பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 15 ...

1401 நின்ற இச்சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு அணிமாதி தானாகிப்
பண்டைய ஆனின் பகட்டை அறுத்திட
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்குண் டாமே. 83

1402 * உண்டோர் அதோமுகம் உத்தம மானது
கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகம்ஐந்து கூறும் கரங்களும்
ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே. 84

* உண்டா மதோமுகம்

1403 நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கன்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனை யானதே. 85

1404 பூசனைச் சத்திகள் எண்ஐவர் சூழவே
நேசவன் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க்
காசினைச் சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே. 86

1405 தாரத்தின் உள்ளே தங்கிய சோதியைப்
பாரத்தின் உள்ளே பரந்துள் எழுந்திட
வேரது ஒன்றிநின்று எண்ணு மனோமயம்
காரது போலக் கலந்தெழு மண்ணிலே. 87

1406 மண்ணில் எழுந்த * அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நமவென்று
கண்ணில் எழுந்தது காண்பரிது அன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே. 88

* மகர வுகரங்கள்

1407 என்றுஅங்கு இருந்த அமுத கலையிடைச்
சென்றுஅங்கு இருந்த அமுத பயோதரி
கண்டம் கரம்இரு வெள்ளிபொன் மண்ணடை
கொண்டங்கு இருந்தது வண்ணம் அமுதே. 89

1408 அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழும் உள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெழுதம தாகிய கேடிலி தானே. 90

1409 கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நால்ஒன் பதின்மரும்
பூவிலி பூவிதழ் உள்ளே இருந்தவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே. 91

1410 நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
கொண்டது ஓராண்டு கூடி வருகைக்கு
விண்டஒள் காரம் விளங்கின அன்றே. 92

1411 விளங்கிடு வானிடை நின்றவை எல்லாம்
வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துச்
சுணங்கிடை * நின்றிவை சொல்லலும் ஆமே. 93

* நின்றவை

1412 ஆமே அதோமுக மேலே அமுதமாய்த்
தாமே உகாரம் தழைத்தெழும் சோமனும்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே. 94

1413 பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட
அக்களி யாகிய ஆங்காரம் * போயிடும்
மற்கட மாகிய மண்டலம் தன்னுள்ளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே. 95

* போய்விடும்

1414 பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மானத அவளுக்கு மண்ணும் திலகமாய்
கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே. 96

1415 குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் * கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்திதழ் ஆகிய பங்கயத் துள்ளே
இருந்தனள் காணும் இடம்பல கொண்டே. 97

* சத்திகள்

1416 கொண்டங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்கும் தேடுமால்
இன்றுஎன் மனத்துள்ளே இல்லடைந்து ஆளுமே. 98

1417 இல்லடைந் தானுக்கும் இல்லாதது ஒன்றில்லை
இல்லடைந் தானுக்கு இரப்பது தானில்லை
இல்லடைந் தானுக்கு இமையவர் தாம்ஒவ்வர்
இல்லடைந் தானுக்கு இல்லாதுஇல் ஆனையே. 99

1418 ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே. 100

நான்காம் தந்திரம் முற்றிற்று

ஐந்தாம் தந்திரம் *

(* இது வாதுளாகமத்தின் சாரம் என்பர்)

1. சுத்த சைவம்

1419 ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூவுல காளி யிலங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே. 1

1420 சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு
சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்று
நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே. 2

1421 கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
* சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே. 3

* தொல்பத

1422 வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
புதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே. 4

2. அசுத்த சைவம்

1423 இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத்
தினையார் இணைக்குழை யீரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே. 1

1424 காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்
தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே. 2

1425 கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே. 3

1426 ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறுங்
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே. 4

3. மார்க்க சைவம்

1427 பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதனம் * மாஞான சாதனந்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ்
சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே. 1

* நல்ஞான

1428 கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வப்பத்த நித்தனே. 2

1429 ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மையொன்
றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே. 3

1430 சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ்
சத்தும் அசத்துந் தணந்த பராபரை
உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே. 4

1431 சத்தும் அசுத்துந் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியு மங்கே சிறந்துள தானே. 5

1432 தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை * மாசற்ற
முன்னைப் பழமல # முன்கட்டை வீட்டினை
உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே. 6

* மாசற
# மூழ்கட்டை; மூலத் தைவிட்டு

1433 பூரணம் தன்னிலே வைத்தற்ற * வப்போதே
மாரண மந்த மதித்தானந் தத்தோடு
நேரென ஈராறு நீதி நெடும் போகங்
காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே. 7

* வப்போதம்

1434 மாறாத ஞான மதிப்பற மாயோகந்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே. 8

1435 வேதாந்தங் கண்டோர் பிரமமித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த * மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணமன்ன சைவர் உபாயமே. 9

* மில்லாத

1436 விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காம லெணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே. 10

1437 ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகார நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே. 11

4. கடுஞ் சுத்த சைவம்

1438 வேடம் கடந்து விகிர்தன்றன் பால்மேனி
ஆடம் பரமின்றி ஆசாபா சம்செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே. 1

1439 உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே. 2

1440 சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் * தாமூலம்
அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே. 3

* தார்மூலம்; தாமூலன்

1441 நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் * தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலால்
தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே. 4

* தற்பரந்

1442 சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே. 5

5. சரியை

1443 நேர்ந்திடு * மூல சரியை நெறியிதென்
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே. 1

* மூலன்

1444 உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை
செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே. 2

1445 நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே. 3

1446 பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த வியமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே. 4

1447 சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ * னாயினோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே. 5

* னாயற்றோர்

1448 கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபந்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே. 6

1449 சரியாதி நான்குந் தருஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே. 7

1450 சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபிடேகமே. 8

6. கிரியை

1451 பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண்
டெத்திக் கிலரில்லை என்பதின் அமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே. 1

1452 கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே. 2

(இப்பாடல் 1848-ம் பாடலாகவும் வந்துள்ளது)

1453 கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழு
மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே. 3

1454 இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளொரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே. 4

1455 பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே. 5

1456 அன்பின் உருகுவ நாளும் பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்
என்பினுட் சோதி இலங்குகின் றானே. 6

7. யோகம்

1457 நெறிவழி யேசென்று * நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலு மாமே. 1

* நேர்மையின்

1458 ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் கல்லால்
ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரியயன் என்றுளார்
ஊழி முயன்றும் ஒருச்சியு ளானே. 2

(இப்பாடல் 1846-ம் பாடலாகவும் வந்துள்ளது)

1459 பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல * உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே. 3

* உணரவல் லார்கட்கு

1460 உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 4

(இப்பாடல் 2622-ம் பாடலாகவும் வந்துள்ளது)

1461 எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே. 5

1462 விரும்பிநின் றேசெயில் மேய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெயின் * மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே. 6

* மெய்யுணர்வாகும்

1463 பேணிற் பிறவா உலகருள் செய்திடுங்
காணில் தனது கலவியு ளேநிற்கும்
நாணில் நகர நெறிக்கே வழிசெயும்
ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே. 7

1464 ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்த னிவனென்றே அன்புறு வார்களே. 8

1465 யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்
ஆகத் தருகிரி யாதி சரியையாந்
தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே. 9

1466 யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே யுற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே. 10

8. ஞானம்

1467 ஞானத்தின் மிக்க * அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே. 1

* தவநெறி

1468 சத்தமுஞ் சத்த மனனும் தகுமனம்
உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ்
சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே. 2

1469 தன்பால் உலகுந் தனக்கரு காவதும்
அன்பா லெனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே. 3

1470 இருக்குஞ் சேம இடம்பிரமமாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகந்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
* திருக்கிலாஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே. 4

* திருக்கமில்

1471 அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது * நீர்த்தொனி யாமே. 5

* நீர்த்தோணி யாமே

1472 ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஏனம் விளைந்தெதி ரேகாண் வழிதோறுங்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே. 6

1473 ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமா
மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து
மேனிற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுந்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே. 7

1474 ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே. 8

1475 நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே. 9

1476 ஞானச் சமயமே நாடுந் தனைக் காண்டல்
ஞான விசேடமே * நாடு பரோதய
ஞானநிர் வாணமே # நன்றறி வானருள்
$ ஞானாபி டேகமே நற்குறு பாதமே. 10

* நண்ணும் பரோதயம்
# நற்சிவோ கம்பாவம்
$ ஞானபி டேகமே

9. சன்மார்க்கம்

1477 சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத்
தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே. 1

1478 சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே. 2

(இப்பாடல் 1567-ம் பாடலாகவும் வந்துள்ளது)

1479 தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத்
தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே. 3

1480 தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் * சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே. 4

* சிவனு

1481 தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று
மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது
மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந்
தாவை னாயுறலானசன் மார்க்கமே. 5

1482 சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ்
சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ. 6

1483 சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே. 7

1484 சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப்
பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே. 8

1485 அன்னிய பாசமும் ஆகுங் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே. 9

1486 பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்
* தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே. 10

* சுசியாத

1487 மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர்
மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே. 11

10. சகமார்க்கம்

1488 சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மனமார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்க ஞானத் துறதியு மாமே. 1

1489 மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடாம்
வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும்
உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே. 2

1490 யோகச் சமாதியின் உள்ளே யகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி
யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே. 3

1491 யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே. 4

1492 ஆதார சோதனை யானாடி சுத்திகள்
மேதாதி யீரெண் * கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாஞ்ச மார்க்கமே. 5

* கலந்தது
(இப்பாடல் 1707-ம் பாடலாகவும் வந்துள்ளது)

1493 பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி யெறிவ னயிர்மன வாளாற்
கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன்
வணங்கவல் லான் சிந்தை வந்துநின் றானே. 6

1494 வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே. 7

11. சற்புத்திர மார்க்கம்

1495 மேவிய சற்புத்திர * மார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே. 1

* மார்க்கமே தொழில்

1496 பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் * நீசுத்தி செய்தன்மர்
# றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே. 2

* நீர்சுத்தி செய்தலும்
# மாசற்ற

1497 அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
மறுகா நரையன்னந் தாமரை நீலங்
குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ்
சிறுகால் * அறநெறி சேரகி லாரே. 3

* அரனெறி

1498 அருங்கரை யாவது அவ்வடி நீழற்
பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை
வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
ஒருங்கரை யாயுல கேழினொத் தானே. 4

1499 உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்து பிரிக்கிலப் பான்மையு னாமே. 5

1500 நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே. 6






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247