துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி நிரோட்டகம் என்பது நிர் ஓட்டகம் எனப் பிரியும்; ஓட்டகம் - உதடுகள்; உதடுகள் ஒட்டாமல் பாடுவது என்பது விதி. பகரம் மகரம் கலவாது பாடினால், அது நிரோட்டகப் பாடலாகும். இது மிறைக்கவி இனத்தைச் சேர்ந்தது. பல அடிகளிலாயினும், ஓரடியில் பல இடங்களிலாயினும், வந்த எழுத்துத் தொடர்களே மீண்டும் வந்து பொருள் வேறுபடுவதும், யமகம் எனப்பெறும். அந்தாதியாவது முன்னின்ற செய்யுளின் ஈற்றில் உள்ள எழுத்தாயினும், அசையாயினும், சீராயினும், அடியாயினும் அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படிப் பாடுவது. இங்ஙனம் பாடும் நூலினது ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமைய வைத்தல், மண்டலித்தல் எனப் பெறும். இந்நூலின் முப்பது பாடலும், கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை. ஆரம்பிப்பது நேரசை யாயின், ஒற்றை விலக்கி எண்ணில் பதினாறு எழுத்தாம். நிறையசை யாயின், அடிதோறும் பதினேழ் எழுத்தாம். ‘நேர் பதினாறே நிறை பதினேழே’ என்பது விதி. கட்டளைக் கலித்துறை காப்பு கொற்ற வருணனை நின்றன் றுழக்கிய கொக்குருவைச் செற்ற வருணனை யன்னசெவ் வேற்படைச் செந்திலர்க்கு முற்ற வருணனை யந்தாதி யென்று முதிர்மதப்பேர் பெற்ற வருணனை யானனத் தாதியைப் பேசுவனே. நூல் யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே யானைக்கண் டங்கரி யங்கங் கயிலையை யேய்ந்ததகை யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே. 1 தினகர னந்த நனியிலங் காநின்ற செய்யநற்செந் தினகர னந்த நிதியா யினனடற் சீரயிலேந் தினகர னந்த கனைச்செற்ற தாளர் திகழ்கனகா தினகர னந்த நடனர் தனயனென் சிந்தையனே. 2 சிந்தனை யாகத் திசையந் தணர்க்கிறை சேரகங்க சிந்தனை யாகத் தரையளித் தாடரை சென்றிரந்த சிந்தனை யாகத் திடையிடைந் தான்றந்த சேயளியாற் சிந்தனை யாகத்த நற்செந்தி லாய்நினைச் சேர்ந்தனனே. 3 தனத்தலங் கார நிறைநா ரியரந் தரத்தசைகே தனத்தலங் கார நிகழரங் காடச்செய் தன்னினயத் தனத்தலங் கார தராயியங் கத்தக்க தண்செந்திற்கந் தனத்தலங் காரனை யானய னேத்திடத் தங்கினனே. 4 தங்கந் தனங்க ளடையத் தனியெனைத் தள்ளியங்கே தங்கந் தனங்க டரச்சென் றனரறிந் தாரிலைகா தங்கந் தனங்க ளலர்காக்க ணாரெழிற் றண்செந்திலார் தங்கந் தனங்க நிகர்செக்கர் செய்சஞ் சலத்தினையே. 5 சலந்தர னாகந் தரித்தார்தந் தாதன் றனதிடைச்சஞ் சலந்தர னாகந் தரைநடந் தாலெனச் சார்ந்ததண்டன் சலந்தர னாகந் தளரச்செற் றார்தன யன்றலநச் சலந்தர னாகந் தனக்கிறை சேர்செந்திற் சார்ந்திடற்கே. 6 சாரங்கஞ் சங்கரி கட்கிச்சித் தேய்ந்தகைச் சங்கரனார் சாரங்கஞ் சங்கரி தாஞ்சக் கரங்கையிற் றாங்கினன்சேய் சாரங்கஞ் சங்கரி யாநண் ணினர்க்கந்தத் தந்திரத்தா சாரங்கஞ் சங்கரி தேயெனச் செய்நின் சரண்டந்ததே. 7 தந்தனஞ் சங்கை யணிகரர் சேர்க்கத் தடங்கணலை தந்தனஞ் சங்கை யலரென்செய் யாடங்கச் சற்சனர்நித் தந்தனஞ் சங்கை யகலறத் தீசெந்திற் சார்கதனித் தந்தனஞ் சங்கை யநக னிளையனற் றாடரற்கே. 8 தரங்கனந் தார னனியேற் றெழிற்செந்திற் றந்தைநிரந் தரங்கனந் தாரக நாடினென் றேநினை சத்தியரந் தரங்கனந் தார நகரீசர் சேய்கிரித் தையலர்க்கந் தரங்கனந் தாரள கஞ்சிற் றிடைசல சங்கண்களே. 9 சங்கங் களங்கழ னிக்கரை சேர்செந்திற் றங்கினநஞ் சங்கங் களங்க நண்ணரன் சேயெய்தச் சார்ந்தனஞ்சற் சங்கங் களங்க னியைநிகர் தண்ட தரற்கினிய சங்கங் களங்க ரெனநின்ற யாங்கணெஞ் சங்கரைந்தே. 10 கரத்தரிக் கங்கணங் கட்டர னார்தந்த கந்தரழ கரத்தரிக் கங்கணங் கண்டசெய்ச் செந்திலெங் காங்கெயர்சா கரத்தரிக் கங்கணங் கட்கய னார்க்கெழிற் காசணிசே கரத்தரிக் கங்கணங் கற்றிடத் தாங்கினர் கைச்சத்தியே. 11 சத்திக் கரத்த னகச்சேயங் கத்தினைத் தந்தனனற் சத்திக் கரத்த னகச்சிலை யாளிதன் றாளிணைநே சத்திக் கரத்த னகத்தியைந் தேத்தரன் தந்தகதிர்ச் சத்திக் கரத்த னகசெந்தி லாய்நின் சரண்சரணே. 12 சரிதங்கை யாரக் கலன்றந் தனந்தரித் தார்நரகே சரிதங்கை யாரக் கரிடத்தி னார்தந்த தண்செந்தினே சரிதங்கை யாரக் கணத்தின்னல் கைத்தல் சரதந்தஞ்சீர்ச் சரிதங்கை யாரக் கசிந்திசைக் கின்ற தகையினர்க்கே. 13 இனனந்தி யங்கி நிகர்த்தசெங் கேழன்கை யிரிரண்டா யினனந்தி யங்கிரி யைச்சிலை யாக்கிதன் சேயெழிற்செய் யினனந்தி யங்கி யிருங்கஞ்சஞ் சேர்செந்தி லெந்தைதளை யினனந்தி யங்கிசை யக்கதி யீந்தன னென்றனக்கே. 14 தனக்கடங் காரெயில் செற்றகங் காளன் றனயனங்கந் தனக்கடங் காதிழி தந்திக் கிளையன் றளிரெழிற்சந் தனக்கடங் காநிறை செந்திலி னற்சேய் சயிலநங்கை தனக்கடங் காணினச் சாரிலை யண்ண றரணியிலே. 15 தரணி யனைய னிறைஞ்சயி லார்நற் றனிச்சிலையாந் தரணி யனைய னகனணை யந்தரி தந்திடுகந் தரணி யனைய னெஞ் சேயலர்த் தாள்க டரித்திறைஞ்சே. 16 தரிக்கனந் தங்கலை நீள்சடைக் கைக்கனற் சங்கரனந் தரிக்கனந் தங்கலை நீதிகள் சாற்றரன் றந்தநற்கந் தரிக்கனந் தங்கலை நீர்ச்செய்க்க ணாஞ்செந்தி லார்தளையா தரிக்கனந் தங்கலை நீத்திழந் தேங்கரச் சங்கங்களே. 17 சங்கரி யக்க நிகர்த்தநின் றாதை தகையதென்னச் சங்கரி யக்க ரிறைஞ்செழிற் செந்திற் சடானனகஞ் சங்கரி யக்கதிர் தானிசை கின்ற சரணத்தினாற் சங்கரி யக்கணத் தேயெற் செறியந் தகற்சினந்தே. 18 தகர னலங்க நிறைநிறத் தான்செந்திற் றந்தைசங்கேய்ந் தகர னலங்க னளினா தனத்தினன் றாழளகந் தகர னலங்க டரநின்ற சத்தியன் றாளெனினந் தகர னலங்கனன் றாலெனச் சீறிடத் தக்கரன்றே. 19 தக்க னகத்தி னடறணித் தானயன் றன்கதிசந் தக்க னகத்தி கிரிக்கர னாக்கங்க டந்தளிக்கத் தக்க னகத்தி யனையாளி யென்னெஞ்ச தாஞ்சலசந் தக்க னகத்தி னகரன்றன் செந்திலைச் சந்திக்கினே. 20 சந்தத்த னத்திக டந்திறத் தாசை தலத்தினிச்சை சந்தத்த னத்தி னசைதீ ரடியன் றனதிலிற்சேர் சந்தத்த னத்தி யதளான் றனய தடக்கயல்கஞ் சந்தத்த னத்தி னினங்கீ ழிழிசெந்திற் றங்கினற்கே. 21 தங்கச் சினகர நேராக் கலந்திச் சகநிறைந்தார் தங்கச் சினகர நேயர் தனயன் றனக்கினிதாந் தங்கச் சினகர நீள்செந்தி னாட்டிற் றனகரிதந் தங்கச் சினகர நற்கன னென்னங்க டையலர்க்கே. 22 அலரின னந்தலை யாழிகண் டாங்குச் சிகியினிடை யலரின னந்த நிகரயி லான்செந்தி லாயிழையை யலரின னந்த நினைநிலந் தேர்ந்ததற் கன்றயலா ரலரின னந்தஞ் சொலற்கிட னாநெஞ் சழிகின்றதே. 23 தேயத் தியங்கி யலகி றலங்களிற் சென்றடிகள் தேயத் தியங்கி யலைய றிடங்கதி சேர்தலறைந் தேயத்தி யங்கின நித்திலந் தானெறி செந்திலடைந் தேயத்தி யங்கி தரித்தான் றனயற் றெரிசிக்கினே. 24 சிக்கத் தனங்க டிறக்கின்ற கன்னியர் சிந்தைகணே சிக்கத் தனங்க ளளித்தழிந் தேற்கெழிற் செந்திறரி சிக்கத் தனங்க ழலையேத்த நல்கினன் சீர்நிறைகா சிக்கத் தனங்க ளகிலேசன் றந்த திறற்கந்தனே. 25 கந்தரங் கானந்த னிற்சென் றடங்கிலென் காசிக்கநே கந்தரங் கானந்த நண்ணிலென் கன்னியர் கட்டளக கந்தரங் கானந்த நின்றா டெழிற்செந்திற் கண்டிறைஞ்சிக் கந்தரங் கானந்த நல்கச் சனனங் கடந்திலரே. 26 கடனந்தி னாகத் ததளாடை யாயெனைக் காக்களிற்கே கடனந்தி நாணிறத் தாயென நாரணன் கண்டிறைஞ்செங் கடனந்தி நாதன் றனயனற் செந்திலிற் காரிகையே கடனந்தி னாயகங் காதலர் தேரிற் கலிக்கின்றதே. 27 கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன கணக்காக நானலைந் தெய்த்தே னெழிற்செந்திற் கந்தநெற்றிக் கணக்காக னார்தந்த நின்றனை யேயினிக் காதலினாற் கணக்காக னாநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே. 28 காதலை யானின் றனக்காக் கினனினிக் காயந்தந்தே காதலை யானின் றனக்கா ரணனடிக் கஞ்சங்கணீங் காதலை யானின் றகங்கரைந் தேத்தரன் கண்ணியராக் காதலை யானின்ற சங்கரன் சேய்செந்திற் காங்கெயனே. 29 காயங் கலைய நலியந் தகனணை காலஞ்செய்ய காயங் கலையத ளானில நீரழல் காற்றெழிலா காயங் கலையன லரிசித் தாயினன் காதலழ காயங் கலையதி ருஞ்செந்தி லாயென்க கன்றனெஞ்சே. 30 திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி முற்றிற்று |