வ. அழகியசொக்கநாத பிள்ளை

இயற்றிய

திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி

விநாயகர் காப்பு

அஞ்சம் தெளிய நடைபயில் காந்திமதி அம்மை மேல்
பஞ்சம் தெளிய நல்லந்தாதி பாடிப் பரவுவதற்கு
நெஞ்சம் தெளிய மதிக்காட்டி வாக்கு நிரம்ப நல்கு
நஞ்சம் தெளிய உண்டோன் அருள் சந்தி விநாயகனே.

நூல்

திருநெல்லைக் காந்தி மதியே! இப்பஞ்சம் தெளிக என்றே
ஒரு சொல்லை தீ திருவாய் மலர்வாய்; இங்கு உனதுதவி
அருகில்லை யேல் எமக்கு ஆருண்டு? இந்நாள் மட்டு அனுபவித்து
வருதொல்லை தீர்த்தருள் எண்ணான்கு அறமும் வளர்த்த பொன்னே! 1

பொன்னம்பல வர்மகிழும் உமையே! பஞ்சம் பூமிதனில்
இன்னம் பலம் உற்றிருப்பது என்னோ? கஷ்டமே வளரும்
முன்னம், பலன் கொடுத்து ஆண்டருள்வாய் அருள் முற்றும் வைத்தே
அன்னம் பல உயிர்க்கும் தந்து காஉன் அடைக்கலமே. 2

அடைக்கலம் காத்து அருள் அம்மா; பலசரக்கு அவ்வளவும்
கடைக்கு அலங்காரம் என்று ஏங்கி வந்தோம்; பஞ்ச கால வன்மை
யிடைக் கலங்காமல் பொருள் கொடுப்பாய்; எங்கட்கு என்றென் றைக்கும்
படைக்கலம் காண், விழி மாதே! பணிவம் உன் பாதங்களே. 3

பாதங்களே வங்கம் ஆகி மெய்யன்பர் துன்பக் கடலி
லே தங்கிடா மல்கரை ஏற்றும் என்பது எமக்கு இலையோ?
தீ தங்க மான இப் பஞ்சத்தி லேபசித்து ஏங்கி, உயிர்ச்
சேதங்கள், அம்மா, கணக்கும் உண்டோ தொகை செப்புதற்கே? 4

செப்பப் படாது இந்தப் பஞ்சத்தி லேபட்ட சீரழிவே!
வெப்பப் படாத உன் கண்ணோக்கம் இன்றி விடுவித்து, இதைத்
தப்பப் படாது; இங்கு அறிந்தறியாது குற்றம் செயினும்
ஒப்பப் படாது அம்ம, எக்காலமும் எங்கட்கு உன்பலமே. 5

உன் பாதமே கதி அம்மா, இந்நெல்லை உமையவளே!
பொன்பார் பெண்ணாசை இலதேல் சுகம் அது போலுமில்லை;
வன்பாய் அதுவும் படைத்து அநியாயத்தில் வாடுகின்றோம்;
அன்பாகத் தீர்த்து வைப்பாய், பஞ்சத்தால் படும் ஆபத்தையே. 6

ஆ! பாரதத்தும் உண்டோ, இதுபோல் அநியாயம் அம்மா?
நீ பார்த்து இப்பஞ்சத்தை ஓட்டவென்றால் வெகு நேரமுண்டோ?
தாபாக்கினியில் வருந்திய பேர்கள் வந்தால், இரங்கா
மா பாதகரைச் சுமந்தது எவ்வாறு இந்த மண் மகளே? 7

மண்கூட வாய்விட்டு அழும் ஒரு சத்தம் அம்மா, மனசும்
புண் கூடு என நொந்து போச்சு தம்மா; பட்ட புன்மை சொல்ல
எண் கூட வில்லை; பிழைப்பது எவ்வாறு அடியேங்கள் அம்மா
கண்கூடு வீங்கி, உலகோர் படும் பஞ்ச காலத்திலே? 8

காலத்தைக் கஷ்டம் பொறாமல் நொந்தோம்; பங்கயனை நொந்தோம்
சாலத்தை நீ செய்கி றாயோ என உன்றனையும் நொந்தோம்;
பாலத்தை உற்ற விழி உமையே! இந்தப் பஞ்சம் வந்த
மூலத்தை இன்னம் அறியேம்; திகைத்தனம் முற்றிலுமே. 9

முற்றின நெற்றென வற்றினது எம்முடல் மூள் பசியால்;
சற்றும் உன் நெஞ்சு இரங்காத தென்னே? இப் பஞ்சத்தில் எதேன்
விற்றுத் தின்போம் எனில் ஆமானதில்லை; மிடிய தனால்
இற்றை வரை கஷ்டப் பட்டது போதும் இரங்குவையே. 10

இரந்து குடிப்பவர்க்கோ பஞ்சத்தால் குறையென்ன? முன்போல்
நிரந்தரம் பிச்சை எடுத்துண்பர்; செல்வர் என்னில் குறையோ?
தரம் தப்பி, எம்தரக் காரர்களே மெலிந்தார்; இனியுன்
வரம் தந்து அளித்திட உனக்கு இது எம் மாத்திரமே? 11

மாத் தின்றும், கேப்பைக் களி தின்றும், புல் மண்டி வாய்மடுத்து
நாத் தின்றும், மெல்லப்படும் கீரைகள் தின்றும், நாங்கள் உயிர்
காத்து, இன்று வரையினும் கழித்தோம் பஞ்ச காலத்தையே;
கூத்தின் துறைப்படி ஆடவல்லான் மகிழ் கோகிலமே! 12

கோகனகத் திருவே! பசியாலும் குழைந்து பட்ட
சோகமெல்லாம் எங்கள் தாயான உன்னுடன் சொல்வதல்லால்,
காக அறிவின்றித் தாமே வைத்து உண்ணும் கயவர் தம்பால்
ஏக, உடலும் ஒலுகுதம்மா, உள்ளம் எஞ்சல் உற்றே. 13

எம்சாண் கும்பிக்கு இரைக்கே இந்தமட்டெனில் என்ன செய்வோம்?
பஞ்சாங்கத் தேனும் இப் பஞ்சாங்கம் நீங்கும் என்பார்கள் இல்லை;
நஞ்சாம் கவலை எவர்படுவார், பல நாளும் அம்மா?
செஞ்சாலி யின்விலை சீராக நீ அருள் செய்குவையே. 14

செய்கள் உள்ளோர்கள் பயிரிடுவார்; நெல்லைச் சேர்த்து வைப்பார்;
மெய் கொழுக்கும்படி உண்டிடுவார்; நெல் மிகுந்ததைவி
லைகட்கு விற்று, வருடம் தப்பாமல் நகைகள் செய்வார்;
கொய் கமழ் பூங்குழலாய்! பஞ்சத்தால் என் குறை அவர்க்கே? 15

அவமதித்தால் கதிவேறு இல்லை; நீ அன்னையாய் இருந்தும்
இவளவு தூரம் கஷ்டப்படப் பார்த்தும் இருப்பது என்னோ?
எவளவு குற்றம் செய்கின்ற பொல்லாப் பிள்ளை என்னினும் தாய்
தவற விடுவதுண்டோ? ஏது அம்மா அடம் சாதிப்பதே! 16

சாதித்து அநியாயத் தெமை நீங்கிடாச் சஞ்சல இருட்கோர்
ஆதித்தன் போல்வந்து அருள்; இன்று கோபம் அடிமைகள் மேல்
ஏது இத்தனை உனக்கு அம்மா? இப்பஞ்சத்தில் எப்படிச் சம்
பாதித்தும் அதில் என்ன? காணாதம்மா சம்பளப் பணமே. 17

பணமிருந்து இப்பஞ்சம் வந்துவிட்டால் ஒரு பாரமில்லை;
உணவின் பொருட்டுக் கடன் கொண்டதோ தரத்துக்கு அதிகம்;
மணமற்ற சீவனத்தாலே புசிப்பது எவ்வாறு? கொண்ட
ரணமும் தொலைப்பது எவ்வாறு? சொல்வாய் நெல்லை நாயகியே! 18

அகிலாண்ட நாயகியே! பஞ்சத்தால் உய்வது ஐயமென்றே
திகில் ஆண்டதே எம்மை, என் செய்குவோம்? ஐவர் தேவிக்கு முன்
துகிலாண்டவன் தங்கையாய் இருந்தும், படும் துன்பம் அற,
முகிலாண்ட எங்களைக் காவாது இருத்தல் முறையல்லவே! 19

அல்லும் பகலும் இப்பஞ்சத்தில் பட்ட அவதியெல்லாம்
சொல்லும் பொழுதில் உருகாதது ஒன்றுளதோ? கடிய
கல்லும் கரைந்திடுமே! உனக்கோ இரக்கங்கள் இல்லை;
நெல்லும் தவசமும் எல்லாம் மலிந்திட நீ அருளே. 20

அருள் கொடுத்தாலன்றி ஈடேறுவது இங்கு அரிது; பொல்லா
மருள் கொடுத்தால் எவர்தாம் பிழைப்பார்? உய்யும் வண்ணம் இனித்
தெருள் கொடுத்து ஆதரவாய் வறுமைப்பிணி தீர்த்து எமக்குப்
பொருள் கொடுத்தால் உனை யார் தடுப்பார் இந்தப் பூதலத்தே? 21

பூதர வல்லியை நெல்லேசரை, தண்புனல் முடித்த
நாதரை, வேணுவனத்தரை மன்றுள் நடம் புரிந்த
பாதரைச் சேர்ந்த பராசத்தியே! இந்தப் பாரில் எங்கள்
ஆதரம் தீரக் கருணை செய்வாய், உலகாண்டவளே. 22

ஆண்டாண்டு தோறும் இப் பஞ்சத்தினால் தொலையாக் கவலை
பூண்டால், எளியவர்க்கு எவ்வாறு இந்நாள் பிழைப்புக் கிடமே?
தூண்டா மணிவிளக்கே! பலவாறு எம்மைத் துன்பம் செய்ய
வேண்டாம்: இவளவு போதும் அம்மா, செய்த வெவ்வினைக்கே. 23

வினையின் துயர்கெடும் என்றே வரம் தரல் வேண்டுமல்லால்
பினை யொன்றும் வேண்டிலம் அம்மா; சகல பிராணிகட்கும்
அனை என்று நீ உறலாலே சரண் என்று அடைந்தனம் யாம்
உனையன்றி வேறில்லை என்று நன்றாய் எம் உளத் தெண்ணியே. 24

எண்ணிய எண்ணங்கள் ஒன்றாகிலும் நிறைவேறவில்லை;
பண்ணிய தீவினைக்கு என்றோ, எமக்கு இப்படி அமைத்தாய்?
திண்ணிய வந்த வினைகள் எல்லாம் இனித் தீர்வது எந்நாள்?
தண்ணிய எங்களை ஈடேற்றுவது எந்நாள்? உரையே. 25

நாளுக்கு நாள் விலை ஏறுதம்மா! கடன் ஆகுதம்மா!
தேளுக்கு நேர் இந்தப் பஞ்சத்திலே என்ன செய்வம் அம்மா?
வாளுக்கு உவமை சொலும் விழிக் காந்திமதி அம்மை நின்
தாளுக்கு நாங்கள் அடிமை என்றே வந்து சார்ந்தனமே. 26

தனத்தைப் படைத்திருந்தால் நன்மை ஏற்பவர் தங்களுக்கே;
அனத்தைப் படைத்திருந்து ஆனந்தமே பெறலாம்; அதன்றி
மனத்தைப் படைத்திருந்தால் மாத்திரம் தவம் வாய்த்திடுமோ?
எனத்தைப் படைத்திருந்தால் என்ன என்று உள்ளம் ஈர்க்கின்றதே. 27

ஈர்க்கப் பதறும் நெஞ்சுற்றோம்; இப் பஞ்சத்தில் ஏழைகளைப்
பார்க்கப் பதறுதம்மா! இதை யார் சகிப்பார் என்று உடல்
வேர்க்கப் பதறுதல் கண்ணாரக் கண்டும், இவ்வேதை எல்லாம்
தீர்க்கப் பதறுவதோ தயவான திருவுள்ளமே? 28

உள்ளக் கவலை எவ்வாறு உரைப்போம்? உன்னுடன் பிறந்த
கள்ளப் பிரான் வயிற்றில் வேதனையுற்றும், காட்டில் சென்றும்
கொள்ளப் படாத கொடும் படையாய், பஞ்சம் கூடுகையால்
அள்ளி மண்ணைத் தின்று மாவடி காப்பது யாம் அறிந்தே. 29

யாமளையே! உன் மணவாளரோடு உரைத்தாலும் அவர்
தாம் என் செய்வார் என்று உள் எண்ணுதம்மா; என்னத்தால் எனிலோ,
ஈமத்திலே நடித்து எக்காலும் பிச்சை எடுத்து அலைந்து உண்
டே, மலைவாய் முகமும் பஞ்சம் காட்டி இருத்தல் கண்டே. 30

கண்டனம் செய்யும் கணபதியே, பஞ்சம் கண்டு மெய்து
வண்டனம் என்றனம்; கேட்டு எனமோ முகம் மாற வைத்துக்
கொண்டனன்; இங்கு எனக்கும் பஞ்சமாகக் கைகூடிற்று என்று
விண்டனனால்! எங்கட்கு ஆர் துணை நீயும் கைவிட்டி டிலே? 31

விட்டுணு தங்கச்சியே! இரப்போர் எங்கள் வீட்டில் வந்தால்
இட்டுணும் வண்ணம் நிதியளிப்பாய், பஞ்சமே தளையாய்க்
கட்டுணும் எங்கள் துயர் தவிர்ப்பாய் என்று கண்டு திடுக்
கிட்டுணர்ந்தே பணிந்தோம்; விலக்காய் இக் கெடுதலையே. 32

தலை எழுத்து ஈதென்று கண்டோம்; பெருமை தளரக் கண்டோம்;
விலை ஒரு கோட்டை நெல் ரூபாய் பனிரெண்டு விற்கக் கண்டோம்;
நிலை கெடப் பஞ்சமும் சேரக் கண்டோம்; துன்பம் நேரக் கண்டோம்;
அலைய விடாது எம்மை ஆட்கொள்ள நீவரக் காண்கிலமே. 33

காணுதி! இப்பஞ்சத்தில் அம்மா எம் கஷ்டக் கணக்கைச் சொல்லத்
தோணுது; மெத்தவும் உன்பால் வந்தே உன் துணை யடியைப்
பேணுதும், காந்திமதியே! நிதியுள்ள பேரைக் கண்டால்
நாணுது; நீ இரங்காவிடில் ஆர் சொல்வர் ஞாயம் என்றே? 34

ஞாயிறு போன்ற குழைக்காதும், திங்கள் நகைமுகமும்
தூய செவ்வாயும், சிலப்புதனைக் கொடு இணையடியும்
வேய வியாழமர் செங்கையுமாய், வெள்ளிடப மிசை
நீ எழுவாய், பஞ்சமிஞ் சனி யாயங்கள் நீங்கிடவே. 35

நீங்கித் தளர்ந்திடும் உள்ளன்பிலார் பத்தி; நித்த நித்தம்
தாங்கித் தளர்ந்திடும் சண்டாளரைப் புவி; தாழ் சுடரின்
ஓங்கித் தளர்ந்திடும் ஈயாதவர் செல்வம்; ஊனும் இன்றி
ஏங்கித் தளர்த்திடும் பஞ்சத்தில் ஏழைகள் எங்கெங்குமே. 36

எம் குறைபாட்டை எல்லாம் சொலக் கேள்; பஞ்சம் என்பது எமை
இங்கு உறைபோலவும் மூடிற்று அம்மா; மனத்து இன்னலெனும்
கங்கு உறையா வண்ணம் செங்கதிராகிக் கங்காதரனார்
பங்கு உறை காந்திமதியே! திருவருள் பாலிப்பையே. 37

பாலிக்கும் காந்திமதி எனும் தெய்வம் இப் பார்புகழ் நெல்
வேலிக்குள் நீ ஒரு தாய்போல் இருந்தும், வெகுண்டு பஞ்ச
காலத்தைப் போக்க நினையாதது என்ன காரணமே?
நீலித் தனத்தைச் சரிக்கட்டவோ இந்நிலை நின்றதே? 38

நிலைநிற்க ஏழைக்கு இரங்கி, எக்காலமும் நெல் மலிந்து
விலை விற்கவே திங்கள் மும்மாரி பெய்விக்க வேண்டும் அம்மா!
உலை உற்கம் போல் கனன்று எத்தனை நாள் கொதிப்போம்? இப்படி
அலையற்கு இனி எங்களால் முடியாது. நெல்லை வடிவே. 39

வடிவே! எம் காந்திமதியே! இப்பஞ்சத்தின் வன்மை சொல்ல
மிடியேம் எங்கட்கு ஆயிரம் வாயாகிலும் இனி வேண்டும்; இந்தப்
படி ஏங்க வைத்தது எது காரணத்துக்கு? பாவத்தினால்
அடியேங்கள் செய்த குறையோ, சொல்! இப்படி ஆனதுவே. 40

ஆனாலும், அம்ம! இப்பஞ்சத்துக்கு ஏது இனி ஆற்றுவமோ?
போனாலும் நம் உயிர் போகட்டும் என்றுனைப் போற்றுவமோ?
தானா இது தெளியாது; இது நீங்க உன் தண்ணருள் செய்;
மானாபி மானமும் காத்தருள் காந்தி மதியம்மையே. 41

மதியேதும் இன்றி மனம் மருண்டோம் பஞ்ச வன்மையினால்;
துதியே உனைச் செய்தும், அம்மா எமக்கு இந்தத் துன்பம் வந்த
விதி ஏது? காந்திமதியே! அருள் எங்கள் மீதில் வைக்கத்
ததியே இப்போதன்றி வேறெந்த நாள், சொல் சதாநந்தியே? 42

நந்தா மணி விளக்கே! செல்வியே! நெல்லை நாயகியே!
செந்தாமரை மகள், நாமகள் போற்றும் சிகாமணியே!
சிந்தாகுலம் கெட, மெய்யடியார்கள் இச்சிப்பது எல்லாம்
தந்தாளும் காந்திமதியே! இரங்கு அருள் தன்மை கொண்டே. 43

கொண்டாடுவார் இந்தப் பஞ்சத்தை நெல் கட்டிக் கொண்டு விற்போர்;
திண்டாடினோம் புகல் வேறே இடமின்றி; செல்வரைப் போய்க்
கண்டாலும் பேசிலர்; வெம்பசியால் அவர் காதினிலே
விண்டாலும், ‘தள்ளு, தள்ளு' என்பார்கள் சீறி வெடுவெடென்றே. 44

வெடுவெடென்றே சொலும் வீணரைப் பாடி வியந்து, அலைந்து
கொடுகொடு என்றாலும் இங்கு அம்மா, அரைச்சல்லி கூடக் கொடார்;
அடிமை கொள் காந்திமதியே! இதனை அறிந்திருந்தும்
கடுகளவாயினும் நீ இரங்காதது என்ன காரணமே? 45

கார் அணி சேர்ந்த குழலாளை, அம்மையை, காந்திமதிப்
பேர் அணி சேர்ந்த உமையாளை, துன்பப் பிணி மருந்தை,
சீர், அணி சேர்ந்த கவியால் தினம் துதி செய்திடுவோம்,
ஓரணி சேர்ந்த இப்பஞ்சத்தின் மூர்க்கங்கள் ஓய்வதற்கே. 46

ஓயாக் கவலை ஒழிவது எப்போது என உன்னிடத்தில்
நாயாய் அலைகின்ற இவ்வேளையில், நெல்லை நாயகியே!
நோயான பஞ்சமும் வாதிக்குதே! இந்த நுண் பலத்தைத்
தாயான உன்னுடன் சாற்றாமல் யாருடன் சாற்றுவதே? 47

சாற்றரும் சீர்த்தி உடையவளே! நல் தடம் பொருனை
ஆற்றின் நெடுந்துறை மேல் பாரிசத்தில் அமர்ந்தவளே!
மாற்றிடுவாய், இந்தப் பஞ்சத்தை, அம்ம! உன் மாமலர்த்தாள்
போற்றிடும் தொண்டர் செய் குற்றங்கள் யாவும் பொறுப்பவளே! 48

பொறுமைக் குணம் நினக்கு என்பது கஷ்டம் பொறுத்தலையோ?
சிறுமைப் படுவதும், பட்டதும் போதும், இச் சென்மத்துக்கும்
மறுமைக்கும் காணும்; அதினும் இப் பஞ்சத்தின் மாகொடிய
வறுமைப் பிணிகள் வந்தால், அதைப் போலில்லை மானிகட்கே. 49

மானம் கொடு; நல்வரம் கொடு; மங்கள வாக்குக் கொடு;
ஞானம் கொடு; பஞ்சம் நீங்கிடவே அருள் நாட்டம் கொடு;
நானம் கொடுங்கமழ் பூங்குழலே! நெல்லை நாயகியே!
ஈனம், கொடும் துன்பம் நாடாது இங்கு உய்வண்ணம் எம் தமக்கே! 50

எந்தக் கவலையினும் கொடிதானது இல்லாமை; அது எம்
சொந்தக் கவலை; அது தீரவில்லை; இத்தொல்லையுடன்
பந்தக் கவலை ஒப்பாகிய பஞ்சம் பரவிற்றம்மா!
இந்தக் கவலைப் பட முடியாது எங்கட்கு இன்னமுமே. 51

இன்னபடி என்று உரையாதிருப்பதும் என்ன? முகில்
அன்ன படிவக் குழல் உமையே! நெல்லையப்பர் முன்னம்
சொன்ன படி நெல் இரு நாழி ஈவதில் சோர்வும் உண்டோ?
என்ன படி அளக்கின்றார்? எங்கட்கு அதையேனும் சொல்லே. 52

சொல் - பொருள், பூ - மணம், எள் - எண்ணை, கன்னல் - சுவை எனவே
பற்பல சராசரத்தும் கலந்தே நின்ற பார்வதியே!
நெல் படியேறும் படிக்கு அருள்வாய், பஞ்சம் நீக்கி, அம்மா!
வெற்பரையன் தந்த கண்மணியே! நெல்லை மெய்ப் பொருளே. 53

மெய்க்க அநேகரைச் செல்வர்களாய்ப் புவி மீதில் வைத்தாய்;
மிக்கவும் எங்களைப் பொல்லா வறுமையில் வீழ்த்தி விட்டாய்;
மக்களிலே பக்ஷபாதம் செய்தால் எவ்வகை பிழைப்போம்?
திக்கு உனையன்றி ஒருவருண்டோ, பஞ்சம் தீர்ப்பதற்கே? 54

தீராத வல்வினை தீர்ப்பாய் என்றே மறை செப்புதலை
ஓராது இதுவரை வீணே அலைந்தனம்; உன்னை யன்றி
யாரார் இருந்தென்ன? காந்திமதீ! இனியாவது அருள்
கூராவிடில் சொல்வது எவ்வாறு உனை அனுகூலி என்றே? 55

கூலிக்கு வேலைகள் செய்தே பிழைப்பவர் கொட்டைகள் நூற்
றால், இக் குவலயத்தில் பிழைப்பு உண்டென்று உள்ளார்கள்; உன் நெல்
வேலிக்குள் இவ்விதம் பஞ்சம் கண்டால் எவ்விதம் பிழைப்பார்?
பாலிக்க வேண்டும், அம்மா! இந்த வேளை கண் பார்த்தருளே! 56

பார்வதியே! எந்தத் துன்பமும் நின் அருள் பார்வையினால்
தீர்வது; இப் பஞ்சம் மாத்திரம் ஏன் அதில் தீர்வதில்லை?
சோர்வு அது இல்லாது உங்கள் எண்ணம் கைகூடும், சுகம் உண்டாகும் என்று ஆ
சீர்வதி, காந்திமதி அம்மையே! எங்கள் சீர் நினைந்தே. 57

நைந்து சொல் நோக்கம் அறிவாய்; முன் சுந்தரனால் நடந்து
சந்து சொன்னோன் மகிழ் சேர் காந்திமதி! உன் சந்நிதியில்
வந்து சொன்னோம்; இன்னமும் தீர்ந்திடாததில் வாடி, மனம்
நொந்து சொன்னோம்; பொய்த்ததோ இடைக்காடர்தம் நூல் என்றுமே? 58

நூல் பஞ்ச லக்ஷணம் கற்று உனைப் போற்றும் மனுக்களும், பார்
மேல் பஞ்ச லக்ஷணம் கண்டு நொந்தார்; உன்னை வேண்டின பேர்க்கு
ஏற்பஞ்ச லக்ஷணம் காட்டாது ஒழிப்பை எனும் சொல்லும் பொய்யோ?
தோல் பஞ்ச லக்ஷணம் காண் நடையாய் என் கொல் சூழ்ந்ததையே? 59

ததைப்பாய் அளி முரல் பூங்குழலாளுக்கு, தாரகம் என்று
அதைப் பாதுகாக்கும் நெல்லை வடிவாளுக்கு அடிமைப் பட்டும்
பதைப்பால் முன்போல் பஞ்சத்தாலே வருத்தப்படுவது என்றால்
இதைப் பார்க்கிலும் இங்கு அதிசயம் வேறு இனி என்ன உண்டே? 60

என்ன பிழைப்பு எம்பிழைப்பு என்று நாங்கள் எடுத்துரைப்போம்?
கன்னல் மொழி நெல்லை நாயகியே! பஞ்ச காலத்திலே
மன்னர் தயவு சம்பாதித்துமே பெரு வாழ்வு பெற
உன் அபிமானம் இல்லாவிடில் எவ்வண்ணம் உய்வண்ணமே? 61

உய்வண்ணம் நாங்கள் வந்து உன் தாட்கு அடிமைப் பட்டோம், வடிவே!
கை வண்ணம் கால் வண்ணம், காந்தள் செந்தாமரை காட்டும் உன்றன்
மெய் வண்ணம் பாதி கொள் வேணுவனேசர்க்கு விண்டு, உதவி
செய்வண்ணம் நீ உளம் கொள்வாய் இப்பஞ்சம் தெளிந்திடவே. 62

தெளித்துக் கொள்ளா மருள் சிந்தையர் ஆயினும், தேடுபவர்க்கு
ஒளித்துக் கொள்ளா உன் சேவை கண்டால் எவர்க்கும் குறையோ?
நெளித்துக் கொள் ஆடு அரவார் புயம் சேரும் நெல்லை வடிவே!
சுளித்துக் கொள்ளாது இந்தப்பஞ்சத்தை என்று சுருக்குவையே? 63

சுருக்காம் இந்நல்வழி முன் தெரிந்தீர் இல்லை, தொல் புவியீர்!
பெருக்கான பேய்மதி நீர் படைத்தீர்; இனிப் பேசில் என்ன?
மருக்கால் எறி குழலாள் நெல்லைக் காந்தி மதியம்மை பேர்
ஒருக்கால் சொன்னால் பஞ்சமெல்லாம் பஞ்சாய்ப் பறந்தோடிடுமே. 64

ஓடம் கவிழ்த்த விதம் போல், பொருள் எங்கட்கு உள்ளதெல்லாம்
கூடும் இப் பஞ்சம் கவிழ்க்கின்றது என்ன கொடுமையம்மா
சூடகக்கை நெல்லை நாயகியே! பஞ்சம் தோன்றி எம்மை
ஈடுபடுத்திய கஷ்டத்துக்கே இல்லை எல்லையுமே! 65

எல்லாரைப் போலவும் வைத்தனையோ? எம்மை இவ்வுலகில்
இல்லாளர் ஆக்கி, பசித்தோர்க்கு அனம் இல்லை எனச் செய்யும்
இல்லாமை ஒன்று அதை இல்லாமை ஆக்குவது என்றைக்கு? அதும்
சொல்லாது இருப்பதுவோ? நல்ல நீதி! உன் தொண்டர்கட்கே! 66

கட்கடை கொண்டு சற்றாயினும் பார்; சங்கடங்களைக் கேள்;
உட்கி, மனத்துள் விசாரத்தினால், உடல் உப்பிருந்த
மட்கலம் போலவும் ஆனது; இவ் வேளையில் வந்தருள்வாய்,
சட்கம லானனைப் பெற்றவளே! நெல்லைச் சங்கரியே. 67

சங்கார் தடங்கை நெல்லை வடிவே! துன்ப சாகரத்துள்
முங்காது இருக்க இனியாகிலும் அன்பு முற்றும் வைப்பாய்;
எம் காதல் தீர்ந்திட, இங்கு ஆதரவுடன் எங்களுக்கு
மங்காத செல்வம் தந்து, எந்நாளும் காத்து வரல் முறையே. 68

முறைக்கு உன் குழந்தைகள் யாம்; பஞ்சத்தால் பட்ட மோசமெல்லாம்
மறைக்கும் தெளிதற்கு அரிதான வேணு வனத்தர் எனும்
இறைக்கும் உனக்கும் விபரம்தாய் முறையிட்டும், இன்னம்
உறைக்கும் வெயில் மிகுதே! இதுவோ உன் உதவியுமே? 69

உதறுதம்மா உடலைப் பசிநோய்; மன ஊக்கங்களும்
சிதறுதம்மா; நிர்க்கதியாகி ஏழைச் சனங்கள் எல்லாம்
கதறுதம்மா; இப்படிப்படும் பாரதம் காண, நெஞ்சு
பதறுதம்மா; எப்படிப் பிழைப்போம் என்று இப் பஞ்சத்திலே. 70

பஞ்சத்திலே இந்த வல்விலையால் படும் பாட்டை, அம்மா,
கொஞ்சத்திலே சொல்வதுண்டோ? அந்து ஊது நெற்கு ஒப்பந்தமாய்
நெஞ்சத்திலே ஒரு ஆதாரமும் இல்லை; நெல்லையில் வா
ழும் சாத்தியே இந்த வேளை தற்காப்பதும் உன் பரமே! 71

பரமேட்டி கற்பனையோ பஞ்சத்தால் களைப்பாகியது
யரம் ஏட்டிலே அடங்கத் தக்கதோ, சொல்! அருமை கெட்ட
நர மேட்டிமை கொண்ட பேர்களைப் பாடியும் நாள் கழித்த
தரம், மேட்டிற்கே இறைத்திட்ட தண்ணீரினும் தாழ்வுற்றதே.72

தாழ்ந்து பணிந்தனம், அம்மா! பொல்லாத பஞ்சக் கொடுமை
சூழ்ந்து கொண்டு எங்களை வாட்டுதம்மா! இங்கு உன் தொண்டர் என
வாழ்ந்திடும் தரங்கள் ஒரே தீர்வையாய் வறுமைக் கடலில்
ஆழ்ந்து விடுதல் நன்றோ? தொலைப்பாய் இந்த அல்லலையே. 73

அலையா அலைச்சல் அலைந்தே இப்பஞ்சத்தினால் எளியேம்
உலையார் மெழுகு ஒத்து உருகினம்; தீர்க்க உனக்கு இதென்ன
மலையா? எம் காந்திமதியே! பராமுகமாய் இருந்தால்
நிலையா வறுமைக் கடலில் எவ்வாறு அம்ம, நீந்துவதே. 74

நீந்தரும் பஞ்சத்தினால் கயவோரை நெருங்கில், இறு
மாந்து இழிவாய் மதிக்கின்றார்; பிறர்தம் வருத்தங்களை
ஆய்ந்து உணரார்; இவர் ஏன் பிறந்தார் இந்த அற்பர் கட்கும்?
காந்தி மதியம்ம! எல்லாம் உன்னால் வந்த கட்டுமெட்டே. 75
மெட்டுக் கெட்டோம் பொருள் இல்லாமையால்; நெல் விலைகள் எங்கள்
மட்டுக்கு எட்டாதபடியானது; அன்றியும் வாழை இலை
துட்டுக்கு எட்டாம்! அதுவும் கிடையாது, அலைந்தோடி எங்கும்
தட்டுக் கேட்டு ஏங்கினது, அம்மா! சொலவும் தரம் இல்லையே. 76

இல்லுக்குச் சங்கடம் தீர்வது என்றோ என்றிருக்கையிலே,
நெல்லுக்குச் சங்கடம் ஆச்சு; இது கூறி, நிதி உளர்பால்
மல்லுக்கு நின்று மனமோ சலித்தது, அம்மா! பழைய
செல்லுக்குப் போக்கென்ன சொல்வோம் என்றுள்ளம் திகைப் புற்றதே! 77

திகைப்புக்கு இடம் இப்படி சிறியேங்கள் திரிவதென்றால்
நகைப்புக்கு இடம் அல்லவோ உனக்கே! இது நாள் வரைக்கும்
பகைப்புக்கு இடம் மிடியால் வைத்தல் போதும்; கண் பார்த் தருள்வாய்,
சிகைப்புக்கு இடம் கங்கைக்கே தந்த ஈசனைச் சேர் மயிலே! 78

மயில் விளையாடும்படி மேகம் சூழ்ந்து மழை விழுந்தால்
வெயில் விழுமோ இப்படியே? அப்போ நெல் விலையும் விழும்;
செயில் விழும் வித்தும் விளைவாய், இப்பஞ்சத்தினை விழுங்கும்
அயில்விழிக் காந்திமதியே! குறை என், அடிமைகட்கே? 79

அடிமைகட்கும் வரலாமோ இக்கஷ்டம்? அதிக செழிப்
பொடும், ஐயமின்றி நெல் எங்கெங்குமே விளைந்தும், அடியால்
கடுமைய தாய்ப் பந்து உயர்ந்தது போல் என்ன காரணமோ,
கொடுமைய தாம் விலை ஆயிற்று, அம்மா, ஒரு கோட்டை நெல்லே! 80

நெல் மண்டிக்கு ஏகக் கணக்கில்லை; உப்புடனே மிளகாய்
புல் மண்டியோடு கடித்தே குடிக்கப் பொருந்துவதில்
சொல் மண்டி, நோயும் மண்டி, கும்பி காந்தித்து உறுத்து மண்டி, அல்
மண்டிடும் குழலாய்! இதுவோ உனது ஆதரவே? 81

ஆதரிப்பார்கள் ஒருவரும் இல்லை இங்கு, ஆண்டவளே!
நீதர் இப்பார் மிசைக் காணோம், பொருளை நினைந்து தண்ணீர்
மீதரிப்பார்களில் தேடியும் கங்கையை வேணி தனி
லே தரிப்பார் பங்கு இருப்பவளே உன்னை அன்றியுமே. 82

அன்றொருக்கால் வந்த பஞ்சத்தை நீ தொலைத்தாய்; அதுபோல்
இன்றும் இப் பஞ்சத்தை நீயே தொலைத்து, இங்கு எமைப் புரப்பாய்;
உன் திருவுள்ளம் இரங்கிடில் எவ்வுயிரும் பிழைக்கும்;
அன்று எனிலோ கதியில்லை, அம்மா, நெல்லை அம்பிகையே! 83

அம்பிகை காந்திமதியே! எந்நாளும் அடுத்தும் உன்னை
நம்பின பேர்பெறும் பேறு இதுவோ? அன்னபானமின்றி
வெம்பின ஏழைகள் ஈடேற, நீ இந்த வேளை ஒரு
சிம்புள் என வந்தொழிப்பாய் பஞ்சானன சிம்மத்தையே. 84

சிம்மாசன பதி கேள்வியும் இல்லை; நெல் சேர்வை கட்டி
இம்மாய வல்விலை கூறுகின்றார்; கடனேனும் நல்கார்;
கைம்மேல் பணம் கொண்டுவா என்கின்றார் : கையில் காசுமில்லை;
அம்மா! இந்தப் பஞ்சத்தில் எவ்வாறு உய்வோம் என அஞ்சினமே. 85

சினமோ உனக்கு எங்கள் மீதில், அம்மா? கொடுந்தீவினை செய்
தனமோ? அலது இந்தப் பொல்லாக் கலியுக தன்மம் இதோ?
எனமோ தெரிய விலையே! இரக்ஷத்திட இனித்தான்
மனமோ? எம் காந்தி மதியே, சொல் இப்பஞ்சம் வந்ததுவே. 86

வந்தனை செய்து உனைப் போற்றாதவரிடம் வைத்திடும் கோ
பம் தனைக் கொண்டு இந்தப் பஞ்சத்தை நீ வரப் பார்த்திருந்தால்
உந்தனையே பணிவோரும் அம்மா, அதற்குள் மெலிந்து
நிந்தனைக்கே இடமாகில் என்னாகும் உன் நீதிகளே? 87

நீ திருவாய் மலர்ந்து அஞ்சல் என்றால், உடனே புவியின்
மீதினிலே இந்தப் பஞ்சமும் நீங்கும்; விளைவும் மிகும்;
மேதினி மேல் ஒரு கஷ்டமும் இல்லை என்று இங்கு யாங்கள் உய்வோம்
மாதிரு நெல்லை நகர் வாழும் காந்தி மதி யம்மையே. 88

அம்மா அம்மா என்று அழும் குரல் கேட்டு இரங்காமலும், தாய்
'சும்மா கிடக்கட்டும் போ, என்பளோ? பெற்ற தொந்தம் விட்டே
இம்மாதிரி வன்மை கொண்டது என்னே? அன்னை என்றிருந்தும்
பெம்மான் நெல்லேசர் மகிழும் இமாசலப் பெண்ணரசே. 89

அரசற்ற ஆக்கினை உண்டோ? இது முதலாக மழை
வருஷித்துப் பூமி செழிக்கச் செய்து, அம்பல வாணரிடம்
பரிசுற்ற காந்திமதி அம்மையே! இந்தப் பன்னிரண்டு
வருஷத்துப் பஞ்சத்தை நீக்கி, அன்பாய் எம்மை வாழ் விப்பையே. 90

வாழ்வில் குறையில்லை; கண்ணேறும் இல்லை; வறுமை இல்லை;
தாழ்வில்லை நோயில்லை; அஞ்சுதல் இல்லை; பஞ்சங்கள் இல்லை;
பாழ்வினையால் துன்பமும் இல்லை; நெல்லைப் பதி வடிவைச்
சூழ்வரும் தொண்டர்கட்கு என்றறிந்தோம்; இதில் சோர் வில்லையே. 91

சோரா மனமுண்டு; மாறாமல் இன்ப சுகமும் உண்டு;
பாராளும் மன்னர் பவுசுண்டு; பார்மிசைப் பஞ்சம் இனி
வாராது அருள் நெல்லை நாயகி காந்திமதி யம்மையைப்
பேராதரமுடன் போற்றிடவே அன்பு பெற்றவர்க்கே. 92

பெற்றோம் சகல வரங்கள் எல்லாம்; பெற்றபின் கவலை
அற்றோம், அனுதினம் பொற்றாமரைப் புனலாடி மகிழ்வு
உற்றோம்; இந் நெல்லை வடிவாளை அன்றி மற்றொன்று மனம்
பற்றோம்; அவள் அருளாலே நிதியும் படைத்தனமே. 93

படை கொண்டு வந்த இப்பஞ்சம் தெளியவும், பத்தர் மனத்
திடை கொண்டுள துன்பு ஒழியவும், கோபித்து எழும் புலித்தோல்
உடை கொண்டு, கங்கையணி நெல்லை நாதருடன் திருமால்
விடைகொண்டு காந்திமதித்தாய் பொன் ஆலயம் மேயினளே. 94

மேய விண்ணார்ந்திட்ட ஐங் கோபுரங்கள் விளங்கு திருக்
கோயிலுள் நெல்லை வடிவாளை, பண்டு செங்கோல் அறுபது
ஆயிரம் ஆண்டு முடி தரித்தே உலகு ஆண்டவனைத்
தூய கண்ணால் தரிசித்தோம்; அற்றோம் எம்துயரம் இன்றே. 95

அரம் என்று உளே நின்று அறுக்கும் கவலை எல்லாம் தொலைத்தாள்!
திரமென்று மிக்க பொருள் அளித்தாள்; பஞ்சம் தீர்த்து விட்டாள்!
வரம் என்றும் நீட அருளினள்; காந்திமதியம்மையைப்
பரம் என்று நம்பின பேர்க்கு ஒருநாளும் பழுதில்லையே. 96

பழுது வராது புரந்தாய், அம்மா இந்தப் பஞ்சத்திலே
தொழுது வரா நின்ற வெம்கலி தீர்ந்து சுகம் அடைந்தோம்;
முழுதுவராம் இதழ்த் தாயே! உன் கீர்த்தி முழுமையையும்
எழுதுவர் ஆர்? அடங்காது பிரமானந்தம் எய்தியதே. 97

எய்தரும் மோக்ஷம் விரும்பாமல், காமியமே விரும்பி,
கைதொழுது இவ்வண்ணம் வேண்டிய எங்கள் கருத்தின்படி
உய்திறம் தந்தது போலே பரகதியும் பெறவே
செய்திடக் காந்திமதியே எவ்வாறு உன் திருவுளமே? 98

உளமே கொண்டாய் என்றறிந்தோம்; இனி குறை ஒன்றுமில்லை;
அளகா புரியினும் ஓங்கிய சீர் நெல்லை யம்பதியுள்
புளகாங்கிதமுடன் வாழ்வோம்; எங்கெங்கும் முப் போகங்களும்
விளைவாக என்றென்றும் மாதம் மும்மாரி பெய்விப்பதற்கே. 99

விப்பிராதி குலம் வாழ்க! தன்மம் விளங்க! முறை
தப்பின்றி மாரி பொழிக! இப்பூமி தழைக்க! மனம்
ஒப்பிய காந்திமதியே! இப் பஞ்சம் ஒழிந்தது என்றே
செப்பி இனிது அருள் செய்தாய், திரு நெல்லைச் செந்திருவே. 100

நேரிசை வெண்பா

நூறு கலித்துறையும் பாடினுமக் களவில்
பேறு கலித்துறையும் பேருலகீர் - தேறுமன்பு
கந்தெளிதா யென்று நெல்லைக் காந்திமதி யே கொடும்பஞ்
சந்தெளிதா யென்றுள்ள தால்.

திரிபங்கி

துயர் நல்காள், நெஞ்சமே சேர்ந்திடு வானேன்? புன்
செயல்தொடுத்த பஞ்சமே தீர்ந்தும் - பயம் இனியென்?
செஞ்சாலி சேர்ந்தவிலை சாய்தல் கண்டோம்; தீவினை தீர்
சஞ்சீவி காந்திமதித் தாய்.

திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி முற்றிற்று