வினாடிகளில் கண் கூச்சம் விலகியது. குளத்தில் யாருமில்லை. யாருமில்லையா? மரத்தின் மறைவில் ஜலத்தில் நின்று கொண்டு கலியாணி தனது ஈரப்புடவையைப் பிழிந்து உடுத்திக் கொண்டிருந்தாள். ஈரம் சொட்டும் கூந்தல் முதுகை மறைத்தது. கன்னத்திலும் தோளிலும் குளக்கரையில் நன்றாக விளக்கிவைத்திருந்த குடத்திலும் கிளைகளின் ஊடே பாய்ந்த சூரியவொளி பிரதிபலித்து மின்னியது. "அப்பா! வர்ணப் பெட்டியும் படம் எழுதும் திரைச் சீலையும் எடுத்து வரவில்லையே!" என்று நினைத்தார் சர்மா. கலியாணிக்கு அவர் இருப்பது தெரியாது. தனிமை என்ற மன மறைவில் தனது ஈரப்புடவைகளை எடுத்து உதறிக் கொசுவி உடுத்திக் கொண்டாள். ஈரப்புடவையில் நின்ற அந்த அழகு அவருக்கு மஜும்தாரின் சித்திரத்தை நினைவூட்டியது. குனிந்து குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு கலியாணி கரையேறுவதற்குத் திரும்பினாள். அவள் முன்பு சர்மா வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் திகைத்துவிட்டாள். முகம் முழுவதும் சிவந்துவிட்டது. கண்கள் மிரண்டு அவரையே வெறித்து நோக்கின. சர்மாவுக்கு அவளிடம் பேசவேண்டுமென்ற ஆசை. எப்படிப் பேசுவது? என்ன சொல்லுவது? "நான் இன்று கொழுந்து மாமலைப் பக்கம் போகிறேன். நேற்றுப் போல் இன்றைக்கும் பட்டினியாக இருந்துவிடாதீர்கள்? நான் வராவிட்டால் பட்டினி இருப்பதாவது? அதென்ன பைத்தியக்காரத்தனம்?" என்று சிரித்தார். அவர்கள் உள்ளம் இருந்த நிலையில், இம்மாதிரியான பேச்சு, அபாயகரமான துறைகளிலிருந்து விலகி நிம்மதி அளிப்பது போல ஒரு பிரமையை உண்டு பண்ணியது. கலியாணிக்கு இவ்வார்த்தைகள் கொஞ்சம் தைரியத்தையளித்தன. அவரிடம் பேசுவதற்கு மனம் ஆவல்கொண்டது. உள்ளத்தின் நிம்மதி கன்னத்தின் சிவப்பைச் சிறிது குறைத்தது. "ஆண் பிள்ளைகள் சாப்பிடுமுன் கொட்டிக் கொண்டு, அவாளுக்குக் கல்லையும் மண்ணையுமா போடுவது? இப்பவே போரேளா? காலையிலே ஏதாவது சாப்பிட வேண்டாமா? அங்கு சாப்பாட்டிற்கு..." என்றாள். "இப்பொழுது சாப்பிட வருகிறேன். மத்தியானத்திற்கு என்ன? அதை நான் பார்த்துக்கொள்ளுவேன். ஏது இவ்வளவு நேரம்? எப்பொழுதும் அருணோதயத்தில் ஸ்நானம் ஆகிவிடுமே?" என்றார். அதற்கு அவள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவள் முகம் மறுபடியும் சிவந்தது. இரவு பட்ட வேதனையும் ஓடிய எண்ணங்களும் மறுபடியும் அவள் மனத்தில் தோன்ற ஆரம்பித்தன. அவரைப் பரிதாபகரமாகப் பார்த்துவிட்டுக் கரையேறி, வீட்டை நோக்கி நடந்தாள். அவரைத் தாண்டிச் செல்லும்பொழுது அவள் ஈரப்புடவை அவர் மீது பட்டது. சர்மாவுக்கு அவளை அப்படியே பிடித்து ஆலிங்கனம் செய்யக் கரங்கள் துடித்தன. ஆனால், தமது கனவுக்கோட்டை இடிந்து பாழாகிவிட்டால் என்ன செய்வது என்ற பயந்தான் அவரைத் தடுத்தது. சர்மா குளித்துவிட்டு நேராகக் கலியாணியின் வீட்டையடைந்தார். அப்பொழுது சுப்புவையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார். வீட்டில் கலியாணியைத் தவிர வேறு ஒருவருமில்லை. இவ்வரவை எதிர்பார்த்திருந்த கலியாணி, இலையைப் போட்டுச் சுடுசாதம் எடுத்து வைத்தாள். "என்ன! ஏது, இதற்குள் சமையலாகிவிட்டது? ஏன் இவ்வளவு அவசரம்!" என்றார் சர்மா. அவருக்குச் சாப்பாடு செல்லாததற்குக் காரணம் பசியின்மையன்று. "இன்னும் கொஞ்சம் குழம்பு போட்டுச் சாப்பிடுங்கள்" என்றாள் கலியாணி. அன்று அவளுக்கு வாய்ப்பூட்டுத் திறக்கப்பட்ட மாதிரி இருந்தது. அவரிடம் பேசுவதில் ஓர் ஆறுதல். "காலையில் சுடுசாதம் சாப்பிட முடியுமா?...அவர் எங்கே? கோவிலுக்குப் போயிருக்கிறாரா? எப்பொழுது வருவார்?...கொஞ்சமாகப் போடுங்கள், போதும்!" என்றார். சாப்பாடு முடிந்தது. கை கழுவ ஜலம் வெளியில் வைக்கப்படவில்லை. பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்ற கலியாணி வரச் சிறிது தாமதாயிற்று. சர்மா பின்புறம் சென்று கை கழுவிக் கொண்டு, சமையலறைப் பக்கமிருந்த தாழ்வாரத்தின் பக்கம் வந்தார். "ஐயோ! ஜலம் வைக்க மறந்துவிட்டேனா! இந்தாருங்கள், இதை மத்தியானத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள்!" என்று ஒரு சிறு பொட்டலத்தைக் கையில் கொடுத்தாள். "இதென்ன? எனக்கு ஒன்றும் வேண்டாம் என்றேனே!" என்றார். "தோசை! கொஞ்சந்தான் வைத்திருக்கிறேன். மத்தியானம் பூராவும் பட்டினியிருக்கவாவது?" என்றாள் கலியாணி. அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சுவது போல் அவளுடைய கண்கள் அவரை நோக்கின. சர்மா, "கலியாணி!" என்று கம்மிய குரலில் அவளையழைத்துவிட்டு, அப்படியே இழுத்து ஆலிங்கனம் செய்து அதரத்தில் முத்தமிட்டார். கலியாணியும், கட்டுண்ட சர்ப்பம்போல் தன்னையறியாது கொந்தளித்த உள்ளத்தின் எதிரொலிக்குச் சிறிது செவிசாய்த்துவிட்டாள். பிரக்ஞை வந்தது போல் நடைமுறைச் சம்பிரதாயங்கள் அவளைத் தாக்கின. தனது வலிமையற்ற கைகளால் பலமுள்ளவரை அவரை நெட்டித் தள்ளிவிட்டு, முகத்தைத் திருப்பி, "என்னை விட்டுவிடுங்கள்!" என்று பதறினாள். சர்மா தமது கைகளை நெகிழ்த்தினார். கலியாணி விலகி நின்று கொண்டு, "என்ன போங்கள்!" என்று அவரைத் தண்டிப்பது போல் நோக்கினாள். சர்மா, "கலியாணி, நான் சொல்வதைக் கேள்!" என்று மறுபடியும் நெருங்கினார். கலியாணி சமையலறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள். உள்ளிருந்து விம்மி விம்மி அழும் குரல் கேட்டது. "கலியாணி! கலியாணி!" பதில் இல்லை. சர்மாவும் கலங்கிய உள்ளத்துடன் வெளியே சென்றார். கொழுந்து மாமலைக்குச் செல்வது அவருக்கு நிம்மதியை யளிக்கலாம். 6 கலியாணிக்கு அன்று முழுவதும் மனம் ஒன்றிலும் ஓடவில்லை. முதலில் பயம், தவறு என்ற நினைப்பில் பிறந்த பயம். ஆனால் சர்மாவின் ஸ்பரிசம் அவள் தேகத்தில் இருந்து கொண்டிருப்பது போன்ற நினைவு சுகமாயிருந்தது. அவள் உள்ளத்தின் ரகசியத்தில் சர்மாவின் ஆசைகள் எதிரொலித்தன. அன்று முழுவதும் அவளுக்கு ஓரிடத்திலும் இருப்புக் கொள்ளவில்லை. சுப்புவையர் மத்தியானம் வந்தார். அவருடைய இயற்கைப் பிரலாபத்துடன் போஜனத்தை முடித்துக் கொண்டு நித்திரை செய்ய ஆரம்பித்தார். கலியாணிக்கு அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் பரிதாபமாக இருந்தது. தன்னை 'மூத்தாளைப் போல்' இருக்கவில்லை என்று வைதாலும், தன் மீது ஓர் அந்தரங்கமாக நம்பிக்கை வைத்திருப்பதால் அதை மோட்சம் செய்வதா என்று எண்ணினாள். கலியாணிக்கு இரண்டையும் ஏக காலத்தில் பிரிய மனமில்லை. வீடு, பேச்சு, சம்பிரதாயம் இதையெல்லாம் உடைக்க மனம் வரவில்லை. சுப்புவையரை ஏமாற்றவும் மனம் துணியவில்லை. இருளில் வழி தெரியாது தவிக்கும் பாதசாரி, ஏதாவது ஒன்றைத் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானது என்று சங்கற்பித்துக் கொண்டு அதை நோக்கிச் செல்லுவது போல், தன் கணவர் நித்தியம் பூஜை செய்யும் கோவிலுக்குச் சென்று கலங்கிய உள்ளத்திற்குச் சாந்தியை நாடினாள். கோவில் மூலஸ்தானத்தின் இருளுக்கு இவளது மன இருள் தோற்று விட்டதாகத் தெரியவில்லை. மூலஸ்தானத்தின் மங்கிய தீபவொளியில் லிங்கம் தெரிவது போல் சர்மாவின் முகம் தான் அவள் அகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அன்று இரவு கலியாணி சுப்புவையர் பக்கத்தில் உட்கார்ந்து கால் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதிகாலையில் எழுந்து ஆற்றிற்குச் சென்று குளித்துவிட்டு வருவதற்கு அனுமதி கேட்டாள். காரணம், சர்மாவின் மீது ஆசையிருந்தாலும் அவரைச் சந்திக்காதிருக்க வேண்டுமென்ற நினைப்பு. "விடியக் காலத்தில் ஏன் நதிக்கு...?" என்றார் சுப்புவையர். "குளத்தில் ஜலம் வற்றி நாற்றமெடுக்கிறதே என்று யோசித்தேன்!" என்றாள். "சரி, சரி, போய்ட்டு வாயேன்; அதுக்கென்ன கேள்வி வேண்டியிருக்கு? நேக்குத் தூக்கம் வருகிறது, சும்மா தொந்தரவு செய்யாதே!" என்று மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார். கொழுந்து மாமலைக்குச் சென்ற சர்மாவுக்கு வேலை ஓடவில்லை. அன்று முழுவதும், கலியாணி என்ன நினைப்பாளோ, அவளை மறுபடியும் எப்படிப் பார்ப்பது என்பதே யோசனை. அன்று இரவு முழுவதும் காட்டிலேயே இருந்துவிட்டார். அப்பொழுதும் சாந்தி பிறக்கவில்லை. அதிகாலையில் சென்று சாமானை எடுத்துக் கொண்டு ஊரைவிட்டே போய்விடுவது என்று நினைத்துக் கொண்டு திரும்பினார். கொழுந்து மாமலை ஆற்றுக்கு அக்கரையில் இருந்தது. ஊருக்கு வரவேண்டுமானால் ஆற்றைக் கடந்துதான் வர வேண்டும். மணி மூன்று இருக்கும்பொழுது ஆற்றங்கரையை யடைந்தார். மனத்தில் சாந்தி பிறக்கவில்லை. உள்ளம் பேய் போலச் சாடியது. இன்னும் நன்றாக விடியவில்லை. ஆற்றில் யாரோ துணி துவைப்பது போலச் சப்தம். இவ்வளவு அதிகாலையில் அங்கு யார் வர முடியும்? "யாரது?" என்றார். "யாரது?" என்ற பதில் கேள்வி பிறந்தது. குனிந்து துவைத்துக் கொண்டிருந்த உருவம் நின்றது. ஒரு பெண் - கலியாணி! "கலியாணி! நீயா இங்கு!... இந்த நேரத்தில்! பயப்படாதே! நான் தான் சர்மா!" "நீங்களா!" அவள் சொல்லி முடியுமுன் சர்மா அவளை அப்படியே தழுவிக் கொண்டார். அவள் விலக முயன்றாள். இருவரும் தடுமாறிப் பாதி ஜலத்திலும் பாதி மணலிலும் விழுந்தனர். கலியாணியின் முகத்திலும் அதரத்திலும் மாறி மாறி முத்தமிட்டார். கலியாணி தடுக்கவில்லை. அவருடைய போக்கிற்கெல்லாம் தடை செய்யவில்லை. சற்று நேரம் கழிந்தது. "கலியாணி!" "என்ன?" "என்னுடன் வந்துவிடு! இந்த மனித நாற்றமே அற்றவிடத்திற்குச் சென்றுவிடுவோம்!" "ஐயோடி! அது முடியாது!" அந்த மங்கிய வெளிச்சத்திலும் அவளது மிரண்ட பார்வை மின்னியது. "பிறகு...?" "எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நீங்கள் சொல்லுகிற மாதிரி... அதற்குப் பயமாக இருக்கிறது!" சர்மாவுக்கு உலகம் அர்த்தமற்ற கேலிக்கூத்துப் போலும், அசட்டுத் தனம் போலும் பட்டது. "கலியாணி, நான் போகிறேன்!" என்றார். "எங்கே? போகவேண்டாம்! இங்கேயே இருந்துவிடுங்கள்!" "சீ! அது முடியாத காரியம். என்னுடன் வா!" என்று கையைப் பிடித்தார். "முடியாது!" மறுபடியும் அக்கரைப் பக்கம் ஒரு மனித உருவம் சென்று இருளில் மறைந்தது. கலியாணியின் வாழ்க்கை - அலையில் ஒரு குமிழி உடைந்து போயிற்று. ஊழியன், 15-02-1935 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |