இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
புதிய உறுப்பினர்: Vanitha Suresh, Selvaraj Kanakasabapathy (20-09-2019)
மொத்த உறுப்பினர்கள் - 277
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

  புதிய வெளியீடு!


சேற்றில் மனிதர்கள்

(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

20

     நீர், பசுமை, மரம், செடி, புதர் எல்லாமே இருட்டுத் தான்.

     ஆனால் வடிவுக்கு எல்லாம் துல்லியமாகத் தெரியும். அந்த இடத்து மண்தறி ஒவ்வொன்றுக்கும் அவனுடன் உறவாடிய பரிச்சயமுண்டு.

     மடையில் குலங் குலங்கென்று தவளைகள் பூரித்துப் பாடும் இனிய ஒலி அவனுக்கு மிக ரம்மியமான சங்கீதம். இந்த மண்ணும் நீரும் சில்லிப்பும் தன் உடலிலிருந்து வந்தாற்போலும், அந்தக் கலவையிலேதான் உருவானாற்போலும் பேதமற்று உணரும் உணர்வு.

     இதற்கு முகம் வாய் வார்த்தை கிடையாது.

     வீச்சு வீச்சென்று சுள்ளிப் பயலாகக் கோவணத்தைப் பாய்ச்சிக்கொண்டு குட்டை மாட்டுக்கு ஜோடி சேர்த்து முதன்முதலாக நாயக்கர் நிலத்தில் ஏரோட்ட இறங்கிய காலம் நினைவிருக்கிறது. வெண்மையும் நீலமும் கருமையுமாக மின்னும் உடலுடன் காது வெட்டிக் கொம்பு சீவிக்கொண்டு வந்த வெம்பளச்சேரி சோடியை ஆற்றுக்கரையில் தேய்த்துக் குளிப்பாட்டிக் கொட்டிலுக்குக் கொண்டுபோகும்போது அவனுக்கு மண்ணும் மாடும் தனக்குச் சொந்தமில்லாதவை என்ற உணர்வே இருந்ததில்லை.

     உழவோட்டவும், களியில் நடக்கவும், உரம் வீசவும், மருந்து தெளிக்கவும், நாற்றுப் பறித்துக் கட்டுச் சுமந்து வந்து வீசவும் அவன் களியாட்டங்களைப் போல் கற்று, அவை அவன் இளமையுடன் இசைந்திருக்கிறது.

     “ஏண்டா வடிவு? அரி பழுத்துட்டாப்பல இருக்கு. நாளக்கிக் காலம புதிர் கொண்டாந்திடு!” என்று முதலாளி அவனைத்தான் கொண்டு வரச் சொல்வார்.

     “போன குறுவக்கி மாமன் சாவுன்னு போயிட்டீங்க. மழ நெருக்குதுன்னு நானே புதுர் எடுத்தே. மேனியே காணல...” என்றார் சென்ற ஆண்டில்.

     பழக்கப்பட்ட காலே வழுக்கும் வகையில் வானம் யாருக்காகவோ கண்ணிர் வடிப்பதுபோல் அவனுக்கு இன்று தோன்றுகிறது. தடியை ஊன்றிக்கொண்டு விரைகிறான்.

     அம்மா பொட்டுக் கடலையும் வெங்காயமும் வைத்துத் துவையல் அரைத்திருந்தாள். சுடுசோறும், வறுத்த கருவாடும் துவையலுமாக வயிறு நிறைய உண்டுவிட்டு அவன் புறப்பட்டிருக்கிறான்.

     நிறைந்த வயிரும் வெளிக் குளிர்ச்சியும் அவனுக்கு மனம் நிரம்பிய உற்சாகத்தை ஊட்டவில்லை. இவ்வாறு மழைக்கார் குவிந்து பொழிவதும் பின்னர் சற்றே ஓய்ந்து மறுபடி ஒரு பாட்டம் கொட்டுவதுமாக இருக்கும் நாட்களில் கண்மாய் மடையில் துணியைக் கட்டிவைத்து மீன் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் செல்வான். வடிவுக்கு இப்போதெல்லாம் அந்த மாதிரியான ஆர்வங்களே பிறக்கவில்லை.

     கால் அவன் மனக் குழப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வயலுக்குள் நழுவ வழுக்குகிறது. பயிர் மிதிபடும்போது, பாம்பை மிதித்தாலும் ஏற்படாத குளிரோட்டத்தில் சிலிர்க்கிறது.

     தவளைகளின் ஒலியையும், நீர்பாயும் ஓசையையும் தவிர வேறு உயிர்ப்பே தெரியாத இருளில் அவன் நடந்தும் ஓடியும் போகிறான்.

     இலுப்பை மர மேடு, பச்சை மரத்துக்குள் படபடவென்று சிறகை அடித்துக்கொள்ளும் பறவைகள்... கால்வாய்; இருமருங்கிலும் தாழை செழித்த புதர்கள்... குளத்தில் நீர் தெரியாமல் மைத்தட்டாக மூடிக் கிடக்கிறது.

     மேலே போட்டிருக்கும் சாக்குக் கொங்காட்டில் நீர்த்துளி விழுந்து கனமாகக் கனக்கிறது.

     ஐயனார் குளத்துக் கோயிலில் முன்பெல்லாம் ஒரு விளக்கு எரிவதுண்டு. இந்த எண்ணெய் விலையில் கோயிலுக்கு யார் விளக்கெரிப்பார்கள்? குதிரைவீரனுக்கும் ஐயனாருக்கும் பூசையும் விழாவும் கிடையாது. இப்போதைக்கு இந்த மேட்டில் இறந்தவர்களைப் புதைக்கும் பூசைதான் நடக்கிறது!

     ஒரு குடிசையில்கூட ஒளியின் உயிர்ப்பில்லை.

     இவன் போய் திண்ணை முழுவதும் இரட்டை விரிச்சாக்கால் போர்த்துக் கொண்டிருக்கும் வீட்டுப்படி ஏறுகிறான்.

     “பஞ்சி...! பஞ்சி...!” கைத்தடியால் தட்டுகிறான்.

     திண்ணையிலிருக்கும் ஆட்டின் கழுத்துமணி அசைகிறது.

     நாய் செவியடித்து ஓசை எழுப்புகிறது.

     கதவைத்திறந்து சிம்னி விளக்கை உயர்த்தும் பஞ்சமிக்கும் ஒரே ஆச்சரியம்!

     “அண்ணே!... வாங்கண்ணே! அட மழல நனஞ்சிட்டா வந்தீங்க...”

     அவன் சாக்கை உதறித் திண்ணையில் போடுகிறான்.

     “இன்னாருங்க!... அண்ணா வந்திருக்கு, அண்ண..!”

     சோலை திடுக்கிட்டாற்போல் எழுந்திருக்கிறான்.

     “சட்டையெல்லாம் நனஞ்சிருக்கி...!”

     “இல்ல... மேல துண்டுதா... அதுங்கூட ரொம்ப இல்ல.”

     விளக்கைப் பெரிதாக்கி வைத்துப் பாயை இழுத்துப் போட்டு “உக்காருங்க அண்ணே...” என்று பஞ்சமி உபசரிக்கிறாள்.

     வடிவு வேட்டிச் சுருட்டில் நனையாமல் வைத்திருக்கும் ஐயர் கடைச் சேவு பொட்டலத்தை எடுத்து வைக்கிறான்.

     “என்னா, இந்நேரத்துல வந்திருக்கீங்க. பொளுதோட வாரதில்ல?”

     “பொழுதோட வாரணும்னுதா பாத்தே. நேரமாயிப் போச்சு...”

     “மழ நல்லதுதா. பெய்யிற நாளுல ஊத்துனாத்தான பயிருக்கு நல்லது! உங்க பக்கம் என்னப்பு கோயில்ல திருட்டுப் போச்சாம், வீரபுத்திரனப் புடிச்சி அடச்சிருக்காங்களாம்!”

     “அந்த வவுத்தெரிச்சல ஏங் கேக்குறிய...? இவுங்க சாமி இந்த அக்கிரமத்தப் பாத்துக்கிட்டிருக்கிறதுதா எனக்குப் புரியல. நா இப்ப அதுவிசயமாத்தா வந்தது. இவனுவ அக்கிரமத்துக்கு நாம பேசாம இருந்திட்டே இருந்தா என்னக்கி விடிவுகாலம் வருது...”

     அவன் எதுவும் பேசாமல் இவன் முகத்தையே பார்க்கிறான்.

     “இப்பதா பாத்திட்டு வாரே. இங்க எதுனாலும் சீக்கு செவாப்புன்னு மொட வந்தாகுளத்தில வுழுந்துதா சாவணும் போல இருக்கு!...”

     “தாசில்தாருட்ட பிடிசன் குடுத்திருக்கு...”

     “கிளிச்சாங்க. இவனுவளுக்கு அக்குசு இருந்தால்ல? போடால, வயல்ல எறங்கிப் பொணத்தக் கொண்டிட்டுப் போங்கன்னு சொல்லிட்டு இவரு போயிட்டாரு. வயல்ல எறங்கியிருந்தா அவனுவ சும்மா விடுவானுவளா? அங்க குடிசயப் பேத்துப் போட்டானுவொ. என்ன மயிரு பண்ணினாரு தலவரு? மவன ஓட்டிவிட்டாரு, மவள ஓட்டிவிட்டாரு. சேத்துக்க மாட்ட, நடுத்தெருவிலே நிக்கவச்சி செருப்பாலடிப்பேன்னாரு, இப்ப ஒரு ஒடன்படிக்க மாதிரி திரும்பி வந்திடிச்சாம்!...”

     “யாரண்னே? காந்தியா?...”

     “ஆமாம். ஒழப்பாளி ஒழப்பாளியச் சொறண்டுற கதயாயிருக்கு. இப்ப கிளாசு எடுக்கிறாங்களாம், மயிரு! இவரு சொந்த வூடு கட்டியாச்சு. இப்ப வெளியாளு ஒருத்தன் வாரா. சைக்கிளத் தள்ளிட்டு அவன் வாரதும் போரதும்! அவன் பு...ர...ச்...சி...ன்னு பலவயில எழுதிப் போட்டுப் பாடங் கத்துக்குடுக்கறதும் அம்சுவக் கூட்டி வுடுறதும்...?”

     முகம் சிவப்பேறுகிறது அவனுக்கு.

     “இவங்க என்னிக்கு இதெல்லாம் எழுதிக் கத்துக்கிட்டுப் புரட்சி பண்ணுற வரயிலும் நாம சாவுறம். ‘வீணா கத்தி ஆப்ப்பாட்டம் பண்ணாம போங்க’ன்னாரு அவன் ஆரோட கையாளு? போலீசு... எங்காளு குத்தவாளி இல்லண்ணு எழுதிக் குடுக்கிறதுன்னா குடும்பா. கோர்ட்டில வந்து பாரும்பா. முணு புள்ளக, கிட்டம்மா பொம்புள பாவம். மாதர் சங்கம்னு உருட்டி மிரட்டிட்டு வருமே! அது ஒரே நாள்ள வேவுடியாயிடிச்சி..?”

     கைவிளக்கில் ஒரு பீடியைக் கொளுத்திக் கொண்டு அவனுக்கும் ஒன்று கொளுத்திக் கொடுக்கிறான் சோலை.

     அந்தக் காரப் புகையின் மணம் சூழலின் அசமஞ்சத்தனத்துக்கு விருவிருப்பூட்டுகிறது.

     பஞ்சமி கூறுகிறாள்:

     “இத, நாட்டாம பொம்பளக்கி மாசம். முன்ன மொதப் பொஞ்சாதி புள்ள பெத்துதா கழிச்சிக் கண்டு பாவம் செத்துப் போச்சி. அப்ப தரிசாக் கெடந்திச்சி. தூக்கிட்டுப் போனாங்க. இதுக்கு முதப்புள்ள வகுத்திலியே செத்துப்போச்சி. அப்ப புதுக்குடி ஆசுபத்திரில வச்சிருந்தாவ. இப்ப மூணாவது. ஆசுபத்திரிக்குப் போவாணாம்னு அது எங்கியும் போவல. காலெல்லாம் நீர்க்கொண்டு இருக்கு... பாவம்...”

     “அதா, இவனுவள நம்பிப் பிரேசனமில்ல. கோயில்ல பந்தப் போடுறா செங்க சிமிட்டி எங்கேந்து வாரதுன்னு தெரியல. நமக்கு ஒரு ஆவத்துன்னா அஞ்சு ரூவா குடுக்க, ஒதவி செய்ய நம்மகிட்டயே ஆருமில்ல. அறுப்புக்காலத்துல எதானும் சம்பாரிச்சா, வட்டி குடுக்கவே நெல்லு செரியாப்போவுது. நாளெல்லாம் ஒழச்சிட்டு, ரேசன் கடையில ஒண்ணுட்டொரு நாளு போடுற அரிசிய வாங்கியாந்து அர வயித்துக்குக் கஞ்சி காச்சறோம். ஆ, ஒண்ணா, அரிசனனுக்கு கடன், அரிசனனுக்கு ஆடு, அரிசனனுக்குப் பள்ளிக்கொடம்ன்றா! எந்தப்பய வங்கில கடன் குடுக்கிறான், ஈடு எதுமில்லாம? எவன் நமக்குச் சாமீன் போட வரான்? ஆரோ குடுக்கிறான், ஆரோ வாங்கிக்கிறான்; அப்பிடியப்பிடியே போவுது! பள்ளிக்குடுத்துக்கு ஏண்டால அனுப்புறதில்லன்னு கேக்கறாங்க. ஒரு துணி தச்சிக் குடுக்க முடியல. பாப்பாத்தி மவன பள்ளிக்கொடத்துக்கு அனுப்பிச்சி, ஆனா பாடும்பட்டு எட்டாவது வாரயில கண்ணு தெரியலன்னு சொல்லிட்டேயிருந்தான், பெயிலாயிட்டான். ரெண்டு வருசமா, இப்ப ஒழவுக்குத்தான வாரா...”

     அந்த இரவின் அந்தரங்கமான தனிமையில், வடிவின் நெஞ்சப் புகைச்சல் கிளர்ந்து உள்ளிருக்கும் ஆற்றாமைகளைத் தள்ளி வருகிறது.

     இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் என்ன செய்வது; மழை சேர்ந்தாற்போல் ஐந்தாறு நாட்கள் பெய்தால், வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டியதுதான். வருசம் முழுவதுமா கூலி இருக்கிறது?

     சோலை எழுந்திருக்கிறான்.

     “எங்க போற இப்ப?...”

     “நாட்டாம வூட்ட போயிக் கூட்டியாரேன்.”

     “கூட்டிட்டு வா மச்சான், இன்னிக்கி ரெண்டில ஒண்ணு தீத்துக்கணும். சொன்ன பேச்சு மாறுற நாணயங்கெட்டவ நம்ம எனத்துலதா இருக்கிறதா...”

     மீசையில் கை போகிறது.

     “நீ வந்திருக்கிறது அப்பாருக்குத் தெரியுமா அண்ணே?”

     “நா நெனச்சிட்டு வந்தே. அவருக்கு சாராயம் வாங்கிக்க காசு கெடச்சா போதும். கடவீதில போயி, அந்தையிரு வந்திருக்காரு, இந்த பண்ண முதலாளி வந்திருக்கிறாருன்னு கை நீட்டி ஒண்ணு அரைன்னு கேக்குறாரு, பிச்ச வாங்குற மாதிரி. மொதலாளி வூட்டுக் கெழவனாருக்கு சாராயம் வாங்கிக் குடுக்க இவரு ஆளு... பேரணி போனாங்க; நாம் போறேன்னு கெஞ்சுனே. வுட்டாரா? போடாலா, உனக்குத்தா அம்சுவக் கட்டப்போறன. அப்ப போலாண்டான்னாரு... இப்ப வெளியாளக் கூட்டிப் போவுறதுமா...”

     கைத் தின்பண்டம் பறிபோன குழந்தை போல் துக்கம் பீறிடுகிறது அவனுக்கு.

     “நீ என்னாமோ சொன்ன, என்னன்னாலும் அந்தாயா, அந்தப் பொம்பிள எல்லாரும் நாந்தொட்டுகூட எதும் எடுக்கல, அன்னிக்கு வூடு இல்லாம அவங்கூட்டுக்குப் போயிருந்தமில்ல?... அப்ப பாத்தனே, மொதலாளி நல்லவரு, பொம்பிளங்க வாணான்னிருப்பா. வாய்க்காரு குடிப்பொண்ணு, சாம்பாரு எனத்திலே போயி ஏண்டா கட்டணும், நம்ம புள்ளக்கி மாப்பிளயா கெடக்காதுன்னிருப்பாங்க... நீ ஏ அண்ணே இதுக்குப் போயி குமஞ்சிட்டிருக்கிற?...”

     “அப்படி இல்ல பஞ்சி, ஒனக்குத் தெரியாது; அம்சு என்னத்தான் கெட்டும். முன்னல்லாம் அது நடவுக்கு வரும். நாயக்கர் வூட்டுச் சாணி அள்ளிப்போட்டுப் போட்டு கொளத்துல வந்தும் குளிக்கும். இப்ப ஒரெடத்துக்கு அத்தவுடறதில்ல. போனா ஆயி கூடதா போவுது. கண்ணுல படாம காபந்து பண்ணியிருக்காங்க. ஆனா, அந்தப் பய கிளாசெடுக்க வாரான். ரோஸ்ல பூச்சீல. கட்டிக்கிட்டு முன்னாடி வந்து உக்காந்திருக்கா. கூடவே ருக்மணிப்பொண்ணு.”

     “அண்ணே, போனாப் போவுது. ஊருல ஒனக்குப் பொண்ணா இல்ல? இத இப்பந்தா மாங்கொம்புலேந்து இவரு மாமன் வந்திருந்தாரு. உம்மச்சானுக்கு இந்த வருசம் கட்டுவாங்கல்ல? தனவாக்கியம் இருக்கு. ‘மேசராயி சடங்கு சுத்தி ரெண்டு வருசமாயிடிச்சி, வெளுப்பா இருக்கும் பொண்ணு’ன்னு சொன்னாரு. கம்மல் மூக்குத்தி அல்லாம் போட்டிருக்காவளாம், ஸிலுவர் ஏனம் இருவத்தொண்ணு எடுத்து, மாப்பிளக்கி வாட்ச் மோதரம் அல்லாம் போட்டுக் கலியாணம் பண்ணுவோம்னு சொன்னாரு, மழவக்காளிச் சிரிச்சின்னா ஒரு நா போயி, இந்தப் பயலையும் காட்டிட்டு எல்லாஞ் சொல்லணும்னு நெனைச்சே, நீயே வந்திட்ட...”

     “இத பாரு பஞ்சி, ஒருமா நெலம் சொந்தம்னு இல்லாம, ஒரு காத்து மழக்கி கமுக்கா குந்த எடம் இல்லாம, நாங் கலியாணம் கட்டப் போறதில்ல...”

     “போண்ணே... அதெல்லாம் எப்ப வந்து, நீ எப்ப கலியாணம் கட்டுகிறது?”

     “உனக்குத் தெரியாது. புரட்சி வரும். ரத்தப் புரட்சி. அதெல்லாம் வராம, இவங்க ஒண்ணும் வழிக்கு வாரப் போறதில்ல...”

     பஞ்சமி அவன் கண்களில் ஒளிரும் தீவிரத்தைக் கண்டு உள்ளுற பயந்து போகிறாள்.

     வாயிலில் அடிச்சத்தங்கள் கேட்கின்றன.

     நாட்டாண்மை கத்தி மீசையும் போர்வை போர்த்த மேனியுமாக முன்னே வருகிறான்.

     வீரன், ராசப்பன், சங்கிலி ஆகிய நால்வர் வந்திருக்கிறார்கள்.

     வீரன் நாட்டாண்மைச் சாம்பாரின் தம்பி. சங்கிலி வீரனின் மச்சான். ராசப்பன் அந்தக் குடியிருப்பில் ஐந்தாவது வரை படித்தவன்.

     “என்னடா வடிவு, வாய்க்கார் மகளக் கட்டப் போறதா பேச்சு வந்திச்சி...”

     இவனுக்கு மீசை துடிக்கிறது. நாட்டாண்மை உட்கார்ந்து கொள்ளப் பாயை நகர்த்திப் பஞ்சமி மரியாதை செய்கிறாள்.

     “எதும் நெருக்கடி இல்லாம இந்த நேரத்துல வரமாட்ட? என்னமோ சொல்லிட்டா, கோயில்ல திருட்டுப் போச்சாம். முப்பது ஏனமாம்? போலீசு வந்திச்சாமே?...”

     “ஏனமில்ல பெரி... சாமானுங்களாம். இவனுவ கொள்ளயடிச்சிட்டு, கங்காணம் பாக்குற பண்ணக்காரனப் புடிச்சிப் போலீசில அடச்சிருக்கிறானுவ...”

     “என்னமோ பொம்பிள திருடினான்னு சொன்னானுவ!”

     “பொம்புள யாரு? அதுவும் சூட்சிதா. நாம இத்தினி நா அக்கிரமத்துக்குப் பொறுத்தோம். இனியும் பொறுக்கிறது அநியாயம். இப்ப, நாம எதிர்ப்பைக் காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நம்ம எனத்து ஆளு, வீரபுத்திரன். அவன அநியாயமா போலிசில புடிச்சி அடச்சிருக்கா. நாம நூறு ஆயிரம் பேராப் போயி போலீஸ் டேசன வளச்சி, அவன விடுவிச்சிட்டு வந்திடணும்.”

     பீடிப்புகையை ஊதிக்கொண்டு சுவாரசியமாக நாட்டாமை இவனைப் பார்க்கிறான். “உங்க பக்கம் அல்லாம் வாரானுவளா?”

     “வருவானுவ. அம்மங்கோயில், கண்டானூருக்கெல்லாங் கூட ஆளுவ போயிருக்கா. டேசன ஒடச்சி, அவன விடுதல பண்ணனும். காதும் காதும் வச்சாப்புல ராவோடு போயித் தாக்கிடணும்...”

     “அது சரிதாம்பா. இந்த எடத்தில அவம் போலீசு டேசன் இருந்திச்சின்னா. நீ சொல்றது சரி. இவனுவ வாரான்னு சொன்னதுமேயில்ல அவங்க உஜாராயிடுவாங்க? சும்மா திபுதிபுன்னு காருலயும் ஜீப்பிலும் வந்து எறங்கி வேட்டையில்ல ஆடுவானுவ?”

     “ஆமா, நமுக்கு அத்தினி பேருக்கும் கைகாலில்ல? தடி கம்பு, கல்லு, மம்முட்டி, அருவா எல்லாங் கொண்டு போகமாட்டோம்?”

     “...அது சரி. நீங்க ஆளுவ போறதுக்குள்ள அவன் உஜாராயிருப்பாண்டா?. இத, இதுக்குள்ளாற போலீசுக்கு சமாசாரம் போயிருக்கும்; இந்த பன்னாடப் பயலுவ தாக்கப் போறானுவன்னு...”

     “அதெல்லாம் போயிருக்காது. ரொம்ப கமுக்கமா ஏற்பாடாவுது...”

     “சம்முக வாய்க்காரு கெட்டிக்காரருதா, நல்ல தலவருதா. ஆனா, அன்னைக்கு இங்க செத்தவள வச்சிட்டு, அந்தப் பிச்சுமுத்துகிட்ட கால்ல வுழுந்து கெஞ்சினோம். அப்ப. அவங்கிட்டப்போயி, இல்ல சுந்தரத்தையா, சின்ன நாயக்கரு, ஆரிட்டன்னாலும் சொல்லி, எங்களுக்குப் பொணம் கொண்டுபோக வழி பண்ணினாரா? என்ன மயிராச்சின்னு போயிட்டானே?”

     “இப்ப நாங்கமட்டும் போலீஸ் டேசன ஒடச்சி ஒங்க ஆளுவளக் கொண்டிட்டு வரணுமாக்கும்? அவன் கெடு வச்சிட்டு இங்க வந்து பொம்பிளங்களக் குலச்சிப் போடுவான்? நாங்க இப்ப என்னமோ சொல்லிட்டுப் போனாருன்னு பேரணிக்கு இந்த ராசப்பனும் நானும் போயிருந்தோம். எல்லாம் வெவரமாக் கேட்டு எளுதிக் குடுத்திருக்கு இந்தத் தபா, பயிரு அறுத்த பெறகு எங்களுக்குப் பாதை வுடணும். ரோடு போடணும். இல்லன்னா... ஜாடாவும் ராவுத்தர் பக்கம் போவுறதுன்னு முடிவு செஞ்கிட்டோம்.”

     வடிவு கிணறுவெட்டப் பூதம் புறப்படுவதை எதிர்பார்த்திராததால் சற்றே திகைக்கிறான்.

     “இப்ப் சம்முக வாய்க்காரு அனப்பி நா வந்தன்னு ஆரு சொன்னது?”

     “பின்ன... யாரனுப்பிச்சி வந்த?...”

     “யாரனுப்பணும்? நமுக்கு அறிவில்ல? சோத்துல உப்புப்போட்டுத் தின்னல?”

     “அப்ப நீயா இதெல்லாம் ரோசன பண்ணிட்டு வந்தியா ஏண்டால...?”

     “இல்ல. இப்ப நாஞ்சொல்லமாட்டே நமுக்குப் பின்னாடி படிச்சவங்க, நமுக்காக ரத்தம் சிந்தத் தயாரா இருக்கிறவங்க இருக்காங்க. தெனவெடுத்தவந்தா சொறிஞ்சிக்கணும். சேத்தில கெடக்கிறவங்க நாமதா... நாம எதிர்ப்பக் காட்டினா அவர்களும் சேந்து நம்மோட நிப்பாங்க...”

     “அது யாருடா அத்தினி பெரிய படிச்சாளு? எங்கக்கும் சொல்லிப்போடு, தெரிஞ்சிக்கறோம்.”

     அவன் விழிகள் குறுகுறுக்கின்றன. குரல் இறங்குகிறது.

     “உங்களுக்குத் தெரிஞ்சாளுதா... நம்ம ஆளு. அம்மங் கோயில், நாமெல்லாம் ஒண்ணாத் திரண்டெழுந்தா போலீசும் ஆரும் ஒரு மயிரும் செய்யமுடியாது. அப்பத்தா வழிக்கு வருவானுவ நம்ம பக்கம் நாயம் இருக்கு...”

     நாட்டாமை மீசைத்திருகலிலேயே ஆழ்ந்திருக்கிறான்.

     “அது சரி... எப்ப போயி வளச்சிக்கப் போறீங்க?"

     “நாள ராவு. கப்புனு அப்பிடியே போயி வளச்சிச்சிக் கிடணும். அந்தால கண்டானூரு கிளியந்தொற, ஆத்துக்கு இந்தப் பக்கம் இருந்து எல்லா ஊருச்சனங்களும், மொத்தம் ஒரு நாலாயிரத்துக்குக்கு கொறயாம. நம்ம பலத்தைக் காட்டணும். பொம்பிளங்கக் கூட வரணும். அப்ப என்னமோ எல்லாரும் வந்து போராடினாங்கதா. இப்ப ஒருத்தருக்கும் ஒரு வீருசமில்ல. அல்லாம் எதோ கையில காசு கெடச்சா கள்ளுக்கடயில குடுத்திட்டு பேசாம போயிடுறாங்க... அல்லாரும் வரணும்...”

     “சரிப்பா, வாரம் போ...”

     “தடி, கம்பு, அருவா எல்லாம் கொண்டிட்டு ஒரு ஆறு மணிக்கே வந்திடணும். நமக்கென்னாத்துக்குன்னு நினைச்சிரக் கூடாது. நம்மளப்போல தொழிலாளி வீரபுத்திரன்...”

     “சரிப்பா...”

     “கோயில் திருவிழாவுக்கு இங்கேந்து ஒரு பொம்பிளயும் மகில் எடுத்திட்டுப் போகாம பாத்துக்குங்க. நமுக்கும் அதுக்கும் ஒண்ணும் சம்பந்தமில்ல.”

     “சரிப்பா...”

     அவர் ‘சரிப்பா சரிப்பா’ என்று சொல்லும்போது இவனுக்குச் சிறிது சந்தேகம் தோன்றுகிறது. “என்னாடா இந்தப்பய யாருன்னு நினைச்சிராதீங்க. நாம பலத்தக் காட்டணும்...”

     “அதான் சொல்லிட்டியேடா...! எல்லாம் கேட்டுக் கிட்டீங்கல்ல? பாத்துப்புடுவோம்...”

     “அப்ப... இத்தச் சொல்லி போட்டுப் போவத்தா வந்தேன். நா வார.” வடிவு எழுந்திருக்கிறான். தடியை எடுத்துக் கொள்கிறான். சாக்குக் கொங்காணியையும் எடுத்துப் போட்டுக் கொள்கிறான்.

     எல்லா ஓசைகளையும் அசைவுகளையும் துடைக்கும் வண்ணம் ஒரு திரை விழுந்து விடுகிறது.

     இவன் வாயிற்படியைத் தாண்டும்போது, அந்தத் திரையை மெல்லக் குத்துவதுபோல் குழந்தையின் சிணுங்கலொலி கேட்கிறது.


சேற்றில் மனிதர்கள் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள்
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழாற்றுப்படை
இருப்பு உள்ளது
ரூ.500.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)