தேவாரம் - திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - Sambandar Thevaram - Thirumurai Two - சைவ சித்தாந்த நூல்கள் - Saiva Sidhantha Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


இரண்டாம் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 4 ...

2.31. திருக்கருப்பறியலூர் - திருவிராகம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

328  சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்
       குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
       மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
       கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.1

329  வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே
       கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
       விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால்
       கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.2

330  வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
       போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
       நாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழுங்
       காதவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.3

331  மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
       உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்
       தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
       கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.4

332  ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
       நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய
       விருத்தனவன் வேதமென அங்கமவை யோதுங்
       கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.5

333  விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
       பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான்
       எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலுங்
       கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.6

334  ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
       சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
       தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்
       காதின னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.7

335  வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
       பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்
       கேய்ந்தபுய மத்தனையும் இற்றுவிழ மேனாள்
       காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.8

336  பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
       கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து
       நிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல்
       கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.9

337  அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
       சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
       குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
       கற்றென இருப்பது கருப்பறிய லூரே. 2.31.10

338  நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
       கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப்
       பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
       வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே. 2.31.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - குற்றம்பொறுத்தநாதர்
தேவி - கோல்வளையம்மை

2.32. திருவையாறு - திருவிராகம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

339  திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
       உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
       விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார்
       மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே. 2.32.1

340  கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
       இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ்
       சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார
       வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே. 2.32.2

341  கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
       கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்
       கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
       வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே. 2.32.3

342  நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
       றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர்த்
       தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
       மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே. 2.32.4

343  வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்
       கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
       நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
       மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே. 2.32.5

344  பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப்
       பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
       கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
       மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே. 2.32.6

345  துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப்
       பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
       என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர்
       மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே. 2.32.7

346  இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர்
       அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத்
       துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர்
       வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே. 2.32.8

347  பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றிப்
       பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங்
       கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார்
       வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே. 2.32.9

348  பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
       சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
       நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
       மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே. 2.32.10

349  வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
       ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
       பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
       நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே. 2.32.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - செம்பொன்சோதீசுரர்
தேவி - அறம்வளர்த்தநாயகியம்மை

2.33. திருநள்ளாறு - திருவிராகம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

350  ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி
       மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்
       கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
       நாடுமலி வாசமது வீசியநள் ளாறே. 2.33.1

351  விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த
       புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல்
       பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
       நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே. 2.33.2

352  விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்
       துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர்
       வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
       நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே. 2.33.3

353  கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்
       செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கிப்
       புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
       நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே. 2.33.4

354  நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்
       வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர்
       அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த
       நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே. 2.33.5

355  பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்
       காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங்
       கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்
       நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே. 2.33.6

356  நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை
       பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை
       வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
       ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே. 2.33.7

357  கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை
       எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும்
       அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட
       நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே. 2.33.8

358  உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்
       பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர்
       வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்
       நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே. 2.33.9

359  சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
       பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர்
       மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
       சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே. 2.33.10

360  ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும்
       நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை
       மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
       பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே. 2.33.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமி - தெர்ப்பாரணியர்
தேவி - போகமார்த்தபூண்முலையம்மை

2.34. திருப்பழுவூர் - திருவிராகம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

361  முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
       அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர்
       மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
       பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே. 2.34.1

362  கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
       ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்
       மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்
       பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே. 2.34.2

363  வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
       போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்
       வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்
       பாலென மிழற்றிநட மாடுபழு வூரே. 2.34.3

364  எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
       கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
       மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
       பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே. 2.34.4

365  சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
       நாதன்நமை யாளுடைய நம்பனிட மென்பர்
       வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
       பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே. 2.34.5

366  மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
       மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
       பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
       பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே. 2.34.6

367  மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
       சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
       அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார்
       பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே. 2.34.7

368  உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
       றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர்
       குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
       பரக்குறு புனல்செய்விளை யாடுபழு வூரே. 2.34.8

369  நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
       அன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர்
       ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
       மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே. 2.34.9

370  மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர்
       முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
       மட்டைமலி தாழைஇள நீரதிசை பூகம்
       பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே. 2.34.10

371  அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
       பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்
       சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி
       வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 2.34.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - வடவனநாதர்
தேவி - அருந்தவநாயகியம்மை

2.35. திருக்குரங்காடுதுறை

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

372  பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
       இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
       அரவச் சடையந் தணன்மேய அழகார்
       குரவப் பொழில்சூழ் குரங்காடு துறையே. 2.35.1

373  விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
       இண்டார் புறங்காட் டிடைநின் றெரியாடி
       வண்டார் கருமென் குழல்மங்கை யொர்பாகங்
       கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே. 2.35.2

374  நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்
       இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி
       மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங்
       குறைவில் லவனூர் குரங்காடு துறையே. 2.35.3

375  விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித்
       தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
       பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
       கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே. 2.35.4

376  நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன்
       ஏறார்கொடி யெம்மிறை யீண்டெரி யாடி
       ஆறார்சடை யந்தணன் ஆயிழை யாளோர்
       கூறான்நகர் போல்குரங் காடு துறையே. 2.35.5

377  நளிரும் மலர்க்கொன் றையுநாறு கரந்தைத்
       துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி
       மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில்
       குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே. 2.35.6

378  பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
       முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்
       அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்
       குழகன் னகர்போல் குரங்காடு துறையே. 2.35.7

379  வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
       நிரையார் விரலால் நெரித்திட் டவனூராங்
       கரையார்ந் திழிகா விரிக்கோலக் கரைமேல்
       குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே. 2.35.8

380  நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்
       படியா கியபண் டங்கனின் றெரியாடி
       செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
       கொடியான் நகர்போல் குரங்காடு துறையே. 2.35.9

381  துவரா டையர்வே டமலாச் சமண்கையர்
       கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
       நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
       குவையார் கரைசேர் குரங்காடு துறையே. 2.35.10

382  நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன்
       கொல்லே றுடையான் குரங்காடு துறைமேல்
       சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
       வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே. 2.35.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - குலைவணங்குநாதர்
தேவி - அழகுசடைமுடியம்மை

2.36. திருஇரும்பூளை - வினாவுரை

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

383  சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
       வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
       ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
       காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே. 2.36.1

384  தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
       குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
       எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
       கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே. 2.36.2

385  அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
       மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
       இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
       பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே. 2.36.3

386  நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
       கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி
       இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
       உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே. 2.36.4

387  சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
       நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
       எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
       புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே. 2.36.5

388  தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்
       சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
       ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
       காடார் கடுவே டுவனான கருத்தே. 2.36.6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 2.36.7

389  ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்
       பருக்கை மதவேழ முரித்துமை யோடும்
       இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
       அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே. 2.36.8

390  துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்
       கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி
       இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
       முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே. 2.36.9

391  துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
       பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
       இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
       அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே. 2.36.10

392  எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
       சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்
       செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார்
       பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே. 2.36.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - காசியாரண்ணியேசுவரர்
தேவி - ஏலவார்குழலம்மை

2.37. திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

393  சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
       மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
       இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
       கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. 2.37.1

394  சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
       வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
       மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்
       கங்கை சடைமே லடைவித்த கருத்தே. 2.37.2

395  குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல்
       மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
       சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
       அரவம் மதியோ டடைவித்த லழகே. 2.37.3

396  படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
       மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
       உடலம் முமைபங்க மதாகியு மென்கொல்
       கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே. 2.37.4

397  வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
       தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
       ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்
       கானார் கடுவே டுவனான கருத்தே. 2.37.5

398  பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
       மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
       உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
       தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே. 2.37.6

399  வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ்
       சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா
       மாலோ டயன்இந் திரனஞ்ச முன்னென்கொல்
       காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே. 2.37.7

400  கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்
       வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
       இலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்த
       அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே. 2.37.8

401  கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந்
       தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா
       ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல்
       வானந் தலமண்டி யுங்கண்டி லாவாறே. 2.37.9

402  வேதம் பலவோமம் வியந்தடி போற்ற
       ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய்
       ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
       ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே. 2.37.10

403  காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
       வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
       ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்
       வாழி யுலகோர் தொழவான் அடைவாரே. 2.37.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - வேதாரணியேசுவரர்
தேவி - யாழைப்பழித்தமொழியம்மை

2.38. திருச்சாய்க்காடு

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

404  நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
       சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
       மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி
       தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே. 2.38.1

405  பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
       வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
       கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
       தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே. 2.38.2

406  நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
       டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில்
       ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை
       தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே. 2.38.3

407  வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்
       புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
       இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்
       தரங்கம் நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே. 2.38.4

408  ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று
       கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
       மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
       தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே. 2.38.5

409  துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
       அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில்
       வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ்
       சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே. 2.38.6

410  வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
       ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
       மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்
       தாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே. 2.38.7

411  இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
       அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
       மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
       தருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே. 2.38.8

412  மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
       வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
       சேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்தி
       காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே. 2.38.9

413  ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்
       ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்
       வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
       பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே. 2.38.10

414  ஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை
       ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும்
       ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய்
       வான நாடினி தாள்வரிம் மாநிலத் தோரே. 2.38.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சாயாவனேசுவரர்
தேவி - குயிலுநன்மொழியம்மை

2.39. திருக்ஷேத்திரக்கோவை

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

415  ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம்
       வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்ல
       கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
       கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
       நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங்
       குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
       பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும்
       பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே. 2.39.1

416  அண்ணா மலையீங் கோயுமத்தி முத்தா
       றகலா முதுகுன் றங்கொடுங் குன்றமுங்
       கண்ணார் கழுக்குன் றங்கயிலை கோணம்
       பயில்கற் குடிகா ளத்திவாட் போக்கியும்
       பண்ணார் மொழிமங்கை யோர்பங் குடையான்
       பரங்குன் றம்பருப் பதம்பேணி நின்றே
       எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்
       கடல் நீந் தலாங் காரணமே. 2.39.2

417  அட்டா னமென் றோதியநா லிரண்டும்
       அழகன் னுறைகா வனைத்துந் துறைகள்
       எட்டாந் திருமூர்த் தியின்கா டொன்பதுங்
       குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும்
       மட்டார் குழலாள் மலைமங்கை பங்கன்
       மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ்
       சிட்டா னவன்பா சூரென்றே விரும்பாய்
       அரும்பா வங்களா யினதேய்ந் தறவே. 2.39.3

418  அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள் ளைப்பொடி
       பூசியா றணிவான் அமர்காட்டுப் பள்ளி
       சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி
       திருநனி பள்ளி சீர்மகேந் திரத்துப்
       பிறப்பில் லவன்பள்ளி வெள்ளச் சடையான்
       விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்க ரம்மால்
       உறைப்பா லடிபோற்றக் கொடுத்த பள்ளி
       உணராய் மடநெஞ்ச மேயுன்னி நின்றே. 2.39.4

419  ஆறை வடமா கறலம்பர் ஐயா
       றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்
       சேறை துலைபுக லூரக லாதிவை
       காதலித் தானவன் சேர்பதியே. 2.39.5

இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.

420  மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும்
       மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும்
       இனவஞ் சொலிலா இடைமா மருதும்
       இரும்பைப் பதிமா காளம்வெற் றியூருங்
       கனமஞ் சினமால் விடையான் விரும்புங்
       கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர்
       தனமென் சொலிற்றஞ் சமென்றே நினைமின்
       தவமாம் மலமா யினதா னருமே. 2.39.6

421  மாட்டூர் மடப்பாச் சிலாச்சி ராமம்
       முண்டீச் சரம்வாத வூர்வார ணாசி
       காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங்
       கடலொற்றி யூர்மற் றுறையூ ரவையுங்
       கோட்டூர் திருவாமாத் தூர்கோ ழம்பமுங்
       கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் **** 2.39.7

இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.

422  **** **** குலாவு திங்கட்
       சடையான் குளிரும் பரிதி நியமம்
       போற்றூ ரடியார் வழிபா டொழியாத்
       தென்புறம் பயம்பூ வணம்பூ ழியூருங்
       காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள்
       நெரித்தா னுறைகோயில் **** **** ** லென் றென்றுநீ கருதே. 2.39.8

இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.

423  நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்
       நெடுவா யிற்குறும் பலாநீ டுதிரு
       நற்குன்றம் வலம்புரம் நாகேச் சுரம்நளிர்
       சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
       கற்குன்ற மொன்றேந் திமழை தடுத்த
       கடல்வண் ணனுமா மலரோனுங் காணாச்
       சொற்கென் றுந்தொலை விலாதா னுறையுங்
       குடமூக் கென்றுசொல் லிக்குலா வுமினே. 2.39.9

424  குத்தங் குடிவே திகுடி புனல்சூழ்
       குருந்தங் குடிதே வன்குடி மருவும்
       அத்தங் குடிதண் டிருவண் குடியும்
       அலம்புஞ் சலந்தன் சடைவைத் துகந்த
       நித்தன் நிமலன் உமையோ டுங்கூட
       நெடுங்கா லமுறை விடமென்று சொல்லாப்
       புத்தர் புறங்கூ றியபுன் சமணர்
       நெடும்பொய் களைவிட் டுநினைந் துய்ம்மினே. 2.39.10

425  அம்மா னையருந் தவமாகி நின்ற
       அமரர் பெருமான் பதியான வுன்னிக்
       கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்
       கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
       இம்மா லையீரைந் தும்இரு நிலத்தில்
       இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று
       விம்மா வெருவா விரும்பும் மடியார்
       விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே. 2.39.11

திருச்சிற்றம்பலம்

இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர், வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம், நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி, மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித் தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.

2.40. திருப்பிரமபுரம்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

426  எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்
       தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
       கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
       வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே. 2.40.1

427  தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்
       காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
       ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
       காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே. 2.40.2

428  நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே
       உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
       அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும்
       பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே. 2.40.3

429  சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
       கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்
       தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை
       நாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே. 2.40.4

430  கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
       பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
       விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
       எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே. 2.40.5

431  எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
       கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
       கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
       சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே. 2.40.6

432  சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த
       இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
       அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால்
       நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே. 2.40.7

433  எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
       நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
       உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்
       தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே. 2.40.8

434  கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
       அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
       தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர
       உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே. 2.40.9

435  உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
       முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
       பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
       சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே. 2.40.10

436  தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
       கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
       முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
       பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே. 2.40.11

திருச்சிற்றம்பலம்

திருப்பிரமபுரமென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி



இரண்டாம் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் : 1 2 3 4 5



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247