உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 5 ...
401. அளியார் முக்கோணம் வயிந்தவம் தன்னில் அளியார் திரிபுரையாம் அவள் தானே அளியார் சதாசிவம் ஆகி அமைவாள் அளியார் கருமங்கள் ஐந்து செய்வாளே. 21
402. வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி காரணி காரியம் ஆகக் கலந்தவள் வாரணி ஆரணி வானவர் மோகினி பூரணி *போதாதி போதமும் ஆமே. 22 * பூதாதி
403. நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்றங்கு இயங்கும் அரன் திருமாலவன் மன்றது செய்யும் மலர்மிசை மேல் அயன் என்று இவராக இசைந்திருந்தானே. 23 (இப்பாடல் 438-ம் பாடலாகவும் வந்துள்ளது)
404. ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான் ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான் ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான் ஒருவனு*மே உலகோடு உயிர் தானே. 24 * மேஉடலோடுயிர்
405. செந்தாமரை வண்ணன் தீவண்ணன் எம் இறை மைந்தார் முகில்வண்ணன் மாயம் செய் பாசத்தும் கொந்து ஆர் குழலியர் கூடிய கூட்டத்தும் *அந்தார் பிறவி அறுத்து நின்றானே. 25 * ஐந்தார் பிறவி அமைத்து நின்றானே
406. தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர் கூடும் பிறவிக் குணம் செய்த மாநந்தி ஊடும் அவர் தமது உள்ளத்துள்ளே நின்று நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே. 26 (இப்பாடல் 414-ம் பாடலாகவும் வந்துள்ளது)
407. ஓர் ஆயமே உலகு ஏழும் படைப்பதும் ஓர் ஆயமே உலகு ஏழும் அளிப்பதும் ஓர் ஆயமே உலகு ஏழும் துடைப்பதும் ஓர் ஆயமே *உலகோடு உயிர் தானே. 27 * உடலோடுயிர் தானே
408. நாதன் ஒருவனும் நல்ல இருவரும் கோது குலத்தொடும் கூட்டிக் குழைத்தனர் ஏது பணி என்று இசையும் இருவருக்கு ஆதி இவனே அருளுகின்றானே. 28
409. அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம் மெய்ப்பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும் பொய்ப்பரிசு எய்திப் புகலும் மனிதர்கட்கு இப்பரிசே இருள் மூடி நின்றானே. 29
410. ஆதித்தன் சந்திரன் அங்கி எண் பாலர்கள் போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி வாதித்த சத்த ஆதி வாக்கு மன ஆதிகள் ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. 30 10. காத்தல் (திதி)
411. புகுந்துநின்றான் வெளியாய் இருள் ஆகிப் புகுந்துநின்றான் புகழ்வாய் இகழ்வு ஆகிப் புகுந்துநின்றான் உடலாய் உயிர் ஆகிப் புகுந்துநின்றான் புந்தி மன்னி நின்றானே. 1
412. தானே திசையொடு தேவருமாய் நிற்கும் தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும் தானே உலகில் தலைவனும் ஆமே. 2 (இப்பாடல் 2967-ம் பாடலாகவும் வந்துள்ளது)
413. உடலாய் உயிராய் உலகம் அது ஆகிக் கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வான் ஆய் இடையாய் உலப்பு இலி எங்கும் தான் ஆகி அடையார் *பெருவழி அண்ணல் நின்றானே. 3 * பெருவெளி
414. தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர் *கூடு மரபில் குணம் செய்த மாநந்தி ஊடும் அவர் தமது உள்ளத்துளே நின்று நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே. 4 * கூடும்பிறவிக்
415. தான் ஒரு காலம் தனிச்சுடராய் நிற்கும் தான் ஒருகால் சண்ட மாருதமாய் நிற்கும் தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும் தான் ஒரு காலம் தண்மாயனும் ஆமே. 5
416. அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும் இன்பமும் இன்பக் கலவியுமாய் நிற்கும் முன்பு உறு காலமும் ஊழியுமாய் நிற்கும் அன்பு உற ஐந்தில் அமர்ந்து நின்றானே. 6
417. உற்று வனைவான் அவனே உலகினைப் பெற்று வனைவான் அவனே பிறவியைச் சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை மற்றும் அவனே வனைய வல்லானே. 7
418. உள் உயிர்ப்பு ஆய் உடலாகி நின்றான் நந்தி வெள்ளுயிர் ஆகும் வெளியாய் நிலங்கொளி உள் உயிர்க்கும் உணர்வே உடலுள் பரம் தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே. 8
419. தாங்க அருந் தன்மையும் தான் அவை பல் உயிர் வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி தாங்கி நின்றானும் அத்தாரணி தானே. 9
420. அணுகினும் சேயவன் அங்கியில் கூடி நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும் பணுகினும் பார்மிசைப் பல்லுயிர் ஆகித் தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே. 10 11. அழித்தல் (சங்காரம்)
421. அங்கி செய்து ஈசன் அகலிடஞ் சுட்டது அங்கி செய்து ஈசன் அலைகடற் சுட்டது அங்கி செய்து ஈசன் அசுரரைச் சுட்டது அங்கி அவ் ஈசற்குக் கைஅம்பு தானே. 1
422. இலயங்கள் மூன்றினும் ஒன்று கற்பாந்த நிலையன்று அழிந்தமை நின்று உணர்ந்தேனால் உலை தந்த மெல்லரி போலும் உலகம் மலை தந்த மானிலந்தான் வெந்ததுவே. 2
423. பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும் உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங் குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாசம் விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே. 3
424. கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக் குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே. 4
425. நித்த சங்காரம் உறக்கத்து நீள்மூடம் வைத்த சங்காரமுஞ் சாக்கிரா தீதமாஞ் சுத்த சங்காரந் தொழிலற்ற கேவலம் உய்த்த சங்காரம் பரன்அருள் உண்மையே. 5
426. நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல் வைத்த சங்காரமும் மாயா சங்காரமாஞ் சுத்த சங்காரம் மனாதீதந் தோய்வுறல் உய்த்த சங்காரஞ் சிவன் அருள் உண்மையே. 6
427. நித்த சங்காரம் கருவிடர் நீக்கினால் ஒத்த சங்காரமும் உடல் உயிர் நீவுதல் சுத்த சங்காரம் அதீதத்துள் தோய்வுறல் உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே. 7
428. நித்த சங்காரமும் நீடிளைப் பாற்றலின் வைத்த சங்காரமும் மன்னும் அனாதியிற் சுத்த சங்காரமுந் தோயாப் பரன்அருள் உய்த்த சங்காரமும் நாலாம் உதிக்கிலே. 8
429. பாழே முதலா எழும்பயிர் அப்பயிர் பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா வாழாச் சங்காரத்தின் மால் அயன் செய்தியாம் பாழாம் பயிராய் அடங்கும் அப்பாழிலே. 9
430. தீய வைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை மாய வைத்தான் வைத்த வன்பதி ஒன்றுண்டு காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பதோர் ஆயம் வைத்தான் உணர் ஆர வைத்தானே. 10 12. மறைத்தல் (திரோபவம்)
431. உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை உள்ளம்விட்டு ஓரடி *நீங்கா ஒருவனை #உள்ளமுந் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவு அறியாதே. 1 * நீங்கா தொருவனை # உள்ளமும் அவனும் உறவா யிருந்தும்
432. இன்பப் பிறவி படைத்த இறைவனுந் துன்பஞ்செய் பாசத் துயருள் *அடைத்தனன் என்பிற் கொளுவி இசைந்துறு தோல் தசை முன்பிற் கொளுவி முடிகுவதாமே. 2 * அடைந்தனன்
433. இறையவன் மாதவன் இன்பம் படைத்த மறையவன் மூவரும் வந்துடன் கூடி இறையவன் செய்த இரும்பொறி யாக்கை மறையவன் வைத்த *பரிசு அறியாதே. 3 * பரிசறி யாரே
434. காண்கின்ற கண்ணொளி காதல்செய்து ஈசனை ஆண்பெண் அலிஉருவாய் நின்ற ஆதியை ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச் சேண்படு பொய்கைச் செயல் அணையாரே. 4
435. தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம் அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும் சுருளும் சுடர் உறு தூவெண் சுடரும் இருளும் அறநின்று இருட்டறையாமே. 5
436. அரைகின்ற அருள்தரும் அங்கங்கள் ஓசை உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடு ஒன்று ஒவ்வாப் பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க் கரகின்றவை செய்த காண் தகையானே. 6
437. ஒளித்துவைத்தேன் உள்ளுற உணர்ந்து ஈசனை வெளிப்பட்டு நின்று அருள் செய்திடும் ஈண்டே களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியும் ஆமே. 7
438. நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்றங்கு *இயங்கும் அரன் திருமாலவன் மன்றது செய்யும் மலர்மிசை மேல் அயன் என்ற இவராகி இசைந்திருந்தானே. 8 * கியங்கி யயன்திரு
439. ஒருங்கிய பாசத்துள் உத்தம *சித்தன் இருங்கரை மேல் இருந்து இன்புற நாடி வருங்கரை ஓரா வகையினில் கங்கை அருங்கரை பேணில் அழுக்க அறலாமே. 9 * சித்தின்
440. மண் ஒன்று தான் பல நற்கலம் ஆயிடும் உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே கண் ஒன்று தான்பல காணும் தனைக் காணா அண்ணலும் அவ்வண்ணம் ஆகி நின்றானே. 10 (இப்பாடல் 2351-ம் பாடலாகவும் வந்துள்ளது) 13. அருளல் (அநுக்கிரகம்)
441. எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு வட்டத்திரை அனல் மாநிலம் ஆகாயம் ஒட்டி உயிர்நிலை என்னும் இக் காயப்பை கட்டி *அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே. 1 * அவிழ்க்கின்ற
442. உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன்இல்லை விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சும் அவனே சமைக்க வல்லானே. 2
443. *குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் *குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன் #குசவனைப் போல் எங்கள் கோன் நந்தி வேண்டில் $அசைவில் உலகம் அது இது வாமே. 3 * குயவன் # குயவனைப் $ அயைவில்
444. விரியுடையான் விகிர்தன் மிகு பூதப் படையுடையான் பரிசே உலகு ஆக்கும் கொடையுடையான் குணம் எண் குணம் ஆகும் சடையுடையான் சிந்தை சார்ந்து நின்றானே . 4
445. உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும் உகந்து நின்றே படைத்தான் பல ஊழி உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம் உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே. 5
446. படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும் படைத்து உடையான் பல தேவரை முன்னே படைத்து உடையான் பல சீவரை முன்னே படைத்து உடையான் பரமாகி நின்றானே. 6
447. *ஆதி படைத்தனன் ஐம்பெரும் #பூதம் *ஆதி படைத்தனன் $ஆசில் பல் ஊழி *ஆதி படைத்தனன் எண் இலி தேவரை *ஆதி படைத்தது அவை தாங்கி நின்றானே. 7 * அனாதி # பூதங்கள் $ ஆயபல் ஊழிகள்
448. அகன்றான் *அகல்இடம் ஏழும் ஒன்றாகி இவன்தான் என நின்ற எளியனும் அல்லன் சிவன்தான் பல பல #சீவனும் ஆகி நவின்றான் உலகு உறு நம்பனும் ஆமே. 8 * கடலிடம் # சீவரும் (இப்பாடல் 3011-ம் பாடலாகவும் வந்துள்ளது)
449. உள்நின்ற சோதி உறநின்ற ஓர் உடல் விண் நின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள் மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன் கண் நின்ற மாமணி *மா போதமாமே. 9 * மாபோதகமே
450. ஆரும் அறியாத அண்டத் திருவுருப் பார் முதலாகப் பயிலும் கடத்திலே நீரினில் பால்போல நிற்கின்ற நேர்மையைச் சோராமல் காணும் சுகம் அறிந்தேனே. 10 14. கரு உற்பத்தி (கர்ப்பக்கிரியை)
451. ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்தஞ்சு ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆருயிர் ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகையுள் இருந்து ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே. 1
452. அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச் செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப் பொறை நின்ற இன்னுயிர் போந்துஉற நாடிப் பறிகின்ற பத்து எனும் பாரஞ் செய்தானே. 2
453. இன்புறு காலத்து இருவர் முன்பு ஊறிய துன்புறு பாசத்துயர் மனை வான் உளன் பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும் அன்புறு காலத்து அமைத்தொழிந்தானே. 3
454. கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூ ஏழ் புருடன் உடலில் பொருந்தும் மற்று ஓரார் திருவின் கருக்குழி தேடிப் புகுந்தது உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே. 4
455. விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொடு ஏறிப் பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம் ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே. 5
456. பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும் தாவி உலகில் தரிப்பித்தவாறு போல் மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும் கூவி அவிழும் குறிக்கொண்ட போதே. 6
457. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் *மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டுடன் நாலு புரவியும் பாகன் #விடானெனில் $பன்றியும் ஆமே. 7 * ஆகிப்படைத்தன # விடாவிடிற் $ பந்தியு
458. ஏற எதிர்க்கில் இறையவன் தானாகும் மாற எதிர்க்கில் *அரியவன் தானாகும் நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும் பேர் ஒத்த மைந்தனும் பேரரசு ஆளுமே. 8 * அரியயன்
459. ஏய் அங்கு அலந்த இருவர்தம் சாயத்துப் பாயும் கருவும் உருவாம் எனப் பல காயம் கலந்தது காணப் பதிந்தபின் மாயம் கலந்த மனோலயம் ஆனதே. 9
460. கர்ப்பத்துக் கேவல மாயாள் *கிளைகூட்ட நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ வற்புறு காமியம் எட்டு ஆதல் மாயேயம் சொற்புறு தூய்மறை வாக்கின் ஆம் சொல்லே. 10 * கிளைக்கூட்ட
461. என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச் செம்பால் இறைச்சி திருந்த மனை செய்து இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும் *நன்பால் ஒருவனை நாடுகின்றேனே. 11 * நண்பால்
462. பதஞ் செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன் இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான் விதம் செய்யுமாறே விதித்து ஒழிந்தானே. 12
463. ஒழி பல செய்யும் வினை உற்ற நாளே வழி பல நீராடி வைத்து எழு வாங்கிப் பழி பல செய்கின்ற பாசக் கருவைச் சுழி பல வாங்கிச் சுடாமல் வைத்தானே. 13
464. சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் அக்கிரமத்தே தோன்றும் அவ்வி யோனியும் புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால்விரல் அக்கரம் எட்டும் எண் சாண் அது ஆகுமே. 14
465. போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும் *கோசத்துள் ஆகங் கொணர்ந்த கொடைத் தொழில் ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே. 15 * கோகத்துள்
466. பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும் பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை அண்டத்து நாதத்து அமர்ந்திருந் தானே. 16
467. இலைபொறி ஏற்றி எனது உடல் ஈசன் துலைப்பொறியில் கரு ஐந்துடன் நாட்டி நிலைபொறி முப்பது நீர்மை கொளுவி உலைப்பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே. 17
468. இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண் துன்பக் கலசம் அணைவான் ஒருவனே ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு வெந்தது சூளை விளைந்தது தானே. 18
469. அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும் பிறியீர் அதனில் பெருகும் குணங்கள் செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்டது அறிய ஈரைந்தினுள் ஆனது பிண்டமே. 19
470. உடல்வைத்த வாறும் உயிர் வைத்தவாறும் மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத் திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக் கடை வைத்த ஈசனைக் கைகலந்தேனே. 20
471. கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெருஞ்சுடர் மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன் கூட்டுகின்றான் குழம்பின் கருவை உரு நீட்டுநின்று ஆகத்து நேர்ப்பட்ட வாறே. 21
472. பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின் கா உடைத் தீபங் கலந்து பிறந்திடும் நீர் இடை நின்ற குமிழி நிழலதாய்ப் பாருடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே. 22
473. எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும் கட்டிய மூன்று கரணமுமாய் விடும் ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே. 23
474. கண்ணுதல் நாமம் கலந்து உடம்பு ஆயிடைப் பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை மண் முதலாக வகுத்து வைத் தானே. 24
475. அருள் அல்லது இல்லை அரன் அவன் அன்றி அருள் இல்லை ஆதலின் அவ்வோர் உயிரைத் தருகின்றபோது இரு கைத்தாயர் தம்பால் வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே. 25
476. வகுத்த பிறவியை மாது நல்லாளும் தொகுத்த இருள் நீக்கிய சோதியவனும் பகுத்துணர்வு ஆக்கிய பல்லுயிர் எல்லாம் வகுத்து உள்ளும் நின்றதோர் மாண்பது வாமே. 26
477. மாண்பதுவாக வளர்கின்ற *வன்னியும் காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை பூண்பது மாதா பிதா வழி போலவே ஆம்பதி செய்தான் அச் சோதி தன் ஆண்மையே. 27 * வன்னியைக்
478. ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும் பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும் தாண்மிகும் ஆகில் தரணி முழுது ஆளும் பாணவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே. 28
479. பாய்ந்தபின் அஞ்சுஓடில் ஆயுளும் நூறு ஆகும் பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. 29
480. பாய்கின்ற வாயுக் குறையின் குறள் ஆகும் பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும் பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும் பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே. 30
481. மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம் மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம் மாதா உதரம் இரண்டு ஒக்கின் கண் இல்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. 31
482. குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவி அலி ஆகும்கொண்ட கால் ஒக்கிலே. 32
483. கொண்டநல் வாயு இருவர்க்கும் *ஒத்தெழில் கொண்ட குழவியுங் கோமளம் ஆயிடும் கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோள்வளை யாட்கே. 33 * ஒத்தேறில்
484. கோள்வளை உந்தியில் கொண்ட குழவியும் தால்வளை உள்ளே தயங்கிய சோதியாம் பால்வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப் போல் வளர்ந்து உள்ளே பொருந்து உரு ஆமே. 34
485. உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில் பருவமது ஆகவே பாரினில் வந்திடும் மருவி வளர்ந்திடும் மாயையினாலே அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே. 35
486. இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு உரைத்திலன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன் கெட்டேன் இம் மாயையின் கீழ்மை எவ்வாறே. 36
487. இன்புற நாடி இருவரும் *சந்தித்துத் துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின் முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே. 37 * சிந்தித்துத்
488. குயிற் குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டு இட்டால் அயிர்ப்பு இன்றிக் காக்கை வளர்க்கின்றது போல் இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை மயக்கத்தால் காக்கை வளர்க்கின்றவாறே. 38
489. முதற்கிழங்காய் முளையாய் அம் முளைப்பின் அதற்புதலாய்ப் பலமாய்நின்று அளிக்கும் அதற்கு அதுவாய் இன்பம் ஆவதுபோல அதற்கு அதுவாய் நிற்கும் ஆதிப் பிரானே. 39
490. ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்மிறை ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியுந் தவத்தினின் உள்ளே. 40
491. பரத்தில் கரைந்து பதிந்த நற் காயம் உருத்தரித்து இவ்வுடல் ஓங்கிட வேண்டித் திரைக்கடல் உப்புத் திரண்டது போலத் திரித்துப் பிறக்கும் திருவருளாலே. 41 15. மூவகைச்சீவ வர்க்கம்
492. சத்தி சிவன் விளையாட்டால் உயிராக்கி ஒத்த இரு மாயா கூட்டத்திடை பூட்டிச் சுத்தமதாகுந் துரியம் பிரிவித்துச் சித்தம் புகுந்து சிவமயம் ஆக்குமே. 1
493. விஞ்ஞானர் நால்வரும் மெய்ப் பிரளயாகலத் தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின் அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம் விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே. 2
494. விஞ்ஞானர் கேவலத்து ஆரது விட்டவர் தஞ்ஞானர் அட்ட வித்தேசராஞ்ம் சார்ந்துளோர் எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர் மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே. 3
495. இரண்டாவதில் முத்தி எய்துவர் அத்தனை இரண்டாவதுள்ளே இருமல பெத்தர் இரண்டுஆகும் நூற்றெட்டு உருத்திரர் என்பர் முரண்சேர் சகலத்தர் மும்மலத்தாரே. 4
496. பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்து அது ஒத்திட்டு இரண்டிடை ஊடு உற்றார் சித்துமாய் மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார் சத்தத்து அமிழ்ந்து சகலத்து உளாரே. 5
497. சிவம் ஆகி ஐவகைத் திண்மலம் செற்றோர் அவம் ஆகார் சித்தர் முத்தாந்தத்து வாழ்வார் பவம் ஆன தீர்வோர் பசுபாசம் அற்றோர் நவம் ஆன தத்துவம் *நாடிக் கண்டோ ரே. 6 * நாடிக்கொண் டாரே
498. விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர் விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர் அஞ்ஞானர் அச்சகலத்தர் சகலராம் விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே. 7
499. விஞ்ஞான கன்மத்தால் மெய் அகம் கூடிய அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு எஞ்ஞான மெய் தீண்டியே இடையிட்டுப் போய் மெஞ்ஞானர் ஆகிச் சிவம் மேவல் உண்மையே . 8
500. ஆணவம் துற்ற அவித்தாம் நனவு அற்றோர் காணிய விந்துவாம் நாத சகல ஆதி ஆணவம் ஆதி அடைந்தோர் அவர் அன்றே சேண் உயர் சத்தி சிவதத்துவம் ஆமே. 9 |