திருமந்திரம் - Thirumanthiram - சைவ சித்தாந்த நூல்கள் - Saiva Sidhantha Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 3 ...

8. பிறன்மனை நயவாமை

201. ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்ற வாறே. 1

202. திருத்தி வளர்த்தது ஓர் தேமாங்கனியை
அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பு ஏறிக்
கருத்து அறியாதவர் கால் அற்றவாறே. 2

203. பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும்
இருள் கொண்ட மின் வெளி கொண்டு நின்றோரும்
மருள் கொண்டு மாதர் மயல் உறு வார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே. 3

9. மகளிர் இழிவு

204. இலை நல ஆயினும் எட்டி பழுத்தால்
குலை நல ஆம் கனி கொண்டு உணல் ஆகா
முலை நலம் கொண்டு முறுவல் செய்வார்மேல்
*விலகுறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே. 1

* விலைகுறி

205. மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்குங்
கனவது போலக் கசிந்தெழும் *இன்பம்
நனவது போலவும் நாட ஒண்ணாதே. 2

* அன்பை

206. இயல் உறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயல் உறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயல் உறும் வானவர் சார்வு இது என்பார்
அயல் உறப் பேசி அகன்று ஒழிந்தாரே. 3

207. வையகத்தே மடவாரொடும் கூடி என்
மெய்யகத்தோர் உளம் வைத்த விதி அது
கையகத்தே கரும்பாலையின் சாறு கொள்
மெய் அகத்தே பெறு வேம்பு அது ஆமே. 4

208. கோழை ஒழுக்கம் குளம் மூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்பு உறுவார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில்லாவிடில்
பூழை நுழைந்து அவர் போகின்றவாறே. 5

10. நல்குரவு

209. புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப் பட்டார்களும் அன்பு இலர் ஆனார்
கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை
நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே. 1

210. பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கு அற்ற போதே. 2

211. கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்றவாறே. 3

212. தொடர்ந்து எழு சுற்றம் வினையினும் தீய
கடந்து ஓர் ஆவி கழிவதன் முன்னே
உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றித்
தொடர்ந்து நின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே. 4

213. அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்ற அல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே. 5

11. அக்கினி காரியம்

214. வசை இல் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதலாம்
அசைவு இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே. 1

215. ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாம் அறிவாலே தலைப்பட்டவாறே. 2

216. அணை துணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணை துணை வைத்ததின் உட்பொருள் ஆன
இணை துணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை ஆயது ஓர் தூய்நெறி ஆமே. 3

217. போது இரண்டு ஓதிப் புரிந்து அருள் செய்திட்டு
மாது இரண்டு ஆகி மகிழ்ந்து உடனே நிற்கும்
தாது இரண்டு ஆகிய தண்ணம் பறவைகள்
வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறே. 4

218. நெய்நின்று எரியும் நெடுஞ்சுடரே சென்று
மைநின்று எரியும் வகை அறிவார்க்கட்கு
மைநின்று அவிழ்தரு *மத்தினம் ஆம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது ஆமே. 5

* மந்திரமாம் ஒன்று

219. பாழி அகலும் எரியும் திரிபோல் இட்டு
ஊழி அகலும் உறுவினை நோய் பல
வாழி செய்து அங்கி உதிக்க அவை விழும்
வீழி செய்து அங்கி வினை சுடு மாமே. 6

220. பெருஞ்செல்வம் கேடு என்று முன்னே படைத்த
வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே. 7

221. ஒண்சுடரானை உலப்பு இலி நாதனை
ஒண்சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற
கண்சுடரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண்சுடர் ஓமத் தலைவனும் ஆமே. 8

222. ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரை கடல் தானே. 9

223. அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
தங்கி இருக்கும் வகை அருள் செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே. 10

12. அந்தண ரொழுக்கம்

224. அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
தம் தவ நற்கருமத்து நின்று ஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே. 1

225. வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத்துள் புக்கு
நாதந்த வேதாந்த போதாந்த நாதனை
*ஈது அந்தம் எனாது கண்டு இன்புறுவோர்களே. 2

* ஈதாம்; மீதாந்தம்

226. காயத் திரியே கருது சாவித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத்தேர் ஏறி நினைவுற்று நேயத்து ஆய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. 3

227. பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறியால் உரை கூடி நால்வேதத்
திருநெறி யான கிரியை இருந்து
சொருபம் அது ஆனோர் துகளில் பார்ப்பாரே. 4

228. சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும்
மெய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே. 5

229. வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந் தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே. 6

230. நூலுஞ் சிகையும் நுவலில் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே. 7

231. சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம் விட்டு ஓரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை *யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம் அன்றே. 8

* யின்றியூண்

232. திருநெறி ஆகிய சித்து அசித்து இன்றிக்
குருநெறியாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய்மறையோர்க்கே. 9

233. மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலாகலமென்று
அறிவோர் மறைதெரிந்த அந்தணராமே. 10

234. அந்தண்மை பூண்ட *அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே. 11

* அறவேள் ஆகமத்துச்

235. வேதாந்த ஞானம் விளங்க விதி இலோர்
நாதாந்த போதம் நணுகிய *போக்கது
போதாந்தமாம் பரன்பால் புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே. 12

* போகத்துப்

236. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்குந் திருவுடையோரே. 13

(இப்பாடல் 2536-ம் பாடலாகவும் வந்துள்ளது)

237. தானே விடும் பற்று இரண்டும் தரித்திட
*யானே விடப்படும் ஏது ஒன்றை நாடாது
பூ மேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓ மேவும் #ஓர் ஆகுதி அவி உண்ணவே. 14

* நானே
# ஓமா

13. அரசாட்சி முறை (இராச தோடம்)

238. கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்
நல்லாரைக் காலன் *நணுக நில்லானே. 1

* நணுககில்லானே

239. நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே. 2

240. வேடநெறி நில்லார் வேடம் பூண்டு என்பயன்
வேடநெறி நிற்போர் வேடம் மெய்வேடமே
வேடநெறி நில்லார் தம்மை விறல் வேந்தன்
வேடநெறி செய்தால் வீடு அது *வாமே. 3

* வாகுமே

241. மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடு ஒன்று இலனாகும் ஆதலாற் பேர்த்து உணர்ந்து
ஆடம்பர நூல் சிகை அறுத்தால் நன்றே. 4

242. ஞானம் இலாதார் சடை சிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை
ஞானிகளாலே நரபதி சோதித்து
ஞானம் உண்டாக்குதல் நலமாகும் *நாட்டிற்கே. 5

* நாட்டுக்கே

243. ஆவையும் பாவையும் மற்று அறவோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத்தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 6

244. திறம் தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே. 7

245. வேந்தன் உலகை மிக நன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழியா நிற்பர்
போந்து இவ்வுலகைப் பிறர்க்கொள்ளத் தாம் கொள்ளப்
பாய்ந்த புலி அன்ன பாவகத்தானே. 8

246. கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே. 9

247. தத்தஞ் சமயத்தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எத்தண்டமும் செயும் *அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ் வேந்தன் கடனே. 10

* மும்மையில்; எம்மையில்; மெய்ம்மையில்

14. வானச் சிறப்பு

248. அமுதூறு மாமழை நீர் அதனாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றுங்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே. 1

249. வரை இடை நின்று இழி வான்நீர் அருவி
உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறும்
நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெள் நீர்க்
கரை இல்லை எந்தை கழுமணி ஆறே. 2

15. தானச் சிறப்பு

250. ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே. 1

16. அறஞ்செய்வான் திறம்

251. தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர்
தாம் அறிவார் சில தத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்குத் தமர் பரன் ஆமே. 1

252. யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு *வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே. 2

* வாயறுகு

253. அற்றுநின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில்
பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே. 3

254. அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர்
விழித்திருந்து என் செய்வீர் வெம்மை பரந்து
விழிக்க அன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே. 4

255. தன்னை அறியாது *தான் நலன் என்னாது இங்கு
இன்மை அறியாது இளையர் என்று ஓராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே. 5

* தானல்லார்; தான் நல்லர்

256. துறந்தான் வழி முதற் சுற்றமும் இல்லை
இறந்தான் வழி முதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழி முதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவு அறிவாரே. 6

257. தான்தவம் செய்வதாம் செய் தவத்து அவ்வழி
மான் தெய்வமாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வமாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான் தெய்வம் என்று நமன் வருவானே. 7

258. திளைக்கும் வினைக்கடல் தீர்வு உறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடு இல் புகழோன்
விளைக்கும் தவம் அறம் மேல் துணை ஆமே. 8

259. பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்ததுவே துணை
மற்று அண்ணல் வைத்த வழிகொள்ளும் ஆறே. 9

17. அறஞ்செயான் திறம்

260. எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன் அறியாரே. 1

261. ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத் தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம் அறியாரே. 2

262. அறம் அறியார் அண்ணல் பாதம் நினையுந்
திறம் அறியார் சிவலோக நகர்க்குப்
புறம் அறியார் பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே. 3

263. இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ் செய்யாதவர் தம் பாலதாகும்
உருமிடி நாகம் உரோணி கழலை
தருமஞ்செய்வார் பக்கல் *தாழகி லாவே. 4

* சாரகிலாவே

264. பரவப்படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார்
*கரகத்தால் நீர் அட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ #நாள் எஞ்சினீரே. 5

* கரகத்தே நீராட்டிக்
# நல் நெஞ்சினீரே

265. வழி நடப்பார் இன்றி வானோர் உலகம்
கழி நடப்பார் நடந்தார் கருப்பாரும்
*மழி நடக்கும் வினை மாசு அற #ஓட்டிட
வழி நடக்கும் மள வீழ்ந்தொழிந் தாரே. 6

* வழி
# ஓட்டிட், டொழி நடப்பார் வினை ஓங்கி நின்றாரே

266. கனிந்தவர் ஈசன் கழல் அடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம் அது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்து ஒழிந்தாரே. 7

267. இன்பம் இடர் என்று இரண்டு உற வைத்தது
முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது
இன்பம் அது கண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பு இலார் சிந்தை அறம் அறியாரே. 8

268. கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடு அல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசு அது ஆமே. 9

269. செல்வம் கருதிச் சிலர் பலர் வாழ்வு எனும்
புல்லறிவாளரைப் போற்றிப் புலராமல்
இல்லம் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கு எய்த விற்குறி ஆமே. 10

18. அன்புடைமை

270. *அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. 1

* அன்பும் சிவமும்; அன்பு சிவமும்

271. பொன்னைக் கடந்து இலங்கும் புலித்தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்தது என் பேரன்பு தானே. 2

272. என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என்போல் மணியினை எய்த ஒண்ணாதே. 3

273. ஆர்வம் உடையவர் காண்பார் அரன் தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணை அடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர *நெறி கொடு கொங்கு புக்காரே. 4

* நெருக்கொடு கோங்கு

274. என் அன்பு உருக்கி இறைவனை ஏத்துமின்
முன் அன்பு உருக்கி முதல்வனை நாடுமின்
பின் அன்பு உருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன் அன்பு எனக்கே தலைநின்ற வாறே. 5

275. தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும்
வான் ஒரு காலம் வழித்துணையாய் நிற்கும்
தேன் ஒரு பால்திகழ் கொன்றை அணி சிவன்
தான் ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே. 6

276. முன் படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்பு அடைத்து எம்பெருமானை அறிகிலார்
வன்பு அடைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்பு அடைத்தான் தன் அகலிடம் தானே. 7

277. கருத்துஉறு செம்பொன் செய் *காய் கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவ என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. 8

* காயத்திற் சோதி

278. நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள்
*இச்சை உளே வைப்பர் எந்தை பிரான் என்று
நச்சியே அண்ணலை நாடுகிலாரே. 9

* இச்சையுள் வைப்பன்

279. அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான்
முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரான் அவன்
அன்பின் உள்ளாகி *அமரும் அரும்பொருள்
அன்பின் உள்ளார்க்கே #அணை துணை ஆமே. 10

* வருமரும் பேரருள்
# அனைத்துணை

19. அன்பு செய்வாரை அறியும் சிவன்

280. இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்து அருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்து அன்பு செய்து அருள் கூர வல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அது வாமே. 1

281. இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில் பல என்னினும்
அன்பிற் கலவி செய்த ஆதிப்பிரான் வைத்த
*முன்பிப் பிறவி முடிவது தானே. 2

* முன்பப் பிறவி

282. அன்பு உறு சிந்தையின் மேல் எழும் அவ்வொளி
இன்பு உறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்பு உறு கண்ணி ஐந்து ஆடும் துடக்கு அற்று
நண்பு உறு சிந்தையை நாடுமின் நீரே. 3

283. புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே. 4

284. உற்று நின்றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை
பத்திமையாலே பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே. 5

285. கண்டேன் கமழ்தரு கொன்றையினான் அடி
கண்டேன் கரி உரியான்தன் கழல் இணை
கண்டேன் கமல மலர் உறைவான் அடி
கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே. 6

286. நம்பனை நானாவிதப் பொருள் ஆகும் என்று
உம்பரில் வானவர் ஓதும் தலைவனை
இன்பனை இன்பத்து இடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகிலாரே. 7

287. முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பு இல் இறைவனை யாம் அறிவோம் என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான் நந்தி
அன்பு இல் அவனை அறியகிலாரே. 8

288. ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவு செய்வார்களைத்
தேசு உற்று அறிந்து செயல் அற்று இருந்திடில்
ஈசன் வந்து எம் இடை ஈட்டி நின்றானே. 9

289. விட்டுப் பிடிப்பது என் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆருயிராய் நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே. 10

20. கல்வி

290. குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடிச்
செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை
மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே. 1

291. கற்றறிவாளர் கருதிய காலத்துக்
கற்றறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு
கற்றறிவாளர் கருதி உரைசெய்யும்
கற்றறி காட்டக் கயல் உள ஆக்குமே. 2

292. நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்
கற்கின்ற செய்மின் கழிந்து அறும் பாவங்கள்
சொல் குன்றல் இன்றித் தொழுமின் தொழுத பின்
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே. 3

293. கல்வி உடையார் கழிந்து ஓடிப் போகின்றார்
பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் *வாதித்த காயமும் ஆமே. 4

* வாசித்த; ஆதித்த

294. துணை அதுவாய் வரும் தூய நல் சோதி
துணை அதுவாய் வரும் தூய நல் சொல்லாம்
துணை அதுவாய் வரும் தூய நல் கந்தம்
துணை அதுவாய் வரும் தூய நல் கல்வியே. 5

295. நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார்
பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோல் ஒன்று பற்றினால் கூடா பறவைகள்
மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே. 6

296. ஆய்ந்து கொள்வார்க்கு அரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பு அது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்ட வல்லார்கட்கு
வாய்ந்த மனம் மல்கு நூலேணி யாமே. 7

297. வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன்
கழித்துணையாம் கற்றிலாதவர் சிந்தை
ஒழித்துணையாம் உம்பராய் உலகு ஏழும்
வழித்துணையாம் பெருந்தன்மை வல்லானே. 8

298. பற்றது பற்றின் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறின்
கிற்ற விரகின் கிளர் ஒளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே. 9

299 கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து
உடல் உடையான் பல ஊழிதொறு ஊழி
அடல்விடை ஏறும் அமரர்கள் நாதன்
இடம் உடையார் நெஞ்சத்து இல் இருந்தானே. 10

21. கேள்வி கேட்டமைதல்

300. அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்
புறம் கேட்டும் பொன் உரை மேனி எம் ஈசன்
திறம் கேட்டும் பெற்ற சிவகதி தானே. 1






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247