உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
எட்டாம் திருமுறை மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் ... தொடர்ச்சி - 5 ... 19. திருத்தசாங்கம் (அடிமை கொண்ட முறைமை)
தில்லையில் அருளியது
(நேரிசை வெண்பா) திருச்சிற்றம்பலம் ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன் செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் என்று. 358 ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும் நாதன்நமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும் தென்பாண்டி நாடே தெளி. 359 தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் மாதாடும் பாகத்தன் வாழ்பதிஎன் - கோதாட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும் உத்தர கோசமங்கை யூர். 360 செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநம் சிந்தைசேர் ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய் வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் காண்உடையான் ஆறு. 361 கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன் மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து. 362 இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும் தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ஏத்திசைப்ப வான்புரவி யூரும் மகிழ்ந்து. 363 கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன் மாற்றாறை வெல்லும் படைபகராய் - ஏற்றார் அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயும் கழுக்கடைகாண் கைக்கொள் படை. 364 இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன் முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பால் பிறவிப் பகைகலங்கப் பேரின்பத்து ஓங்கும் பருமிக்க நாதப் பறை. 365 ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த்தார்என் - தீயவினை நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான் தாளிஅறு காம் உவந்த தார். 366 சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும் ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும் கோதிலா ஏறாம் கொடி. 367 திருச்சிற்றம்பலம்
20. திருப்பள்ளியெழுச்சி (திரோதான சுத்தி)
திருப்பெருந்துறையில் அருளியது
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறை உறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எமை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 368 அருணண்இந் திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் கடிமலர் மலரமற்று அண்ணல்அங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி எழுந்தருளாயே. 369 கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே. 370 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 371 பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 372 பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின்றார் அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 373 அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 374 முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின் அடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே. 375 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெருமான்பள்ளி எழுந்தரு ளாயே. 376 புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 377 திருச்சிற்றம்பலம் 21. கோயில் மூத்த திருப்பதிகம் (அநாதியாகிய சற்காரியம்)
தில்லையில் அருளியது
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. 378 முன்னின் றாண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப் பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே என்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில் அடியார் உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே. 379 உகந்தானே அன்புடை அடிமைக் குருகா உள்ளத் துணர்விலியேன் சகந்தான் அறிய முறையிட்டால் தக்கவாறன் றென்னாரோ மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன் முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 380 முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும் வழிமுதலேநின் பழவடி யார் திரள்வான் குழுமிக் கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்குங்கொல்லோ என்று அழுமதுவேயன் றிமற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே. 381 அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன் கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால் பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ. 382 ஏசா நிற்பர் என்னை உனக்கு அடியான் என்று பிறரெல்லாம் பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே தேசா நேசர் சூழ்ந்திருக்கும் திருவோ லக்கம் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே. 383 இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந்திருப்பேனை அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும் மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென்றருளாயே. 384 அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பர் ஆர்இங்குப் பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து வேனை வாவென்றுன் தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ. 385 சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டுதிரண்டுன் திருவார்த்தை விரப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம் தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே தரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே. 386 நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம் பிதற்றி நயனநீர் மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப் பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே. 387 திருச்சிற்றம்பலம் 22. கோயில் திருப்பதிகம் (அநுபோக இலக்கணம்)
தில்லையில் அருளியது
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் மாறிநின் றென்னை மயங்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே. 388 அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க்கசிந் துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் யான்இதற் கிலனொர் கைம்மாறு முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே தென்பெருந் துறையாய் சிவபெரு மானே சீருடைச் சிவபுரத் தரைசே. 389 அரைசனே அன்பர்க்கு அடியனே னுடைய அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப் பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே திருப்பெருந் துறையுறை சிவனே உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 390 உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார் உணர்வுக்கும் தெரிவரும் பொருளே இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப்பிறப் பறுக்கும் எம்மருந்தே திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே திருப்பெருந் துறையுறை சிவனே குணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே. 391 குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந் துறையுறை சிவனே இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுன்னை என்னிரக் கேனே. 392 இரந்திரந் துருக என்மனத் துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால் ஆய் அவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே. 393 இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளக் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிது மற்றின்மை சென்றுசென்றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம் திருப்பெருந்துறையுறை சிவனே ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறியகிற்பாரே. 394 பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே நீருறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின்னருள் வெள்ளச் சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே திருப்பெருந் துறையுறை சிவனே யாருறவு எனக்கிங்கு ஆர் அய லுள்ளார் ஆனந்தம் ஆக்குமென் சோதி. 395 சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட் குன்றே திருப்பெருந் துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய் வந்துநின் இணையடி தந்தே. 396 தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந் துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான் இதற் கிலன்ஓர் கைம்மாறே. 397 திருச்சிற்றம்பலம் 23. செத்திலாப்பத்து (சிவானந்தம் அளவறுக் கொணாமை)
திருப்பெருந்துறையில் அருளியது
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமு தூறும் புதும லர்க்கழ லிணையடி பிரிந்தும் கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன் ஐயனே அரனே அருட்பெருங் கடலே அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச் செய்யமே னியனே செய்வகை அறியேன் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 398 புற்று மாய்மர மாய்ப்புனல் காலே உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும் வற்றி யாரும் நின்மலரடி காணா மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன் பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச் செற்றிலேன் இன்னுந் திரிதரு கின்றேன் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 399 புலைய னேனையும் பொருளென நினைந்துன் அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத் தலையினால் நடந்தேன் விடைப்பாகா சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம் நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே அடையார்புரம் எரிந்த சிலையனே எனைச் செத்திடப் பணியாய் திருப்பெருந்துறை மேவிய சிவனே. 400 அன்ப ராகிமற்று அருந்தவம் முயல்வார் அயனும் மாலுமற்று அழலுறு மெழுகாம் என்ப ராய்நினை வார் எனைப்பலர் நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய் வன்ப ராய்முரு டொக்கும் என்சிந்தை மரக்கண் என்செவி இரும்பினும் வலிது தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 401 ஆட்டுத் தேவர் தம் விதியொழித் தன்பால் ஐயனே என்றுன் அருள்வழி இருப்பேன் நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே நாதனே உனைப் பிரிவுறா அருளைக் காட்டித் தேவநின் கழலிணை காட்டிக் காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய் சேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 402 அறுக்கிலேன் உடல் துணிபடத் தீப்புக்கு ஆர்கிலேன் திருவருள் வகைஅறியேன் பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன் போற்றி போற்றிஎன் போர்விடைப் பாகா இறக்கிலேன் உனைப் பிரிந்தினி திருக்க என்செய் கேன்இது செய்க என்றருளாய் சிறக்கணே புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 403 மாய னேமறி கடல்விடம் உண்ட வான வாமணி கண்டத்தெம் அமுதே நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சி வாயஎன் றுன்னடி பணியாப் பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய் பிறைகுலாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ சேய னாகிநின் றலறுவ தழகோ திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 404 போது சேரயன் பொருகடற் கிடந்தோன் புரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக் கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக் குறிக்கொள் கென்றுநின் தொண்டரிற் கூட்டாய் யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப் படுவதும் இனிதோ சீத வார்புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 405 ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய் காலன் ஆர்உயிர்கொண்டபூங் கழலாய் கங்கை யாய் அங்கி தங்கிய கையாய் மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே மரக்க ணேனையும் வந்திடப் பணியாய் சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 406 அளித்து வந்தெனக்கு ஆவஎன் றருளி அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில் திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே வளைக்கை யானொடு மலரவன் அறியா வான வாமலை மாதொரு பாகா களிப்பெலாம் மிகக் கலங்கிடு கின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே. 407 திருச்சிற்றம்பலம்
24. அடைக்கலப்பத்து (பக்குவ நிர்ணயம்)
திருப்பெருந்துறையில் அருளியது
(கலவைப் பாட்டு) திருச்சிற்றம்பலம் செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந் தமைந்த பழுத்தமனத் தடியர்உடன் போயினர் யான் பாவியேன் புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானமிலா அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே. 408 வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினாற் பொறுப்பவனே அராப் பூண்பவ னேபொங்கு கங்கைசடைச் செறுப்பவனே நின்திருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. 409 பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 410 பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புணைகொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச் சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 411 சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு இருள்புரி யாக்கையிலேகிடந் தெய்த்தனன் மைத்தடங்கண் வெருள்புரிமான்அன்ன நோக்கிதன் பங்கவிண்ணோர்பெருமான் அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 412 மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள் வாழிஎப் போதுவந்து எந்நாள் வணங்குவன் வல்வினையேன் ஆழியப் பாஉடை யாய் அடியேன் உன் அடைக்கலமே. 413 மின்கணினார் நுடங்கும் இடையர் வெகுளிவலையில் அகப்பட்டுப் புன்கண னாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி என்கணிலே அமுதூறித்தித் தித்தென் பிழைக்கிரங்கும் அங்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 414 மாவடு வகிரன்ன கண்ணி பங்காநின் மலரடிக்கே கூவிடுவாய் கும்பிக்கே யிடுவாய் நின் குறிப்பறியேன் பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்தஉள்ளம் ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 415 பிறிவறியா அன்பர்நின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவறியாச் செல்வம் வந்து பெற்றர் உன்னை வந்திப்பதோர் நெறியறி யேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் அறிவறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 416 வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என்விதியின்மையால் தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய் அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 417 திருச்சிற்றம்பலம்
25. ஆசைப்பத்து (ஆத்தும இலக்கணம்)
திருப்பெருந்துறையில் அருளியது
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் கருடக் கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடிஎன்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ இருளைத் துரந்திட் டிங்கே வா என்றங்கே கூவும் அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 418 மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னா ரமுதேயோ அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 419 சீவர்ந்து ஈமொய்த் தழுக்கொடு திரயுஞ் சிறுகுடில் இது சிதையக் கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி ஆவா என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 420 மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம் தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம் எம்பெருமானே உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம் அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 421 அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னா ரமுதேயோ அளியன் என்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. 422 எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 423 பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதி வாராய் வாரா உலகந் தந்து வந்தாட் கொள்வோனே போராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த ஆரா அமுதே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. 424 கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு எய்யா தென்றன் தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமானென்று ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 425 செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுர நகர்புக்குக் கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப் படிதா னில்லாப் பரம்பரனே உன் பழஅடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. 426 வெஞ்சே லனைய கண்ணார்தம் வெகுளி வலையில் அகப்பட்டு நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் பஞ்சே ரடியாள் பாகத் தொருவா பவளத் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 427 திருச்சிற்றம்பலம்
26. அதிசயப்பத்து (முத்தி இலக்கணம்)
திருப்பெருந்துறையில் அருளியது
(அறுசீர்க் கழிநெடிலுடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள் திறத்திடை நைவேனை ஒப்பி லாதன உவமனி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 428 நீதியாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன் ஏதமே பிறந் திறந்துழல் வேன்தனை என்னடி யானென்று பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தர மாய் நின்ற ஆதிஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 429 முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப் பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி அதுவைத்த அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 430 பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர் காரணம்இதுகேளீர் ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே செத்துப் போய்அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படு கின்றேனை அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 431 பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன் குரவு வார் குழலார் திறத்தே நின்று குடிகெடு கின்றேனை இரவு நின்றெரி ஆடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 432 எண்ணிலேன் திருநாமஅஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற்கு ஒருப்படு கின்றேனை அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 433 பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின்று இடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 434 நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத் தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத்து எழுதரு சுடர்ச்சோதி ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 435 உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 436 இருள்தி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் இதுஇத்தைப் பொருளெ னக்களித் தருநர கத்திடை விழப்புகு கின்றேனைத் தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே. 437 திருச்சிற்றம்பலம்
27. புணர்ச்சிப்பத்து (அத்துவித இலக்கணம்)
திருப்பெருந்துறையில் அருளியது
(ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை வாளா தொழும்பு கந்து கடைபட் டேனை ஆண்டு கொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன் தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப் புடைபட் டிருப்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 438 ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்தைம் புலனாய சேற்றி லழுந்தாச் சிந்தை செய்து சிவனெம் பெருமான் என்றேத்தி ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஓலமிட்டுப் போற்றி நிற்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 439 நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை ஆண்டுகொண்ட என் ஆரமுதே அள்ளூ றுள்ளத்து அடியார்முன் வேண்டுந் தனையும் வாய்விட் டலறி விரையார் மலர் தூவிப் பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 440 அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர் கோனுஞ் சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறைஇன் அமுதை அமுதின் சுவையைப் புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 441 திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும் திகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்டு ஆவா என்ற நீர்மை யெல்லாம் புகழப் பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 442 பரிந்து வந்து பரமா னந்தம் பண்டே அடியேற் கருள்செய்யப் பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்த அன்பாய்ப் புரிந்து நிற்ப தென்று கொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 443 நினையப் பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத் தனையொப் பாரை இல்லாத தனியை நோக்கித் தழைத்துத் தழுத்த கண்டம் கனையக் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலரால் புனையப் பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 444 நெக்கு நெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப் புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 445 தாதாய் மூவே ழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட பேதாய் பிறவிப் பிணிக்கேர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும் மேதா மணியே என்றென் றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப் போதாய்ந்து அணைவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 446 காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க் கெல்லாம் முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட பார்ப்பா னேஎம் பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப் பூப்போது அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 447 திருச்சிற்றம்பலம் 28. வாழாப்பத்து (முத்தி உபாயம்)
திருப்பெருந்துறையில் அருளியது
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள் புரியாயே. 448 வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந் துலகம் ஊடுருவுஞ் செம்பெருமானே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே எம்பெரு மானே எனனையாள் வானே என்னைநீ கூவிக் கொண் டருளே. 449 பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீ ஆண்டாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே ஊடுவ துனனோடு உவப்பதும் உன்னை உணர்த்துவது உனக்கெனக்கு உறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 450 வல்லைவா ளரக்கர் புரமெரித் தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே எல்லை மூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆதியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 451 பண்ணினேர் மொழியாள் பங்கநீ அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந் துறையுறை சிவனே எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றிவை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 452 பஞ்சின்மெல் லடியாள் பங்கநீ அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 453 பரிதிவாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுயர் கோலச் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 454 பந்தணை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே அந்தமில் அமுதே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை வந்துய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 455 பாவநா சாஉன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர் தந்தேவே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழ லாய் நிமிர்ந் தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 456 பழுதில்தொல் புகழாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறைச் சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 457 திருச்சிற்றம்பலம் |