உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 4 ...
301. தேவர் பிரான்தனை திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் அறிந்த பின் ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின் ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே. 2
302. மயன் பணி கேட்பது மாநந்தி வேண்டின் அயன் பணி கேட்பது அரன் பணியாலே சிவன் பணி கேட்பவர் தேவரும் ஆவர் பயன் பணி கேட்பது பற்று அது ஆமே. 3
303. பெருமான் இவன் என்று பேசி இருக்கும் திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர் வருமாதவர்க்கு மகிழ்ந்து அருள் செய்யும் அருமாதவத்து எங்கள் ஆதிப்பிரானே. 4
304. ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று வாச மலர்க் கந்தம் மன்னி நின்றானே. 5
305. விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது வழுக்கி விடாவிடில் வானவர் கோனும் இழுக்கு இன்றி எண் இலி காலம் அது ஆமே. 6
306. சிறியார் மணல் சோற்றில் தேக்குஇடுமாபோல் செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில் குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை அறியாது இருந்தார் அவர் ஆவார் அன்றே. 7
307. உறுதுணை ஆவது உயிரும் உடம்பும் உறுதுணை ஆவது உலகு உறு கேள்வி செறி துணை ஆவது சிவனடிச் சிந்தை பெறுதுணை கேட்கின் பிறப்பு இல்லை தானே. 8
308. புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன் இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம் மகிழ நின்று ஆதியை ஓதி உணரார் கழிய நின்றார்க்கு ஒரு கற்பசு ஆமே. 9
309. வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய்பேசி ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றொடு ஒன்று ஒவ்வாது அச்சு உழன்று ஆணி கலங்கினும் ஆதியை நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே. 10 22. கல்லாமை
310. கல்லாதவரும் கருத்து அறி காட்சியை வல்லார் எனில் அருட்கண்ணால் மதித்துளோர் கல்லாதார் உண்மை பற்றாநிற்பர் கற்றோரும் கல்லாதார் இன்பம் காணுகிலாரே. 1
311. வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார் அல்லாதவர்கள் அறிவு பல என்பார் எல்லா இடத்தும் உளன் எங்கள் தம் இறை கல்லாதவர்கள் கலப்பு அறியாரே. 2
312. நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலை என்று உணர்வீர்காள் எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே. 3
313. கில்லேன் வினைத் துயர் ஆக்கும் அயல் ஆனேன் கல்லேன் அரன் நெறி அறியாத் தகைமையின் வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள் கல்லேன் கழிய நின்று ஆடவல்லேனே. 4
314. நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார் கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினைத்துயர் போகம் செய்வாரே. 5
315. விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது மண்ணினின் உள்ளே மதித்து மதித்து நின்று எண்ணி எழுதி இளைத்து விட்டாரே. 6
316. கணக்கு அறிந்தார்க்கு அன்றிக் காண ஒண்ணாது கணக்கு அறிந்தார்க்கு அன்றிக் கைகூடா காட்சி கணக்கு அறிந்து உண்மையைக் கண்டு அண்டம் நிற்கும் கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே. 7
317. கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் கல்லாத மூடர் கருத்து அறியாரே. 8
318. கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள் சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள் மற்றும் பலதிசை காணார் மதியிலோர் கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே. 9
319. ஆதிப்பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் ஓதி உணரவல்லோம் என்பர் உள் நின்ற சோதி நடத்தும் தொடர்வு அறியாரே. 10 23. நடுவு நிலைமை
320. நடுவுநின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை நடுவுநின்றார்க்கு நரகமும் இல்லை நடுவுநின்றார் நல்ல தேவரும் ஆவர் நடுவுநின்றார் வழி *யானும் நின்றேனே. 1 * நானும்
321. நடுவுநின்றான் நல்ல கார்முகில் வண்ணன் நடுவுநின்றான் நல்ல நான்மறை ஓதி நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவோர் நடுவுநின்றார் நல்ல நம்பனும் ஆமே. 2
322. நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவர் நடுவுநின்றார் சிலர் தேவரும் ஆவர் நடுவுநின்றார் சிலர் நம்பனும் ஆவர் நடுவுநின்றாரொடு நானும் நின்றேனே. 3
323. தோன்றிய எல்லாந் துடைப்பன் அவனன்றி ஏன்றுநின்றார் என்றும் ஈசன் இணையடி மூன்றுநின்றார் முதல்வன் திருநாமத்தை நான்றுநின்றார் நடுவாகி நின்றாரே. 4 24. கள்ளுண்ணாமை
324. கழுநீர்ப் பசுப்பெறில் கயந்தொறும் தேரா கழுநீர் விடாய்த்துத் தம் காயம் சுருக்கும் முழுநீர்க் கள் உண்போர் முறைமை அகன்றோர் செழுநீர்ச் சிவன் தன் சிவானந்தத் தேறலே. 1
325. சித்தம் உருக்கிச் சிவம் ஆம் சமாதியில் ஒத்த சிவானந்தத்து ஓவாத தேறலைச் சுத்த மது உண்ணச் சுவானந்தம் விட்டிடா நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க்காலே. 2
326. காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும் மாமலமும் சமையத்துள் மயல் உறும் போமதி ஆகும் புனிதன் இணையடி ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே. 3
327. வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர் காமத்தோர் காமக் கள் உண்டே கலங்குவர் ஓமத்தோர் உள்ளொளிக்குள்ளே உணர்வர்கள் நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. 4
328. உள் உண்மை ஓரார் உணரார் பசுபாசம் வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார் தெள் உண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார் கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே. 5
329. மயக்கும் சமய மலமன்னு மூடர் மயக்கு மது உண்ணும் மாமூடர் தேரார் மயக்குறு *மாமாயை மாயையின் வீடு மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே. 6 * மாயையின் மாமாயை
330. மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும் இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும் நயம் கொண்ட ஞானத்து முந்தார் இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே. 7
331. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கு அற ஆனந்தத் தேறல் பருகார் இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே. 8 (இப்பாடல் 1856-ம் பாடலாகவும் வந்துள்ளது)
332. சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள் உண்பர் சத்தி அழிந்தது தம்மை மறத்தலால் சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச் சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே. 9
333. சத்தன் அருள்தரின் சத்தி அருள் உண்டாம் சத்தி அருள்தரின் சத்தன் அருள் உண்டாம் சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்கச் சத்தியம் எண் சித்தித் தன்மையும் ஆமே. 10
334. தத்துவம் நீக்கி மருள் நீக்கித் தான் ஆகிப் பொய்த் தவம் நீக்கி மெய்ப் போகத்துள் போகியே மெய்த்த சகம் உண்டு விட்டுப் பரானந்தச் சித்தி அது ஆக்கும் சிவானந்தத் தேறலே. 11
335. யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப் போத அமுதைப் பொசித்தவர் எண் சித்தி மோகியர் கள் உண்டு மூடராய் மோகம் உற்று ஆகும் மதத்தால் அறிவழிந்தாரே. 12
336. உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத் திறந்து எண்ணீர் குரவன் இணையடித் தாமரை நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம் கண் ஆற்றொடே சென்று கால் வழி காணுமே. 13 (இப்பாடல் 882-ம் பாடலாகவும் வந்துள்ளது) முதல் தந்திரம் முற்றிற்று இரண்டாம் தந்திரம்
(இது காமிகாகமத்தின் சாரம் என்பர்) 1. அகத்தியம்
337. நடுவுநில்லாது இவ்வுலகம் சரிந்து கெடுகின்றது எம்பெருமான் என்ன ஈசன் நடு உள அங்கி அகத்திய நீ போய் முடுகிய வையத்து முன் இரு என்றானே. 1
338. அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் அங்கி உதயம்செய் மேல்பால் அவனொடும் அங்கி உதயம்செய் வடபால் தவமுனி எங்கும் வளம்கொள் இலங்கு ஒளி தானே. 2 2. பதிவலியில் வீரட்டம் எட்டு
339. கருத்துஉறை அந்தகன் தன்போல் அசுரன் வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம் வருத்தம் செய்தான் என்று வானவர் வேண்டக் குருத்து உயர் சூலம் கைக்கொண்டு கொன்றானே. 1
340. கொலையின் பிழைத்த பிரசாபதியைத் தலையைத் தடிந்திட்டுத் தான் அங்கியிட்டு நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணித் தலையை அரிந்து இட்டுச் சந்தி செய்தானே. 2
341. எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியும் தங்கும் படித்து அவன் தாள் உணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே. 3
342. எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற அங்க முதல்வன் அருமறை *யோதிபால் பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின் அங்கு விரல் குறித்து ஆழி செய்தானே. 4 * யோகிபாற்
343. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறிவாரே. 5
344. முத்தீக் கொளுவி முழங்கு எரி வேள்வியுள் அத்தி உரி அரன் ஆவது அறிகிலர் சத்தி கருதிய தாம்பல தேவரும் அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே. 6
345. மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து மேல் உற நோக்கி முற் காலுற்றுக் காலனைக் காய்ந்து அங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. 7
346. இருந்த மனத்தை இசைய இருத்திப் பொருந்தி இலிங்க வழி அது போக்கித் திருந்திய காமன் செயல் அழித்து அங்கண் அருந்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே. 8 3. இலிங்க புராணம்
347. அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி முடிசேர் மலை மகனார் மகள் ஆகித் திடம் ஆர் தவஞ்செய்து தேவர் அறியப் படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே. 1
348. திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை அரியன் என்று எண்ணி அயர்வுற வேண்டா புரிவுடையாளர்க்குப் பொய்யலன் ஈசன் பரிவொடு நின்று பரிசறிவானே. 2
349. ஆழி வலம்கொண்ட அயன்மால் இருவரும் ஊழிவலம் செய்ய ஒண்சுடர் ஆதியும் ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி *வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே. 3 * வாழிப் பிரமற்கும்
350. தாங்கி இருபது தோளும் தடவரை ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெருவலி ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்தபின் நீங்கா அருள் செய்தான் நின்மலன் தானே. 4
351. உறுவது அறிதண்டி ஒண்மணல் கூட்டி அறுவகை ஆன் ஐந்தும் ஆட்டத் தன் தாதை செறுவகை செய்து சிதைப்ப முனிந்து மறுமழுவால் வெட்டி மாலை பெற்றானே. 5
352. ஓடி வந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள் வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று நாடி இறைவா நம என்று கும்பிட ஈடு இல் புகழோன் எழுக என்றானே. 6 4. தக்கன் வேள்வி
353. தந்தைபிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறை கெட்டுச் சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே. 1
354. சந்தி செயக்கண்டு எழுகின்ற அரி தானும் எந்தை இவன் அல்ல யாமே உலகினில் பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய அந்தம் இலானும் அருள் புரிந்தானே. 2
355. அப்பரிசே அயனார் பதி வேள்வியுள் அப்பரிசே அங்கி அதிசயம் ஆகிலும் அப்பரிசே அது நீர்மையை உட்கலந்து அப்பரிசே சிவன் ஆலிக்கின்றானே. 3
356. அப்பரிசே அயன் மால் முதல் தேவர்கள் அப்பரிசே அவர் ஆகிய காரணம் அப்பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு அப்பரிசு ஆகி *அலர்ந்திருந்தானே. 4 * அலந்திருந்; அமர்ந்திருந்
357. *அலர்ந்திருந்தான் என்று அமரர் துதிப்பக் குலம் தரும் கீழ் அங்கி கோள் உற நோக்கிச் சிவந்த பரம் இது சென்று கதுவ உவந்த பெருவழி ஓடி வந்தானே. 5 * அலந்திருந்
358. அரி பிரமன் தக்கன் அருக்கனுடனே வருமதி வாலை வன்னி நல் இந்திரன் சிரம் முகம் நாசி *சிறந்தகை தோள்தான் அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே. 6 * சிந்தைகை
359. செவிமந்திரம் சொல்லும் செய்தவத் தேவர் அவிமந்திரத்தின் அடுக்களை கோலிச் செவிமந்திரம் செய்து தாம் உற நோக்கும் குவிமந்திரங்கொல் கொடியது வாமே. 7
360. நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப் பல்லார் அமரர் பரிந்தருள் செய்க என வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன் பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே. 8
361. தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே அளித்தாங்கு அடைவது எம் ஆதிப்பிரானை *விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச் சுளிந்தாங்கு அருள் செய்த தூய்மொழியானே. 9 * விளிந்தானத் தக்கனவ் வேள்வியை 5. பிரளயம்
362. கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்து இருவரும் கோ என்று இகல இறைவன் ஒருவனும் நீர் உற ஓங்கொளி ஆகி அருவரையாய் நின்று அருள் புரிந்தானே. 1
363. அலைகடல் ஊடு அறுத்து அண்டத்து வானோர் தலைவன் எனும் பெயர் தான் தலை மேற்கொண்டு உலகார் அழற்கண்டு உள்விழாது ஓடி அலைவாயில் வீழாமல் அஞ்சல் என்றானே. 2
364. தண்கடல் விட்டது அமரரும் தேவரும் எண்கடல் சூழ் எம்பிரான் என்று இறைஞ்சுவர் விண்கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம் கண்கடல் செய்யும் கருத்து அறியாரே. 3
365. சமைக்க வல்லானைச் சயம்பு என்று ஏத்தி அமைக்க வல்லார் இவ்வுலகத்து உளாரே திகைத்த தெண்ணீரின் கடல் ஒலி ஓசை மிகைக்கொள அங்கி மிகாமை வைத்தானே. 4
366. பண் பழிசெய் வழிபாடு சென்ற அப்புறம் கண் பழியாத கமலத்து இருக்கின்ற நண் பழியாளனை நாடிச் சென்று அச்சிரம் விண் பழியாத விருத்தி கொண்டானே. 5 6. சக்கரப்பேறு
367. மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம் கால் போதம் கையினோடு அந்தரச் சக்கரம் மேல் போக வெள்ளி மலை அமராபதி பார்ப்போகம் ஏழும் படைத்து உடையானே. 1
368. சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும் சக்கரம் தன்னைத் *தரிக்க ஒண்ணாமையால் மிக்கு அரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத் தக்க நல் சத்தியைத் தான் கூறு செய்ததே. 2 * திரிக்கவொண்
369. கூறு அது வாகக் குறித்து நல் சக்கரம் கூறு அது செய்து கொடுத்தனன் மாலுக்குக் கூறு அது செய்து கொடுத்தனன் சத்திக்குக் கூறு அது செய்து *தரித்தனன் கோலமே. 3 * கொடுத்தனன்
370. தக்கன் தன் வேள்வி தகர்த்த நல் வீரர் பால் தக்கன் தன் வேள்வியில் தாமோதரன் தானும் சக்கரம் தன்னைச் சசி முடி மேல் விட அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே. 4 7. எலும்பும் கபாலமும்
371. எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த வலம் பல் மணி முடி வானவர் ஆதி எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில் எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே. 1 8. அடிமுடி தேடல்
372. பிரமனும் மாலும் பிரானே நான் என்னப் பிரமன் மால் தங்கள் தம் பேதைமையாலே பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க அரன் அடி தேடி அரற்றுகின்றாரே. 1 (ஒரு பிரதியில் இப்பாடலின் பின்னர் 'அடிமுடி காண்பர்' எனத் துவங்கும் 88-ம் பாடல் காணப்படுகிறது)
373. ஆம் ஏழ் உலகு உற நின்ற எம் அண்ணலும் தாம் ஏழ் உலகில் தழற்பிழம்பாய் நிற்கும் வான் ஏழ் உலகு உறும் மா மணிகண்டனை *யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே. 2 * நானே அறிந்தேனென் ஆண்மையி னாலே
374. ஊனாய் உயிராய் உணர்வு அங்கியாய் முன்னம் சேணாய் வான் ஓங்கித் திரு உருவாய் அண்டத் தாணுவும் ஞாயிறும் தண்மதியும் கடந்து ஆள் முழுது அண்டமும் ஆகி நின்றானே. 3
375. நின்றான் நிலமுழுது அண்டத்துள் நீளியன் அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது சென்றார் இருவர் திருமுடிமேல் செல நன்று ஆம் கழல் அடி நாட ஒண்ணாதே. 4
376. சேவடி ஏத்தும் செறிவுடை வானவர் மூவடி தா என்றானும் முனிவரும் பாவடியாலே பதம் செய் பிரமனும் தாவடி இட்டுத் தலைப்பெய்யு மாறே. 5
377. தானக் கமலத்து இருந்த சதுமுகன் தானக் கருங்*கடல் ஊழித் தலைவனும் ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற தானப் பெரும்பொருள் தன்மையது ஆமே. 6 * கடல் வாழித்
378. ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர் மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந்நெறி முன் கண்டு ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும் கோல் இங்கு அமைஞ்சு அருள் கூடலும் ஆமே. 7
379. வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள் ஆள் கொடுத்து எம் போல் அரனை அறிகிலர் ஆள் கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத் தாள் கொடுத்தான் அடி சாரகிலாரே. 8
380. ஊழி வலஞ் செய்த அங்கு ஓரும் ஒருவற்கு வாழி சதுமுகன் வந்து வெளிப்படும் வீழித் தலை நீர் விதித்தது தா என ஊழிக் கதிரோன் ஒளியை வென்றானே. 9 9. படைத்தல் (சிருஷ்டி, சர்வ சிருஷ்டி)
381. ஆதியோடு அந்தம் இலாத *பராபரம் போதம் அது ஆகப் புணரும் பராபரை சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம் தீதில் பரை அதன் பால் திகழ்நாதமே. 1 * பராபரன்
382. நாதத்தில் விந்துவும் நாத விந்துக்களில் தீது அற்று அகம் வந்த சிவன் சத்தி என்னவே பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால் வாதித்த இச்சையில் வந்து எழும் விந்துவே. 2
383. இல்லது சத்தி இடம் தனில் உண்டாகிக் கல் ஒளி போலக் கலந்து உள் இருந்திடும் வல்லது ஆக வழி செய்த அப்பொருள் சொல்லது சொல்லிடின் தூராதி தூரமே. 3
384. தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய் ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய்ப் பாரச் சதாசிவம் பார் முதல் ஐந்துக்கும் சார்வத்து சத்தி ஓர் சாத்துமான் ஆமே. 4
385. மானின்கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும் கானின்கண் நீரும் கலந்து கடினமாய்த் தேனின்கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப் பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே. 5
386. புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர் புவனம் படைப்பானும் பூமிசையானாய் புவனம் படைப்பான் அப்புண்ணியன் தானே. 6
387. புண்ணியன் நந்தி பொருந்தி உலகு எங்கும் தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும் கண் இயல்பு ஆகக் கலவி முழுதுமாய் மண் இயல்பு ஆக மலர்ந்தெழு பூவிலே. 7
388. நீரகத்து இன்பம் பிறக்கும் நெருப்பு இடை *காயத்தில் சோதி பிறக்கும் அக்காற்று இடை ஓர்வு உடை நல் உயிர்ப் பாதம் ஒலி சத்தி நீர் இடை மண்ணின் நிலைப் பிறப்பு ஆமே. 8 * காய்கதிர்ச்
389. உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும் கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும் பண்டு இவ்வுலகம் படைக்கும் பொருளே. 9
390. ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும் பாங்கார் கயிலைப் பராபரன் தானும் வீங்குங் கமல மலர்மிசை மேல் அயன் ஆங்குயிர் வைக்கும் அது உணர்ந்தானே. 10
391. காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன் நாரணன் நின்ற நடுவுடலாய் நிற்கும் பாரணன் அன்பிற் பதம் செய்யும் நான்முகன் ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே. 11
392. பயன் எளிதாம் பரு மாமணி செய்ய நயன் எளிதாகிய நம்பன் ஒன்று உண்டு அயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும் பயன் எளிது ஆம் வயணம் தெளிந்தேனே. 12
393. போக்கும் வரவும் புனிதன் அருள் புரிந்து ஆக்கமும் சிந்தையது ஆகின்ற காலத்து மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடும் தாக்கும் கலக்கும் தயாபரன் தானே. 13
394. நின்ற உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர் ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடல் உற முன் துயர் ஆக்கும் உடற்கும் துணையதா நன்று உயிர்ப்பானே நடுவு நின்றானே. 14
395. ஆகின்ற தன்மை இல் அக்கு அணி கொன்றையன் வேகின்ற செம்பொனின் மேல் அணி மேனியன் போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன் ஆகின்ற தன்மை செய் ஆண் தகையானே. 15
396. ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் பருவங்கள் தோறும் பயன் பல ஆன திரு ஒன்றில் செய்கை செகமுற்றும் ஆமே. 16
397. புகுந்து அறிவான் புவனாபதி அண்ணல் புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல் புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள் புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே. 17
398. ஆணவச் சத்தியும் ஆம் அதில் ஐவரும் காரிய காரண ஈசர் கடைமுறை பேணிய ஐந்தொழிலால் விந்துவில் பிறந்து ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே. 18
399. உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதயமாம் மற்றைய மூன்றும் மாயோதயம் விந்து *பெற்றவன் நாதம் பரையில் பிறத்தலால் துற்ற பரசிவன் தொல் விளையாட்டு இதே. 19 * பெற்றவள்
400. ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என் போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர் மாகாய ஈசன் அரன் மால் பிரமனாம் ஆகாயம் பூமி காண *அளித்தலே. 20 * அளித்ததே |