பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 16 ...
1501 திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை உருமன்னி வாழும் உலகத்தீர்கேண்மின் கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே. 7 12. தாச மார்க்கம்
1502 எளியனல் தீப மீடல்மலர் கொய்தல் அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல் பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே. 1
1503 அதுவிது வாதிப் பரமென் றகல்வர் இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை விதிவழி யேசென்று வேந்தனை நாடு மதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே. 2
1504 அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் வந்திப்ப வானவர் தேவனை நாடோறும் வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே. 3
1505 அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி உன்னுவர் உள்மகிழ்ந்துண்ணின் றடிதொழக் கண்ணவ னென்று கருது மவர்கட்குப் பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே. 4
1506 * வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும் # பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின் மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை $ நேசத் திருந்த நினைவறி @ யாரே. 5 * வாசித்துப் பூசித்து மாமலர் கொய்திட்டுப் # பாசக் கிணற்றில் வீழ்கின்ற பாவிகாள் $ நேசித்திருந்த; நேசித்தே வைக்க @ யீரே 13. சாலோகம்
1507 சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ் சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால் மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம் பாலோகம் இல்லாப் பரனுரு வாமே. 1
1508 சமயங் கிரியையிற் றன்மனங் கோயில் சமய மனுமுறை தானே விசேடஞ் சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ் சமயாபி டேகந் தானாஞ் சமாதியே. 2 14. சாமீபம்
1509 பாசம் பசுவான தாகும்இச் சாலோகம் பாச மருளான தாகும்இச் சாமீபம் பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம் பாசங் கரைபதி சாயுச் சியமே. 1 15. சாரூபம்
1510 தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந் தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர் இங்கிவ ராக விழிவற்ற யோகமே. 1
1511 சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே சயிலம தாகுஞ் சராசரம் போலப் பயிலுங் குருவின் பதிபுக்க போதே கயிலை இறைவன் கதிர்வடி வாமே. 2 16. சாயுச்சியம்
1512 சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல் * சைவஞ் # சிவந்தன்னைச் சாராமல் $ நீங்குதல் சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே. 1 * சைவம் பசுபாசம் # சிவமன்றிச் $ நீவுதல்
1513 சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல் சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற் சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச் சாயுச் சியமனத் தானந்த சத்தியே. 2 17. சத்திநிபாதம் மந்தம்
1514 இருட்டறை மூலை யிருந்த * கிழவி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் # குணம்பல காட்டி மருட்டி யவனை $ மணம்புரிந் தாளே. 1 * குமரி # குணமுதல் $ மணம்புணர்ந் தாளே
1515 தீம்புல னான திசையது சிந்திக்கில் ஆம்புல னாயறிவார்க்கமு தாய்நிற்குந் தேம்புல னான தெளிவறி வார்கட்குக் கோம்புல னாடிய கொல்லையு மாமே. 2
1516 இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி அருள்நீங்கா வண்ணமே யாதியருளும் மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப் பொருள்நீங்கா இன்பம் * புலம்பயல் தானே. 3 * புணர்ந்தயின் றேனே
1517 இருள்சூ ழறையில் இருந்தது நாடிற் பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன் மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே. 4 மந்ததரம்
1518 மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி * அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே. 5 * அருட்டிரு
1519 கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர் கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர் கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற் பின்னைப் பிறவி பிறிதில்லை தானே. 6
1520 செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன் எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங் கைய னிவனென்று * காதல்செய் வீரே. 7 * காவல் செய்யீரே
1521 எய்திய காலங்கள் எத்தனை யாயினுந் தையலுந் தானுந் தனிநா யகமென்பர் வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக் கையிற் கருமஞ்செய் காட்டது வாமே. 8
1522 கண்டுகொண்டோமிரண்டுந்தொடர்ந் தாங்கொளி பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர் வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல் நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே. 9 தீவிரம்
1523 அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில் எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும் உண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக் கண்ணுற்று நின்ற * கனியது வாகுமே. 10 * களியது
1524 பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும் மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங் குறப்பெண் குவிமுலை கோமள வல்லி சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே. 11
1525 தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன் பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும் ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத் தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே. 12
1526 நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும் பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன் அணுகிய தொன்றறி யாத வொருவன் அணுகும் உலகெங்கு மாவியு மாமே. 13 தீவிரதரம்
1527 இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி குருவென வந்து குணம்பல நீக்கித் தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால் திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. 14
1528 இரவும் பகலும் * இலாத இடத்தே குரவஞ் செய்கின்ற குழலியை # உன்னி அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப் பரிவொன்றி லாளும் பராபரை தானே. 15 * இறந்த # நாடி
1529 மாலை விளக்கும் மதியமும் ஞாயிறுஞ் சாலை விளக்குந் தனிச்சுடர் அண்ணலுள் ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்(து) ஊனை விளக்கி யுடனிருந் தானே. 16 18. புறச்சமய தூடணம்
1530 ஆயத்துள் நின்ற * அறுசம யங்களுங் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர் மாயக் குழியில் விழுவர் மனைமக்கள் # பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே. 1 * அறுசமயத் தோரும் # பாசத்துள்
1531 உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன் வள்ளல் தலைவன் மலருறை மாதவன் பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங் கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே. 2
1532 உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க் குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க் குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே. 3
1533 ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் ஆறு சமயப் பொருளும் அவனலன் தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின் மாறுதல் இன்றி மனைபுக லாமே. 4
1534 சிவமல்ல தில்லை யறையே சிவமாந் தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்(கு) அவமல்ல தில்லை அறுசம யங்கள் * தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே. 5 * தவமல்ல
1535 அண்ணலை நாடிய ஆறு சமயமும் விண்ணவ ராக மிகவும் விரும்பியே முண்ணின் றழியு முயன்றில ராதலான் மண்ணின் றொழியும் வகையறி யார்களே. 6
1536 சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம் பவகதி பாசப் பிறவியொன் றுண்டு தவகதி தன்னொடு * நேரொன்று தோன்றில் அவகதி மூவரும் அவ்வகை யாமே. 7 * தேரொன்று
1537 நூறு சமயம் உளவா நுவலுங்கால் ஆறு சமயமவ் ஆறுட் படுவன கூறு சமயங்கன் கொண்டநெறிநில்லா ஈறு பரநெறி யில்லா நெறியன்றே. 8
1538 கத்துங் கழுதைகள் போலுங் * கலதிகள் சுத்த சிவமெங்குந் தோய்வுற்று நிற்கின்றான் குற்றம் # தெளியார் குணங்கொண்டு கோதாட்டிப் பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. 9 * கலாதிகள் # தெரியாமல்
1539 மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும் முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி இயங்கிப் பெறுவரே லீறது காட்டிற் பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே. 10
1540 சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு மாயன் மயக்கிய மானுட ராமவர் காயம் விளைக்குங் கருத்தறி யார்களே. 11
1541 வழியிரண் டுக்குமோர் வித்தது வான * பழியது பார்மிசை வாழ்தல் உறுதல் சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின் றழிவழி வார்நெறி நாடநில் லாரே. 12 * வழியது
1542 மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர் நாதம தாக அறியப்படுநந்தி பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில் ஆதியும் அந்நெறி யாகிநின் றானே. 13
1543 அரநெறி யப்பனை யாதிப் பிரானை உரநெறி யாகி யுளம்புகுந் தானைப் பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம் பரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே. 14
1544 பரிசறி வானவன் பண்பன் பகலோன் பெரிசறி வானவர் பேற்றில் திகழுந் துரிசற நீநினை தூய்மணி வண்ணன் அரிதவன் வைத்த அறநெறி தானே. 15
1545 ஆன சமயம் அதுஇது நன்றெனும் மாய மனிதர் மயக்க மதுவொழி கானங் கடந்த கடவுளை நாடுமின் ஊனங் கடந்த வுருவது வாமே. 16
1546 அந்நெறி * நாடி அமரரு முனிவருஞ் செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின் முன்னெறி நாடி முதல்வன் அருளிலார் சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே. 17 * நாடிய
1547 உறுமா றறிவதும் உள்நின்ற சோதி பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை அறுமா றதுவான வங்கியு ளாங்கே இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே. 18
1548 வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங் கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர் சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப் பழிநடப் பார்க்குப் பரவலு மாமே. 19
1549 வழிசென்ற மாதவம் வைகின்ற போது பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே வழிசெல்லும் வல்வினை யாம்திறம் விட்டிட் டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே. 20 19. நிராசாரம்
1550 இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங் கமையறிந் தாருட் கலந்துநின் றானே. 1
1551 பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர் ஏங்கி உலகில் இருந்தழு வாரே. 2
1552 * இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும் அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் # பிறப்பில்லை தானே. 3 * இருந்தழி # பிறப்பிலி
1553 தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர் பாரறி வாளர் படுபயன் றானுண்பர் காரறி வாளர் கலந்து பிறப்பர்கள் நீரறி வார்நெடு மாமுகி லாமே. 4
1554 அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங் குறியது கண்டுங் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே. 5
1555 மன்னும் ஒருவன் மருவு மனோமயன் என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள் துன்னி மனமே தொழுமின் துணையிலி தன்னையும் அங்கே தலைப்பட லாமே. 6
1556 ஓங்காரத் * துள்ளொளி உள்ளே உதயமுற் றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. 7 * துள்ளொளிக் குள்ளே 20. உட்சமயம்
1557 இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம் அமைய வகுத்தவன் ஆதி புராணன் சமயங்க ளாறும்தன் றாளிணை நாட அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே. 1
1558 ஒன்றது பேரூர் வழியா றதற்குள என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது என்றுரை * யாளர்கள் குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே. 2 * நீதர்கள்; மாந்தர்கள்
1559 சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய் வையத் தலைவனை வந்தடைந் துயமினே. 3
1560 சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற் பவனவன் வைத்த பழிவழி நாடி இவனவன் என்ப தறியவல் லார்கட் கவனவ னங்குள தாங்கட னாமே. 4
1561 ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப் போமாறு தானில்லை புண்ணிய மல்லதங் காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும் போமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே. 5
1562 அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ் * சிலநெறி தேடித் திரிந்தஅந் நாளும் உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந் தரநெறி நின்ற தனிச்சுடர் தானே. 6 * சிவநெறி
1563 தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி ஆர்ந்தவர் அண்டத்துப் * புக்க அருள்நெறி போந்து புனைந்து புணர்நெறி யாமே. 7 * புக்கவ்
1564 ஈரு மனத்தை யிரண்டற வீசுமின் ஊருஞ் சகாரத்தை ஓதுமின் னோதியே வாரு மரநெறி மன்னியே முன்னியத் தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே. 8
1565 மினற்குறி யாளனை வேதியர் வேதத் தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தி னயக்குறி காணில் அரனெறி யாமே. 9
1566 ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே. 10
1567 சைவ சமயத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத் துளார்க்குவகுத்துவைத் தானே. 11 (இப்பாடலுடன் 1478-ம் பாடலை ஒப்பு நோக்குக)
1568 இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும் பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென் ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. 12
1569 ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர் ஆமே பிரானுக் கதோமுக மாறுள தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும் நாமே பிரானுக்கு நரரியல் பாமே. 13
1570 ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன் ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும் பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே. 14
1571 ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர் ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே. 14
1572 அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை அறியவொண் ணாத அறுவகை யாக்கி அறியவொண் ணாத அறுவகைக் கோசத் தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே. 15 ஐந்தாம் தந்திரம் முற்றிற்று ஆறாம் தந்திரம் * (* இது வியாமளாகமத்தின் சாரம் என்பர்) 1. சிவகுரு தரிசினம்
1573 பத்திப் பணித்துப் * பரவு மடிநல்கிச் சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச் சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற் சித்தம் இறையே சிவகுரு வாமே. 1 * பரவும் படிநல்கிச்
1574 பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த தாசற்ற சற்குரு அம்பல மாமே. 2
1575 சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய சுத்தியும் * எண்சத்தித் தூய்மையும் யோகத்துச் சத்தியும் மந்திர சாதக போதமும் பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே. 3 * எண்முத்தித்
1576 எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால் எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற் சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே. 4
1577 தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள் யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால் யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே. 5
1578 சித்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய் தத்தனை நல்கருள் காணா அதிமூடர் பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர் அத்தன் இவனென் றடிபணிவாரே. 6
1579 உண்மையிற் பொய்மை ஒழித்தலும் * உண்மைப்பார் திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன் வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும் அண்ணல் அருளன்றி யாரறி வாரே. 7 * உண்மைப்பால்
1580 சிவனே சிவஞானி யாதலாற் சுத்த சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் பவமான தின்றிப் பரலோக மாமே. 8
1581 குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென் பதுகுறித் தோரார் குருவே * சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. 9 * சிவமாகிக்
1582 சித்தம் யாவையுஞ் சிந்தித் திருந்திடும் அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால் அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே. 10
1583 தானந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத் தானந்தி யங்கித் தனிச்சுட ராமே. 11
1584 திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை மருளா தருளும் மயக்கறும் வாய்மைப் பொருளாய வேதாந்த போதமும் நாதன் உருவாய் * அருளா விடிலோர ஒண்ணாதே. 12 * வரவிடி
1585 பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர சித்திக்கு வித்தாஞ் சிவோகமே சேர்தலான் முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை சத்தி யருள்தரில் தானெளி தாமே. 13
1586 * பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை முன்எய்த வைத்த முதல்வனை எம்மிறை தன்எய்துங் காலத்துத் தானே வெளிப்படு மன்னெய்த வைத்த மனமது தானே. 14 * இன்னெய்த (இப்பாடல் 1629-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1587 சிவமான ஞானந் தெளியவொண் சித்தி சிவமான ஞானந் தெளியவொண் முத்தி சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச் சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே. 15
1588 அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ் செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன் மறந்தொழிந் தேன்மதி * மாண்டவர் வாழ்க்கை பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே. 16 * மானிடர்
1589 தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. 17 (இப்பாடல் 1782-ம் பாடலாகவும் வந்துள்ளது) 2. திருவடிப் பேறு
1590 இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச் சிவந்த குருவந்து சென்னிகை வைக்க உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே. 1
1591 தாடந்த போதே தலைதந்த எம்மிறை வாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு வீடந்த மின்றியே யாள்கென விட்டருட் பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே. 2
1592 தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே. 3
1593 உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத் திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக் கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே. 4
1594 குரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண் டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு பெரிய பிரானடி நந்தி பேச்சற் றுருகிட என்னையங் குய்யக்கொண் டானே. 5
1595 பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக் காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே. 6
1596 இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும் பதிவித்த பாதப் பராபரன் நந்தி கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும் விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே. 7
1597 திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப் பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக் குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக் * கருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே. 8 * கருவடி மாற்றிடக்
1598 திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந் திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந் திருவடி ஞானஞ் சிறைமல * மீட்குந் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே. 9 * நீக்குந்
1599 மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும் பால்வைத்த சென்னிப் படரொளி வானவன் தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. 10
1600 கழலார் கமலத் திருவடி என்னும் நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங் குழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்தே. 11 |