உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
எட்டாம் திருமுறை மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் ... தொடர்ச்சி - 3 ... 6. நீத்தல் விண்ணப்பம் (பிரபஞ்ச வைராக்கியம்)
திருஉத்தரகோசமங்கையில் அருளியது
(கட்டளைக் கலித்துறை) திருச்சிற்றம்பலம் கடையவ னேனைக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105 கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய் விள்ளேன் எனினும் விடுதிகண்டாய்நின் விழுத்தொழும்பின் உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106 காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவா ரூருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே. 107 வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கு அரசே தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே. 108 செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின் மொழியாரில் பன்னாள் விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால் உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. 109 மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே பொறுப்பர் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. 110 பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே. 111 தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே. 112 இருதலைக்கொள்ளியின் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே. 113 பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே. 114 மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான்உன்மணி மலர்த்தாள் வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே. 115 நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ அடும்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கு அரசே கடும் தகையேன் உண்ணும் தெண்ணீர் அமுதப் பெருங்கடலே. 116 கடலினுள் நாய் நக்கி அங்கு உன் கருணைக் கடலின் உள்ளம் விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார் உடல் இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே மடலின் மட்டே மணியே அமுதே என்மது வெள்ளமே. 117 வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள் பெற்றுத் துன்பத்து இன்றும் விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார் உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே. 118 களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம் ஒளிவந்த பூங்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே எளிவந்த எந்தைபிரான் என்னை ஆளுடை என் அப்பனே. 119 என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன் மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே. 120 பொருளே தமியேன் புகல் இடமே நின் புகழ் இகழ்வர் வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் அருளே அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே. 121 இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே. 122 மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள் தீக் கொளுவும் விடங்க என்தன்னை விடுதிகண்டாய் என் பிறவியை வேர் ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே. 123 கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே வெம்புகின்றேனை விடுதிகண்டாய் விண்ணர் நண்ணுகில்லா உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே. 124 ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண் டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத் தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே. 125 ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே. 126 பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின் வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே. 127 உள்ளவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப் பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா மெள்ளெனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128 எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே. 129 பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக் குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே. 130 கொழுமணிஏர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து அழுமடி யாரிடை ஆர்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் கழுமணி யேஇன்னுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே. 131 புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்து இங்குஓர் பொய்ந்நெறிக்கே விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய் கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே துலங்குகின்றேன் அடி யேன் உடையாய்என் தொழுகுலமே. 132 குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம் விலங்கல்எந் தாய்விட் டிடுதிகண்டாய்பொன்னின் மின்னுகொன்றை அலங்கல் அந் தாமரை மேனிஅப் பாஒப்பி லாதவனே மலங்கள் ஐந் தாற்கழல் வன்தயிரிற்பொரு மத்துறவே. 133 மத்துறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி வித்துறு வேனை விடுதிகண்டாய் வெண்டலைமிலைச்சிக் கொத்துறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித் தத்தறு நீறுடன் ஆரச் செஞ்சாந்தணி சச்சையனே. 134 சச்சையனே மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம் விச்சையனே விட்டிடுதிகண்டாய் வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனெ யொண்பட அரவக் கச்சையனே கடந்தாய் தடந்தாள அடற்கரியே. 135 அடற்கரி போல்ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்கல்லால் தொடற்கரியாய் சுடர் மாமணியே சுடு தீச்சுழலக் கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே. 136 கண்டது செய்து கருணை மட்டுப்பரு கிக்களித்து மிண்டுகின்றேனை விடுதிகண்டாய் நின் விரைமலர்த்தாள் பண்டுதந்தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்து என்னைக் கொண்டென் எந் தாய்களை யாய் களையாய குதுகுதுப்பே. 137 குதுகுதுப்பின்றி நின்று என்குறிப்பேசெய்து நின்குறிப்பில் விதுவிதுப் பேனை விடுதிகண்டாய்விரை யார்ந்தினிய மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து எதிர்வதெப் போது பயில்விக் கயிலைப் பரம்பரனே. 138 பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின் அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவி ஐவாயரவம் பொரும்பெருமான் வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே. 139 பொதும்புறு தீப்போல் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம் ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே. 140 அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னினல்லால் விரைசேர் முடியாய் விடுதிகண்டாய் வெண் நகைக்கருங்கண் திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான் வந்து அடர்வனவே. 141 அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம் விடர்விட லேனை விடுதிகண்டாய் விரிந் தேயெரியுஞ் சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே தொடர்வரி யாய் தமியேன் தனி நீக்குந் தனித்துணையே. 142 தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினை யேனுடைய மனத்துணை யேஎன்தன் வாழ்முதலே எனக்கு எய்ப்பில்வைப்பே தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே. 143 வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு மிலைத்து அலைந் தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றைக் கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும் மலைத்தலை வாமலை யாள்மணவாள என் வாழ்முதலே. 144 முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கைவெந்நீரிற் கடிப் பமூழ்கி விதலைச் செய்வேனை விடுதிகண்டாய் விடக்கு ஊன்மிடைந்த சிதலைச் செய்காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ திதலைச் செய்பூண்முலை மங்கைபங்கா என்சிவகதியே. 145 கதியடி யேற்குன் கழல்தந்தருளவும் ஊன்கழியா விதியடி யேனை விடுதிகண்டாய் வெண்தலைமுழையிற் பதியுடை வாள்அரப் பர்த்திறை பைத்துச் சுருங்க அஞ்சி மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே. 146 மன்னவனே ஒன்று மாறுஅறியாச்சிறியேன் மகிழ்ச்சி மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேதமெய்ந்நூல் சொன்னவனே சொற் கழிந்தவனே கழியாத் தொழும்பர் முன்னவனே பின்னும் ஆனவனேயிம் முழுதையுமே. 147 முழுதுஅயில் வேற்கண்ணியரென்னும் மூரித் தழல்முழுகும் விழுதனை யேனை விடுதிகண்டாய் நின்வெறி மலர்த்தாள் தொழுதுசெல்வான்நல்தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான் பழுதுசெய்வேனை விடேல்உடையாய் உன்னைப் பாடுவனே. 148 பாடிற்றிலேன் பணியேன் மணிநீஒளித் தாய்க்குப்பச்சூன் வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியந் தாங்கலறித் தேடிற்றிலேன் சிவன் எவ்விடத்தான்எவர் கண்டனர் என்று ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே. 149 உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய் விழைதரு வேனை விடுதிகண்டாய் விடின் வேலைநஞ்சுண் மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் பழைதரு மாபரன் என்றென்று அறைவன் பழிப்பினையே. 150 பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம் கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே. 151 தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழல்அரப்பூண் வீரஎன் தன்னை விடுதிகண்டாய் விடில்என்னைமிக்கார் ஆரடி யான்என்னின் உத்தரகோச மங்கைக்கரசின் சீரடி யாரடி யான்என்று நின்னைச் சிரிப்பிப்பனே. 152 சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற் கென்று விரப்பிப்பன் என்னை விடுதிகண்டாய் விடின் வெங்கரியின் உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்சு ஊண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சன் என்றேசுவனே. 153 ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என்பிழைக்கே குழைந்து வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின் தேசுடை யாய்என்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக் காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே. 154 திருச்சிற்றம்பலம் 7. திருவெம்பாவை (சத்தியை வியந்தது)
திருவண்ணாமலையில் அருளியது
(வெண்டளையான் வந்த இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா) திருச்சிற்றம்பலம் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155 பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 156 முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்துஎன் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 157 ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ எண்ணிக்கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 158 மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று) ஓலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 159 மானே நீ நென்னலை நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 160 அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர் உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய் என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லோமும் சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 161 கோழி சிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம் இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவாய். 163 பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன் கோதில் குலத்தரன் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள் ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். 164 மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக் கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற் செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல் மையர் தடங்கண் மடந்தை மணவாளா ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந் தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 165 ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும் தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 166 பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 168 ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும் ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 169 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின் மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 170 செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் கொங்குஉண் சுருங்குழலி நம்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 171 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 172 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்குஎழில்என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 173 போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 174 திருச்சிற்றம்பலம்
8. திரு அம்மானை (ஆனந்தக் களிப்பு)
திருவண்ணாமலையில் அருளியது
(வெண்டளையான் வந்த ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா) திருச்சிற்றம்பலம் செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 175 பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலுங் காண்டற்கு அரியான் எமக்கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 176 இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான் பந்தம் பறியப் பரிமேற்கொண்டான்தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 177 வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கான்நின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 178 கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் தில்லை நகர்புக்குச் சிற்றம் பலமன்னும் ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 179 கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டி நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த ஆள்தான்கொண்டு ஆண்டவா பாடுதுங்காண் அம்மானாய். 180 ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத் தாயான தத்துவனைத் தானே உலகேழும் ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய். 181 பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 182 துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான் அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே பழவடியார்க்கு ஈந்தருளும் அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 183 விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப் பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 184 செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான் அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பர் சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய். 185 மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும் எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய் எப்பொருட்கும் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருளாம் நம்சிவனைப் பாடுதுங்கான் அம்மானாய். 186 கையார் வளைசிலம்பக் காதார் குழையாட மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச் செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். 187 ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந்து எய்த் தேனை ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும் வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 188 சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில் இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 189 ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோ ரறியா வழியெமக்குத் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். 190 சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். 191 கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத் தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில் எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால் ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய். 192 முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின் மன்னானை வானவனை மாதுஇயலும் பாதியனைத் தென்னானைக் காவானைத் தெண்பாண்டி நாட்டானை என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய். 193 பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 194 திருச்சிற்றம்பலம் 9. திருப்பொற் சுண்ணம் (ஆனந்த மனோலயம்)
தில்லையில் அருளியது
(அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் முத்துநல் தாழம்பூ மாலை தூக்கி முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின் சக்தியும் சோமி யும்பார் மகளும் நாமகளோடுபல்லாண்டி சைமின் சித்தியுங் கௌரியும் பார்ப் பதியும் கங்கையும் வந்து கவரி கொண்மின் அத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. 195 பூவியல் வார்சடை எம்பி ராற்குப் பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறம்நிலாமே குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன் தேவியும் தானும்வந்தெம்மையாளச் செம்பொன்செய் சுண்ணம் இடித்தும்நாமே. 196 சுந்தர நீறணிந் தும்மெழுகித் தூயபொன்சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன்அயன் தன்பெருமான் ஆழியான் நாதன்நல் வேலன்தாதை எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்கு ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 197 காசணி மின்கள் உலக்கை யெல்லாம் காம்பணி மின்கள் கறையுரலை நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தித் தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித் திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாசவினையைப் பறித்துநின்று பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 198 அறுகுஎடுப்பார் அயனும்அரியும் அன்றிமற்றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்கணங்க ளெல்லாம் நம்மிற்பின்பு அல்லதெடுக்க வொட்டோம் செறிவுடை மும்மதில் எய்தவில்லி திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்கு ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 199 உலக்கை பலஓச்சு வார்பெரியர் உலகமெலாம்உரல் போதாதென்றே கலக்க அடியவர் வந்துநின்றார் காண உலகங்கள் போதாதென்றே நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழந்து பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 200 சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத் தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் பாடகம் மெல்லடி யார்க்கு மங்கை பங்கினன் எங்கள் பராபரனுக்கு ஆடக மாமலை அன்ன கோவுக்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 201 வாள்தடங் கண்மட மங்கை நல்லீர் வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத் தோள்திரு முண்டந் துதைந்தி லங்கச் சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற் கடைப்பட்ட நம்மைஇம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202 வையகம் எல்லாம் உரலதாக மாமேரு என்னும் உலக்கை நாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி மேதரு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப் பாடிச் செம்பொன் உலக்கை வலக்கை பற்றி ஐயன் அணிதில்லை வாண னுக்கே ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 203 முத்தணி கொங்கைகள் ஆட ஆட மொய்குழல் வண்டினம் ஆட ஆடச் சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச் செங்கயற் கண்பனி ஆட ஆடப் பித்தெம் பிரானொடும் ஆட ஆடப் பிறவி பிறரொடும் ஆட ஆட அத்தன் கருணையொ டாட ஆட ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 204 மாடு நகைவாள் நிலா எறிப்ப வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும் பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித் தேடுமின் எம்பெருமானைத் தேடிச் சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக்கு ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 205 மையமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன் தன்னை ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோள் பையர வல்குல் மடந்தை நல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 206 மின்னிடைச் செந்துவர் வாய்க் கருங்கண் வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் என்னுடை ஆரமு தெங்களப்பன் எம்பெருமான் இம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர் பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 207 சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத் தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாயிதழுந் துடிப்பச் சேயிழை யீர் சிவலோகம் பாடிக் கங்கை இரைப்ப அராஇரைக்கும் கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப் பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 208 ஞானக் கரும்பின் தெளியைப் பாகை நாடற்கு அரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச் சித்தம் புகுந்துதித் திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப் பானல் தடங்கண் மடந்தை நல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 209 ஆவகை நாமும் வந்தன்பர் தம்மோடு ஆட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர் கனாவிலுங் கண்டறியாச் செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான் சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச் செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே. 210 தேனக மாமலர்க் கொன்றை பாடிச் சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளை பாடி மால்விடை பாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் சூலம்பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப் பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 211 அயன்தலை கொண்டுசெண்டாடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல்பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக் காலனைக் காலால் உதைத்தல்பாடி இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 212 வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி மத்தமும் பாடி மதியம்பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச் சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக் கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் இட்டுநின் றாடும் அரவம்பாடி ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே. 213 வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் சோதியு மாய் இருள் ஆயினார்க்குத் துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப் பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப் பந்தமு மாய் வீடும் ஆயினாருக்கு ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 214 திருச்சிற்றம்பலம்
|