பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 7 ...

601 ஒருபொழுது உன்னார் உடலோடு உயிரை
ஒருபொழுது உன்னார் உயிருட் சிவனை
ஒருபொழுது உன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழுது உன்னார் சந்திரப் *பூவே. 4

* பூவையே

602 மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே. 5

603 எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருப்பினும்
கண் ஆர் அமுதினைக் கண்டு அறிவார் இல்லை
உள் நாடி உள்ளே ஒளியுற *நோக்கினால்
கண்ணாடி போலக் #கலந்து நின்றானே. 6

* நோக்கிற்; நோக்கிடிற்
# கலந்திருந்தானே

604 நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை
*தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே. 7

* வேட்டமும்

605 நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு
உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்க வல்லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே. 8

606 மணி கடல் யானை *வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம் இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே. 9

* வளர்குழல்

607 கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டர் அண்டத்துச்
*சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கு அல்லால் தெரியாதே. 10

* சுடர்மனு; சுடர்மணி

608 ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்து உயிராய் நிற்கும்
ஓசை அதன் மணம் போல விடுவது ஓர்
ஓசையாம் ஈசன் உணர வல்லார்க்கே. 11

609 நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே. 12

610 உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசு உடைத் தூங்கு இருள் நீங்கி
அதிக்கின்ற *ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல் சேரல் ஆமே. 13

* ஐவர் அருள்நாதமோடும்

611 பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியில் ஓர் ஓசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவு இல்லைத் தானே. 14

612 கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே. 15

613 அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு
அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க்கே வரில்
அவ்வவர் மண்டலம் ஆயம் மற்றோர்க்கே. 16

614 இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப் பெரும் பாசந் துருவிடும் ஆகில்
இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே. 17

615 முக்குணம் ஊடு அற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயர்நிலை வானவர் கோனே. 18

616 நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக்கு இருவிரல் உள்ளே
கடலித்து இருந்து கருத வல்லார்கள்
சடலத் தலைவனைத் தாம் அறிந்தாரே. 19

617 * அறிவாய் அசத்து என்னும் ஆறாறு அகன்று
செறிவான மாயை சிதைத்து அருளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந்தாரே. 20

* அறியா யசந்தென்னு

(இப்பாடல் 2471-ம் பாடலாகவும் வந்துள்ளது)

9. சமாதி

618 சமாதி யமாதியில் தான் செல்லக் கூடும்
சமாதி யமாதியில் தான் எட்டும் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதி யமாதி தலைப்படும் தானே. 1

619 விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடின்
சந்தியில் ஆன சமாதியில் கூடிடும்
அந்தம் இலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே. 2

620 மன்மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு
மன்மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத்துள்ளே மகிழ்ந்திருப்பார்க்கு
மன்மனத்துள்ளே மனோலயம் ஆமே. 3

621 விண்ட அலர் கூபமும் விஞ்சத்து அடவியும்
கண்டு உணர்வாகக் கருதி இருப்பர்கள்
செண்டு வெளியில் செழுங்கிரியத்திடை
கொண்டு குதிரை குசை செறுத்தாரே. 4

622 மூல நாடி * முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே. 5

* முக்கடல்

623 மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே. 6

624 பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவைத்
தேட்டு அற்ற அந்நிலம் சேரும்படி வைத்து
நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே. 7

625 உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்து அமுது உண்டார்
அருவரை ஏறி அமுது உண்ணமாட்டார்
திருவரையா மனம் தீர்ந்து அற்றவாறே. 8

626 நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை ஆக்கி அருத்தி ஒடுக்கிப் போய்க்
கொம்பு ஏறிக் கும்பிட்டுக் கூட்டம் இட்டாரே. 9

627 மூலத்து மேலது முச்சதுரத்தது
காலத்திசையில் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றி நேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே. 10

628 கற்பனை அற்றுக் கனல் வழியே சென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதியோடு உற்றுத்
தற்பரமாகத் தகும் தண்சமாதியே. 11

629 தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும்
வலைப்பட்டு இருந்திடும் மாது நல்லாளும்
குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே. 12

630 சோதித் தனிச்சுடராய் நின்ற தேவனும்
ஆதியும் *உள் நின்ற சீவனும் ஆகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடி பணிந்து அன்பு உறுவாரே. 13

* முன் நின்ற

631 சமாதி செய்வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்
சமாதிதான் இல்லை தான் அவன் ஆகில்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே. 14

10. அட்டாங்க யோகப் பேறு

இயமம்

632 போதுஉகந் தேறும் புரிசடையான் அடி
யாதுஉகந்தார் அமராபதிக்கே செல்வர்
ஏதுஉகந்தான் இவன் என்றருள் செய்திடு
மாதுஉகந்து ஆடிடும் மால்விடை யோனே. 1

நியமம்

633 பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு
முற்றெழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதம் சேரலும் ஆமே. 2

ஆதனம்

634 வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்து அமராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவம் குழலும் இயம்ப
இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே. 3

பிராணாயாமம்

635 செம்பொற் சிவகதி சென்றுஎய்துங் காலத்துக்
கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர்கொள்ள
எம்பொற் தலைவன் இவனாம் எனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலும் ஆமே. 4

பிரத்தியாகாரம்

636 சேருறு காலந் திசை நின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே. 5

தாரணை

637 நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழியாகுமே. 6

தியானம்

638 தூங்க *வல்லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்க வல்லார்க்கும் வலிசெய்து #நின்றிடுந்
தேங்க $வல்லார்க்கும் திளைக்கும் அமுதமுந்
தாங்க வல்லார்க்குந் தன்னிட மாமே. 7

* வல்லார்க்குத்
# நின்றிட்டுத்
$ வல்லார்க்குத்

சமாதி

639 காரிய மான உபாதியைத் தான் கடந்து
ஆரிய காரணம் ஏழும் தன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே. 8

11. அட்டமா சித்தி

(இ·து ஒரு பிரதியில் பரகாயம் என்றுள்ளது)

பரகாயப் பிரவேசம்

640 பணிந்து எண் திசையும் பரமனை நாடித்
துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை
அணிந்து எண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்து எண் திசைச்சென்று தாபித்த வாறே. 1

641 பரிசு அறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசு அற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கு இல்லை அட்டமா சித்தி
பெரிது அருள் செய்து பிறப்பு அறுத்தானே. 2

642 குரவன் அருளின் குறிவழி மூலன்
பரையின் *மணம் மிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறு எட்டாம் சித்தியே. 3

* மனமிகு சக்கட்ட மார்த்துத்

643 காய ஆதி பூதம் கலை காலம் மாயையில்
ஆயாது அகல அறிவு ஒன்று அனாதியே
ஓயாப் பதி அதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலும் ஆமே. 4

644 இருபதினாயிரத்து எண்ணூறு பேதம்
மருவிய கன்மம் மாமந்த யோகம்
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே
* அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே. 5

* அருமிரு

645 மதிதனில் ஈராறாய் மன்னும் கலையில்
உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டுப்
பதியும் ஈராறு ஆண்டு பற்று அறப் பார்க்கின்
திதமான ஈராறு சித்திகள் ஆமே. 6

646 நாடும் பிணியாகு நன் சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம்
பீடு ஒன்றி நால்வாய் அச் சித்தி பேதத்தின்
நீடும் துரம் கேட்டல் நீள் முடிவு ஈராறே. 7

647 ஏழானதில் சண்ட வாயுவின் வேகியாம்
தாழா நடைபல யோசனை சார்ந்திடும்
சூழான ஓர் எட்டில் தோன்றா நரை திரை
தாழான ஒன்பதில்தான் பரகாயமே. 8

648 ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
* ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீர் ஒன்றும் மேல் ஏழ் கீழேழ் புவிச்சென்று
# ஏரொன்று வியாபியாய் நிற்றல் ஈராறே. 9

* நேரொன்று
# ஓரொன்று

649 தானே அணுவும் சகத்துத் தன் *நொய்ம்மையும்
மானாக் #கனமும் பரகாயத் தேகமும்
தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும்
ஆனாத உண்மையும் $வியாபியும் ஆம் எட்டே. 10

* நோன்மையும்
# ககனமும்
$ வியாப்பிய

650 தாங்கிய தன்மையும் தான் அணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மற்று ஓர் குறை இல்லை
ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்தும் மிக்கு
* கோங்கி வரமுத்தி முந்திய வாறே. 11

* கோங்கிய வாமுத்தி

651 முந்திய முந்நூற்று அறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முதலாயிடச்
சிந்தை *செயச் செய மண்முதல் தேர்ந்தறிந்
துந்தியில் நின்று உதித்து எழுமாறே. 12

* செய் மண் முதல் தேர்ந்தறி வார்வல முந்தியுள்

652 சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே
முத்தம் தெரிந்து உற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத்தோரே. 13

653 ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே. 14

654 இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கு * முடலில் இருந்தில வாகில்
இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே. 15

* முடலீ திருந்தில

655 வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனு * முடமதாய்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே. 16

* முடமதாம்

656 கண்ணில் வியாதி உரோகம் தனஞ்செயன்
கண்ணில் இவ் ஆணிகள் காசம் அவன் அல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே. 17

657 நாடியின் ஓசை நயனம் இருதயந்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் *தாரே. 18

* தார்க்களே

658 ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள்
ஒன்பது நாடி உடையது ஓர் ஓர் இடம்
ஒன்பது நாடி ஒடுங்க வல்லார்கட(கு)
ஒன்பது *காட்சி இலை பல வாமே. 19

* வாசல் உலைநலமாமே

659 ஓங்கிய அங்கிக்கீழ் ஒண் சுழுனைச் செல்ல
வாங்கி இரவி மதி வழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட
ஆங்கு அது சொன்னோம் *அருவழி யோர்க்கே. 20

* அறிவுடை

660 தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே. 21

661 ஓடிச்சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர்
நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச் சென்று அங்கே தேனை முகந்து உண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே. 22

662 கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
மட்டிட்ட *கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
#கட்டிட்டு நின்று களங்கனி ஊடுபோய்ப்
பொட்டு இட்டு நின்று பூரணம் ஆனதே. 23

* கண்ணியர்
# தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்

663 பூரண சத்தி எழு மூன்று அறை ஆக
ஏர் அணி கன்னியர் எழு நூற்றஞ்சு ஆக்கினார்
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
காரணம் ஆகிக் கலந்து விரிந்ததே. 24

664 விரிந்து குவிந்து விளைந்த இம் மங்கை
கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கின்
பரந்து குவிந்தது பார்முதல் பூதம்
இரைந்து எழு வாயு இடத்தினில் * ஒடுங்கே. 25

* ஓங்கே

665 இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடு வாயுவும் மாறியே நிற்கும்
தடை அவை * யாறேழுந் தண் சுடர் உள்ளே
மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே. 26

* யாறெழுந்

666 ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி மடங்கிடும் மன் உயிருள்ளே
நடங்கொண்ட *கூத்தனும் நாடுகின்றானே. 27

* கூத்தனை நாடுகின் றேனே

667 நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி உடன் சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே. 28

668 அணுமாதி சித்திகள் ஆனவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
அணுகாத வேகார் பரகாய மேவல்
*அணுவத் தனையெங்குந் #தானாத லென்றெட்டே. 29

* அணுமைத்
# தானாக

669 எட்டாகிய சித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்தன் நல்பானு
விட்டான் மதியுண்ணவும் வரும் மேலதே. 30

670 சித்திகள் எட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திகளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுளவாகுமே. 31

அணிமா

671 எட்டு இவை தன்னோடு எழிற்பரம் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால்
இட்டம் அது உள்ளே *இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பும் இடம்தான் நின்று எட்டுமே. 32

* இருக்கல்

672 மந்தர மேறு மதிபானுவை மாற்றிக்
கந்தாய்க் குழியில் கசடு அற வல்லார்க்குத்
தந்து இன்றி நற்*கா மியலோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி ஆமே. 33

* காய மிய

673 முடிந்திட்டு வைத்து முயங்கில் ஓராண்டில்
அணிந்த அணிமா கைதானாம் இவனும்
தணிந்த அப்பஞ்சினும் தான் நொய்யது ஆகி
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே. 34

லகிமா

674 ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடில்
மாய்கின்றது ஐயாண்டில் மாலகு வாகுமே. 35

675 மாலகு ஆகிய மாயனைக் கண்டபின்
தான் ஒளி ஆகித் தழைத்து அங்கு இருந்திடும்
பால் ஒளி ஆகிப் பரந்து எங்கு நின்றது
மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே. 36

மகிமா

676 மெய்ப்பொருள் சொல்லிய மெல்லியலாளுடன்
தற்பொருள் ஆகிய தத்துவம் கூடிடக்
கைப்பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டின்
மைப்பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே. 37

677 ஆகின்ற கால் ஒளியாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவதும் இல்லையாம்
மேனின்ற காலம் வெளியுற *நின்றன
#தானின்ற காலங்கள் தன்வழி ஆகுமே. 38

* நின்றபின்
# தாழ்கின்ற

678 தன்வழியாகத் தழைத்திடு ஞானமும்
தன்வழி *யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழியாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழி தன்னருள் ஆகி நின்றானே. 39

* மீதாகத்

பிராத்தி

679 நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் * படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டு கூட இருந்திடில்
விண்டதுவே நல்ல பிராத்தியது ஆகுமே. 40

* படையானவையெலாங்

கரிமா

680 ஆகின்ற மின் ஒளி ஆவது கண்டபின்
பாகின்ற பூவில் பரப்பு அவை காணலாம்
*மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவதும் இல்லையே. 41

* மேனின்ற

681 போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே. 42

682 அறிந்த பராசத்தி உள்ளே அமரில்
பறிந்தது பூதப் படை அவை எல்லாம்
குவிந்தவை ஓர் ஆண்டு கூட இருக்கில்
*விரிந்தது பரகாய மேவலும் ஆமே. 43

* விரிந்த

பிராகாமியம்

683 ஆன விளக்கொளி யாவது அறிகிலர்
மூல விளக்கொளி முன்னே உடையவர்
கான விளக்கொளி கண்டு கொள்வார்கட்கு
மேலை விளக்கொளி வீடு எளிதாம் நின்றே. 44

ஈசத்துவம்

684 நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாங்
கொண்டவை ஓராண்டு கூடி இருந்திடில்
பண்டையவ் வீசன் தத்துவம் ஆகுமே. 45

685 ஆகின்ற சந்திரன் * தன் ஒளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே. 46

* தண்ணளி

686 தானே படைத்திட வல்லவன் ஆயிடும்
தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
தானே சங்காரத் தலைவனும் ஆயிடும்
தானே இவன் என்னும் தன்மையன் ஆமே. 47

687 தன்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்த ஐம்பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மையது ஆகிய மெய்ப்பொருள் காணுமே. 48

வசித்துவம்

688 மெய்ப்பொருளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம்
கைப்பொருளாகக் கலந்த உயிர்க்கு எல்லாம்
தற்பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே. 49

689 தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மையது ஆகிய மெய்ப்பொருள் கண்டிடின்
பொன்மைய தாகப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே. 50

690 நற்கொடி ஆகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓர் ஆண்டு
பொற்கொடி ஆகிய புவனங்கள் போய்வரும்
கற்கொடி ஆகிய காமுகன் ஆமே. 51

691 காமரு தத்துவ மானது வந்த பின்
பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும்
மாமரு *உன்னிடை மெய்த்திடு மானன் ஆய்
நா மருவும் ஒளி நாயகம் ஆனதே. 52

* வுன்னிடம் எய்திடு

692 நாயகம் ஆகிய நல்லொளி கண்டபின்
தாயகம் ஆகத் தழைத்து அங்கு இருந்திடும்
போய் அகம் ஆன புவனங்கள் கண்டபின்
பேய் அகம் ஆகிய பேரொளி காணுமே. 53

693 பேரொளி ஆகிய பெரிய அவ் *வேட்டையும்
பார் ஒளியாகப் பதைப்பு அறக் கண்டவன்
தார் ஒளியாகத் தரணி முழுதும் ஆம்
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே. 54

* வெட்டையும்

694 காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லின்
கால் அது அக்கொடி நாயகி தன்னுடன்
கால் அது ஐஞ்ஞூற்று ஒருபத்து மூன்றையும்
கால் அது *வேண்டிக் கொண்ட இவ்வாறே. 55

* பெண்மண்டிக்

695 ஆறு அது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறு அது ஆயிரம் முந்நூற்றொடு ஐஞ்சு உள
ஆறு அது ஆயிரம் ஆகும் மருவழி
ஆறு அது ஆக வளர்ப்பது இரண்டே. 56

696 இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டு அது கால்கொண்டு எழுவகை சொல்லில்
இரண்டு அது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்த்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே. 57

697 அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி
அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது
அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம்
அஞ்சு அது காலம் எடுத்துளும் ஒன்றே. 58

698 ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி
ஒன்று அது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்று அது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே. 59

699 முன் எழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் *ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை ஆமே. 60

* ஐம்பதொ டொன்றுடன்

700 ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பு அது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பதொடு ஒன்பது
மாய்வரு வாயு வளப்புள் இருந்ததே. 61






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247