திருமந்திரம் - Thirumanthiram - சைவ சித்தாந்த நூல்கள் - Saiva Sidhantha Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 12 ...

1101 வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத்
தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்துஎன்னை உய்ய்க்கொண்டாளே. 27

1102 கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள்
கண்டனள் எண்ணென் கலையின் கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல் நல் லாளே. 28

1103 தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே. 29

1104 வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய கடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே. 30

1105 இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே. 31

1106 * நாடிகள் மூன்று நடுவெழு ஞானத்துக்
கூடி யிருந்த குமரி குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி உறங்குகின் றாளே. 32

* நாடிய கண் மூன்று நடுவெழு ஞானத்துக்

1107 உறங்கும் அளவின் மனோன்மணி வந்து
கறங்கும் வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கல்ஐ யாஎன்று உபாயம்செய் தாளே. 33

1108 உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச்
சுவாவை விளக்கும் சுழியாகத் துள்ளே
அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே. 34

1109 அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. 35

1110 ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையுள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே. 36

1111 குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலைத்தலை யாளே. 37

1112 கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே. 38

1113 இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
* பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்த்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே. 39

* பொருந்திரு

1114 ஆதி அனாதி அகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சுந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதிஎன் உள்ளத்து உடன்இயைந் தாளே. 40

1115 இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
அயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறுத் தாளே. 41

1116 பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முற்றி அருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே. 42

1117 உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
* வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே. 43

* வள்ளத் திருவினை

1118 கன்னியுங் கன்னி அழிந்திலள் காதலி
துன்னியங கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே. 44

1119 இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே. 45

1120 ஆதி அனாதியும் ஆய பராசக்தி
பாதிபராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே. 46

1121 ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்
ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே. 47

1122 ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் * சிவமங்கை
மேவும் கிழத்தி வினைகடிந் தாளே. 48

* சியமங்கை

1123 வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித்
தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே. 49

1124 ஆதி அனாதி அகாரணி காரணி
வேதமது ஆய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே. 50

7. பூரண சக்தி

1125 அளந்தேன் அகலிடத்து அந்தமும் * ஈறும்
அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை
அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே. 1

* ஆதியும்

1126 * உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சக்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே. 2

* உணர்ந்தில தீசனை

1127 கும்பக் களிறுஐந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
அன்பிற் கலவியுள் ஆயொழிந் தாரே. 3

1128 இன்பக் கலவியில் இட்டொழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பாரசக்தி என்னம்மை தானே. 4

1129 என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று
உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன்
மன்னம்மை யாகி மருவி உரைசெய்யும்
பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே. 5

1130 தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்பதொரு நூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே. 6

1131 ஆணையமாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
* தாணைய மாய தானதனன் தானே. 7

* தாணையு

1132 தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானேர் எழுந்து மதியை விளக்கினள்
தேனேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே. 8

1133 அறிவான * மாயையும் ஐம்புலக் கூட்டத்து
அறிவான மங்கை அருளது சேரில்
பிறியா அறிவறி வார்உளம் பேணும்
நெறியாய சித்த நிறைந்திருந் தாளே. 9

* மாயை ஐம்புலக்

1134 இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை நாடி
அரவம்செய் யாமல் அருளுடன் தூங்கப்
பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே. 10

(இப்பாடல் 1528-ம் பாடலாகவும் வந்துள்ளது)

1135 பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு
மேலனு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தானே. 11

1136 நின்ற பராசத்தி நீள்பரன் தன்னோடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய் நிற்கும்
நன்றறி யும்கிரி யாசக்தி நண்ணவே
மற்றன வற்றுள் மருவிடுந் தானே. 12

1137 மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்துநின்றமை ஒன்றும் * உணரார்
கருவொத்து நின்று # கலக்கின போது
திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே. 13

* உணராக்
# கலக்கின்ற

1138 சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்
* சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொடு ஆதிய தாம்வண் ணத்தாளே. 14

* சந்திரப் பூவி

1139 ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே. 15

1140 உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடையது வாகிய சாதகர் தாமே. 16

1141 தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது
பார்மேல் இதழ்பழி னெட்டிரு நூறுள
பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே. 17

1142 பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்
திண்கொடி யாகத் திகழ்திரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்தது உலகே. 18

1143 நடந்தது வம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்
படர்ந்தது * தன்வழி பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே. 19

* தண்வழிப்

1144 அடுக்குத் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தகச் தேசெல
முடுக்கும் தாமரை முச்சது ரத்தே. 20

1145 முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே. 21

1146 இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப்
பரந்தன வாயு திசை தோறும்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே. 22

1147 அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே. 23

1148 நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும்
புகலும்முச் சோதி புனையநிற் பாளே. 24

1149 புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள்
வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளே
புனையவல் லாள்மண் டலத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற்றியென் பேனே. 25

1150 போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே. 26

1151 தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே. 27

1152 மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே. 28

1153 தாவித் தவப்பொருள் தான்அவன் எம்இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து
ஆவிக்கும் அப்பொருள் தானது தானே. 29

1154 அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே. 30

8. ஆதாரவாதேயம்

1155 நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
தானித ழானவை நாற்பத்து நாலுள
பாலித * ழானவள் பங்கய மூலமாய்த்
தானிதழ் ஆகித் தரித்திருந் தாளே. 1

* ழான அப்

1156 தரித்திருந் தாள்அவள் தண்ணொளி நோக்கி
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளைக்
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்து
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே. 2

1157 மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் * பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வௌளடை யாமே. 3

* பகவரு

1158 வௌளடை யான்இரு மாமிகு மாமலர்க்
கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனம்
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகம் பிறவிப் பெண் ஆமே. 4

1159 பெண்ணொரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணுடை ஆண்என் பிறப்பறிந்து ஈர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே. 5

1160 பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங்
காச்சற்ற * சோதி கடவு ளுடன்புணர்ந்து
# தாச்சற்றெ னுள்புகுந் தாலிக்கும் தானே. 6

* சோதிக் கடவு
# தாச்சென்றனுட்

1161 ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மணி
பாலித்து உலகில் * பரந்துபெண் ஆகும்
வேலைத் தலைவியை வேத # முதல்வியை
ஆலித் தொருவன் உகந்துநின் றானே. 7

* பரந்து பெண் ணாணாகும்
# முதல்வியைப் பாவித்

1162 உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோடு
உகந்துநின் றான்நம் உழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் வுலகங்கள் எல்லாம்
உகந்துநின் றான்அவன் தன்தோள் தொகுத்தே. 8

1163 குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை * புணர்வினைத்
தொத்த # கருத்துச் சொல்லகில் லேனே. 9

* யுணர்வினைத்
# கருத்தது

1164 சொல்லஒண்ணாத அழற்பொதி மண்டலம்
சொல்லஒண் னாது திகைத்தங்கு இருப்பர்கள்
வெல்லஒண் ணாத வினைத்தனி நாயகி
மல்லஒண் ணாத மனோன்மணி தானே. 10

1165 தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே. 11

(இப்பாடல் 10-ம் பாடலாகவும் வந்துள்ளது)

1166 கண்ணுடை யாளைக் கலந்தங்கு இருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணப்
பண்ணுடை யார்கள் பதைப்பற்று இருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே. 12

1167 கண்டுஎன் திசையும் கலந்து வருங்கன்னி
பண்டுஎன் திசையும் பராசக்தி யாய்நிற்கும்
விண்டுஎன் திசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டுஎன் திசையும் தொழநின்ற கன்னியே. 13

1168 கன்னி ஒளியென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசக்தி யாமே. 14

1169 பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள ஆகமத் தாளாகும்
குராசத்தி கோலலம் பலவுணர்ந் தேனே. 15

1170 உணர்ந்த உலகு ஏழையும் யோகினி சத்தி
உணர்ந்துஉயி ராய்நிற்கும் உன்னதன் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் * போகம தாதி
இணைந்து பரமென்று இசைந்துஇது தானே. 16

* போதம தாகி

1171 இதுஅப் பெருந்தகை எம்பெரு மானும்
பொதுஅக் * கல்வியும் # போகமும் ஆகி
மது அக் குழலி மனோன்மணி மங்கை
அதுஅக் $ கல்வியுள் ஆயுழி யோகமே. 17

* கலவியும்
# போதமு
$ கலவியுள்

1172 யோகநற் சத்தி ஒளிபீடம் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகம் தெற்காகும்
யோகநற் சத்தி உதர நடுவாகும்
யோகநற் சத்திதான் உத்தரந் தேரே. 18

1173 தேர்ந்தெழு மேலாம் சிவன்அங்கி யோடுற
வார்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிட
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே. 19

1174 தானான ஆறுஎட்ட தாம்பரைக் குண்மிசை
தானான ஆறும்ஈ ரேழும் * சமகலை
தானான விந்து சகமே பரமெனும்
தானாம் பரவா தனையெனத் தக்கதே. 20

* சமைகலை

1175 தக்க பராவித்தை தானிரு பானேழில்
தக்கெழும் ஓர்உத் திரம்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சக்தி வெண்ணிற முக்கண்ணி
* தொக்க கதையோடு # தொன்முத் திரையாளே. 21

* தொக்கத்தையோடு
# தோள்முத்திரை

1176 முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தன்
* தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே. 22

* அத்துவ

1177 * கொங்கின்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் * தொளி பொருந்தினள்
அங்குச பாசம் எனும்அகி லம் கனி
தங்கும் அவள்மனை தான்அறி வாயே. 23

* கொங்கீன்ற
# தோளிபுரந்தனள்

1178 வாயு மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் * பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் # அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே. 24

* பிறந்திட்ட
# அறிவைக்

1179 தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே. 25

1180 பத்துமுக முடை யாள்நம் பராசத்தி
வைத்தனள் ஆறங்க நாலுடன் தான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள்எம் நேரிழை கூறே. 26

1181 * கூறிய கன்னி குலாய புருவத்தள்
# சீறிய ளாய்உல கேழும் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை அமுத பயோதரி
பேருயி ராளி பிறிவறுத் தாளே. 27

* கூறியல் கன்னி
# சீரிய

1182 பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே. 28

1183 உள்ளத்தின் உள்ளே உடனிருந்து ஐவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே. 29

1184 புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிதிருந் தாளே. 30

1185 இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவித்
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந்து உன்னி
நிரந்தர மாகிய நிரதி சயமொடு
பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே. 31

1186 அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே. 32

1187 மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈராறு எழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற ஆகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண்டு இந்துவோடு ஈறே. 33

1188 இந்துவின் நின்றொழு நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழு கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும்ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே. 34

1189 ஈறது தான்முதல் எண்ணிரண்டு ஆயிரம்
மாறுதல் இன்றி மனோவச மாய் எழில்
தூறது செய்யும் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே. 35

1190 இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத்
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய்து ஏத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே. 36

1191 மங்கையும் மாரனும் தம்மொடு கூடிநின்று
அங்குலி * கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே. 37

* கூடி யகப்புறம்

1192 சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில்
தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி
அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே. 38

1193 பாலித் திருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
சீலத்தை * நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
மூலத்து மேலது முத்தது வாமே. 39

* நோக்கித்

1194 முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுளம் மேவிநின் றாளே. 40

1195 மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி
தாவிய நற்பதத் தள்மதி யங்கதிர்
மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினும் மேலிடும் உள்ளொளி யாமே. 41

1196 உள்ளொளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள்ளவிழ் * கோதை கலந்துடனே நிற்கும்
கொள்ள விசுத்திக் கொடியமு தாமே. 42

* கோனைக்

1197 கொடியதுஇ ரேகை குருவுள் இருப்பப்
படியது வாருனைப் பைங்கழல் ஈசன்
வடிவது ஆனந்தம் வந்து முறையே
இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே. 43

1198 ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே. 44

1199 சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே. 45

1200 ஆரே * திருவின் திருவடி காண்பார்கள்
நேரே நின்றுஓதி * நினையவும் வல்லார்க்குக்
காரேர் குழலி கமல மலரன்ன
சீரேயும் சேவடி சிந்தைவைத் தாளே. 46

* குருவின்
# நினைப






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247