(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

7

     வயிரச் சுடராகச் சூரியனின் கதிர்கள் நாற்றுக்கட்டைச் சுமந்து வரும் வடிவேலுவின் மேனியில் விழுகின்றன. கருங்காலி போன்று முறுக்கேறிய கறுத்த உடலில் அரைக்கச்சு தவிர உடையில்லை. மார்பிலும் முகத்திலும் வாலிப வீச்சின் ரோமங்கள் நாற்றுக்கட்டிலிருந்து வடியும் நீரில் நனைந்திருக்கின்றன.

     கரையில் நின்று முடிகளை வீசுகிறான். சளக்சளக்கென்று நடவு நட்டுக் கொண்டிருக்கும் பெண்களிடையே அந்தப் பச்சை முடிக்கட்டு வீழ்ந்த சேற்றைச் சந்தனமாகத் தெளிக்கிறது.

     அம்சுவின் பக்கம் அது வந்ததும் அவள் வேண்டுமென்று லபக்கென்று பிடித்துக் கொள்கிறாள்.


புயலிலே ஒரு தோணி
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

புலன் மயக்கம் - தொகுதி - 1
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

செகாவின் மீது பனி பெய்கிறது
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-2
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

நான் ரம்யாவாக இருக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

புத்தர்பிரான்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

கூளமாதாரி
இருப்பு உள்ளது
ரூ.295.00
Buy

கோடுகள் இல்லாத வரைபடம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

சிதம்பர நினைவுகள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

ஐ லவ் யூ மிஷ்கின்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

இளைப்பது சுலபம்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

வலம்
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy

என் சீஸை நகர்த்தியது யார்?
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

கற்பிதம் அல்ல பெருமிதம்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

துறவி
இருப்பு உள்ளது
ரூ.295.00
Buy

கிராவின் கரிசல் பயணம்
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

இருள் பூமி
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy
     ஒரு கவடற்ற சிரிப்பொலி அங்கே வெட்ட வெளியெங்கும் ஓர் இரகசியச் சேதியை அலைகளாக்கிக் கொண்டு செல்கிறது.

     “பாத்துக்கடி...! என்ன தயிரியம்?...”

     “தயிரியம் என்ன! நாத்துக்கட்ட இன்னக்கி வாங்கினா நாளக்கிப் புள்ளய வாங்கிக்கறா...”

     மறுபடியும் ஒரு குபீர்ச் சிரிப்பொலி. சேற்றுக் குழம்பில் வண்ண மலர்க் கைகள் பச்சைப் புள்ளிகளை வைத்துப் பூமியன்னைக்குப் பசும் பட்டாடை உடுத்துகிறார்கள். இதற்குப் பிரதிபலனாக அம்மை பொன்மணிகளாய் நெல் மணிகளைக் கொண்டு வந்து குவிப்பாள். குடிசை இருட்டுக்குள் இல்லாமை, இருப்பு, புருசனிடம் சிறுமை, பெண்ணாய்ப் பிறந்துவிட்டதன் பொறுப்பினால் விழும் சுமைகள், வெளிக்குக் காட்டமுடியாத வேதனைகள் எல்லாம் குமைந்தாலும், இந்த வெட்டவெளியில் விரிந்த பசுமையில், அந்தத் தளைகள் கட்டறுத்துக் கொண்டு போகின்றன. லட்சுமி ஓரமாக நாற்றுப் பதிய வைத்துக் கொண்டு போகிறாள். இது அவர்கள் சொந்த மண். ஐயர் பூமியில் தாளடி நட வேண்டும் என்று முன்னதாகவே தண்ணிர் வருவதற்கு முன் பம்ப் வைத்து நீர் இறைத்து நடவு முடித்திருக்கிறார்கள். இதுவும் குறுவைப் பயிர்தான். மழை வந்து கெடுக்காமல் நல்ல படியாக விளைவெடுத்தால் உடனே அடுத்த பயிரையும் வைக்கலாம்.

     “ஒ...” என்று சாம்பாரின் பெண்சாதி மாரியம்மா பாடக் குரலெடுக்கிறாள். வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் அடிபட்டு, கண் குழிந்து கன்னங்கள் தேய்ந்து, முடிகொழிந்து அவளை உருமாற்றி விட்டாலும், குரலின் வளமை அப்படியே இருக்கிறது. தேம்பாகு விழுவதுபோல் தொய்யாமல் துவளாமல் அந்த வெட்டவெளியைத் தனக்கென்று சொந்தமாக்கிக் கொள்ளும் குரல்.

     “ஓ... ஓ... தங்கத்தால் வீடு கட்டி...” இவள் முறை வைத்ததும் அத்தனை குரல்களும் சேர்ந்து தங்கத்தால் வீடு கட்டுகின்றன.

     “தங்கத்தால் தொட்டி கட்டீ...
     அங்கே தங்கக்கிளி பாடுதய்யா...”

     குரல் வானவெளியிலே தங்கக் கிளிகளைப் பறக்கச் செய்கின்றன.

     “வெள்ளியால வீடு கட்டி...
     வெள்ளியால தொட்டி கட்டீ... அங்கே
     வெள்ளிக்கிளி களிக்குதையா...”

     இந்தக் குரலின் அலைகள் நெளிந்து மின்னி நீண்டு ஓயும்போது சோகம் இழையும் தனிமையைக் கோடாக்கு கையில் வண்ண வண்ணமாய்ப் பூவாய்ப் பசுமையாய் பாவாடையும் தாவணியும் பின்னல்களும் கூந்தல் நெளி பூசிகளும் பொட்டும் வளையல்களுமாக அந்தச் சேற்றில் பசுமை நாற்றுக்களுடன் பூப்பூவாய்க் கொஞ்சும் விரல்களில், அது இசையவில்லை. குபீரென்று மடலவிழ்ந்த தாழை மணமாகச் சிரிப்பொலி பரவுகிறது.

     சளக் சளக் கென்று சேற்றில் கால்கள் உறவாட, டப்டிப்பென்று சேற்றுத்துளிகள் மேல் தெளிக்க, நாற்றுக் கட்டுக்கள் வந்துவிழ, பரிகாசங்கள் கலக்க... அந்த இன்பலயத்தில் குத்தலும் கூடப் பாயாது “என்னாடி சிரிப்பு, நெளிப்பு?” என்று லட்சுமியின் அதட்டலுக்கு ஒரு பவிசும் இல்லை.

     “தங்கத்தால தொட்டிகட்டி, வெள்ளித் தொட்டிகட்டி, பகளத்தாலே தொட்டி கட்டின்னு இந்தாயா இழுத்துக்கிட்டே இருக்காங்க. அல்லாம் கட்டி, கிளியும் குஞ்சமும் தொங்கவுடனும் பேரப்புள்ளய எப்பப்போட்டு ஆட்டுறது?” என்று சொல்லிக் கேட்டுவிட்டு அம்சுவைப் பார்த்துக் கண்ணடிக்கிறாள். “அதுக்கு மொதலாளி அம்மா தயவு வைக்கணுமில்லே...?”

     வடிவு மீசையைப் பல்லில் இழுத்துக் கொண்டு மெதுவாக உதிர்க்கும் பூக்கள், வானத்து இறுக்கம் தளர்ந்து பன்னிர் விசிறும் காற்று மெல்ல நீர்பரப்பைச் சிலிர்க்கச் செய்கிறது. அம்சுவின் மொழுமொழுத்த கையில் பச்சையும் சிவப்புமாக வளையல்கள். லட்சுமியின் கண்கள் அங்கேயே நிலைக்கின்றன. பதியப்பதிய வளையல்கள். இவளுக்கு எத்தனை நாட்களானாலும் என்ன வேலை செய்தாலும் வளையல்கள் உடையா. பழைய வளையல்களைக் கழற்றித்தான் புதியவை அணியவேண்டும். ஆனால் காந்திக்கோ, முண்டுக்கை, இரண்டு வளை ஏற்ற நான்கு வளைகள் உடைக்கவேண்டும். துணி துவைத்தால் உடையும், மாவாட்டினால் உடையும், அடுக்கி நான்கு நாட்கள் தங்காத கை.

     அம்சுவின் நாற்றுகள் பதியவில்லை.

     “யாரடிவ? மேத் தண்ணில மெதக்குது? அம்மாடி பொண்டுவளா? ஒளுங்கா ஊனிவையுங்கடீ! சினிமால்ல!”

     லட்சுமியின் குரலில் அம்சு புரிந்து கொள்கிறாள்.

     “யக்கோ. வார மாசம் மாரியம்மனுக்கு விழா எடுக்கப் போறாங்களாம். மூலையா வந்து குடிசய எடுக்கணுமுன்னு மெரட்டிட்டுப் போறா..."

     லட்சுமி தலை நிமிரவில்லை. விரைந்து நட்டுக் கொண்டு செல்கிறாள்.

     “பத்து வருசமா எடுக்கல ஒரு வரிசயும், அப்பல்லா சாமியில்ல ஒண்ணில்லன்னு மெரட்டினானுவ...”

     “ஆமா, பச்சு பச்சுனு வெளுஞ்சாலும் பக்கு பக்குனு கும்பி எரிஞ்சிட்டுத்தா இருக்கு. எங்க பாத்தாலும் அடிதடி சண்டை, சும்மனாலும் டேசனுக்கு வாடான்னு கூட்டிப் போறானுவ...”

     மாரியம்மாவின் சுருங்கிய விழிகளில் இருந்து ஒரு பொட்டுக் கண்ணிர் அந்தச் சேற்றில் விழுகிறது.

     “இளவட்டம் பேசிப் பிடுறானுவ அதுக்கு அநுபவிக்கிறோம். மின்ன போலீசு அடிச்சாவ, பிடிச்சாவ மனிசன மனிசனா நடத்தணும், கூலி வேணும்னு போராடினோம். ஆனா அப்ப இப்பிடி வெலவாசியா வித்திச்சி! அன்னிக்கு அரமரக்காலும் காமரக்காலும் கூலி வந்தப்பவும் ஒரே கணக்காவும் இப்பவும் ஒரே கணக்காவுமில்ல போவுது?...”

     “இவனுவ சாமி கும்பிட்டுட்டா அல்லாம் நல்லாப் போயிடுமாக்கும்!”

     வடிவு முணமுணத்துக் கொண்டு வரப்பில் ஓடிப்போகிறான்.

     லட்சுமிக்கு எதுவும் சொல்ல நா எழவில்லை. விருத்தாசலம் பிள்ளையின் அப்பா அந்தக் காலத்தில் மிகச் சாமானியமாகத் தான் இருந்தார். பெரிய உடையார் பண்ணையில் ஒரு காரியக்காரர். அப்போது கோவில் சாமியில்லை என்று தீவிரமாக எதிர்த்து இவர்களிடையே எந்தச் சாமி கும்பிடுதலிலும் சேரக்கூடாது என்று கட்டுப்பாடு செய்த வாலிபப் பிள்ளைகளில் விருத்தாசலம் பிள்ளையும் இருந்தான். சம்முகத்துக்கு அந்த நாட்களில் தோழன் தான். ஆனால் சாமி கும்பிடுதலுக்கு அப்பால் இவர்கள் நிலவுடமைக்காரர்களையும் அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட்டங்கள் நிகழ்த்தியபோது, அவர்கள் உயர்சாதிக்காரர்களாக, தனியாகவே நின்றுவிட்டார்கள். இப்போது, அந்தப் பண்ணைக் கட்டுமானமெல்லாம் ஆட்டம் கண்ட பிறகு, புதிய குத்தகைதாரராகவும் வியாபாரியாகவும் தலையெடுத்துச் செழித்து வரும் வருக்கத்தில் விருத்தாசலம் பிள்ளை, மளிகைக்கடை, ரைஸ்மில், வியாபாரம் என்று ஊரில் பெரிய அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். முதல் மனைவிக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு மூன்று பெண்கள், ஒரு பையன். முதல் மனைவி இருக்கும்போதே மறுமணம் செய்துகொண்டாலும், அவள் இப்போது இல்லை. மூன்று பெண்களையும் கட்டிக்கொடுத்திருக்கிறார். வீரமங்கலத்தில் ஒரு பையன் மளிகைக் கடையைப் பார்த்துக் கொள்கிறான். இரண்டாவது பையன் டிராக்டர் ஓட்டுகிறான். இளையதாரத்தின் பையன் மைனராகத் திரிந்து கொண்டிருக்கிறான். இப்போது, இவர் அம்மன் கோயிலில் விழா எடுக்க வேண்டும் என்று திடீர் சாமி பக்தியைக் காட்டுகிறார். தை அறுவடைக்கு முன் இவர்கள் ஐந்து குடும்பத்தாரும் கோயில் எல்லையை விட்டுப் பெயர்ந்து போகவேண்டும் என்று திட்டமிட்டு நெருக்கடி செய்வது எதற்காக?

     இரண்டொரு விதையூன்றி அவை கொடியேறத் தொடங்கியிருக்கையில், ஆடு கோழிகளைப்போல் அவற்றைப் பெயர்த்துப் போகமுடியுமா?

     அந்த அறுவடைக்குப் பிறகு கோயில் விழாவை வைத்துக்கொள்ளக் கூடாதா? இப்போது மழைநெருக்கம் என்று சொல்லமுடியாது. இப்போது ஊன்றும் பயிர் பூச்சி பிடிக்காமல், புகையான் அண்டாமல் கதிர் பிடித்து, வெயில் புழுக்க மணிபழுத்து மழைக்கு முன் அரிந்தெடுக்கவேண்டும்.

     எல்லாம் கண்டங்கள். பிறகு உடனே மறுநடவு, மூச்சுப் பிடிக்கும் நெருக்கடியில் உழைக்க வேண்டும். எல்லாம் நிறைவேறி வயிறும் மனமும் குளிர்ந்தால் தானே சாமிக்கும் சந்தோஷமாகப் படைக்க முடியும்?

     அன்று வீடுவீடாக வந்து சாமி கும்பிடக்கூடாது என்று சட்டமிட்டவன், இன்று நெருக்கடியில் கும்பிட வேண்டும் என்று குடிசையைப் பெயர்க்கச் சொல்வது எப்படி நியாயமாகும் என்று உணரவில்லையே?

     லட்சுமி கால் வரப்பில் தட்டத் திடுக்கிட்டாற் போல் நிமிர்ந்து பார்க்கிறாள். எல்லோரும் கையில் கடிகாரம் கட்டிக் கொண்டாற்போல் கரையேறி விட்டார்கள். அம்சு தான் முதல். அவளுக்குக் கணக்காக வயிற்றில் மணி அடித்துவிடும். அவள் கரையேறினால் மற்றவர்கள் ஒரு விநாடி தாமதிக்கமாட்டார்கள். வடிவையும் காணவில்லை.

     தொலைவில் கருவேல மரத்தடியில் அவர்கள் செல்வது தெரிகிறது.

     கால்வாயில் சேற்றைக் கழுவிக் கொள்கிறாள். கைப்பிள்ளைக்காரிகள் ருக்மணியும் செல்வியும் விடுவிடென்று வீட்டுக்கே சென்றிருப்பார்கள். மாரியம்மா ஒடுங்கிச் சுருங்கிய உருவமாக வரப்பில் இவளுக்குப் பின்னே நடக்கிறாள்.

     “ரெண்டு வெத்தில இருந்தாக் குடேன் லட்சுமி. சோறொண்ணும் எடுத்தார இல்ல. மேலிக்குப் போயிதா எதுனாலும் வாங்கியாந்து ஒல வைக்கணும்.”

     லட்சுமி இடுப்புச் சுருக்குப் பையைத் தளர்த்தி உள்ளிருந்து இரண்டு வாடிய வெற்றிலையையும் பாக்கையும் எடுத்துக் கொடுக்கிறாள்.

     நடை விரைவாக மறுக்கிறது. வடிவுக்குச் சாப்பாடு ஒன்றும் இன்று இருந்திருக்காது. கையில் காசிருந்தால் டிக்கடைக்குப் போயிருப்பான். கருவேல மரத்தடியில் அம்சு காலையில் கொண்டுவந்த நீர்ச்சோறும் காரத்துவையலும் மண்டுகிறான் என்பது புரிகிறது.

     அம்மை இரண்டு வெற்றிலையும் பாக்கும் துண்டுப் புகையிலையும் கொண்டு பசியை அடக்கி விடுவாள். அம்சு தங்கள் சோற்றில் அவனுக்கு ஒரு பங்கைக் கொடுப்பதில் தாயான அவளுக்கு வாட்டமில்லை. அவளும் தலையாரியின் தலைமகளாக, அந்தப் பருவத்தில் வாழ்வின் இனிமைகளையே எண்ணிக் கனவு கண்டிருந்த காலத்தில் பசி பட்டினி தெரியாமல் தொண்ட ருக்குத் தொண்டனாய் இருட்டிலும் வயக்காட்டிலும் வழித் துணைவனாகச் செல்லும் ஓர் ஆண் மகனின் நினைவிலேயே உருகியிருக்கிறாள். இந்த நீர்ச்சகதியில் கீறினாலும் பசுமை பூரித்துச் சிரிக்கும். வான்கொடையில் மனிதச் சிறுமைகள் ஒருபுறம் அழுத்தினாலும் இயற்கையின் மலர்ச்சியின் சுவடே படிவதில்லை. உழைப்புக்கும் இயற்கையின் அரவணைப்புக்கும் எப்போதும் நெருக்கம். சிரித்து சிரித்து விகசிக்கும் பெண்மையின் கவர்ச்சியில், கருகருவென்று மின்னிக்கொண்டு பசிய நாற்றுக் கட்டைத் தூக்கி வரும் எந்த ஆண்மகனும் கிறங்காமல் இருக்க மாட்டான். மடைதிறந்து வரும் பெருக்கில் எந்த அரணுக்கும் காவல் இல்லையெனில் அடித்துக்கொண்டு போய்விடும். இவள் கால்வாய் கடக்குமுன் அவளே சோற்றுத் தூக்கை மூடிவைத்து விட்டு கை கழுவ வருகிறாள். வடிவு சற்று எட்ட நின்று பீடி புகைக்கிறான்.

     அம்சுவின் முகம் எப்போதும்போல் பூரிப்பாக இல்லை.

     “ஏண்டி சோறு தின்னாச்சா?”

     “அது வீட்ல சோறொண்ணும் ஆக்கலியா நேத்து. நா நம்மூட்டுச் சோறு கொஞ்சம் வச்சுக் குடுத்தே.”

     லட்சுமி எதுவும் பேசவில்லை. மீதியிருந்த சோற்றைக் கரைத்துக் குடித்துவிட்டு கால்வாயில் தூக்கைக் கழுவுகிறாள்.

     மாலை நான்கு மணிக்குள் அந்தப் பங்கின் நடவு முடிந்து விடுகிறது. வீட்டுப்பக்கம் வந்த பின்னரே கூலியைக் கணக்கிட்டுக் கொடுப்பாள். அம்சுவுக்குப் பசியாறவில்லை. சாதாரணமாக வயிறு நிரம்பவில்லையானால் முன்னதாகவே வீட்டுக்குச் சென்று ஏதேனும் இருக்கிறதாவென்று குடைவாள். ஒன்றுமில்லையெனில் பொழுதோடு உலையேற்றிவிடுவாள். இன்று தன் பங்குக்குக் காசை வாங்கிக்கொள்ள ஓடிவரவில்லை. கூடையில் வழியில் கிடைக்கும் கள்ளி, மட்டை என்று பொறுக்கிப் போட்டுக் கொண்டு நாயக்கர் வீட்டுக்குப் போகிறாள். தாழம் புதர்கள் செறிந்த காவாய்க்கரை. இனி நோன்புக்காலத்தில் குப்பென்று மணம் கமழும் குலைகளை வடிவு பறித்தெடுப்பான். பாம்பைப்பற்றி அவனுக்கு அச்சமில்லை. வாலைப்பற்றி லாவகமாகக் கரகரவென்று சுழற்றி அடிப்பான். அம்சுவுக்கு அவனை அப்போது காண்கையில் உடல் சிலிர்க்கும். வயற்காட்டில் அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வடிவு இணைந்த தோழன். அவன் பள்ளியில் படித்த நாட்கள் அவளுக்கு நினைவில்லை. ஏர்கட்டி உழுவான். மடைச்சீர்நோக்கி, நாற்றுப் பறித்து, அரிகொய்து, அடித்து, வைக்கோல் பிரித்து, எல்லாப் பணிகளிலும் அவன் இருக்கிறான். சட்டை போட்டுக்கொண்டு அவன் டவுனுக்குச் செல்லும் கோலம் மனதில் நிலைப்பதில்லை.

     வானை நோக்கி யாரோ பூவிதழ்களை வீசினாற்போன்று உடை மரத்திலிருந்து கும்பலாகக் குருவிகள் பறந்துசெல்கின்றன.

     தெற்குத் தெருவின் பெரிய பெரிய பாழடைந்த கொட்டில்களும் குட்டிச்சுவர்களும் ஒருகாலத்தில் பண்ணைவீடுகளின் சீர்குலைவை விள்ளும் கொல்லைகளாக மாறியிருக்கின்றன. கண்காணிப்பில்லாமல் ஆங்காங்கு நிற்கும் தென்னை மரங்களும் கூடப் புதிய சீரழிவைக் காட்டக் கள்வடியும் பானைகளைக் கவிழ்த்துக் கொண்டிருக்கின்றன. எதிர்ச்சாரியில் புதிய தெரு வாகச் சீராக வைக்கோற் போர்வை போர்த்த கூரைக் குடிசைகள் துப்புரவாகக் கிளி கொஞ்சுகின்றன. சிறிய விவசாயிகளான மேல் சாதிக்காரர்களின் வீடுகள் அவை. குஞ்சிதம் குளத்தில் பட்டுச் சேலை ஒன்றை அலசிக் கொண்டிருக்கிறாள். குளத்தில் குளிக்கவரும் வேலம்மா, “ஏண்டி, ஆரு வந்திருக்காவ ஐயரு வீட்டில?” என்று விசாரிக்கிறாள். “பெரியம்மா வந்திருக்கு...”

     “பத்து நா இருக்குமா?”

     “இருப்பாவ போலதா இருக்கு. ஐயரு சொன்னாவ. குஞ்சிதம் அம்மாளுக்கு மின்னிப்போல முடியல, நீ வந்து தண்ணி இளுத்துக்குடு, கூடமாட ஒத்தாச பண்ணுன்னாவ.”

     அம்சு இதற்கு மேல் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

     நாயக்கர் வீட்டுக் கொட்டில் சாணியை வாரிப்போட்டு விட்டு, கிணற்று நீரிறைத்துத் தொட்டியை நிரப்புகிறாள்.

     சத்தம் கேட்டுப் பெரியம்மா வருகிறாள்.

     “என்னடி அம்சு? நேத்து கடவீதில கலாட்டாவாமே?” அம்சு தலை நிமிர மாட்டாள்.

     “எனக்குத் தெரியாதுங்கம்மா!”

     “என்னடி தெரியாது? வடிவப் போலீசுக்காரன் கூட்டிப் போயி நாலு தட்டு தட்டி அனுப்புனானாமே?”

     “ஆரு சொன்னது பெரியம்மா?”

     “ஆரு சொல்றது? ஊரேதாஞ் சொல்லுது! அருணாசலம் கடைக்குப் போனேன்.”

     நாயக்கர் வீட்டம்மாவுக்கு வம்பு பிடிக்கும். இந்தம்மாவின் புருசர் உயிரோடு இருந்த காலத்தில், அவர்களுக்காகக் கொடி பிடிக்கும் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவர் மறைந்த பிறகு தலைமுறைகளில் எவரும் ஊர் மண்ணில் ஒட்டவில்லை. நிலங்களை எல்லாம் விற்று விட்டார்கள். பெரிய பங்களாவில் வெளவால்கள் குடியிருக்கின்றன. பளபளக்கும் கல்பாவிய கூடங்களும், முற்றங்களும், முகப்புக் கட்டிய மாடியும் பாழடைந்து கிடக்கின்றன. பெரியம்மா மட்டும் வெள்ளைச் சீலையை உடுத்துக் கொண்டு பின்கட்டு வீட்டில் புழங்கிக் கொண்டிருக்கிறாள். இவள் வாழ்க்கைக்கு மகன்கள் எதுவும் பணம் கொடுப்பதாகத் தெரியவில்லை. கள் குத்தகைப் பணம், அற்பமான நிலத்தின் விளைவு என்று காலம் தள்ளுகிறாள். கடைசி மகன் கண்ணனும் இவள் அண்ணனும் சம வயசுத் தோழர்கள். கண்ணனுக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறதாம். ஆனால் அவன் மனைவி இங்கு வந்து அம்சு பார்த்ததில்லை. பெரியம்மா மட்டும் அடிக்கடி அவலிடித்துக் கொண்டும், மாவிடித்துப் பணியாரம் சுட்டுக்கொண்டும் பேரப் பிள்ளையைப் பார்க்கப்போவாள்.

     அம்மாளுக்கு வம்பு என்றால் சீனி லட்டுதான்.

     “கோயில் சுத்துல குடிசயப் போட்டுட்டு அங்கியே கூச்ச நாச்சமில்லாம கன்னுக்குட்டியத் தோலுரிச்சிக் கண்டம் போடுறானுவன்னு விருத்தாசலம் கத்தினானாம். எங்கிட்டக்கூட முன்ன வக்கீலையரு சம்சாரம் வந்தப்ப சொன்னா. எங்க பார்த்தாலும் சண்டையும் கறுப்புமாயிருக்கு. பத்து வருசமா முடக்கிப்போட்ட கோயிலைப் பார்க்கணும். அவ ஊர்த் தேவதை. நான் கூட்டு வுருத்தாலத்துக்கிட்டச் சொன்னேன்னாங்க. இந்த அம்மனுக்கு அந்த நாள்ள, எங்க மாமனார் நாள்ள திருவிழா எடுப்பாங்க. காசுமாலை, சரப்பளி ஒட்டியாணம், பதக்கம், ஜடை மொக்கு, முத்துப் பதிச்ச தலைசாமான், எல்லா நகையும் போட்டு, பத்து நா விதவிதமா அலங்காரம் பண்ணுவாரு, குருக்கள். இப்ப இருக்கிறாரே, இவருக்கு மாமா. அதெல்லாம் ஒழுங்கு பண்ணணும்னுதா வந்தேன்னா. அதா, உங்க தலையாரி தானே சம்முகம், கூப்பிட்டுச் சொல்லுங்கன்னா. உங்கப்பன் எங்க ஆளயே காணம்டீ?”

     “ஐயாவுக்கு உடம்பு நல்லால்ல பெரியம்மா...”

     “என்னாடி ஒடம்புக்கு? அன்னிக்குக் கோபாலு சொன்னா, அப்பா டவுனுக்குப் போயிருக்காருன்னு?”

     “அன்னிக்கும் உடம்பு சரியில்லதா, அக்காள் காலேஜில சேக்கணும்னு லட்டர் வந்திச்சி, போனா...”

     “அடி சக்கை, என்னாடி காலேஜி, இனியும்? அதாம் பத்து பதினொண்ணுன்னு படிச்சாச்சே? பொட்டப் புள்ளங்களக் காலத்துல கட்டிக்குடுக்காம என்னாடி படிப்பு? உங்கப்பனுக்கே தன் நிலை தெரியாமப்பூடும் சில சமயம்...”

     அம்சு தலை நிமிரவில்லை. "ஏற்கனவே உங்கக்கா ஆளமதிக்கமாட்டா, உடயார் வீட்டுல மக பெத்து தொட்டில்ல போட்டாங்க, கூப்பிட்டனுப்பினாங்கன்னு போனே, இவ வந்திருந்தா. திரும்பி எங்கூடத்தா வண்டில வந்தா. அடுப்பு இடிஞ்சி கெடக்கு. குளத்துமண்ணு கெடக்கு ஒரு கூட அள்ளிட்டு வாடி மம்முட்டிய எடுத்திட்டுப் போயின்னேன். நாளக்கி வந்து தாரேன். இப்ப நேரமாச்சின்னு போனா, போனவதா. ஒங்கிட்ட சொல்லலான்னா நீ காலில கஞ்சிய வடிச்சிட்டு வருவ. மக்யா நா உங்கம்மா வந்து மண்ணுரெண்டுகூட போட்டிட்டுப்போனா. அவ்வளவு கருவம், கவுரெத இப்பவே காலேஜிலப் படிக்கப் போட்டுட்டு எங்கேந்து புருசன் தேடறது? ஏரோட்டுற பயலே மோதிரம், வாட்சுன்னு கேக்கறான். சாமான்லாம் உச்சிக்குப் போயிருக்கு. இதில என்ன எடுப்பு காலேசி, கையேசின்னு?”

     தொட்டி நிரம்பியாயிற்று. “போய் வரட்டுமா” என்ற பாவனையில் நிற்கிறாள்.

     “உன் தாத்தா மாமன் லாம் இந்த வீட்டு உப்பைத் தின்னவங்கதா. இப்ப சங்கம் அது இதுன்னு பவராயிட்டான் உங்கப்பன். கள்ளுக்குக் காசில்லன்னு உங்க தாத்தா தலயச் சொறிஞ்சிட்டு நிப்பான். ஒருத்தன் எட்டிப் பார்க்கிறதில்ல. நானும் ஒரு முருங்கப்போத்துக் கொண்டாந்து இப்பிடி நட்டுவைக்கச் சொல்லுன்னு எத்தினி நாளா சொல்லிருக்கிறேன். தேஞ்சா பூடுவானுவ? விசுவாசமே இல்லாம பூட்டுது? எங்கையால்லாம் இல்லாம நீங்க இன்னிக்கி இப்பிடித் தலையெடுத்திருப்பீங்களா?”

     இது ஒரு பெரிய தொணதொணப்பு. கத்திரித்துக் கொண்டுவர முடியாமல் தேனிக்குளவி போல் கொட்டும்.

     அம்சுவுக்கு நேரமாகி இருட்டிவிட்டால் குளிக்கமுடியாது. சேலை நனைந்துவிட்டது. ஒரு வழியாகக் கத்திரித்துக்கொண்டு குளத்துக்கு வருகிறாள்.

     கூடையைக் கரையில் வைத்துவிட்டுச் சேலையை ஒரு பகுதியை மாராப்பாகச் சுற்றிக்கொண்டு மற்ற ஆடைகளைக் கசக்குகிறாள். மேற்கே வானில் செம்மை பரவி, கீழ்த்திசையில் செறிந்த கருமையுடன் முத்தமிடுகிறது. குளத்தில் அமிழ்ந்து அந்த நீர்ச்சுகத்தில் ஆழ்ந்து போகிறாள்.

     சற்று எட்ட திடுதிடுவென்று குளத்தின் அமைதியையே கலக்கும் வண்ணம் கோவணத்துடன் ஒருவன் பாய்ந்து முழுகுகிறான்.

     இவள் சட்டென்று கரையேறிச் சேலையை இழுக்கையில் அவன் குரல் இனிமையாய்ப் பாய்கிறது.

     “ஏ அதுக்குள்ளாற ஏறிட்ட? நா வந்திட்டேன்னா?”

     “பின்ன, பொம்பிள குளிக்கையில வந்து எருமகணக்கா வுழுந்தா?”

     குளத்தில் நெளியும் ஈரச்சேலையைப் பற்றி உதடுகளில் அழுத்திக்கொள்ளும் குறும்பில் இன்னும் கோபம் ஏறுகிறது அவளுக்கு.

     “சீ...”

     சேலையைப் பிடுங்கும் கோபத்தில் இனிமை கொப்புளிக்கிறது.

     ஏறி நெருங்கி வந்து அவள் எதிரே விழிகளைக் கூர்மையாக்கி, பார்த்துக்கொண்டே நிற்கிறான். வானின் செம்மையைக் கருமை முழுதுமாகத் துடைத்துவிடுகிறது.

     ஒற்றை நட்சத்திரம் கீழ்வானில் தோன்றுகிறது.

     “அம்சு...”

     ஈரச்சேலை மீது வளையும் கையை அகற்றுகிறாள்.

     “உங்கம்மா என்னமே நினைச்சிட்டாங்களா அம்சு?”

     “என்னாத்துக்கு?”

     “நீ... நீ எனக்கும் சோறுவச்சியே அதுக்கு!”

     “இனிமே வீட்டுக்குப் போனாதா தெரியும். கோச்சிட்டா, அதுக்கு நீ என்ன செய்யப்போற?”

     “நா... நாளக்கி எங்கூட்டந்து சோறு கொண்டாந்து குடுப்பே...!”

     இடுப்பைப் பற்றி வளைத்து நீருள் இழுக்கிறான். இனிமைச் சிலிர்ப்புக்கள் உடலெங்கும் மின் துகளாய்ப் பரவுகின்றன. புதிய கன்றுக்குட்டியைத் தொட்டால் அது சிலிர்ப்பது போல் அவள் நெளிகிறாள்.

     “அம்சு, நாம் போயி, உங்கையாகிட்ட, முதலாளி, அம்சுவ நாங் கட்டிக்கிறேன். நா வேற பொண்ண நினைச்சிப் பாக்கமாட்டேன்னு சொல்லப்போறேன்.”

     “ஐயோ, அவுசரப்பட்டா, எப்பிடி? எங்கக்கா கல்யாணம் ஆகாம என்ன பத்திப் பேசுறதா...?”

     “உங்கக்கா கலியாணம் எப்ப ஆவும்...?”

     “அதெப்படி எனக்குத் தெரியும்?”

     “அதுவரைக்கும் நாம் பொறுக்கமுடியாது அம்சு...”

     “...எங்கையா, ஒருமான்னாலும் சொந்தமா நிலம் வச்சிருக்கிற ஆளா பாத்துதா கட்டிக் குடுக்கிறதாச் சொல்லிட்டிருக்காரு. ஏன்னா ஒரு நா சோறில்லாம மக இருக்கமாட்டான்னு அவருக்குத் தெரியும்.”

     “பொஞ்சாதியவச்சிச் சோறுபோட்டுக் காப்பாத்தாத பயன்னு நினைச்சிருக்கிறாரா அவுரு?... எனக்குக் காலும் கையும் இருக்கு ஒரு மான்ன, வேலி வேலியா நெலம் இருந்திச்சி எங்களுக்கு மின்ன. ஒனக்குத் தெரியுமா?”

     “எங்க?”

     “அதா, நாகப்பட்ணத்துக்குக் கெளக்க. அம்புட்டும் எங்க நெலந்தா...”

     “நாகப்பட்ணத்துக்குக் கெளக்க... அப்பிடீன்னா கடலில்ல?”

     “ஆமா. அதெல்லா நம்ம நெலந்தா. தண்ணியாப் போச்சு.”

     ஒரே சிரிப்பு. “நாம ஒருக்க நாகபட்ணம் போவணும். கப்பல் பார்க்கணும்.”

     “என்னா பெரி...ய கப்பல்? நாம மானத்தில போற ஏரோபிளேனில பறக்கணும்னு சொல்லு அம்சு...”

     நீருக்குள் அவளை இறுக அணைத்துக் கொள்கிறான். காதோடு கேட்கிறான்.

     “இப்ப மானத்தில் போறாப்பில, பறக்கிறாப்பல இல்லை?”


சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - Unicode - PDF
     கள்வனின் காதலி - Unicode - PDF
     சிவகாமியின் சபதம் - Unicode - PDF
     தியாக பூமி - Unicode - PDF
     பார்த்திபன் கனவு - Unicode - PDF
     பொய்மான் கரடு - Unicode - PDF
     பொன்னியின் செல்வன் - Unicode - PDF
     சோலைமலை இளவரசி - Unicode - PDF
     மோகினித் தீவு - Unicode - PDF
     மகுடபதி - Unicode - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
     கபாடபுரம் - Unicode - PDF
     குறிஞ்சி மலர் - Unicode - PDF
     நெஞ்சக்கனல் - Unicode - PDF
     நெற்றிக் கண் - Unicode - PDF
     பாண்டிமாதேவி - Unicode - PDF
     பிறந்த மண் - Unicode - PDF
     பொன் விலங்கு - Unicode - PDF
     ராணி மங்கம்மாள் - Unicode - PDF
     சமுதாய வீதி - Unicode - PDF
     சத்திய வெள்ளம் - Unicode - PDF
     சாயங்கால மேகங்கள் - Unicode - PDF
     துளசி மாடம் - Unicode - PDF
     வஞ்சிமா நகரம் - Unicode - PDF
     வெற்றி முழக்கம் - Unicode - PDF
     அநுக்கிரகா - Unicode - PDF
     மணிபல்லவம் - Unicode - PDF
     நிசப்த சங்கீதம் - Unicode - PDF
     நித்திலவல்லி - Unicode - PDF
     பட்டுப்பூச்சி - Unicode - PDF
     கற்சுவர்கள் - Unicode - PDF
     சுலபா - Unicode - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
     அனிச்ச மலர் - Unicode - PDF
     மூலக் கனல் - Unicode - PDF
     பொய்ம் முகங்கள் - Unicode - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - Unicode - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
     வேருக்கு நீர் - Unicode - PDF
     கூட்டுக் குஞ்சுகள் - Unicode
     சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
     புதிய சிறகுகள் - Unicode
     பெண் குரல் - Unicode - PDF
     உத்தர காண்டம் - Unicode - PDF
     அலைவாய்க் கரையில் - Unicode
     மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF
     கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
     மாணிக்கக் கங்கை - Unicode
     குறிஞ்சித் தேன் - Unicode - PDF
     ரோஜா இதழ்கள் - Unicode
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
     வாடா மல்லி - Unicode - PDF
     வளர்ப்பு மகள் - Unicode - PDF
     வேரில் பழுத்த பலா - Unicode - PDF
     சாமியாடிகள் - Unicode
     மூட்டம் - Unicode - PDF
     புதிய திரிபுரங்கள் - Unicode - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108) - Unicode
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - Unicode - PDF
     பார்வதி, பி.ஏ. - Unicode
     வெள்ளை மாளிகையில் - Unicode
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode
பாரதியார்
     குயில் பாட்டு - Unicode
     கண்ணன் பாட்டு - Unicode
     தேசிய கீதங்கள் - Unicode
பாரதிதாசன்
     இருண்ட வீடு - Unicode
     இளைஞர் இலக்கியம் - Unicode
     அழகின் சிரிப்பு - Unicode
     தமிழியக்கம் - Unicode
     எதிர்பாராத முத்தம் - Unicode
மு.வரதராசனார்
     அகல் விளக்கு - Unicode
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - Unicode - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
     பஞ்சும் பசியும் - Unicode - PDF
விந்தன்
     காதலும் கல்யாணமும் - Unicode - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - Unicode - PDF
     பனித்துளி - Unicode - PDF
     பூவும் பிஞ்சும் - Unicode - PDF
     தனி வழி - Unicode - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - Unicode - PDF
     வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு - Unicode
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதன - Unicode
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி - Unicode
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - Unicode - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல் - Unicode
கௌரிராஜன்
     அரசு கட்டில் - Unicode - PDF
     மாமல்ல நாயகன் - Unicode
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - Unicode - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை - Unicode
     பதிற்றுப் பத்து - Unicode
     பரிபாடல் - Unicode
     கலித்தொகை - Unicode
     அகநானூறு - Unicode
     ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை - Unicode
     பொருநர் ஆற்றுப்படை - Unicode
     சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
     பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
     முல்லைப்பாட்டு - Unicode
     மதுரைக் காஞ்சி - Unicode
     நெடுநல்வாடை - Unicode
     குறிஞ்சிப் பாட்டு - Unicode
     பட்டினப்பாலை - Unicode
     மலைபடுகடாம் - Unicode
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
     திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
     திருக்குறள் (உரையுடன்) - Unicode
     நாலடியார் (உரையுடன்) - Unicode
     நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
     ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
     பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode
     ஏலாதி (உரையுடன்) - Unicode
     திரிகடுகம் (உரையுடன்) - Unicode
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம் - Unicode
     மணிமேகலை - Unicode
     வளையாபதி - Unicode
     குண்டலகேசி - Unicode
     சீவக சிந்தாமணி - Unicode
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம் - Unicode
     நாககுமார காவியம் - Unicode
     யசோதர காவியம் - Unicode
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை - Unicode
     திருவிசைப்பா - Unicode
     திருமந்திரம் - Unicode
     திருவாசகம் - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார் - Unicode
     திருவுந்தியார் - Unicode
     உண்மை விளக்கம் - Unicode
     திருவருட்பயன் - Unicode
     வினா வெண்பா - Unicode
கம்பர்
     கம்பராமாயணம் - Unicode
     ஏரெழுபது - Unicode
     சடகோபர் அந்தாதி - Unicode
     சரஸ்வதி அந்தாதி - Unicode
     சிலையெழுபது - Unicode
     திருக்கை வழக்கம் - Unicode
ஔவையார்
     ஆத்திசூடி - Unicode
     கொன்றை வேந்தன் - Unicode
     மூதுரை - Unicode
     நல்வழி - Unicode
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம் - Unicode
     கந்தர் கலிவெண்பா - Unicode
     சகலகலாவல்லிமாலை - Unicode
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம் - Unicode
     திருக்குறும்பலாப்பதிகம் - Unicode
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
     திருக்குற்றால மாலை - Unicode
     திருக்குற்றால ஊடல் - Unicode
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி - Unicode
     கந்தர் அலங்காரம் - Unicode
     கந்தர் அனுபூதி - Unicode
     சண்முக கவசம் - Unicode
     திருப்புகழ் - Unicode
     பகை கடிதல் - Unicode
நீதி நூல்கள்
     நன்னெறி - Unicode
     உலக நீதி - Unicode
     வெற்றி வேற்கை - Unicode
     அறநெறிச்சாரம் - Unicode
     இரங்கேச வெண்பா - Unicode
     சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை - Unicode
உலா நூல்கள்
     மருத வரை உலா - Unicode
     மூவருலா - Unicode
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
     நெஞ்சு விடு தூது - Unicode - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை - Unicode
     சிதம்பர மும்மணிக்கோவை - Unicode
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம் - Unicode
     மதுரைக் கலம்பகம் - Unicode
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை - Unicode
     திருவெம்பாவை - Unicode
     திருப்பள்ளியெழுச்சி - Unicode
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
     முத்தொள்ளாயிரம் - Unicode
     காவடிச் சிந்து - Unicode
     நளவெண்பா - Unicode
ஆன்மீகம்
     தினசரி தியானம் - Unicode
உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)