திருமயிலை யமக அந்தாதி

     இந்நூல் மயிலாப்பூர் கபாலீஸ்வரன் மேல் பாடப்பட்டதாகும். காப்பு உள்பட இருபத்தைந்து செய்யுட்களைக் கொண்டது. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. இருப்பினும் திருமயிலையில் வாழ்ந்த மகாவித்வான் சண்முகம் பிள்ளை இந்நூலை இயற்றியிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

காப்பு

கூத்தாடு வர்க்க வளந்தோன் பணியரன் கோகிலங்கள்
கூத்தாடு சோலை மயிலையந் தாதியைக் கூறவுரு
கூத்தாடு னிப்புகழ் வார்க்கருள் கற்பகங் கொண்டல்வண்ணக்
கூத்தாடு மைங்கரன் காப்பாகு மேன்மை கொடுத்திடுமே.

நூல்

சீராக மாதவன் போற்றும் பதாம்புய சேயிதழிச்
சீராக மாத வளந்தரு தண்மதிச் செஞ்சடையாய்
சீராக மாதவர் நல்லோர்கள் வாழுந் திருமயிலைச்
சீராக மாதவ னேராக நல்குன் றிருவருளே. 1

திருமயி லைக்கண் மலர்கொன்றைத் தாமர் சிகரமொப்போ
திருமயி லைக்கண் மணியணி வோர்காஞ் சேருமின்மு
திருமயி லைக்கண் ணன்மரு கோற்கருள் சிற்பரர்பூந்
திருமயி லைக்கண் மகிழ்சோதி யார்பதஞ் சிந்திப்பனே. 2

சிந்தாரப் பன்னக வேணிய மாநிலஞ் சேர்ந்தளந்த
சிந்தாரப் பன்னக வேணியெல் லாம்புகழ் தேவவுள்க
சிந்தாரப் பன்னக வேணிதம் போற்றர செந்நெல்கழை
சிந்தாரப் பன்னக வேணின் மயிலைச் சிவனருளே. 3

அருண வனன்கற் பகவல் லியநட னண்டர்பதம்
அருண வனன்கற் பகவல் லிலையபயி லன்றுதொட்ட
அருண வனன்கற் பகவல்லி நாத னணிமயிலை
அருண வனன்கற் பகவல்லிப் போதிடத் தண்ணுவனே. 4

வனவேட னாரணி யக்கங்கொண் டாள்பவன் மாதரெண்ணெவ்
வனவேட னாரணி யக்கனை நட்டவன் வாரெதிர்செல்
வனவேட னாரணி யக்கர வாவென் மயிலை மன்ன
வனவேட னாரணி யக்கட லோடுவ ரின்வெல்வனே. 5

வரியானை யானையன் மாயா புரிசஹ்தி மன்னன்மன்னு
வரியானை யானையன் மாயா புரியுடன் மாலகற்றை
வரியானை யானையன் மாயா புரியென் மயிலையினாண்
வரியானை யானையன் மாயா புரிமலர் வாயன்னமே. 6

வாயனந் தங்க டருமஞ் செயப்பொருள் வாழ்த்தவுனை
வாயனந் தங்க டருகிலன் வேதன் மனத்தின்மகிழ்
வாயனந் தங்க டருளிதழ்க் கஞ்ச மதியெனவெல்
வாயனந் தங்க டருந்தட வாவி மயிலையனே. 7

அனேகாவென் பார்க டமக்குப் பலவுரு வாந்தகுதி
அனேகாவென் பார்கடத் தோர்பாவை செய்த வவர்க்கருளை
அனேகாவென் பார்கடந் தாரறி யாய்பொழி லாமயிலை
அனேகாவென் பார்கட நஞ்சார் கிரீபத்தை யாசைநெஞ்சே. 8

ஆம்பலஞ் சங்கத் தரளத் தலரு மணியிலை
ஆம்பலஞ் சங்கத் தரியுரி யாயரு ளாத்திமுல்லை
ஆம்பலஞ் சங்கத் தலைமதி தென்ற லலரிசைக்கு
ஆம்பலஞ் சங்கத் தடன்மார வேள்கணைக் காற்றிலளே. 9

இலக்கங் குழையத் தவஞ்செய் மயிலைக் கிறைவர்மன்னு
இலக்கங் குழையத் தரவிந்த னார்சிர மேந்தரர்சங்கங்
இலக்கங் குழையத் தரவெற்பின் மின்னாட் கிமயமெச்ச
இலக்கங் குழையத் தனங்கருங் கண்க ளிடைவஞ்சியே. 10

வஞ்சிக்கு முப்புர மால்கணை மேருவில் வாய்ப்பவெய்தி
வஞ்சிக்கு முப்புர மாண்வென் மயிலை வரதமலை
வஞ்சிக்கு முப்புர மால்சேரப் பாலருண் மன்னகைத
வஞ்சிக்கு முப்புர மால்செலப் பாதம் வழங்குவையே. 11

குவையுரு முத்தலை நீக்கு மயிலைக் கழகரிலங்
குவையுரு முத்தலைச் சூலர்பொற்றண்மனங் கோயில் செய்தாங்
குவையுரு முத்தலை யுற்பவந் தீர்ந்து குறைவின்றியோங்
குவையுரு முத்தலை யெய்து மரவெனக் கூற்றஞ்சுமே. 12

அஞ்சன நாட்டத் தரம்பையர் போல வணிநடைகொள்
அஞ்சன நாட்டத்தன் போற்று மயிலைய னன்புசெய்யும்
அஞ்சன நாட்டத்த னம்புயத் தாடுணை யாகிநெஞ்சே
அஞ்சன நாட்டத் தரந்தையைத் தீர்த்துவந் தாட்கொளுமே. 13

ஆட்டானம் மானங்கை யம்புலி தங்கொள் ளரனடைத்தும்
ஆட்டானம் மானங்கை யம்புலி வேணிய னைம்முகன்பேட்
ஆட்டானம் மானங்கை யம்புலி நோன்மயி லைப்பதியா
ஆட்டானம் மானங்கை யம்புலி சேட னமரர்களே. 14

அமரச் சலந்தரற் காய்ந்தோய் மயிலையர சடையுள்
அமரச் சலந்தரம் வைக்கும் பரம வகத்துவன்னி
அமரச் சலந்தர ளத்தி னகைமுக மாக்குவஞ்சம்
அமரச் சலந்தரந் தந்தரு ணல்ல வறிவென்றுமே. 15

என்றருந் தந்த நினைவுல கந்தவர்க் கேழைநெஞ்சே
என்றருந் தந்த மிலக்கியங் கற்றறி வெய்துவைநீ
என்றருந் தந்த னெனச்செய் மயிலை யிறைவரந்த
என்றருந் தந்தமில் போகமெல் லாம்பின் பிடரில்லையே. 16

இடப்பாலை யானனத் தான்பணி சங்கரன் யாழினிசை
இடப்பாலை யானனத் தான்ஞான மூர்த்தி யிமயமின்சேர்
இடப்பாலை யானனத் தான்மயி லைப்பதி யேத்திலர்போல்
இடப்பாலை யானனத் தான்மகள் சேரற் கெழுதினனே. 17

இனற்கிளைப் பாற்று வணத்திரி சூல ரெழுபரித்தேர்
இனற்கிளைப் பாற்று வணக்கா மயிலை யிறைவரன்பா
இனற்கிளைப் பாற்று வணத்தார்நல் காவிடி னின்றிரவின்
இனற்கிளைப் பாற்று வணரலை மூழ்குவ ளேந்திழையே. 18

எந்தலை யந்தரத் தாரக வேவு மிறைமயிலை
எந்தலை யந்தரத் தாரகங் கைத்தலத் தேற்றவண்ணல்
எந்தலை யந்தரத் தாரக லாதணி யீசனளி
எந்தலை யந்தரத் தாரக மெய்ப்பொரு ளீகுவனே. 19

ஈயா தவன யனத்துணை யெய்துத லில்லைபொருள்
ஈயா தவன யனத்துறு நற்கதியெய் தல்வில்லி
ஈயா தவன யனத்து விதம்பெற வெண்ணுபுரார்
ஈயா தவன யனத்து மயிலை யிறையவனே. 20

இறையாய வெள்ளங்கத் தார்கலிப் பார்புரந் தேதுபெற்றத்
இறையாய வெள்ளங்கத் தார்சுகம் வேட்குநெஞ் சேயுங்குவாய்
இறையாய வெள்ளங்கத் தாரெண் புயத்த னெழின்மயிலை
இறையாய வெள்ளங்கத் தார்நெய்யின் மேவுவ னெங்குமன்றே. 21

என்னாக ராவணற் பொற்சடை யாய்கட லேய்ந்தவிடம்
என்னாக ராவணற் காய்ந்தவன் போற்று மிறைவகுழை
என்னாக ராவணற் காமயி லைப்பதி யீசவிவட்கு
என்னாக ராவணற் கஞ்சநல் காத திதிழியையே. 22

இதவா ரணங்கொடி யாக்கொண்ட தேவர்க் கிறையவிபர்
இதவா ரணங்கொடியரா விட்டபோ தட்டவெந் தைநற்புன்
இதவா ரணங்கொடி மாசலை சேர்மயி லீசன்றவள்
இதவா ரணங்கொடிப் பூமானை யன்பருக் கீபவனே. 23

பவனம் பிரிதிவி வான்றீகம் மாகும் பவனைவிரும்
பவனம் பிரிதி விடாமற் செயச் செய் பரனையுன்னும்
பவனம் பிரிதிவி யஞ்சேர் மயிலைப் பதிதினஞ்செய்
பவனம் பிரிதி விதுப்போல் விளங்குவை பாரினெஞ்சே. 24

கபாலீசன் அடிகளே சரணம்

திருமயிலை யமக அந்தாதி முற்றிற்று