குறள் மூலம்

நேரிசைவெண்பா

நல்லோர் பிறர்குற்ற நாடார் நலந்தெரிந்து
கல்லார் பிறர்குற்றங் காண்பரோ-அல்லாத
என்போல்வா ரென்னை யிகழ்வரோ வென்கவிக்குப்
பின்பாரோ காண்பார் பிழை.

ஈதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங்
காதலிரு வர்க்குங் கருத்தொருமித்-தாதரவு
பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

ஒளவைகுறள்

முதலாவது : வீட்டுநெறிப்பால்

1.1. பிறப்பினிலைமை

ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத்
தோதிய நூலின் பயன். 1

பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு. 2

ஓசைபரிச முருவஞ் சுவை நாற்றம்
ஆசை படுத்து மளறு. 3

தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்
உருவத்தா லாய பயன். 4

நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே
உலவையிரண் டொன்று விண். 5

மாயன் பிரம னுருத்திரன் மகேசனோ
டாயுஞ் சிவமூர்த்தி யைந்து. 6

மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலுந் திகழ்சத்தி யாறு. 7

தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக ளேழு. 8

மண்ணொடு நீரங்கி மதியொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. 9

இவையெல்லாங் கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து. 10

1.2. உடம்பின்பயன்

உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம்
உடம்பினி லுத்தமனைக் காண். 11

உணர்வாவ தெல்லா முடம்பின் பயனே
யுணர்க வுணர் வுடையார். 12

ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார். 13

பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. 14

உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னியதே யாம். 15

மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு. 16

ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்
நேசத்தா லாய வுடம்பு. 17

உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு. 18

உடம்பினாற் பெற்ற பயனாவ தெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு. 19

அன்னத்தா லாய வுடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும். 20

1.3. உள்ளுடம்பினிலைமை

கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலாம்
உற்றுடம்பா லாய வுணர்வு. 21

வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய
உள்ளுடம்பி னாய வொளி. 22

சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்
பென்றுங் கெடாத திது. 23

வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கும்
ஒருபயனைக் காட்டு முடம்பு. 24

அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய
தொல்லை யுடம்பின் றொடர்பு. 25

நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ்
செய்வினைக்கும் வித்தா முடம்பு. 26

உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக்
கள்ளவுடம் பாகி விடும். 27

பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற்கோர் வித்தாகு
மெய்க்குள்ளா மாய வுடம்பு. 28

வாயுவினா லாய வுடம்பின் பயனே
ஆயுவி னெல்லை யது. 29

ஒன்பது வாசலு மொக்க வடைத்தால்
அன்பதி லொன்றா மரன். 30

1.4. நாடிதாரணை

எழுபத்தீ ராயிர நாடியவற்றுள்
முழுபத்து நாடி முதல். 31

நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லாம்
உரம்பெறு நாடியொன் றுண்டு. 32

உந்தி முதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து. 33

காலொடு கையி னடுவிடைத் தாமரை
நூல்போலு நாடி நுழைந்து. 34

ஆதித்தன் றன்கதிர் போலவந் நாடிகள்
பேதித்துத் தாம்பரந்த வாறு. 35

மெய்யெல்லா மாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு. 36

உந்தி முதலாகி யோங்காரத்துட் பொருளாய்
நின்றது நாடி நிலை. 37

நாடிக ளூடுபோய்ப் புக்க நலஞ்சுடர்தான்
வீடு தருமாம் விரைந்து. 38

நாடிவழக்க மறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்ப தறிவு. 39

அறிந்தடங்கி நிற்குமந் நாடிக டோறுஞ்
செறிந்தடங்கி நிற்குஞ் சிவம். 40

1.5. வாயுதாரணை

மூலத்தினிற் றோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண். 41

இடை பிங்கலைக ளிரேசக மாற்றில்
அடையு மரனா ரருள். 42

அங்குலியால் மூடி முறையா லிரேசிக்கில்
பொங்குமாம் பூரகத்தி னுள். 43

எண்ணிலி யூழி யுடம்பா யிரேசிக்கில்
உண்ணிலைமை பெற்ற துணர்வு. 44

மயிர்க்கால் வழியெல்லா மாய்கின்ற வாயு
உயர்ப்பின்றி யுள்ளே பதி. 45

இரேசிப்பது போலப் பூரித்து நிற்கில்
தராசுமுனை நாக்கதுவே யாம். 46

கும்பகத்தி னுள்ளே குறித்தரனைத் தானோக்கில்
தும்பிபோ னிற்குந் தொடர்ந்து. 47

இரேசக பூரக கும்பக மாற்றில்
தராசுபோ னிற்குந் தலை. 48

வாயுவழக்க மறிந்து செறிந் தடங்கில்
ஆயுட் பெருக்க முண்டாம். 49

போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்கும்
தாழ்கின்ற வாயு வடக்கு. 50

1.6. அங்கிதாரணை

அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கில்
பந்தப் பிறப்பறுக்க லாம். 51

உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூறில்
கள்ளமல மறுக்க லாம். 52

எரியுந் தழல்போல வுள்ளுற நோக்கில்
கரியுங் கனலுருவ மாம். 53

உள்ளங்கி தன்னை யொருங்கக் கொழுவூறில்
வெள்ளங்கி தானாம் விரைந்து. 54

உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சில்
அந்தி யழலுருவ மாம். 55

ஐயைந்து மாய வகத்து ளெரிநோக்கில்
பொய்யைந்தும் போகும் புறம். 56

ஐம்பது மொன்று மழல்போலத் தானோக்கில்
உம்பரொளி யாய் விடும். 57

தூண்டுஞ் சுடரைத் துளங்காமற் றானோக்கில்
வேண்டுங் குறைமுடிக்க லாம். 58

உள்ளத்தா லங்கி யொருங்கக் கொழுவூறில்
மெள்ளத்தான் வீடாம் விரைந்து. 59

ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில்
வெள்ளியா மாலை விளக்கு. 60

1.7. அமுததாரணை

அண்ணாக்குத் தன்னை யடைத்தங் கமிர் துண்ணில்
விண்ணோர்க்கு வேந்தனு மாம். 61

ஈரெண் கலையி னிறைந்த வமிர் துண்ணில்
பூரண மாகும் பொலிந்து. 62

ஓங்கார மான கலசத் தமிர் துண்ணில்
போங்கால மில்லை புரிந்து. 63

ஆனகலசத் தமிர்தை யறிந் துண்ணில்
போனகம் வேண்டாமற் போம். 64

ஊறு மமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம். 65

ஞானவொளி விளக்கா னல்லவமிர் துண்ணில்
ஆன சிவயோகி யாம். 66

மேலை யமிர்தை விலங்காமற் றானுண்ணில்
காலனை வஞ்சிக்க லாம். 67

காலன லூக்கக் கலந்தவமிர் துண்ணில்
ஞான மதுவா நயந்து. 68

எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில்
தொல்லை முதலொளியே யாம். 69

நிலாமண்டபத்தி னிறைந்த வமிர் துண்ணில்
உலாவலா மந்தரத்தின் மேல். 70

1.8. அர்ச்சனை

மண்டலங்கண் மூன்று மருவ வுடனிருத்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு. 71

ஆசனத்தைக் கட்டி யரன்றன்னை யர்ச்சித்துப்
பூசனைசெய் துள்ளே புணர். 72

உள்ளமே பீட முணர்வே சிவலிங்கந்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு. 73

ஆதாரத் துள்ளே யறிந்து சிவனுருவைப்
பேதமற வர்ச்சிக்கு மாறு. 74

பூரித் திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங் கர்ச்சிக்கு மாறு. 75

விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு
துளக்கற வர்ச்சிக்கு மாறு. 76

பிண்டத்தி னுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு. 77

மந்திரங்க ளெல்லா மயங்காம லுண்ணினைந்து
முந்தரனை யர்ச்சிக்கு மாறு. 78

பேராக் கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு. 79

உள்ளத்தி னுள்ளே யுறப்பார்த்தங் கொண்சுடரை
மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு. 80

1.9. உள்ளுணர்தல்

எண்ணிலி யூழி தவஞ்செய்திங் கீசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு. 81

பல்லூழி காலம் பயின்றரனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம். 82

எண்ணற் கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான். 83

முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான். 84

காயக் கிலேச முணர்ந்த பயனன்றே
ஓயா வுணர்வு பெறல். 85

பண்டைப் பிறவிப் பயனாந் தவத்தினால்
கண்டங் குணர்வு பெறல். 86

பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின். 87

ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு. 88

ஆதியோ டொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம். 89

காடுமலையுங் கருதித் தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன். 90

1.10. பத்தியுடைமை

பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
முத்திக்கு மூல மது. 91

பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவ சிந்தையால். 92

அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை. 93

பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து
நேசத்தா லீசனைத்தேடு. 94

கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில்
உண்ணுமே யீச னொளி. 95

நல்லானைப் பூசித்து நாதனென வுருகில்
நில்லாதோ வீச னிலை. 96

அடியார்க் கடியரா யன்புருகித் தம்முள்
படியொன்றிப் பார்த்துக் கொளல். 97

ஈசனெனக் கருதி யெல்லா வுயிர்களையும்
நேசத்தால் நீநினைந்து கொள். 98

மெய்ம்மயிர் கூர விதிர்ப்புற்று வேர்த்தெழுந்து
பொய்ம்மையி லீசனைப் போற்று. 99

செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே
அறிந்தரனை யாய்ந்து கொளல். 100

வீட்டுநெறிப்பால் முற்றிற்று

2. திருவருட்பால்

2.1. அருள்பெறுதல்

அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்க லாம். 101

இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
தெருளுஞ் சிவசிந்தை யாம். 102

வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள். 103

ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால்
அவ்வகத்து ளானந்த மாம். 104

உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னு மருள்பெற்றக் கால். 105

எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்
தொல்லை யருள் பெற்றக்கால். 106

சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும். 107

மாசற்ற கொள்கை மதிபோலத் தான்றோன்றும்
ஈசனருள் பெற்றக்கால். 108

ஆவாவென் றோதி யருள்பெற்றார்க் கல்லாது
தாவாதோ ஞான வொளி. 109

ஒவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்
தாவாத வின்பந் தரும். 110

2.2. நினைப்புறுதல்

கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத்
திருத்திச் சிவனை நினை. 111

குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து
மண்டலங்கள் மேலாகப் பார். 112

ஒர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப்
பார்மின் பழம்பொருளே யாம். 113

சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை
மிக்க மலத்தை விடு. 114

அறிமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந்
துறுமின்க ளும்முளே யோர்ந்து. 115

நிற்றம் நினைந்திரங்கி நின்மலனை யொன்றுவிக்கில்
முற்று மவனொளியே யாம். 116

ஓசையுணர்ந் தங்கே யுணர்வைப் பெறும்பரிசால்
ஈசன் கருத்தா யிரு. 117

இராப்பக லன்றி யிருசுடர்ச் சிந்திக்கில்
பராபரத்தோ டொன்றலு மாம். 118

மிக்க மனத்தால் மிகநினைந்து சிந்திக்கில்
ஒக்கச் சிவனுருவ மாம். 119

வேண்டுவார் வேண்டும் வகைதான் விரிந்தெங்குங்
காண்டற் கரிதாஞ் சிவம். 120

2.3. தெரிந்துதெளிதல்

தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில்
கூறிய பல்குணமு மாம். 121

உண்டில்லை யென்னு முணர்வை யறிந்தக்கால்
கண்டில்லை யாகுஞ் சிவம். 122

ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம்
ஒருவனே பல்குணமு மாம். 123

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். 124

ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும்
ஆயுங்கா லொன்றே சிவம். 125

ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந்
தேவான தென்றே தெளி. 126

தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென்
செம்மையா லீசன் றிறம். 127

எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவர்கள்
நல்லுலக நாத னடி. 128

உலகத்திற் பட்ட வுயிர்க்கெல்லா மீசன்
நிலவுபோ னிற்கும் நிறைந்து. 129

உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன்
அலகிறந்த வாதியே யாம். 130

2.4. கலைஞானம்

சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூல மது. 131

அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்
நயனமா முத்திக்கு வீடு. 132

அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்
துஞ்சாதவர் துறக்கு மாறு. 133

ஈசனோ டொன்றி லிசையாப் பொருளில்லை
தேசவிளக் கொளியே யாம். 134

தாஞ்செய் வினையெல்லாந் தம்மையற வுணரில்
காஞ்சனமே யாகுங் கருத்து. 135

கூடக மான குறியெழுத்தைத் தானறியில்
வீடக மாகும் விரைந்து. 136

வீடகமாக விழைந் தொல்லை வேண்டுமேல்
கூடகத்திற் சோதியோ டொன்று. 137

பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்த தாகுங் கருத்து. 138

இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்
பூரிப்ப துள்ளே சிவம். 139

சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்
சந்திரனிற் றோன்று முணர்வு. 140

2.5. உருவொன்றிநிற்றல்

எள்ளகத்தே தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
உள்ளகத் தீச னொளி. 141

பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து. 142

கரும்பினிற் கட்டியுங் காய்ப்பலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு. 143

பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கும்
வழுத்தினா லீச னிலை. 144

தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி
யணுவதுவாய் நிற்கு மது. 145

வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே
ஒத்துளேநிற்கு முணர்வு. 146

அச்ச மாங்கார மகத்தடக்கினாற் பின்னை
நிச்சயமா மீச னிலை. 147

மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே
வீட்டுளே நிற்கு மியல்பு. 148

நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்
அனைத்துயிர்குந் தானா மவன். 149

ஓசையி னுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து. 150

2.6. முக்திகாண்டல்

மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம்
அனைத்தினு மில்லை யது. 151

வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள்
ஆக்கிய நூலினு மில். 152

உருவமொன் றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம். 153

தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது. 154

பெண்ணா ணலியென்னும் பேரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு. 155

அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம். 156

துனிமுகத்துக் காதியாத் துன்னறி வின்றி
அணிதா ரிரண்டு விரல். 157

மயிர்முனையிற் பாதி மனத்தறி வுண்டேல்
அயிர்ப்புண்டங் காதி நிலை. 158

தற்பர மான சதாசிவத்தோ டொன்றில்
உற்றறி வில்லை யுயிர்க்கு. 159

உறக்க முணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு. 160

2.7. உருபாதீதம்

கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்
உருவின்றி நிற்கு முணர்வு. 161

பிறத்தலொன் றின்றிப் பிறவாமை வேண்டில்
அறுத்துருவ மாற்றி யிரு. 162

உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்
கருவேது மில்லை தனக்கு. 163

கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை
யறுத்துருவ மாற்றி யிரு. 164

அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால்
பினைப்பிறப் பில்லையாம் வீடு. 165

நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு. 166

குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில்
மறித்துப் பிறப்பில்லை வீடு. 167

பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச
விகற்ப முணர்வதே வீடு. 168

பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றியிரு. 169

ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால்
பேசவும் வேண்டா பிறப்பு. 170

2.8. பிறப்பறுதல்

தன்னை யறியு மறிவுதனைப் பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு. 171

அறம் பாவமாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து. 172

சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்
பவநாச மாகும் பரிந்து. 173

உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம். 174

நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்
அனைத்துலகும் வீடா மது. 175

உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு
திடம்படு மீசன் றிறம். 176

தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு. 177

மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம். 178

விகாரங் கெடமாற்றி மெய்யுணர்வு கண்டால்
அகாரமாங் கண்டீ ரறிவு. 179

சிந்தை யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்
முந்தியே யாகுமாம் வீடு. 180

2.9. தூயவொளிகாண்டல்

தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்
தோன்றியக்காற் றூய வொளி. 181

தெளிவாய தேச விளக்கொளியைக் காணில்
வெளியாய வீடதுவே யாம். 182

மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்
முன்போல மூலம் புகும். 183

பளிங்கு வலம்புரி பானிரத்த தாகில்
துளங்கொளியாந் தூய நெறி. 184

சங்கு நிறம்போற் றவள வொளிகாணில்
அங்கையி னெல்லியே யாம். 185

துளங்கிய தூண்டா விளக்கொளி காணில்
விளங்கிய வீடாம் விரைந்து. 186

மின்மினி போன்ற விளக்காகத் தான்றோன்றில்
அன்னப் பறவையே யாம். 187

உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி
அவ்வொளி யாதி யொளி. 188

பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில்
பரம்பரமே யாய வொளி. 189

ஆதி யொளியாகி யாள்வானுந் தானாகி
ஆதியவ னுருவ மாம். 190

2.10. சதாசிவம்

பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். 191

விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். 192

ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி
ஏகமாய் நிற்குஞ் சிவம். 193

வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம். 194

எண்ணிறைந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். 195

ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம். 196

மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்குங்
காலமாய் நிற்குஞ் சிவம். 197

மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம். 198

தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி
ஏத்தவரு மீச னுளன். 199

நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம். 200

திருவருட்பால் முற்றிற்று

3. தன்பால்

3.1. குருவழி

தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள்
அன்பா யிருக்கு மரன். 201

சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம். 202

குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம். 203

தலைப்பட்ட சற்குருவின் சன்னிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம். 204

நெறிபட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிறிவற் றிருக்குஞ் சிவம். 205

நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லை யில்லாத சிவம். 206

நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
தனைப் பிரியாது சிவம். 207

ஒன்றி லொன்றாத மனமுடையா ருடல்
என்று மொன்றாது சிவம். 208

நாட்டமில்லாத விடம் நாட்ட மறிந்தபின்
மீட்டு விடாது சிவம். 209

பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லா அல்
அஞ்ச லென்னாது சிவம். 210

3.2. அங்கியிற்பஞ்சு

அங்கியிற் பஞ்சுபோ லாகாயத்தே நினையில்
சங்கிக்க வேண்டா சிவம். 211

மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின்
அப்பால தாகுஞ் சிவம். 212

நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல்
அஞ்ச லென்னாது சிவம். 213

பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன். 214

தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின்
தம்மை யறிவரோ தான். 215

அசபையறிந் துள்ளே யழலெழ நோக்கில்
இசையாது மண்ணிற் பிறப்பு. 216

இமையாத நாட்டத் திருந் துணர்வாருக்
கமையாத வானந்த மாம். 217

துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு. 218

மதிபோ லுடம்பினை மாசற நோக்கில்
விதிபோ யகல விடும். 219

சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம்
பாவ நசிக்கும் பரிந்து. 220

3.3. மெய்யகம்

மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ்சுடர் நோக்கில்
கையகத்தி னெல்லிக் கனி. 221

கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில்
உரையற் றிருப்ப துணர்வு. 222

உண்டுபசி தீர்ந்தாற் போலுடம் பெல்லா அங்
கண்டுகொள் காதல் மிகும். 223

உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு
நரைதிரை யில்லை நமன். 224

தோன்றாத தூயவெளி தோன்றியக்கா லுன்னைத்
தோன்றாமற் காப்ப தறிவு. 225

வாக்குமனமு மிறந்த பொருள் காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம். 226

கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற வொளி. 227

ஆனந்த மான வருளை யறிந்தபின்
தானந்த மாகு மவர்க்கு. 228

மறவாமற் காணும் வகையுணர் வாருக்
கிறவா திருக்கலு மாம். 229

விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன்
உண்ணிறைந்து நின்ற வொளி. 230

3.4. கண்ணாடி

கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
உண்ணாடி நின்ற வொளி. 231

அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை யுடம்பு. 232

நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு. 233

கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு. 234

சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு. 235

ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில்
பார்க்கும் பரமா மவன். 236

வண்ண மில்லாத வடிவை யறிந்தபின்
விண்ணவ ராகு முடம்பு. 237

நெற்றிக்கு நேரே நிறைந்தவொளி காணில்
முற்று மழியா துடம்பு. 238

மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு. 239

சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழியா துடம்பு. 240

3.5 சூனியகாலமறிதல்

நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில்
அரவணையா னாகு முடம்பு. 241

உருவந் தழலாக வுள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார். 242

புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில்
உருவற்று நிற்கு முடம்பு. 243

அகம்புறம் பேராப் பொருளை யறியில்
உகம்பல காட்டு முடம்பு. 244

ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்
ஓவிய மாகு முடம்பு. 245

அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின்
துஞ்சுவ தில்லை யுடம்பு. 246

தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினில்
மாயாது பின்னை யுடம்பு. 247

தானந்த மின்றித் தழலுற நோக்கிடில்
ஆனந்த மாகு முடம்பு. 248

ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில்
அழிவின்றி நிற்கு முடம்பு. 249

பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில்
முற்று மழியா துடம்பு. 250

3.6. சிவயோகநிலை

அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி
முடிமிசை யோடி முயல். 251

உண்ணாடி வாயு வதனை யுடனிரப்பி
விண்ணோடு மெள்ள விடு. 252

மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக்
கொள்ளுமின் கும்பங் குறித்து. 253

இரேசக முப்பத் திரண்டது மாத்திரை
பூரகம்பத் தாறு புகும். 254

கும்பக நாலோ டறுபது மாத்திரை
தம்பித் திடுவது தான். 255

முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி. 256

ஈரைந் தெழுபத் தீராயிர நாடியுஞ்
சேருமின் வாயுச் செயல். 257

வாச லீரைந்து மயங்கிய வாயுவை
யீசன்றன் வாசலி லேற்று. 258

தயாவினில் வாயு வலத்தி லியங்கில்
தியான சமாதிகள் செய். 259

ஆதியா மூல மறிந்தஞ் செழுத்தினைப்
பேதியா தோது பினை. 260

3.7. ஞானநிலை

தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்
துற்பன மஞ்சை யுரை. 261

தற்புருட மாமுகமேற் றாரகைதன் மேலே
நிற்பது பேரொளி நில். 262

ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே
பேதியா தோது பினை. 263

கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது. 264

மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு. 265

காலுந் தலையு மறிந்து கலந்திடில்
சாலவும் நல்லது தான். 266

பொன்னொடு வெள்ளி யிரண்டும் பொருந்திடில்
அன்னவன் றாளதுவே யாம். 267

நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை
யொன்றுவிக்கி லொன்றே யுள. 268

பேசா வெழுத்துடன் பேசு மெழுத்துறில்
ஆசான் பரனந்தி யாம். 269

அழியா வுயிரை யவனுடன் வைக்கில்
பழியான தொன்றில்லை பார். 270

3.8. ஞானம்பிரியாமை

பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்திடம் வன்னி யிடம். 271

சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு. 272

வெளியில் விளைந்த விளவின் கனிதான்
ஒளியி லொளியா யுறும். 273

மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை. 274

குருவாம் பரனந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு. 275

சுந்தரச் சோதி துலங்கு மிடமது
மந்திரச் சக்கரமு மாம். 276

தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார். 277

ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன்
நீரொளி மீது நிலை. 278

அந்தமு மாதியு மில்லா வரும்பொருள்
சுந்தர ஞானச் சுடர். 279

இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து
பதிவைத்தனன் குரு பார். 280

3.9 மெய்ந்நெறி

செல்லல் நிகழல் வருகால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில். 281

பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர். 282

இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல
நமக்குட் சிவன்செயல் நாடு. 283

குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில்
செவித்துப் பெறுவ தெவன். 284

காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம்
நாலா நிலையென நாடு. 285

மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம். 286

எழுஞ்சுட ருச்சியின் மேல்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர். 287

அடைத்திட்ட வாசலின் மேல்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார். 288

அறுபதொ டாறு வருட மிதனை
உறுதிய தாக வுணர். 289

அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில்
இட்ட மிதனைத் தெளி. 290

3.10. துரியதரிசனம்

வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள். 291

சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாரு மினிது பயன். 292

மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண். 293

மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல். 294

தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான். 295

வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம். 296

அமாவாசை பூரணை யாகு மவர்க்குச்
சமனா முயிருடம்பு தான். 297

அண்டத்திலு மிந்த வாறென் றறிந்திடு
பிண்டத்திலு மதுவே பேசு. 298

ஏறு மதிய மிறங்கி லுறங்கிடும்
கூறுமப் பூரணை கொள். 299

உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம். 300

3.11. உயர்ஞானதரிசனம்

கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா. 301

வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம். 302

செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில். 303

வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி. 304

வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்து பேராது செயல். 305

இயங்கும் பகல்வல மிராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான். 306

அர சறியாம லவன்பே ருரைத்துத்
தரைதனை யாண்ட சமன். 307

கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல். 308

திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப்பா மென்று கொள். 309

கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கிற் பரமவை வீடு. 310

முத்திக்கௌவையார்சொல் முந்நூற்றுப்பத்துமுன்
சித்தத்தில் வைத்துத் தெளி.

ஔவைகுறள் முற்றுப்பெற்றது




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247