பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 13 ...

1201 சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவதிலே வைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதி செய் வீரே. 47

1202 சமாதிசெய்வார்கட்குத் தான் முத லாகிச்
சிவாதியி லாரும் சிலைநுத லாளை
நவாதியி லாக நயந்தது ஓதில்
உவாதி அவளுக்கு உறைவில தாமே. 48

1203 உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாடொறும் நண்ணி
மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
* இறைதினைப் போதினில் எய்திடலாமே. 49

* இறைதனைப் போற்றிடில்

1204 எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் * மாதுரி கையொடு
கைதவம் இன்றி கருத்துறும் வாறே. 50

* மாரிதுர்க் கையொடு

1205 கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்தி இருந்தவை சேரு நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே. 51

1206 ஆமையொன்று ஏறி அகம்படி யான்என
ஓம்என்று ஓதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூழநின் றாளே. 52

1207 சூடிடும் அங்குச * பாசத் துளைவழி
கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபத நன்னெடு ருத்திரம்
ஆடிடும் சீர்புனை ஆடக மாமே. 53

* பாசந்துணைவழி

1208 ஆமயன் மால்அரன் ஈசன் சதாசிவன்
தாமடி சூழநின்று எய்தினார் தம்பதம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி * சூடநின் றாளே. 54

* சூடிநின்

1209 சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞானம் உருவநின்று
ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே. 55

1210 அண்டமுதலாய் அவனிபரி யந்தம்
கண்டதுஒன்று இல்லைக் கனங்குழை அல்லது
கண்டதும் கண்டியும் ஆகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்டத ளாலே. 56

1211 ஆலம்உண் டான்அமுது ஆங்கவர் தம்பதம்
சாலவந்து எய்தும் தவத்துஇன்பம் தான்வரும்
கோலிவந்து எய்தும் குவிந்த பதவையோடு
ஏலவந்து ஈண்டி இருந்தனள் மேலே. 57

1212 மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலா நளினநின்று ஏத்திநட் டுச்சிதன்
மேலாம் எழுத்தினள் ஆமத்தி னாளே. 58

1213 ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம் நமசிவ என்றுஇருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே. 59

1214 நிலாமய மாகிய நீள்படி கத்தின்
சிலாமய மாகும் செழுந்த ரளத்தின்
சுலாமய மாகும் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே. 60

1215 கலந்துநின் றாள்கன்னி காதல னோடும்
கலந்துநின் றாள்உயிர் கற்பனை எல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே. 61

1216 காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் * கூட இழைத்தனள்
மாலின் மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம் தாமே. 62

* கூடல்

1217 பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும்
நாகம் உரித்து நடஞ்செய்யும் * நாதர்க்கே. 63

* நாதற்கே

1218 நாதனும் நால்ஒன் பதின்மரும் கூடிநின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உளஅவை
வேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின்று
ஆதியும் அந்தமும் ஆகிநின் றாளே. 64

1219 ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாளுடன் ஆகிய சக்கரத்து
ஆகிநின் றான்அவன் ஆயிழை பாடே. 65

1220 ஆயிழை யாளொடும் ஆதிப் பரமிடம்
ஆயதொர் அண்டவை யாறும் இரண்டுள
ஆய மனந்தொறு அறுமுகம் அவைதனில்
ஏயவார் குழலி இனிதுநின் றாளே. 66

1221 நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
இன்றென் அகம்படி * ஏழு உயிர்ப்பெய்தும்
துன்றிய ஓர்ஒன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுயர் ஓதி உணர்ந்துநின் றாளே. 67

* ஏழும்

1222 உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே
மணந்தெழும் ஆங்கதி யாகிய தாகும்
குணந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே. 68

(இப்பாடல் 1306-ம் பாடலாகவும் வந்துள்ளது)

1223 ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டல மாருதம் ஆதியும்
ஏமது சீவன் சிகையங்கு இருண்டிடக்
கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே. 69

1224 ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி
ஆகிய ஐம்பத்துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடுஅப் பரையவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே. 70

1225 * தானிகழ மோகினி சார்வன யோகினி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவம்
தானாம் பரசிவம் மேலது தானே. 71

* தானிகன்

1226 தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யாம்பொன் * திருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
வானவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே. 72

* குருவொடு

1227 மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கும் அறிய அரியாள் அவளாகும்
வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே. 73

1228 நுண்ணறி வாகும் * நுழைபுலன் மாந்தர்க்குப்
பின்னறி வாகும் பிரான்அறிவு அத்தடம்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாவது சன்மார்க்கம் ஆமே. 74

* நுழைபுழ

1229 சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்க மானவை எல்லாம் துரந்திடும்
நன்மார்க்க தேவரும் நன்னெறி யாவதும்
சன்மார்க்க தேவியும் சத்தியென் பாளே. 75

1230 சத்தியம் நானும் சயம்புவம் அல்லது
முத்தியை யாரும் முதல்அறி வாரில்லை
அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால்
மத்தியில் ஏற வழியது வாமே. 76

1231 அதுஇது என்றுஅவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே. 77

1232 வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே. 78

1233 ஓர்ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமிது
மாரன் குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதமிது சத்திய மாமே. 79

1234 சத்தியி னோடு சயம்புவம் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத்து ஒருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே. 80

1235 திருந்துசிவனும் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த
அருந்திட அவ்விடம் ஆரமுது ஆக
இருந்தனள் தான்அங்கு இளம்பிறை என்றே. 81

1236 என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார்
அன்றது ஆகுவர் தார்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே. 82

1237 நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய உள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே. 83

1238 தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை
மான்தரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
சான்றது வாகுவர் தாம்அவள் ஆயுமே. 84

1239 ஆயும் அறிவும் கடந்தணு ஆரணி
மாயம தாகி மதோமதி ஆயிடும்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம தாநெறி யாகிநின் றாளே. 85

1240 நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே. 86

1241 ஆம்அயன்மால் அரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமயன் ஆளும் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே. 87

1242 வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாள்ஒரு கோனையும்
வந்தனை செய்யும் வழி * நவில் வீரே. 88

* நவிலீரே

1243 நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்துஎரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே. 89

1244 தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பிலி
பூங்கிளி தங்கும் புரிகுழ லாள்அன்று
பாங்குடன் * ஏற்பப் பராசத்தி போற்றே. 90

* நேரப்

1245 பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அற்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே. 91

1246 விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே. 92

1247 தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்கி உமையொடும் ஓருரு வாமே. 93

1248 உருவம் பலஉயி ராய்வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில்
புரிவளைக் கைச்சிஎம் * பொன்னணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே. 94

* பொன்னொளி

1249 மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்கும் சலநதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்கும்அவ் வியோனியும் ஆமே. 95

1250 உணர்ந்துஒழிந் தேன்அவன் னாம் எங்கள் ஈசனை
புணர்ந்துஒழிந் தேன்புவ னாபதி யாரை
அணைந்துஒழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்துஒழிந்த தேன்தன் அருள்பெற்ற வாறே. 96

1251 பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே * நற்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே. 97

* நற்பயன்

1252 * தனிநா யகன்த னோடுஎன்நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழுலகு என்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியாய் # நினைவதென் காரணம் அம்மையே. 98

* தனியா # நினைந்தென்

1253 அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும்
இம்மனை செய்த * இந்நில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்து நின்றாளே. 99

* இருநில

1254 அம்மையும் அத்தவனும் அன்புற்றது அல்லது
அம்மையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை
அம்மையொடு அத்தனும் யானும் உடனிருந்து
அம்மையொடு அத்தனை யான்புரிந் தேனே. 100

9. ஏரொளிச் சக்கரம்

1255 ஏரொளி உள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழு நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கர * மந்நடு வன்னியே. 1

* மன்னிடு

1256 வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
வன்னி எழுத்தவை மாபெரும் சக்கரம்
வன்னி எழுத்திடு வாறுஅது சொல்லுமே. 2

1257 சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்எழுத் தாவன
சொல்லிடும் நூறொடு நாற்பத்து நாலுரு
சொல்லிரு சக்கர மாய்வரு மேலதே. 3

1258 மேல்வரும் விந்துவும் அவ்எழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்எழுத் தேவரின்
மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே. 4

1259 ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்தது எழுத்தே. 5

1260 விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கர மாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே. 6

1261 அப்பஅது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ்அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாய்எழ
அப்பினில அப்புறம் ஆகாச மாமே. 7

1262 ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில்
ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்தவை
ஆகாச அவ்எழுத்து ஆகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவது அறிமினே. 8

1263 அறிந்திடும் சக்கரம் ஐ அஞ்சு விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்எழுத்து அப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப்பக லோன்நிலை யாமே. 9

1264 அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
அம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
* இம்முதல் நாலும் # இருந்திடு வன்னியே
இம்முதல் ஆகும் எழுத்தலை எல்லாம். 10

* அம்முதல்
# இருநடு

1265 எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமும் ஆமே. 11

1266 அந்தமும் ஈறு முதலா னவையற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே. 12

1267 ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபதும்
ஆவினம் அப்பதின் ஐந்தின மாயுறும்
ஆவினம் அப்பதி னெட்டுடன் ஆயுறும்
ஆவினம் அக்கதி ரோன்வர வந்தே. 13

1268 வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும்
வந்திடு நாளது முந்நூற் றறுபதும்
வந்திடு ஆண்டு வகுத்துறை அவ்வியே. 14

1269 அவ்வின மூன்றும்அவ் ஆடது வாய்வருங்
* கெவ்வின மூன்றும் கிளர்தரு ஏறதாம்
சவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இவ்வின மூன்றும் இராசிகள் எல்லாம். 15

* எவ்வின

1270 இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுள் சக்கரம் என்றறி விந்துவாம்
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுள் சக்கரம் நின்றிடு மாறே. 16

1271 நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெல்லாம்
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே. 17

1272 தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை * தாரகை கண்டதே. 18

* யானது காணுமே

1273 கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தன ஒத்தபின்
கண்டிரும் அப்புறம் காரொளி யானதே. 19

1274 காரொளி ஆண்டம் பொதிந்துஉலகு எங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே. 20

1275 நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட
நின்றவிவ் வண்டமு மூல மலம்ஒக்கும்
நின்றஇவ் வண்டம் பலமது விந்துவே. 21

1276 விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்
விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே. 22

1277 வீசம் இரண்டுள நாதத்து எழுவன
வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே. 23

1278 விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத்தும் அளவினில்
விரிந்தது உட்கட்ட எட்டெட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது வாமே. 24

1279 விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் * ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் # தானே. 25

* ஞானம்
# தானே

1280 விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்தது சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே. 26

1281 மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில்
தந்திரத்து உள்ளெழுத்து ஒன்றுஎரி வட்டமாம்
தந்திரத் துள்ளும்இ ரேகையில ஒன்றில்லை
பந்தமது ஆகும் பிரணவம் உன்னிடே. 27

1282 உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட்டுஎழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே. 28

1283 பார்க்கலும் ஆகும் பகையறு சக்கரம்
காக்கலும் ஆகும் கருத்தில் தடமெங்கும்
நோக்கலும் ஆகும் நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்குலும் ஆகும் அறிந்துகொள் வார்க்கே. 29

1284 அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடும் சக்கரம் மேலெழுத்து அம்மை
பரிந்திடும் சக்கரம் பாராங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே. 30

1285 கூறிய சக்கரத்து உள்ளெழு மந்திரம்
மாறியல் பாக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே. 31

1286 மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் அங்கனல் ஒக்கும்
மதித்தங்கு எழுந்தவை காரணம் ஆகில்
கொதித்தங்கு எழுந்தவை கூடகி லாவே. 32

1287 கூடிய தம்பனம் மாரணம் வசியம்
ஆடியல் பாக அமைந்து செறிந்திடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே. 33

1288 தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே
அளிந்த வ்காரத்தை அந்நாடு வாக்கிக்
* குளிர்ந்த வரனைக் கூடியுள் வைத்து
வளிந்தவை அங்கெழு நாடிய காலே. 34

* குளிர்ந்த வரவினைக்

1289 கால்அரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித்து எழுந்துஅமைந்து ஊறி எழுந்தாய்ப்
பாலித்து எழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே. 35

1290 கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டையுள் நாவில் பகையற விண்டபின்
* மன்றுள் நிறைந்த மணிவிளக் காயிடும்
இன்றும் இதயத்து எழுந்து நமவெனே. 36

* மன்று

10. வயிரவச் சக்கரம்

1291 அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு
அறிந்தஅச் சத்தமி மேல்இவை குற்றம்
அறிந்துஅவை ஒன்றுவிட்டு ஒன்றுபத் தாக
அறிந்து வலமது வாக நடவே. 1

1292 நடந்து வயிரவன் சூல கபாலி
நடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாட லாமே. 2

1293 ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு
ஆமே தமருக பாசமும் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே. 3

1294 கையவை யாறும் கருத்துற நோக்கிடும்
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்கு மெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே. 4

1295 பூசனை செய்யப் பொருந்துஓர் ஆயிரம்
பூசனை * செய்ய மதுவுடன் ஆடுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே. 5

* செய்யு

1296 வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறிணுண் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே. 6

11. சாம்பவி மண்டலச் சக்கரம்*

(* இஃது ஒரு பிரதியில் சாம்பவி மண்டலம் என்று உள்ளது)

1297 சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேல்தரங்
காண்பதம் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே. 1

1298 * நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்
கோடறி வீதியும் கொடர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நடுவீதி
ஏடற நால்ஐந்து இடவகை யாமே. 2

* நாடரி

1299 நால்ஐந்து இடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய்
நாலுநற் கோணமும் நந்நால் இலிங்கமாய்
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே. 3

1300 ஆறிரு பத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே. 4