உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
வெள்ளை மாளிகையில் 1 வெள்ளை மாளிகை சென்றிடலாம் வருகின்றாயா? ஆமாம்! அமெரிக்க அரசு அதிபர் கொலுவிருக்கும் அழகு மணிமாடம்தான். அங்கா? நாமா? என்று மலைக்காதே! நாம் யார்? மனிதரில்லையா!! மனிதருக்காக அமைவதுதானே மாடம் கூடம் மணிமண்டபம் மாளிகை என்பவை யாவும்; மாளிகையின் நிறமும் பெயரும் எதுவாக இருந்தால் என்ன - வெள்ளை - சிவப்பு - பச்சை - நீலம் - இவை பல்வேறு வகையான வண்ணங்கள், வேறென்ன? அமெரிக்க அதிபர் வீற்றிருக்கும் மாளிகைக்கு 'வெள்ளை மாளிகை' என்று பெயர் இருப்பதாலேயே, மாநிறக்காரர் நுழையக்கூடாதா என்ன! மேலும், நான் வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லுவது, அதனை மனக்கண்ணால் காண்பதற்காகத்தான். நாம் மாநிறம்! ஆனால், நான் உன்னைக் காண அழைக்கும் வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர் அரசோச்சுகிறார். எனக்குள்ள ஆசை அந்த வெள்ளை மாளிகையைக் காண்பதிலே கூட அவ்வளவு இல்லை; அங்கு ஒரு கருப்பு மனிதர் ஆட்சி செய்வதைக் காண்பதிலேதான். வெள்ளை மாளிகையில் ஓர் கருப்பு மனிதர்! - என்று நான் கூறுகிறேன், ஆனால், தம்பி! அந்த ஏட்டுக்கு உள்ள தலைப்பு அது அல்ல; மனிதன் என்பதே தலைப்பு. நிறம், வடிவம், நாடு, மதம், மொழி, நிலை, எப்படி எப்படி இருந்திடினும், மனிதன் மனிதன் தானே! அந்த உயர்ந்த பண்பினை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் தமது ஏட்டுக்கு மனிதன் என்ற தலைப்பிட்டுள்ளார். அந்த 'மனிதனை'க் காண்பதற்காகவே, உன்னை வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறேன்; அங்கு யாராரோ இருந்தனர்; ஆனால், மனிதன் கொலுவிருக்கும் மாளிகையாக இருந்திடும் நிலையை இந்த 'ஏடு' மூலமே காணமுடியும். கண்டேன், களிப்புற்றேன்; எண்ண எண்ண இனித்திடும் கருத்துண்டேன்; அந்தச் சுவையை நான், தம்பி! உன்னுடனன்றி வேறு எவருடன் கலந்துண்பதிலே மகிழ்ச்சி பெற்றிடுவேன். அதனால் உன்னிடம் கூறுகிறேன்; மேலும் உன்னிடம் கூறுவதென்பது உயர் கருத்துகளின் பெட்டகம் போன்ற மனம் படைத்த இலட்சியவாதியிடம் கூறுவதென்றல்லவா பொருள் படுகிறது; அதனால் கூறுகிறேன். இப்போது அந்த வெள்ளை மாளிகையில் அமர்ந்து அரசோச்சுபவர் லிண்டன் ஜான்சன்; அறிவாய். அவர் சென்ற திங்கள் பெருமிதத்துடன் பேருரையாற்றி இருக்கிறார், உலகிலேயே நமது நாடுதான் செல்வம் மிகுதியாக உள்ள நாடு என்று; பழக்கப்பட்ட 'பாஷை' விரும்புவோருக்காகச் சொல்லுகிறேன். 'குபேரபுரி'. அந்தக் 'குபேரபுரி'யின் அதிபராகக் கொலுவிருக்கும் ஜான்சன், இப்போது உள்ளது போன்ற வளம் - செல்வப் பெருக்கம் - இதற்கு முன்பு எப்போதும் இருந்ததில்லை - அந்தச் செல்வம் மேலும் மேலும் வளருகிறது, "நமது நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பூந்தோட்டமாக்கிடத்தக்க அளவு மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே, மணம் வீசும் வாழ்வு மலரச் செய்திடத் தக்க அளவுக்கு" என்று பூரிப்புடன் பேசியிருக்கிறார். இப்போதே, தம்பி! அந்த அமெரிக்கப் பணம் நடமாடாத நாடு இல்லை என்று கூறலாம்; அந்த நாட்டை நாடாத தலைவர்கள் இல்லை என்று சொல்லலாம். யாரோ ஒரு கணக்குச் சொன்னார்கள், இந்தியாவிலே மக்கள் சாப்பிடும் உணவில் எட்டுக் கவளத்தில் ஒன்று அமெரிக்கா கொடுப்பது என்று. எனவே, ஜான்சன், அமெரிக்காவின் அளவுகடந்த செல்வம் இந்த அவனி முழுவதும் ஆனந்த வாழ்வு மலரச் செய்ய உதவிடும் என்று கூறிக் கொள்ள உரிமை பெற்றிருக்கிறார். அமெரிக்காவை எதிர்பார்த்துத்தானா நம் வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டிய கடமை, கையேந்துபவர்களுக்கு இருக்கிறது. அது ஒரு தனிப் பிரச்சினை. இப்போது ஜான்சன் கூறியிருப்பதிலே நாம் கவனித்துப் பார்க்க வேண்டிய பகுதி அமெரிக்காவில் இன்றுள்ள செல்வ மிகுதி. அது மறுக்க முடியாத உண்மை. பணத்திலே புரளுகிறார்கள் என்று கதைகளிலே எழுதுகிறார்களே, அது மெய்யான நிலைமையாக இருக்கிறது அமெரிக்காவில். ஒரு கணக்குக் காட்டுகிறேன். பார்த்துத் தெரிந்து கொள்ளேன், நிலைமையை. இன்று அமெரிக்காவில் உள்ள மோட்டார் கார்களின் எண்ணிக்கை 690 இலட்சம்! டெலிபோன்கள் 890 இலட்சம்! டெலிவிஷன் செட்டுகள் 600 இலட்சம்! உல்லாசப் படகுகள் 70 இலட்சம்! அமெரிக்க மக்கள் ஆண்டொன்றுக்கு இப்போது செலவிடும் பணம் இருக்கிறதே, வாழ்க்கை நடத்த, உல்லாசம் பெற, எவ்வளவு தொகை தெரியுமா, தம்பி! எச்சரிக்கையாக இரு. மயக்கம் வந்துவிடப் போகிறது, அவர்கள் செலவிடும் பணம் ரூபாய் 1985500000000! இவ்வளவு ரூபாய்கள் செலவிடுகிறார்கள் ஒரே வருடத்தில். பணத்திலே புரள்கிறார்கள் என்று ஏன் சொல்லக்கூடாது! தம்பி! ஓய்வு நாட்கள் உள்ளனவே. இயற்கை அழகு காண, செயற்கைச் சேட்டைகளைச் சுவைக்க, மலையுச்சி ஏற, கடலிலே குடைந்தாட, இவ்விதமான இன்பப் பொழுதுபோக்கு, இதற்கு மட்டும் இந்த ஆண்டு அமெரிக்க மக்கள் செலவிடும் தொகை 14,250 கோடி ரூபாயாம்! கேட்டனையா! செயற்கை நீச்சல் குளங்கள் மட்டும் சென்ற ஆண்டு புதிதாக 50,000 அமைத்திருக்கிறார்களாமே! பணம் இந்த அளவு புரளும்போது, என்னென்ன சாமான்கள்தான் அவர்கள் வாங்கமாட்டார்கள்! இங்கு நமக்கிருக்கிற தரித்திர நிலை, மகன் சட்டை தைத்தால் தகப்பன் மேல் வேட்டியை ஒட்டுப்போட்டுப் போட்டுக் கொள்ளும் நிலையையும், மகளுக்குச் சேலை வாங்கினால் தாய் சாயம் போனதைத் துவைத்துக் கட்டிக் கொள்ள வேண்டிய நிலையையும் மூட்டிவிடுகிறது. அங்கே பணம் படுத்துகிறபாடு, என்ன வாங்கலாம், எவ்வளவு வாங்கலாம் என்ற மன அரிப்பைத் தருகிறது. பண்டங்களை விற்பனை செய்பவர்கள், தத்தமது சரக்குகளை வாங்கும்படி மக்களைத் தூண்டிட விளம்பரம் செய்கிறார்கள். அந்த விளம்பரச் செலவுக்காக மட்டும் வணிகர்கள் செலவிடும் தொகை, ஒரு ஆண்டுக்கு 6850 கோடி ரூபாயாம். இதைப் போல முன்பு ஒருமுறை பணம் புரண்டது. உச்சிக்குச் சென்று உருண்டு கீழே விழுவதுபோல, அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது; அது 1929-ல் என்று எச்சரிக்கை தந்துள்ளனர் சிலர். ஆனால், பல பொருளாதார நிபுணர்கள் அவ்விதமான பயத்துக்குத் துளியும் ஆதாரம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். இதுபற்றிக் கருத்து வேற்றுமை இருப்பினும், இன்றைய செல்வப் பெருக்கம் பற்றி மட்டும் யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அத்தகையை அமெரிக்க நாட்டின் ஆட்சி பீடம் அமைந்துள்ள இடம் வெள்ளை மாளிகை! ஆட்சிப் பீடம் உள்ள இடத்துக்குத்தான் வெள்ளை மாளிகை என்று பெயர் இருக்கிறது. ஆனால், அந்த ஆட்சியிலே உள்ளவர்கள் அனைவரின் நிறமும் வெள்ளையல்ல; கருநிறம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்; நீக்ரோ மக்கள். நிறம் கருப்பு, இனம் நீக்ரோ, பூர்வீகம் ஆப்பிரிக்கா கண்டம்; ஆனால், அவர்கள் அமெரிக்கர்கள்; சட்டம் சொல்லுகிறது; ஆபிரகாம் லிங்கன் அவர்களும் அமெரிக்கர்களே என்று வார்த்தைகளை வீசி மட்டுமல்ல ஒரு பெரிய பயங்கரமான உள்நாட்டுப் போர் நடாத்தியே கூறிட வேண்டி நேரிட்டது. "சரி" என்றனர்; உதடு அசைந்தது தம்பி! உதடு! உள்ளம் இருக்கிறதே அதிலே புற்றரவு புகுந்து கொண்டுதான் இருக்கிறது, சாகவில்லை; சாகடிக்கவும் முடியவில்லை. அதனைச் சாகடிக்கத் துணிந்து கிளம்பிய கென்னடியைக் கொடியோர் கொன்று விட்டனர், பதறப் பதற; பக்கம் இருந்த அவர் துணைவியார் ஜாக்குலீன் துடிக்கத் துடிக்க. இறவாப் புகழ் பெற்றுவிட்ட கென்னடி இதே வெள்ளை மாளிகையிலேதான் தங்கி ஆட்சி நடாத்தி வந்தார். அந்த வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதரை - நீக்ரோவை - அதிபராக அமரச் செய்து பார்க்கிறார் 'மனிதன்' எனும் ஏடு எழுதியுள்ள இர்வின் வாலாஸ் என்பவர். அந்தப் புத்தகத்தைப் படித்ததிலிருந்து எனக்கு ஒரே ஆவல், உன்னிடம் கூற வேண்டும் என்று. ஆனால், அந்த ஏட்டிலே கூறப்பட்டுள்ள கருத்தின் முழுப் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், 'கருப்பு மனிதர்கள்', வெள்ளை மாளிகை உள்ள நாட்டில் எப்படி நடத்தப்பட்டு வந்தார்கள், எப்படி நடத்தப்பட்டு வருகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொண்டாக வேண்டும். 'நீக்ரோ'க்களின் பிரச்சினையின் வேதனை நிரம்பிய உண்மைகளை உணர்ந்தால் மட்டுமே, இர்விங் வாலஸ் தீட்டியுள்ள காவியம் போன்ற ஏட்டின் கருத்து பயனளிக்கும், பொருள் விளங்கும். வெள்ளைப் புலி என்பது விளங்க வேண்டுமானால், புலியைப் பற்றியும் வெள்ளை நிறம் பற்றியும் புரிந்திருக்க வேண்டுமல்லவா? தில்லைத் தீட்சிதர் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார் என்று பிரான்சு நாட்டிலே உள்ளவரிடம் சொன்னால் முழுப் பொருள் விளங்குமா? தீண்டாமைக் கொடுமையின் கேடுகளையும், தில்லை தீட்சிதர் என்ற முறையின் தன்மையையும், காலவேகம் இந்த இரண்டு நிலைமைகளையும் மாற்றி விட்டிருப்பதனையும் அறிந்தவர்கள் மட்டுமே தில்லைத் தீட்சிதர் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்தார் என்ற வாசகத்தின் முழுப் பொருளையும் உணர முடியும். அது போலத்தான் 'மனிதன்' எனும் அந்த ஏட்டிலே உள்ளவற்றினை முழு அளவில் உணர வேண்டுமானால், அந்த ஏட்டிலே இல்லாத வேறு பல ஏடுகளிலே உள்ள பல உண்மைகளையும் நிலைமைகளையும் கூறியாக வேண்டும். ஆகவே, தம்பி! இந்த ஏடு என்னை உன்னிடம் வேறு பல ஏடுகளைப் பற்றிய நினைவுகளையும் கூறிடச் செய்கிறது. ஒரு நல்ல உயிருள்ள ஏட்டுக்கு இதுவே சிறந்த இலக்கணம் என்று கூடக் கூறலாம். 'டாம் மாமாவின் விடுதி' என்று ஒரு ஏடு, நீக்ரோ பிரச்சினையை உருக்கத்துடன் எடுத்துக் கூறுவது. அது 'அந்த நாட்களில்' புரட்சி ஏடு! இன்றுள்ள அமெரிக்க நீக்ரோக்கள், 'டாம் மாமா' என்றால் சண்டைக்கு வருவார்கள்! அந்த ஏட்டின் கருத்து நீக்ரோக்களுக்கு விடுதலை வாங்கித் தராது; அது அடிமை வாழ்க்கைக்கு ஒரு அலங்கார மெருகேற்றும் தந்திரத் திட்டம் என்று கூறுகிறார்கள். எந்த அளவுக்கு மனம் வெதும்பிக் கிடக்கிறது; ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பி விட்டிருக்கிறது என்றால், வெள்ளையர் எங்களைச் சம உரிமையுடன் நடத்தவே மாட்டார்கள்; எனவே, எமக்கென்று அமெரிக்காவில் ஒரு தனி நாடு அமைத்துக் கொடுத்திடுக! என்று கேட்கின்ற அளவுக்கு சென்றிருக்கிறது. இன்னும் சிலர், நாங்கள் அமெரிக்காவில் இருக்கிறோம், ஆனால், அமெரிக்கர் அல்ல, அமெரிக்கர் ஆகவும் முடியாது; தேவையுமில்லை; நாங்கள் நீக்ரோக்கள்; எங்கள் தாயகம் ஆப்பிரிக்கா; நாங்கள் அங்குச் சென்று, 'எங்கள் இரத்தத்தின் இரத்தமாக உள்ள நீக்ரோ இனத்தாருடன் சேர்ந்து வாழ்ந்து கொள்கிறோம். இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் போதும்' என்று கேட்கத் தலைப்பட்டு விட்டனர். இத்தகைய நிலைமை இருந்திடுவது உணரப்பட்டால்தான், வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதர் என்பதன் பொருள் விளங்கும். அமெரிக்க அரசு, நீக்ரோக்களில் தகுதி மிகுந்த சிலருக்கு உயர் பதவி கொடுத்திருக்கிறது. கீர்த்தி மிக்க வழக்கறிஞர்கள், கை தேர்ந்த மருத்துவர்கள், வளமான வாழ்க்கை நடாத்தும் வணிகர்கள் நீக்ரோக்களில் இருக்கிறார்கள். அதுபோலவே அரசாங்க அலுவலிலும் திறமை மிக்க அதிகாரிகளாகச் சில நீக்ரோக்கள் இருக்கிறார்கள். சென்ற திங்கள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜான்சன், அமைச்சரவையிலேயே ஒரு நீக்ரோவுக்கு இடம் கொடுத்திருக்கிறார். இந்தச் சம்பவங்கள் உலகத்தாருக்கு, பாராட்டுதலுக்குரியதாக, வாழ்த்தி வரவேற்கத்தக்கதாகத் தென்படுவதற்குக் காரணம், இவை கோபுரக் கலசங்கள் போலப் பளபளப்பாகத் தெரிபவை; உலகின் கண்களுக்குச் சரியான அளவிலே தெரியாமல் உள்ள, அமெரிக்கக் கருப்பர்களின் பொதுவான வாழ்க்கையிலே ஏற்றப்பட்டிருக்கும் இழிவுகள், சிறுமைகள், கொடுமைகள், இன்னல்கள் மலைபோல உள்ளன. இத்தகைய நிலையிலே உள்ள கருப்பர்களிலே சிலர், டாக்டர்களாவதும், வழக்கறிஞராவதும், அரசாங்க அதிகாரிகளாவதும், அமைச்சர் அவையிலே இடம் பெறுவதும், நடைபெறக் கூடாதன நடந்து விட்டன என்ற பட்டியலைச் சேர்ந்தவை; மலடி வயிற்று மகன்! புதையல் எடுத்த தனம்! அமைச்சர் அவையிலே இடம் பெற்றுவிடுவதே 'அதிசயம்' 'அதிர்ச்சிதரத்தக்க மாறுதல்' என்று கருதப்படுகிறது என்றால், ஒரு 'கருப்பு மனிதர்' வெள்ளை மாளிகையில், ஆட்சித் தலைவராகவே அமருவது என்றால், வெள்ளை வெறியர்களின் மனம் எரிமலையாகி வெடித்து ஆத்திரக் குழம்பினை அல்லவா கக்கிடச் செய்திடும். துணிந்து, ஆனால் தூயநோக்கத்தோடு, நூலாசிரியர் கருப்பு மனிதரை வெள்ளை மாளிகையில் அதிபராக அமரும்படி தம் கற்பனைக்குக் கட்டளையிட்டாரே தவிர, அவருக்கே கூட, அதிக தூரம் கற்பனையை ஓடவிடக் கூடாது, நம்பவே முடியாதது இது என்று படித்திடுவோர் கருதிவிடத்தக்க விதமாகக் கதை அமைந்து விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, வெள்ளை மாளிகையில் ஆட்சி அதிபராக அமரும்படி, அமெரிக்க மக்கள், நிறவெறியற்று, நிறபேதம் பார்க்காமல் ஒரு கருப்பரை, குடிஅரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்று எழுதவில்லை; எதிர்பாராத சில நிகழ்ச்சிகளால், ஒரு கருப்பர், வெள்ளை மாளிகையில் குடியரசுத் தலைவராக அமர வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற அளவிலேயே தமது கற்பனையை நிறுத்திக் கொண்டார். கற்பனை வளம் குறைவாக உள்ளவர்கள், ஒரு கருப்பர் வெள்ளை மாளிகையில் அதிபராக அமர்ந்தது போன்ற கனவு கண்டார்; அந்தக் கனவில்... என்று எழுதியிருந்திருப்பார்கள். இர்விங் வாலஸ் நல்ல கற்பனைச் செறிவு இருப்பதால், நடந்திருக்கக் கூடும் என்று அனைவரும் ஒப்புக்கொள்ளத்தக்க விதமான ஒரு நிகழ்ச்சிச் சூழ்நிலையைக் காட்டி, வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதரை இருந்திடச் செய்திருக்கிறார். தம்பி! அமெரிக்காவிலேயே இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் நிறம் கருப்பு என்பதால், அவர்களை ஓட்டல்களில் - படக்காட்சிக் கொட்டகைகளில் - கல்விக்கூடங்களில் - மருத்துவமனைகளில் - பிரித்து வைக்கிறார்கள்; இத்தனைக்கும் இப்படிச் செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. நீக்ரோக்களுக்குக் கல்விக்கூடங்களில் வெள்ளையருடன் சேர்ந்து படிக்கச் சட்டம் உரிமை அளிக்கிறது; ஆனால் நிறவெறி தடுக்கிறது; போலீஸ் துணையுடன் மட்டுமே கருப்பு மாணவர்கள் அந்தக் கல்விக்கூடங்கள் செல்ல முடிகிறது. அங்குத் தரப்படும் பாடமோ "அனைவரும் சமம்" என்பது. எத்தனை போலித்தனமான நடவடிக்கை! எத்தனை காலமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது! தலைமுறை தலைமுறையாக இந்தக் கொடுமையை அனுபவித்துக் கொண்டு வரும் நீக்ரோ மக்கள், வெள்ளையரிடம் எப்படித்தான் 'நட்புறவு' காட்ட முடியும்! பெரும்பாலும் முடிவதில்லை; காட்டப்படும் 'நட்புறவில்' பெருமளவு 'நடிப்பாக'வே இருந்து வருகிறது, வேறு எப்படி இருக்க முடியும்? அன்புரை, அறிவுரை, விளக்கவுரை எல்லாம் ஏடுகளிலே நிரப்பித் தந்துள்ளனர்; இப்போதும் தந்தபடி உள்ளனர். அமெரிக்காவில் 'நீக்ரோக்கள்' பற்றி 'முற்போக்காளர்' கூடத் தமது கருத்தினைக் கூறும்போது, அங்கு உள்ள நிறவெறியர்களின் ஆத்திரத்தை அதிக அளவில் கிளறிவிடாத முறையிலே பக்குவமாகவே கூற வேண்டி நேரிட்டது. அதற்கே 'புருவத்தை நெறிப்போரும்' 'புண்படப் பேசுவோரும்' 'தாக்க வருவோரும்' கிளம்புவர். 'நீக்ரோக்கள்' மனித இனத்திலே தாழ்ந்தவர்கள்; அமெரிக்கர்களை விட 'மட்டம்'; அது இயற்கைச் சட்டம், இறைவன் திட்டம் என்று பேசிடுவோர் அறிவாலயங்களென்று கூறப்படும் பல்கலைக் கழகங்களிலே பேராசிரியர்களாக இருந்திடும் நிலை. 'நீக்ரோக்கள்' அமெரிக்கரின் 'உடைமைகள்'. எனவே அவர்களுக்கு மனித உரிமைகள் தரப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியது அல்ல நமது கடமை, சொத்து உரிமைச் சட்டத்தின்படி நடவடிக்கை இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதே நமது கடமை என்று பேசிடும் சட்ட நிபுணர்களைத் தாங்கிக் கொண்ட நாடு அமெரிக்கா. "என் உடைமை! இதனை நான் எதுவும் செய்வேன். கூடத்திலும் வைத்திருப்பேன், குப்பை மேட்டிலும் வீசுவேன், இரவல் கொடுப்பேன் அல்லது இன்னொரு பொருளுக்கு ஈடாக மாற்றிக் கொள்வேன், அல்லது உடைத்தெறிவேன்; என் விருப்பப்படி செய்வேன்; இது என் உடைமை!" என்று வீடு, காடு, மாடு, வண்டி, குதிரை, ஆடு போன்ற உடைமைகள் குறித்துப் பேசும்போது, ஒருவருக்கும் அந்தப் பேச்சு அக்ரமமானது என்று தோன்றுவதில்லையல்லவா? அமெரிக்காவில் - இன்று அல்ல, முன்பு - நீக்ரோக்கள் உயிருள்ள ஜீவன்கள் அல்ல, உரிமைபெற்ற மாந்தர் என்று அல்ல, வெறும் உடைமைகள் என்றே கருதப்பட்டு வந்தது. கர்த்தரின் சம்மதம் இந்த ஏற்பாட்டுக்கு உண்டு என்று உபதேசம் செய்தவர்களும், இது நாம் இயற்றியுள்ள சட்டம் என்று வாதாடி வெற்றி பெற்றவர்களும் இருந்து வந்தது கூட வியப்பல்ல; ஆமாம், நாம் 'ஐயா'வின் 'உடைமை'தான், என்ன செய்யவும் அவருக்கு உரிமை உண்டு என்று நம்பிக் கிடந்திடும் நிலையில் நீக்ரோக்களும் இருந்தனர்! திடுக்கிடச் செய்திடும் வியப்பு இஃதன்றோ? தம்பி! அமெரிக்காவில் அந்த நாட்களிலே இருந்து வந்த முறை பற்றியும், நிலைமை பற்றியும் வெளிவந்துள்ள பல ஏடுகளிலே ஒன்று 'டிரம்' (முரசு) என்ற பெயர் கொண்டது. இதிலே அப்பன், மகன், அவன் மகன் என்று மூன்று தலைமுறையினரின் வாழ்வு விளக்கப்பட்டிருக்கிறது. வாழ்வா அது? இரத்தக் கண்ணீர் விட வேண்டும் அந்த வேதனையை உணரும்போது. 'டிரம்' என்பவன், ஆப்பிரிக்க நீக்ரோ - இளைஞன் - கட்டுடல்! அங்கு அவன் ஒரு அரசாளும் உரிமை பெற்ற மரபினன் கூட. அவனை அடிமை வியாபாரிகள் பிடித்திழுத்துக் கொண்டுபோய் விற்றுவிடுகிறார்கள்; அமெரிக்கப் பண்ணையாருக்கு! அமெரிக்காவில் பருத்தி கரும்புப் பண்ணைகள் அமைத்து பொருள் குவித்தனர் - அங்குப் பாய்ச்சப்பட்டது தண்ணீர் மட்டுமல்ல - நீக்ரோக்களின் இரத்தமும் கண்ணீரும் கூடத்தான். அப்படி ஒரு பண்ணையில் 'டிரம்' பாடுபட்ட சோகக் கதை தானே இது என்று எண்ணுகிறாயா தம்பி! அதுதான் இல்லை. இந்த 'டிரம்' வேலை செய்தது, விந்தையான வேறோர் பண்ணையில்! உற்பத்திப் பண்ணையில்! விளங்கவில்லையா? விளங்காது சுலபத்தில், விளங்கினாலோ வேதனை உணர்ச்சி அடங்க நெடு நேரம் பிடிக்கும். ஆப்பிரிக்காவிலிருந்து நீக்ரோக்களை வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்து அமெரிக்காவில் விற்றுப் பொருள் குவித்து வந்தனர் கொடியவர்கள் - கொடியவர்கள் என்று இப்போது கூறிவிடுகிறோம் - அப்போது அவர்கள் வியாபாரிகள்! கடலிலே வலைவீசி மீன் பிடித்து விற்பதில்லையா, பறவைகளைப் பிடித்து விற்பதில்லை, மான்களையும் காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடிக் கொன்று அந்த இறைச்சியை விற்பதில்லையா, அதுபோலத்தான் அடிமை வாணிபம் அனுமதிக்கப்பட்டு வந்தது. எனவே, அதிலே ஈடுபட்டவர்களைக் கொடியவர் என்று அந்த நாட்களிலே கூறுவதில்லை. விலை கொடுத்து வாங்கிய அடிமை உழைத்து உழைத்து ஓடாகி, உருக்குலைந்து, நோயால் தாக்குண்டு இறந்து போய்விட்டால், பண்ணையார் மறுபடியும் சந்தைக்குச் சென்று வேறு அடிமைகளை விலைக்கு வாங்கிக் கொள்வார். நாளாகவாக இந்த அடிமைகளை ஆப்பிரிக்காவிலே இருந்து கொண்டுவந்து விற்பதற்கு ஆகும் செலவு அதிகமாகிக் கொண்டு வந்தது; புதிதாக அடிமைகளை வாங்க அதிகப்பணம் செலவிட வேண்டி வந்தது. அடிமைகள் உழைத்து உருக்குலைந்து போவதால், நாளாகவாக அவர்களின் வேலைத்திறன் குறையலாயிற்று. தலைமுறைக்குத் தலைமுறை தேய்ந்து கொண்டு வந்தனர். அந்தப் பழைய கட்டுடல், தாக்குப் பிடிக்கும் வலிவு குறைந்து கொண்டே வந்தது. அதிகச் செலவு, வலுவிழந்த நிலை ஆகிய இரண்டையும் கண்ட ஒரு வெள்ளை பண்ணை முதலாளி, புதுத்திட்டம் வகுத்தான். ஆப்பிரிக்காவிலிருந்து புதிது புதிதாக, தொகை தொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக் கொண்டு வருவதை விட அமெரிக்காவிலே இடம்பெற்றுவிட்ட நீக்ரோக்களைக் கொண்டே, உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டால் என்ன? அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களிடையே 'பிறப்பு' அதிகமானால், புதிய புதிய அடிமைகள் கிடைப்பார்களல்லவா என்று எண்ணினான். அதன் விளைவாகத்தான் அந்த ஆசாமி, 'நீக்ரோ உற்பத்திப் பண்ணை' அமைத்தான். கோழிப்பண்ணை, ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணை நடத்துபவர்கள் தரமான ஜோடிகளை இணைத்து, உற்பத்தியின் அளவையும் தரத்தையும் பெருக்குகிறார்கள் அல்லவா, அதுபோல கட்டுடல் படைத்த தரமான நீக்ரோ இளைஞர்களைப் பருத்திக் காடுகளிலே வேலை செய்யச் சொல்லிக் கசக்கிப் பிழிவதை விட, அவர்களுக்கு ஊட்டம் கொடுத்து வளர்த்து, வலிவும் பொலிவும் மிகுதியாகும்படி செய்து, அவர்களை நீக்ரோ பெண்களுடன் உறவு கொள்ளச் செய்து, உற்பத்தியைப் பெருக்குவது என்று திட்டமிட்டான். இதிலே அந்த ஆசாமி தன் திறமை முழுவதையும் செலவிட்டு, நல்ல தரமான நீக்ரோக்களைத் தனது பண்ணையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வந்தான். நீக்ரோ பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடல் பாழாகும்படியான கடினமான வேலை கொடுக்காமல் வலுவளிக்கும் உணவு அளித்துத் தனிவிடுதிகளில் இருந்திடச் செய்து - அது போன்றே கட்டுடல் படைத்த நீக்ரோ வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து அந்த விடுதிகளில் விருந்தினராக இருந்திடச் செய்வது, உறவு பெற்றவள் கருவுற்றதும், அவனை வேறு விடுதிக்குச் சென்றிட உத்தரவிட்டு விடுவது, வேறு விடுதி அந்தச் சமயம் இல்லையென்றால், ஆடவர் பகுதியில், தக்க சமயம் வருகிற வரையில் இருந்திடச் சொல்வது, கருவுற்றவளுக்கு வலிவு குன்றாதிருக்கத்தக்க உணவளித்து வருவது குழந்தை பிறந்ததும், சிறிது காலம் தாயுடன் இருந்திடச் செய்துவிட்டு, பிறகு குழந்தைகள் வளர்ப்பு இடத்திற்கு எடுத்துச் சென்று வளரச் செய்வது! இப்படி ஒரு பண்ணையே நடத்தினான் அந்தப் பாதகன். கணவன் - மனைவி என்ற உரிமைத் தொடர்போ, தாய் - மகன் என்ற பாசத் தொடர்போ ஏற்படவிடுவதில்லை; ஆண் - பெண் - குழந்தை என்ற ஒரு 'தொடர்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பண்ணையில் தயாரிக்கப்பட்ட 'அடிமை' என்றால் கிராக்கி அதிகம்; பேசிக் கொள்கிறார்கள் அல்லவா புங்கனூர்ப் பசு, பழைய கோட்டைக் காளை, மூரா எருமை என்று 'ரகம்' பற்றி, அதுபோல இந்தப் பண்ணைக்கு ஒரு பெயர்!! இந்தப் பண்ணையில் வந்து சேருகிறான் தம்பி! 'முரசு' என்ற நீக்ரோ வாலிபன்! அடிமைச் சந்தைக்கு 'ஆட்களை'ப் பெற்றுக் கொடுக்கும் வேலைக்காக. அவன் பட்டபாடு அவன் மகன், பேரன் ஆகியோர் கண்ட அவதிகள் அந்த நூலிலே விளக்கப்பட்டிருக்கிறது. நான் முழுவதும் கூறப்போவதில்லை; நீக்ரோக்கள் விஷயமாக என்னென்ன வகையான ஈனத்தனமான கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதனை எடுத்துக் காட்ட மட்டுமே 'டிரம்' பற்றிய ஏட்டினைக் குறிப்பிட்டுக் காட்டினேன். அத்தகைய நீக்ரோ ஒருவன், அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக அமர்ந்து அரசோச்சுவது என்றால், அதிர்ச்சி அளிக்கத்தக்க அதிசயமல்லவா!! 'மனிதன்' எனும் ஏடு அந்த அதிசயத்தை அல்ல, குடியரசுத் தலைவரான கருநிறத்தான் என்னென்ன அல்லலுக்கும் ஆபத்துகளுக்கும், இன்னலுக்கும் இழிவுகளுக்கும், சூது சூழ்ச்சிக்கும் ஆளானான் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பொறுத்தார் பூமியாள்வார்; கல்வி எவரையும் உயர்த்தும்; காலம் மெள்ள மெள்ள, ஆனால் உறுதியாக மாறித் தீரும் என்ற அறிவுரைகள் அளிக்கப்படுகின்றன. தாழ்ந்த இனம் அல்லது தாழ்த்தப்பட்ட இனம், தத்தளிக்கும் சமூகம் என்ற நிலை இருப்பினும், அதிலேயும் நல்முத்துக்கள் தோன்றிடின் மதிப்பளித்தே தீருவர் என்று பேசி மகிழ்வர், தீவிரமான மாறுதலைத் திட்டமிட்டு ஏற்படுத்தத் துணிவற்றவர்கள்; மனமற்றவர்கள்; வழி அறியாதவர்கள், தமது வாதத்தை வலிவுள்ளதாக்கிட உழைப்பால் உயர்ந்த உத்தமர்களின் கதைகளை ஆதாரமாகக் கூறுவர். அவ்விதமான 'மணிகள்' நீக்ரோ சமுதாயத்தில் தோன்றாமலில்லை; உயர் பதவிகளிலே அமர்ந்து நற்பெயர் ஈட்டாமலில்லை. ஆனால், அவர்கள் வகித்த பதவி தந்திடும் மயக்கத்தில் தம்மை மறந்து அத்தகைய 'கருப்பர்களை'ப் பாராட்டினார்களேயன்றி, கருப்பர் இனத்தை அல்ல! கருப்பரிலும் இத்தகையவர்கள் உள்ளனரே என்று வியந்து பேசினர். கருப்பரிலா இப்படிப்பட்டவன் தோன்ற முடிந்தது என்றும், இந்த நிபுணன் நீக்ரோ இனமா? உண்மையாகவா? விசித்திரமாக இருக்கிறதே என்றும் பேசுவதை வாடிக்கையாக்கிக் கொண்டனர். வெள்ளை நிற வெறியர் இதுபோலக் கருதினர் என்றால், நீக்ரோக்களில் புரட்சி எண்ணம் கொண்டவர்கள் தம் இனத்திலே ஒரு சிலர் இவ்விதமான "உயர் இடம் பெறுவது, இனத்தின் விடுதலைக்கோ மேம்பாட்டினுக்கோ பயன்படவில்லை; அதற்கு மாறாக, மேலும் அந்த இனத்தை அழுத்தி வைக்கவே பயன்படுகிறது; பலர் கோடாரிக்காம்புகளாக்கப் படுகின்றனர்; அவர்களை உலகுக்குக் காட்டி நீக்ரோ இனம் ஒரு குறையுமின்றி வாழுகிறது என்று உலகுக்குக் கூறி உண்மை நிலைமையை மறைத்து விடுகின்றனர்; கழுத்துப் புண்ணை மறைத்திட (மாட்டின் கழுத்தில்) கட்டப்படும் வெண்கலமணி போன்றவர் இவர்! என்று கருதினர்; கூறிவந்தனர். புக்கர் டி. வாஷிங்டன் கல்வித் துறையில் பணியாற்றிய வித்தகர்; நீக்ரோ; சோர்ந்த உள்ளம் கொண்டவர்களுக்குப் புக்கர் டி. வாஷிங்டன் வரலாற்றை எடுத்துரைத்து, தன்னம்பிக்கையுடன் பணியாற்றி வந்தால், தகுதிகளைத் தேடிப் பெற்றால், மேம்பாடு அடைய முடியும், சமூகத்தில் உயர்ந்த மதிப்புப் பெற்றிட முடியும் என்று எடுத்துக்காட்டாத அறிவாளர் இல்லை என்று கூறலாம். அவ்விதம் 'எடுத்துக் காட்டு'க்குப் பயன்பட்டவர் புக்கர் டி. வாஷிங்டன்; கருநிறத்தவர். பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகமாக்கப்பட்டிருக்கிறது புக்கர் டி. வாஷிங்டன் வாழ்க்கை வரலாறு. எபினேசர் பேசெட் ஜொனாதன் ரைட், ஜெபர்சன் லாங், பிளான்ச் ப்ரூஸ், ராப்ர்ட் வீவர், பிரடரிக் மாரோ, ரால்ப் ப்ன்ச், ஆண்ட்ரூ ஹாட்சர், கார்ல் ரோவன் இப்படிப் பட்டியல் இருக்கிறது, பல்வேறு துறைகளிலே வித்தகர்களாக விளங்கிய நீக்ரோக்களைப் பற்றி. எனினும் இந்த நிலைமை, உழைத்தால் உயரலாம், தகுதியைத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம் என்ற பாடங்களைப் போதிக்கப் பயன்பட்டனவேயன்றி, நீக்ரோ சமுதாயத்தைப் பிறவி காரணமாகவே, நிறம் காரணமாகவே வெறுத்தொதுக்கியும் இழித்தும் பழித்தும் இன்னல் விளைவித்தும் வந்த வெள்ளை வெறியரின் போக்கை மாற்றிடப் பயன்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் வெள்ளை மாளிகைக்கு ஒரு கருநிறத் தலைவர்! என்கிறபோதுதான், வியப்புடன் கூடிய வெடவெடப்பு எடுக்கிறது நிறவெறியர்களுக்கு. எந்த ஆண்டு இந்த அதிசய நிகழ்ச்சி நேரிட்டது என்று நூலாசிரியர் குறிப்பிடவில்லை; அமெரிக்காவில் இன்றுள்ள மனப்போக்கைக் கொண்டு இதற்கான ஒரு 'நாள்' முன்கூட்டிக் குறிப்பிடுவது இயலாது என்பதால் போலும். கென்னடி, அதற்குப் பிறகு லிண்டன் ஜான்சன் ஆகியோர் காட்டும் உறுதி கலந்த போக்கைக் கவனிக்கும் போது, எல்லாத் துறைகளிலும் நீக்ரோக்கள் சம உரிமை பெற்றுவிடுவது வெகு விரைவில் என்று எண்ணிடத் தோன்றுகிறது. ஆனால் வெறியர்கள் இன்றும் நடாத்தி வரும் கொடுமைகளைப் பார்க்கும்போது எத்தனைத் தலைமுறைகள் பிடிக்குமோ நீக்ரோக்கள் மனித உரிமை பெற்றிட என்று திகைத்திடத் தோன்றுகிறது. என்றோ ஓர் நாள், வெள்ளை மாளிகையில், ஆட்சித் தலைவராக ஒரு கருநிறத்தவர் நுழைந்தால், நிலைமைகள் என்னென்ன வடிவமெடுக்கக் கூடும், எந்தெந்த புற்றிலிருந்து என்னென்ன அரவு கிளம்பி வந்து தீண்டக்கூடும் என்பது பற்றி, 'கற்பனையாக', ஆனால், எல்லையற்ற பெருவெளியிலே பறந்திடாமல், ஆசிரியர் கதையொன்றைத் தீட்டித் தந்திருக்கிறார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தமது பதவிக் காலத்தில் இறந்துபடுவாரானால், உடனடியாகத் துணைத் தலைவர் தலைவராக்கப்படுவார். இது அங்கு மரபு. அந்த மரபின்படிதான், கென்னடியைக் கொடியோன் சுட்டுக் கொன்றதும், அப்போது துணைத் தலைவராக இருந்து வந்த லிண்டன் ஜான்சன் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். கென்னடி இருந்திருந்தால் எவ்வளவு நாட்கள் குடியரசுத் தலைவராக இருந்திருப்பாரோ, அந்த நாள் வரையில் துணைத் தலைவராக இருந்த ஜான்சன் தலைவராகப் பணியாற்றினார். பிறகு புதிய தேர்தல் வந்தது. அதிலே ஈடுபட்டு, ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது குடியரசுத் தலைவராக இருந்து வருகிறார். குடியரசுத் தலைவர் இறந்துபடும்போது, இடைக்காலத் தலைவராக, துணைத் தலைவர் நியமிக்கப்படுகிற மரபின்படி, பலர் தலைவராகப் பணியாற்றியுள்ளனர். அவனி புகழ் நிலைபெற்ற ஆபிரகாம் லிங்கன் ஒரு கொடியவனால், நாடக அரங்கமொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டதனை, தம்பி! அறிந்திருப்பாய். அப்போதும், துணைத் தலைவர், தலைவராக்கப்பட்டார். ஆரிசன், டைலர், கார்பீல்டு, மக்ஸ்லீ, ஆர்டின்சு, ரூசிவெல்ட், இப்படிப் பலர், தலைவர் பதவியில் இருந்தபடியே உயிர் நீத்தனர். அப்போதெல்லாம், துணைத் தலைவர்களே தலைவர்களாயினர். இந்த 'மரபை'ச் சற்று விரிவுபடுத்தி, அதன் அடிப்படையிலேதான், தமது கற்பனையை அமைத்திருக்கிறார் இர்விங் வாலாஸ். தலைவர் இறந்துபட்டால், துணைத் தலைவர், துணைத் தலைவரும் இறந்துபட்டால்? பாராளுமன்றத் தலைவர்! அவரும் இறந்துபட்டால்? பாராளுமன்ற மேலவைத் தலைவர்! இப்படி ஒரு மரபு பற்றி ஆசிரியர் குறிப்பிட்டுக் கொண்டு, தமது 'கற்பனையை'க் கட்டியிருக்கிறார். மேலவைத் தலைவர், குடியரசுத் தலைவராகும் நிலை எப்போது ஏற்படுமென்றால், எதிர்பாராத வகையில் தமது பதவிக் காலத்தின்போதே, ஒரே சமயத்தில், குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பாராளுமன்றத் தலைவர் ஆகிய மூவரும் இறந்துபட்டிருக்க வேண்டும். அவ்விதமான ஒரு சூழ்நிலையை நம்பத்தகாத முறையில் அல்ல, இருக்கக்கூடும் என்று எவரும் கூறிடத்தக்க விதத்தில், 'மனிதன்' என்ற ஏடு உருவாக்கிக் காட்டுகிறது. திடீரென்று அமெரிக்கக் குடியரசின் துணைத் தலைவர் இறந்துபடுகிறார். குடியரசுத் தலைவர், நண்பர் இறந்ததால் ஏற்பட்ட துக்கத்தைத் துடைத்துக் கொள்ளவும் நேரமின்றி, ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில் ஓர் ஊரில் சோவியத் அதிபரைச் சந்தித்து ஆப்பிரிக்கப் பிரச்சினை பற்றிப் பேசவேண்டி ஏற்பட்டு விடுகிறது. அந்த மாநாட்டுக்குச் சென்றிருக்கிறார். அமெரிக்கத் தலைநகரில், மற்ற அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களுடன், மாநாட்டு இடைவேளையில், 'தொலைபேசி' மூலம் பேசுகிறார், குடியரசுத் தலைவர் - சோவியத் அதிபரின் போக்குபற்றி, தான் மேற்கொள்ள இருக்கும் ராஜதந்திரம் பற்றி, கேட்டு, வியப்படைவதும், தமது கருத்துக்களைக் கூறுவதும் மேலும் விளக்கம் கேட்பதுமாக - அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் இருக்கையில், 'தொலைபேசி' நின்றுவிடுகிறது; ஏதோ இயந்திரக் கோளாறு. பதை பதைக்கிறார்கள், பாதியிலே பேச்சு நின்றுவிட்டதே என்று. நிமிடங்கள் ஆண்டுகள் போல நகருகின்றன. பிரான்சிலே, குடி அரசுத் தலைவர்; வாஷிங்டனிலே அவருடைய பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கும் ஆட்சிக்குழுவின் பல்வேறு தரமுள்ள அதிகாரிகள். "அய்யோ" என்று அவர்கள் அலறும்படியான செய்தி வருகிறது தொலைபேசி மூலம். நம்ப முடியவில்லை; அதிர்ச்சி, குழப்பம், கலக்கம். தொலைபேசி தெரிவிக்கிறது, குடியரசுத் தலைவர் திடீரென்று இறந்துவிட்டார். மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாளிகையின் மேற்பகுதி இடிந்து விழுந்துவிட்டது. அந்த இடத்திலேயே குடியரசுத் தலைவர் மாண்டுபோனார்! தம்பி! எப்படி இருக்கும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டால். கதை என்பதால் உருக்கம் அந்த அளவுக்கு வராது; எனினும், எப்படி இருந்திருக்கக் கூடும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ளும் விதமாக அல்லவா, தாஷ்கண்டில் லால்பகதூர் மறைந்த செய்தி தாக்கிவிட்டது. வாஷிங்டனில், குடியரசுத் தலைவர் நடாத்தும் மாநாட்டின் தகவல் அறிந்துகொள்ளத் தொலைபேசி பக்கத்தில் திரள்கிறார்கள் அதிகாரிகள், அமைச்சர்கள், அவர்களுக்குக் கிடைப்பதோ, குடியரசுத் தலைவர் இறந்துபட்டார் என்பது. துணைத் தலைவரோ ஏற்கனவே மறைந்து போனார்! தலைவரோ, பிரான்சிலே பிணமாகிக் கிடக்கிறார். எத்தனை சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியும்! தத்தளித்தனர். அந்தத் தத்தளிப்புக்கு இடையிலேயே 'மரபு' குறிப்பிடுகிறபடி பாராளுமன்றத் தலைவர், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டுமே. அவருடைய முதல் அலுவலே, அந்தோ! முன்னாள் குடியரசுத் தலைவரின் உடலை வரவேற்று, உரிய முறையில் அடக்கம் செய்து, அனுதாபம் தெரிவிப்பதாக அமைகிறது. என்ன செய்வது! அவர் போன்ற ஒரு தலைவரை மறுபடியும் எங்கிருந்து பெற முடியும்? பத்து நிமிடங்களுக்கு முன்பு எவ்வளவு உற்சாகமாகப் பேசினார், 'தொலைபேசி' மூலம். வேடிக்கை மூட்டுகிற முறையிலே கூடப் பேசினாரே! இப்போது!! என்று எண்ண எண்ண அவர்கள் மனம் சுக்குநூறாகிறது. ஆயினும் அரசு நடைபெற்றாக வேண்டுமே, எனவே, துக்கம் உள்ளத்தைப் பிய்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும், "சேதி அனுப்புக!" உடனடியாக! பாராளுமன்றத் தலைவரை, குடியரசுத் தலைவராக்கும் சட்ட ஒழுங்கு நடைபெற்றாக வேண்டுமே! கூப்பிடுக அவரை!" என்றார் ஓர் அமைச்சர். "அவர் இங்கு எங்கே இருக்கிறார்? அவருமல்லவா, மாநாட்டில் கலந்து கொள்ள, குடியரசுத் தலைவருடன் சென்றிருக்கிறார்" என்று விவரமளிக்கிறார் வேறொருவர். மீண்டும் பரபரப்பு, பதைப்பு! விபத்து நடந்தபோது 'அவர்' எங்கே இருந்தார்? அவருக்கு எதுவும் நேரிடவில்லையே! என்ற பதைப்புப் பேச்சு. தொலைபேசி வேலை செய்கிறது. அடிபட்டவர்களில் அவரும் ஒருவர். ஆனால், உயிர் போகவில்லை. மருத்துவமனையில் கிடத்தப் பட்டிருக்கிறார் என்ற செய்தி கிடைக்கிறது. இவ்வளவு கேடுகளுக்கிடையில் இந்த ஒரு நல்ல செய்தியாவது கிடைத்ததே! அவருக்கு ஒன்றும் இல்லை! மருத்துவமனையில் இருக்கிறார். காயம்; அவ்வளவுதான் என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டு தைரியத்தைத் தருவித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் அனைவரையும் அடித்துக் கீழே தள்ளிவிடத்தக்க தாக்குதலை நடத்திற்று தொலைபேசி; "அவரும் இறந்து விட்டார். மருத்துவமனையில்" என்ற செய்தியைத் தெரிவித்து. ஒரு அடி விழுந்ததும் மற்றொன்று; அதைத் தொடர்ந்து இன்னொன்று விழுவது போல, கொடுமையான செய்திகள் கிடைத்தன. அவர்கள் திகைத்தனர், தேம்பினர், தத்தளித்தனர். இப்படியா ஒரு சங்கிலித் தொடர்போல இழப்புகள்! எப்படித்தான் ஒரு நாடு 'இவ்வளவை'த் தாங்கிக் கொள்ளும்? தலைவர், துணைத்தலைவர், பாராளுமன்றத் தலைவர் மூவருமல்லவா மறைந்தனர்! இனி, இனி...? என்று கண்ணீர் பொழிந்த நிலையினர் குமுறினர்; "இனி, குடியரசுத் தலைவராக வேண்டியவர், பாராளுமன்ற மேலவைத் தலைவர்!" என்றார் ஒருவர்; அவர் யார் என்பது பற்றிய நினைப்புமற்ற நிலையில் சோகத்துடன் 'ஆம்' என்றனர் மற்றையோர். அந்த மேலவைத் தலைவர்தான் தம்பி டக்ளஸ் டில்மன் எனும் ஒரு நீக்ரோ!! எப்படிப்பட்ட சூழ்நிலையைத் தீட்டி, ஒரு நீக்ரோவைக் குடியரசுத் தலைவர் ஆக்கிக் காட்டியுள்ளார் ஆசிரியர் பார்த்தனையா!! தகுதியற்ற ஒருவர் தலைமைப் பதவியைச் சூழ்ச்சித் திறத்தால் பிடித்துக் கொண்டு விட்டால், பிறகு தகுதி மிக்கவர்களும், அச்சத்தால் தாக்கப்பட்டு, அடிபணிந்து கிடக்கின்றனர், காண்கின்றோம். டக்ளஸ் டில்மன், காட்டிலே திரிந்து கொண்டிருந்த ஒரு தற்குறி அல்ல, நாட்டு ஆட்சி மன்றத்தில் ஒன்றான செனட் சபையின் தலைவர். தகுதி காரணமாக அந்த நிலை பெற்றார். வழக்கறிஞர். போதுமான அளவு வசதி பெற்றவர்; புகழ் ஈட்டிக் கொண்டவர். பதவிப் பசி கொண்டவரல்ல. எதிர்பாராத அழைப்பு! எட்டி எட்டிப் பார்த்தாலும் தொட்டுப் பார்த்திட முடியாத ஒரு பதவியில் அவர் 'நிலைமை'யால் இழுத்துச் சென்று அமர்த்தப்பட வேண்டி ஏற்படுகிறது. டக்ளஸ் டில்மன் - செனட் தலைவர்! அப்படியென்றால்? மரபு கூறுகிறது. அவர்தான் குடியரசுத் தலைவர் வேலை பார்க்க வேண்டும் என்று. குடியரசுத் தலைவராகவா? ஒரு நீக்ரோவா? செனட் சபையின் தலைவர் டக்ளஸ் டில்மன்! ஆமாம்! அவர் ஒரு நீக்ரோ! கருநிறத்தான்! கனவானாக இருக்கலாம், கற்றறிவாளனாக இருக்கலாம்! வழக்கறிஞராக இருக்கலாம்! ஆனால், அவர் ஒரு நீக்ரோ!! மரபு இருக்கிறதே, தலைவர், துணைத் தலைவர், பாராளுமன்றத் தலைவர் ஆகியோர் இறந்துபடின், செனட் சபைத் தலைவரே குடியரசுத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று. மரபு அது! ஆமாம்! ஆனால் டக்ளஸ் டில்மன், ஒரு நீக்ரோ! ஒரு நீக்ரோவா, அமெரிக்கக் குடியரசுத் தலைவராவது! எந்த அமெரிக்காவில் அடிமையாகக் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டானோ அந்த நீக்ரோவின் வழி வழி வந்தவன், அந்த இனத்தவன், அவன் படித்தவனாக இருக்கட்டும், பண்புள்ளவனாக இருக்கட்டும், மரபு ஆயிரம் கூறட்டும், அந்த நீக்ரோ, அமெரிக்கக் குடியரசின் தலைவனாகப் பதவி ஏற்பதா! அதை அனுமதிக்கலாமா! வெள்ளை இனத்தவர் ஏற்றுக் கொள்வார்களா! யார் உங்கள் குடியரசுத் தலைவர் என்று உலகினர் கேட்கும்போது, எப்படி மனம் ஒப்பி ஒரு நீக்ரோ கனவான் எமது தலைவராக இருக்கிறார் என்று கூறமுடியும். மாநாடு நடத்தச் சென்ற குடியரசுத் தலைவரைச் சாகடித்ததே, மண்டபம் இடிந்து விழுந்து; அது அவரை மட்டும் அல்லவே, நமது இனத்தின் மானத்தையே அல்லவா நொறுக்கிவிட்டிருக்கிறது. வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பர்!! காது குடைகிறதே; கேட்கும்போதே; இரத்தம் கொதிக்கிறதே கோபத்தால்; கண்கள் இருளடைகின்றனவே அதிர்ச்சி தரும் மயக்கத்தால்! டக்ளஸ் டில்மன், அமெரிக்கக் குடியரசுக்குத் தலைவரா!! ஆமாம்! மரபு கட்டளையிடுகிறதே! எப்படி அந்த மரபை மீற முடியும்? ஆனால், எப்படி ஒரு கருப்பரைத் தலைவராகக் கொள்ள முடியும்? எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? சவுக்கடிப்பட்ட இனம்! கட்டி வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட இனத்தினன். நமது வேட்டை நாய்கள் இவன் இனத்தவனை முன்பு துரத்தித் துரத்திக் கடித்திட, கடிபட்டவன் கதறிக் கதறித் துடித்திட, வெள்ளைச் சீமாட்டிகள் காட்சியினைக் கண்டுகண்டு கைகொட்டிச் சிரித்தனர் முன்பு! அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவன் - நீக்ரோ - ஆட்சித் தலைவனா! நமக்கா!! இப்போது நீக்ரோ அடிமை அல்ல! சந்தைச் சதுக்கத்திலே அவனைக் கட்டி வைத்து அடிக்க, சட்டம் இடம் கொடுப்பதில்லை. இப்போது அவன் அங்காடிப் பொருள் அல்ல; ஆபிரகாம் லிங்கன், அடிமை முறையை ஒழித்ததால்! ஆனால், இப்போதும் நீக்ரோ தானே! அடிமை அல்ல! ஆனால் கருநிறம்! மட்டம்! தாழ்வு! அந்த இனத்தவனல்லவா, டக்ளஸ் டில்மன். இப்போதும், வெள்ளை இனத்தின் உயர்விலும் தனித்தன்மையிலும் நம்பிக்கைக் கொண்டவர்கள், கருப்பர்களைப் பள்ளிகளில், விடுதிகளில், படக்காட்சிக் கொட்டகைகளில் சேர்க்க மாட்டார்களே! ஒதுக்கித்தானே வைத்திருக்கிறார்கள்? ஓரத்தில்தானே இன்றும் தள்ளப்பட்டுக் கிடக்கிறான்; உழைக்கிறான் என்பதால் வேலை தருகிறோம்; வேலை செய்வதால் நாம் நடமாடும் இடத்தில் அவனும் நடமாடுகிறான்! ஆனால் நாமும் அவனும் ஒன்றா! ஒப்புக்கொண்டு விட்டோ மா? இல்லையே! வேட்டையாடிப் பிடிப்பது, சங்கிலிகளால் பிணைப்பது, சந்தையிலே நிறுத்தி வைத்து விற்பது, சவுக்காலடிப்பது, இவை இல்லை! கூடாது என்கிறது சட்டம்; அதனால். ஆனால் வெள்ளை வெள்ளைதான், கருப்பு கருப்புதானே! வெள்ளை ஆளும் இனம்! கருப்பு, அடிமை இனம்தானே! உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகிவிடுமா! நீக்ரோ, படிப்பால், பணத்தால், பட்டத்தால், வெள்ளையனாகி விடுவானா? அமெரிக்காவில் பிறந்தான், வளர்ந்தான் என்பதாலேயே அவன் அமெரிக்கனாகி விடுவானா! அமெரிக்கன் என்று மக்கள் தொகைக் கணக்குக்காகக் கூறினாலும் நீக்ரோ வெள்ளையன் ஆகிவிடுவானா! அமெரிக்கா, எவருடைய நாடு? வெள்ளையர் நாடு! வெள்ளையர் நாட்டுக்கு ஒரு கருப்பர் தலைவராவதா!! தம்பி! நிறவெறி கொண்டவர்களிலே, சற்று ஆத்திரத்தை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவர்களே இவ்விதமெல்லாம் தான் பேசியிருந்திருக்க முடியும்! டக்ளஸ் டில்மன் எனும் நீக்ரோ, வெள்ளை மாளிகையில் அமர்ந்து குடியரசுத் தலைவராகப் போகிறார்; மரபு அவ்விதம் அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டபோது. டக்ளஸ் டில்மன்! குடியரசுத் தலைவர்; அமெரிக்காவுக்கு. வெள்ளை மாளிகையின் கூடத்திலே குழுமியிருந்த அமைச்சர்கள், உயர்நிலை அதிகாரிகள், தமக்கு, 'அதிபராக'ப் போகும் டக்ளஸ் டில்மனைப் பார்க்கிறார்கள்; சிறிது தொலைவில் நிற்கிறார் டக்ளஸ்! அவர்களின் கண்களிலே பொறி பறக்கிறது. டில்மன்? திகைத்துப் போயிருப்பார்! வேறு எப்படி நிலை இருந்திருக்க முடியும். மரபின்படி, உயர்நீதிமன்றத் தலைவர் வருகிறார், பதவிப் பிரமாணம் செய்துவைக்க! பைபிள்! ஆம்! வெள்ளையருக்கு ஒன்று, கருநிறத்தவருக்கு வேறு ஒன்றா இருக்கிறது! இல்லையே! இரு நிறத்தவருக்கும் ஒரே பைபிள்! கட்டினவனே காத்திடுவான் அமைத்தவனே பாதுகாப்பான் அவன் துணையின்றிப் பாதுகாவலன் எதையும் பாதுகாத்திட முடியாது என்ற கருத்து கொண்ட மணிமொழியுள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதனையே தமது 'பிரார்த்தனை'யாகப் படிக்கிறார் டில்மன்! பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. அமெரிக்க நாட்டுக்கு அமைந்துள்ள அரசியல் சட்ட திட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்றியும் அதற்குக் கட்டுப்பட்டும் நான் ஆட்சி நடத்தி வருவேன் என்று உறுதிமொழி கூறுகிறார் டில்மன். "அமெரிக்கக் குடியரசுத் தலைவரே, வாழ்க! கர்த்தர் தங்களை - அமெரிக்கக் குடியரசுத் தலைவரை - அமெரிக்கக் குடியரசுத் தலைவராக அமரும் முதல் நீக்ரோவைக் காத்திடுவாராக!" - என்று உயர் நீதிபதி கூறுகிறார். சூழ நிற்கிறார்கள் வெள்ளை இனத்தவர்! அவர்கள் அனைவரும் எந்தக் குடியரசுத் தலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து தீரவேண்டுமோ, அந்தக் குடியரசுத் தலைவர் நிற்கிறார்; ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள் - ஓராயிரம் வகையான எண்ணங்கள் குமுறி எழுகின்றன! வெள்ளை மாளிகையில் ஒரு 'கருப்பர்' அதிபராகிறார்! |