திருமந்திரம் - Thirumanthiram - சைவ சித்தாந்த நூல்கள் - Saiva Sidhantha Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 20 ...

1901 தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும்
பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்
மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி
நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே. 10

18. பூரணக் குகை நெறிச் சமாதி

1902 வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி
உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி உடல்விட்டால் தானே. 1

1903 தான்இவை ஒக்கும் சமாதிகை கூடாது
போன வியோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே. 2

1904 தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்
ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே. 3

1905 சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்
புவலோகம் * போற்றும்நர் புண்ணியத்தோரே. 4

* போற்றுநற்

1906 ஊனமில் ஞானிநல் யோகி * யுடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே. 5

* யுடல்பட்டால்

1907 செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே. 6

1908 உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள்
பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி
தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே. 7

1909 எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்
அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்
இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே. 8

19. சமாதிக் கிரியை

1910 அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் * வெப்புத் தீயினில்
நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. 1

* வெம்புத்

1911 எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே. 2

1912 புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே. 3

1913 அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே. 4

1914 நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே. 5

1915 தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே. 6

1916 நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே. 7

1917 பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு
முஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலே
பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே. 8

1918 நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்
கள்ளவிழ தாமம் களபங்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே. 9

1919 ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்
போதறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே. 10

1920 விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம் இள நீரும்
குருத்தலம் வைத்துஓர் * குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே. 11

* குகைமுகம்

1921 மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே. 12

1922 ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
* போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து
மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலில் சோடசம் காண்உப சாரமே. 13

* ஏதும்

20. விந்துற்பனம்

1923 உதயத்தில் விந்துவில் * ஓங்குகுண் டலியும்
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரமாதி கள்மிகு சத்தி
கதியில் கரணம் கலைவை கரியே. 1

* ஓமுதற் குண்டலி

1924 செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும்
செய்திடும் நாதபேதத்திற னால் ஆறும்
செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம்
செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே. 2

1925 வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்
தந்திடு மாமாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே. 3

1926 விளங்கு நிவர்த்தாதி மேவக ராதி
வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே. 4

1927 அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்
வந்த வியாபி எனலாய அந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே. 5

1928 வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காயஐம் பூதமும் * காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே. 6

* காரண மாயையால்

1929 புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே. 7

1930 கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற
நின்ற * படங்கட மாய்நிலை நிற்றலின்
கண்டக லாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே. 8

* படங்குடி லையாய் நிலை

1931 அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேஉள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே. 9

1932 வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை
வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை
அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே. 10

1933 அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்
திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே. 11

1934 இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்
உரிய தினத்தின் ஒருபுல் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்
மருவிய விந்து வளரும்கா யத்திலே. 12

1935 காயத்தி * லேமூன்று நாளில் கலந்திட்டுக்
காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே. 13

* லேம் மூன்றும்

1936 அழிகின்ற விந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே. 14

21. விந்து ஜயம் - போக சரவோட்டம்

1937 பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. 1

1938 தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும்
ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே. 2

1939 மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்
ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்
ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே. 3

1940 ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்
வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு
ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்
ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே. 4

1941 செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே
எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்
நையுமிடத்து ஓடி நன்கா மநூல்நெறி
செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே. 5

1942 விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல்
நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்
படுங்காதன் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே. 6

1943 கொண்ட குணனே நலமேநற் * கோமளம்
பண்டை உருவே பகர்வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே. 7

* கோமளப்

1944 விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே
தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே. 8

1945 பார்த்திட்டு * வைத்துப் பரப்பற்று உருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே. 9

* வையத்துப்

1946 வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை
வித்தினில் வித்தை விதற உணர்வரேல்
மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே. 10

1947 கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்
கருத்தது வித்தாய்க் காரண காரியம்
* கருத்தறு மாறுஇவை கற்பனை தானே. 11

* கருத்துற

1948 ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி
ஒழியாத புத்தி தபஞ்செப மோனம்
அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே. 12

1949 வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற * சுழியனல் சொருகிக் சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை
செற்றுண் பவரே சிவயோகி யாரே. 13

* சுழுனைச் சொருகச்

1950 யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
* யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே. 14

* போகியும்

1951 அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே. 15

1952 அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருந்து சேரவே வாயுமே. 16

1953 மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்
காதலது ஆகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசறும் காலமே. 17

1954 காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலம் * கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே. 18

* கடந்தவழி விந்துச்

1955 கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல்
நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேலணை வீரே. 19

1956 மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமான மாளும் அவ்விந்துவே. 20

1957 விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய * நாதமும் நாதத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே. 21

* நாசமும்

1958 விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து
அந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே. 22

1959 அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மான
அமுதச் * சிவயோகம் ஆதலால் சித்தி
அமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே. 23

* சிவயோகம்

1960 யோகம் அவ் விந்து * ஒழியா வகையுணர்ந்து
ஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமா
மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே. 24

* ஒழிய

1961 மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே. 25

1962 சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம்அருந்தவித் தாமே. 26

1963 விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல
வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை * மாறச் சிவம்அக மாகவே
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே. 27

* மாற்றிச்

1964 வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்
வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே. 28

1965 அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே. 29

1966 அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம்
அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே. 30

1967 நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை
சென்று பராசக்தி விந்து சயந்தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே. 31

1968 தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை
வானே உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே. 32

1969 விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
விந்து அடங்க விளையும் * சிவோகமே. 33

* சிவபோகமே

1970 வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே. 34

1971 விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே. 35

1972 மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே. 36

1973 சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து
ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்
* மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே. 37

* மொய்த்தறி

1974 உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி
கருமலை மீமிசை * கைக்கீழிற் காலாம்
விரவிய சுந்தரம் மேல்வெளி யாமே. 38

* கைக்கீழ்க்காற்றாம்

22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்

1975 செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கும் தவமே. 1

1976 பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
* இகலற ஏழுல கும்உற வோங்கும்
பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே. 2

* இகலவன்

1977 ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்
சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே. 3

1978 தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும்
தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே. 4

1979 வலையமுக் கோணம் * வட்டம் அறுகோணம்
துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்
மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே. 5

* விட்டம்

1980 ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில்
சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்
கேத முறுங்கேணி சூரியன் எட்டில்
சோதிதன் நீட்டில் சோடசம் தானே. 6

1981 ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த * நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்குகி லீரே. 7

* நாலும்

1982 பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
* ஆருக்கும் # எட்டாத ஆதித்தன் தானே. 8

* ஊருக்கு மேற்கே ஒடுங்குகின் றானே
# எட்டா; எட்டாதம்

1983 மண்ணை இடந் * ததின் கீழொடும் ஆதித்தன்
விண்ணை இடந்து # வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து $ களிதந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந் @ துநின்றானே. 9

* துவருகின்ற மாமணி
# வருகின்ற மெய்ச்சுடர்
$ கனிதரு மானந்தம்
@ திடுந் தானே

1984 பாரை இடந்து பகலோன் வரும்வழி
யாரும் அறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ்என்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே. 10

23. பிண்டாதித்தன்

1985 நின்றும் இருந்தும் கிடந்தும் * நடந்தும்
கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கன் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே. 1

* நடந்தேதும்

1986 ஆதித்தன் ஓடி அடங்கும் * இடங்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம்
ஆதித்த னோடே # அடங்குகின் றாரே. 2

* தலமறிந்து
# அடங்கின வாறே

1987 உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே. 3

24. மன ஆதித்தன்

1988 எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி
ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே. 1

1989 * சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே. 2

* சந்திர னிற்சூரி யன்வரிற் பூரணை

1990 ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி
ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்
ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற
ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே. 3

1991 ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி
ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது
பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்று
ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே. 4

1992 ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்
ஒன்பதும் ஈசன் * இயல்அறி வார்இல்லை
முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்
இன்பம் இலார்இருள் சூழநின் றாரே. 5

25. ஞானாதித்தன்

1993 விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து
அந்த அபரம் பரநாத மாகியே
வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து
உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே. 1

1994 உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே. 2

1995 தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்
மூவர் பிரான்என முன்னொரு காலத்து
நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்
மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே. 3

1996 பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே. 4

1997 தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்
கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே. 5

1998 நேரறி வாக நிரம்பிய பேரொளி
* போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசையொளி யாயிடும்
ஆரறி வாரிது நாயக மாமே. 6

* பேரறி

1999 மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
* கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும்
# சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே. 7

* பிண்டத்தி லுள்ளே பேரொளி
# சென்றெடுத் திட்டுத் திசைதொறும்

2000 நாபிக்கண் நாசிநயன நடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திருந் தாரே. 8






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247