உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 18 ...
1701 இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக் குறையது கூறிக் குணங்கொண்டு * போற்றச் சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே. 12 * போற்றி
1702 வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால் வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே. 13
1703 சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல் அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே. 14 ஆறாம் தந்திரம் முற்றிற்று ஏழாம் தந்திரம் * (* இது காலோத்தராகமத்தின் சாரம் என்பர்) 1. ஆறு ஆதாரம்
1704 நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும் மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும் காலங்கண் டான்அடி காணலும் ஆமே. 1
1705 ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் மேதாதி நாதாந்த மீதாம் பாராசக்தி போதா லயத்துஅ விகாரந்தனிற்போத மேதாதி ஆதார மீதான உண்மையே. 2
1706 மேல்என்றும் கீழ்என்றும் இரண்டற் காணுங்கால் தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும் பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம் கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே. 3
1707 ஆதார சோதனை யால்நாடி சுத்திகள் மேதாதி ஈரெண் * காலந்தத்து விண்ணொளி போதா லயத்துப் புலன்கர ணம் புத்தி சாதா ரணங் # கெட்டான் தான்சக மார்க்கமே. 4 * கலந்தது # கெட லாஞ்சக
1708 மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி ஆதார சோதனை * அத்துவ சோதனை தாதுஆர மாசுவே தானெழச் சாதித்தால் ஆதாரஞ் # செய்போக மாவது காயமே. 5 * அத்துவா # செல்போக
1709 ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில் கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின் ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே. 6
1710 ஆகும் உடம்பும் அழிக்கின்ற அவ்வுடல் போகும் உடம்பும் பொருந்திய வாறுதான் ஆகிய வக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே. 7
1711 ஆயு மலரின் அணிமலர் மேலது ஆய இதழும் பதினாறும் அங்குள தூய அறிவு சிவானந்த மாகிப்போய் மேய அறிவாய் விளைந்தது தானே. 8 (இப்பாடல் 2359-ம் பாடலாகவும் வந்துள்ளது) 2. அண்டலிங்கம் (உலக சிவம்)
1712 இலிங்கம தாவது யாரும் அறியார் இலிங்கம தாவது எண்டிசை எல்லாம் இலிங்கம் தாவது எண்ணெண் கலையும் இலிங்கம தாக எடுத்தது உலகே. 1
1713 உலகில் எடுத்தது சத்தி * முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய் உலகில் எடுத்தது சத்தி குணமாய் உலகில் எடுத்த சதாசிவன் தானே. 2 * முதலாய்
1714 போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம் ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் ஆகம அத்துவா ஆறும் சிவமே. 3
1715 ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று ஆர்த்தினர் அண்டங் கடந்து அப் புறநின்று காத்தனன் என்னும் கருத்தறி யாரே. 4
1716 ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி * ஒண்சுட ரான இரவியோடு இந்திரன் கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள் தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே. 5 * எண்சுட
1717 தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன் மாபரத் துண்மை வழிபடு வாரில்லை மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும் பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே. 6
1718 * தூய விமானமும் தூலமது ஆகுமால் ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம் * ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம் ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே. 7 * பாய
1719 முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம் அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம் உய்த்த்தின் சாதனம் பூமண லிங்கமே. 8
1720 துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன் கன்றிய * செம்பு கனல்இர தம்சலம் வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன் தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே. 9 * செப்புக்
1721 மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான் இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும் குறைவிலா * வசியர்க்குக் கோமள மாகும் துறையடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே. 10 * வைசியர்க்குக்
1722 அது வுணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி எதுஉண ராவகை நின்றனன் ஈசன் புதுஉணர் வான புவனங்கள் எட்டும் இது உணர்ந்து என்னுடல் கோயில்கொண்டானே. 11
1723 அகலிட மாய்அறி யாமல் அடங்கும் உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே பகலிட மாம்முனம் பாவ வினாசன் புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே. 12
1724 போது புனைசூழல் பூமிய தாவது மாது புனைமுடி வானக மாவது நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும் ஆதியுற நின்றது அப்பரி சாமே. 13
1725 தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம் திரைபொரு நீரது மஞ்சன சாலை வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை கரையற்ற நந்திக் கலையும்திக்காமே. 14 3. பிண்டலிங்கம் (உடற் சிவம்)
1726 * மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் * மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் * மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் * மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே. 1 * மானிட
1727 உலந்திலர் பின்னும் உளரென நிற்பர் நிலந்திரு நீர்தெளி யூனவை செய்யப் புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2
1728 கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும் வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர் தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே. 3
1729 கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே. 4 4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்)
1730 கூடிய பாதம் இரண்டும் படிமிசை பாடிய கையிரண் * டெட்டும் பரந்தெழும் தேடு முகம்ஐந்து # செங்கணின் மூவைந்து நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே. 1 * டெட்டுப் # செங்கையின்
1731 வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும் சாதா ரணமாம் சதாசிவந் தானே. 2
1732 ஆகின்ற சத்தியின் உள்ளே * கலைநிலை ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின் ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே. 3 * பல்கலை
1733 அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம் அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம் அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே. 4
1734 சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள சமயத்து எழுந்த இராசி ஈராறுள சமயத்து எழுந்த * சதிரீரா றெட்டுள சமயத்து எழுந்த சதாசிவந் தானே. 5 * சரீரமா
1735 நடுவு கிழக்குத் தெற்குத் தரமேற்கு நடுவு படிகநற் குங்குமவன்னம் அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால் அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே. 6
1736 அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென் நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே. 7
1737 சத்தி தராதலம் அண்டம் சதாசிவம் சத்தி சிவமிக்க தாபர சங்கமம் சத்தி உருவம் அருவம் சதாசிவம் சத்தி சிவதத்துவ முப்பத் தாறே. 8
1738 தத்துவ மாவது அருவம் சராசரம் தத்துவ மாவது உருவம் சுகோதயம் தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும் தத்துவம் ஆகும் சதாசிவம் தானே. 9
1739 கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும் ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே. 10
1740 இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும் சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும் அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத் தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே. 11
1741 சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில் * உத்தமம் வாம # முரையத் திருந்திடும் $ தத்துவம் பூருவம் தற்புரு டன் @ சிர & மத்தரு கோரம் மருடத்துஈ சானனே. 12 * உத்தரம் # முரைத்திடும் சத்தி $ பச்சிமம் @ னுரை & தெக்கி லகோரம் தென்கிழக்கீசனே
1742 நாணுநல் ஈசான நடுவுச்சி தானாகும் தாணுவின் தன்முகம் தற்புருட மாகும் காணும் அகோரம் இருதயம் குய்யமாம் மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே. 13
1743 நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம் வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம் செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும் செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே. 14
1744 எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம் விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி வண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம் பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே. 15
1745 சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும் சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும் சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும் சத்தி உருவாம் சதாசிவன் தானே. 16
1746 மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும் தான் நந்தி அஞ்கின் தனிச்சுடை ராய்நிற்கும் கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில் மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே. 17
1747 ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது தென்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே. 18
1748 உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக் கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம் புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே பணிந்தேன் * பகலவன் பாட்டும் ஒலியே. 19 * பகவன் றன்
1749 ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத் தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில் ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே. 20
1750 தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும் தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும் தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய் தன்மேனி தானாகும் தற்பரம் தானே. 21
1751 ஆரும் அறியார் அகாரம் அவனென்று பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி தாரம் இரண்டும் தரணி முழுதுமாய் மாறி எழுந்திடும் ஓசையதாமே. 22
1752 இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம் இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம் இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம் இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 23 5. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம் )
1753 அகார முதலா அனைத்துமாய் நிற்கும் உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம் தாமே. 1
1754 ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும் மேதாதி நாதமும் மீதே விரிந்தன ஆதார விந்து ஆதிபீட நாமே போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே. 2
1755 சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் சத்தி * சிவமாகும் தாபரம் தானே. 3 * சிவமாந்
1756 தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம் வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம் பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன் தானேர் எழுகின்ற அகாரமது ஆமே. 4
1757 விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்த கருஐந்தும் செய்யும் அவைஐந்தே. 5
1758 சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும் சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம் சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே. 6
1759 மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும் இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே. 7
1760 பராபரன் எந்தை பனிமதி சூடி தராபரன் தன்னடி யார்மனக் கோயில் சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும் அராபரன் மன்னி மனத்துஉறைந் தானே. 8
1761 பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம் குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன் அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும் பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே. 9
1762 அன்று நின் றான்கிடந் தான்அவன் என்று சென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள் என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே. 10 6. ஞான லிங்கம் (உணர்வுச் சிவம் )
1763 உருவும் அருவும் உருவோடு அருவும் மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும் குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும் தருவென நல்கும் சதாசிவன் தானே. 1
1764 நாலான கீழது உருவம் நடுநிற்க மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண் நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால் பாலாம் இவையாம் பரசிவன் தானே. 2
1765 தேவர் பிரானைத் திசைமுக நாதனை நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை ஏவர் பிரான்என்று இறைஞ்சுவர் அவ்வழி யாவர் பிரானடி அண்ணலும் ஆமே. 3
1766 வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற காண்டகை யானொடும் கன்னி உணரினும் மூண்டகை மாறினும் ஒன்றது வாமே. 4
1767 ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை பாதியுள் மன்னும் பராசத்தி யாமே. 5
1768 சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே சுத்த சிவபதம் தோயாத தூவொளி அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம் ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே. 6
1769 கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும் எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும் பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே. 7
1770 எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம் சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே. 8
1771 சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச் சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச் சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே. 9
1772 சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி சத்தி சிவமுமாம் * சிவன்சத் தியுமாகும் சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே. 10 * சத்தி சிவமாகம் 7. சிவ லிங்கம் (சிவகுரு)
1773 குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் பரக்கின்ற * காற்றுப் பயில்கின்ற தீயும் நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே. 1 * காற்றும்
1774 வரைத்து வலஞ்செய்யு * மாறிங்குஒன்று உண்டு நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப் புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே. 2 * மாறு மிங்கொன்
1775 ஒன்றெனக் கண்டேயெம் ஈசன் ஒருவனை நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே. 3
1776 மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப் பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே. 4
1777 மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று ஆவி எழும்அள வன்றே உடலுற மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும் பாவித்து அடக்கிற் பரகதி தானே. 5 8. சம்பிரதாயம் (பண்டை முறை)
1778 உடல்பொருள் ஆவி * உதகத்தால் கொண்டு # படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே. 1 * உலகத்தார் # படர்வினைப்
1779 உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான வியவார் பரமும்பின் மேவும் பிராணன் செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே உயலார் குருபரன் உய்யக் கொண்டானே. 2
1780 பச்சிம திக்கலே வைத்தேஆ சாரியன் நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள் * உச்சிக்குங் கீழது உள்நாக்கு மேலது வைச்ச பதமிது வாய்திற வாதே. 3 * உச்சிக்குக்
1781 * பிட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனை # யொட்டடித்து உள்ளமர் மாசெலாம் $ வாங்கித் தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே. 4 * பெட்டடித் # பொட்டடித்துள்ளமால் சொல்லாமல் $ வாங்கிப்பின்
1782 தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே. 5
1783 கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால் பாடல் உடலினில் பற்றற நீக்கியே கூடிய தானவ னாம்குளிக் கொண்டே. 6
1784 கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக் கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக் கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால் கொண்டான் எனஒன்றும் கூறகி லானே. 7
1785 குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் பறிக்கின்ற காயத்தைப் பற்றியநேர்மை * பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே. 8 * பிறிக்க
1786 உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம் உணர்வுடை யார்கள் உணர்ந்துகண் டாரே. 9 (இப்பாடல் 2938-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1787 காயப் பரப்பில் அலைந்து துரியத்துச் * சால விரிந்து குவிந்து சகலத்தில் ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத் தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே. 10 * சாய
1788 நானென நீயென வேறில்லை நண்ணுதல் ஊனென ஊனுயிர் என்ன உடனின்று வானென வானவர் நின்று மனிதர்கள் தேனென இன்பம் திளைக்கின்ற வாறே. 11
1789 அவனும் அவனும் அவனை அறியார் அவனை அறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவனிவன் ஆமே. 12
1790 நானிது தானென நின்றவன் நாடோறும் ஊனிது தானுயிர் போலுணர் வானுளன் வானிரு மாமுகில் போற்பொழி வானுளன் நானிது அம்பர நாதனும் ஆமே. 13
1791 பெருந்தன்மை தானென யானென வேறாய் இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும் பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. 14 9. திருவருள் வைப்பு
1792 இருபத மாவது இரவும் பகலும் உருவது ஆவ * துயிரும் உடலும் அருளது ஆவது அறமும் தவமும் பொருவது உள்நின்ற போகமது ஆமே. 1 * துடலும் உயிரும்
1793 காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும் தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும் வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம் ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே. 2
1794 குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும் வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில் அறிப்புறு காட்சி அமரரும் ஆமே. 3
1795 தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள் பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச் சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே. 4
1796 தானே அறியும் வினைகள் அழிந்தபின் நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல் ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின் தேனே யனையன் நம் தேவர் பிரானே. 5
1797 நான் அறிந்து அன்றே இருக்கின்ற * தீசனை வான்அறிந் தார் அறி யாது மயங்கினர் ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? 6 * வீசனை
1798 அருள்எங்கு மான அளவை அறியார் அருளை நுகர்அமு தானதும் தேரார் அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார் அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே. 7
1799 அறிவில் அணுக அறிவது நல்கிப் பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு அறிவது ஆக்கி அடியருள் நல்கும் செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே. 8
1800 அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு அருளில் * அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி அருளால் என்நந்தி அகம்புகுந் தானே. 9 * இழிந்திளைப் பாற்றி |