சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய

ஐங்குறு நூறு

தெளிவுரை : புலியூர்க் கேசிகன்

முன்னுரை

     "தமிழே உணர்வோ டொழுக்கமு மாதலால்
     தமிழே தமிழர்க் குயிர்"

'என்று பிறந்தவள்' என்று காலவரையாக எதனையும் வகுத்துக் கூறவியலாத தொல்பெரும் பழைமையோடு, 'என்றும் இளங் கன்னி' என்றபடி எழிலும் வளனும் ஒயிலும் பொருந்த விளங்குபவன் நம் செழுந்தமிழ் அன்னை. தமிழினத்தாரின் உயிர்ப்போடே உறவாடிக் கலந்துநின்று, தமிழினத்தின் வாழ்வையும் செவ்வியையும் வளமோடே பேணிக்காத்து, 'தமிழனம்' என்னும் போதிலேயே ஒரு பெருமித உணர்வு நம்மிடம் முகிழ்த்தெழச் செய்து வருபவளும், தமிழ் அன்னையே யாவாள்!

     தமிழினத்தின் வழியிலே வந்து பிறந்த பெரும் பேற்றினைப் பெற்ற நமக்கு, கிடைத்தற்கரிய மிகப் பெருஞ் செல்வக் களஞ்சியமாகத் திகழ்வன தொல்காப்பியமும் எட்டுத் தொகை பத்துப்பாட்டென்னும் சங்கத் தொகை நூற்களும் ஆகும்.

     அன்றைய உலகத்தின் பெரும்பகுதியினரான மக்களும் அறிவுநிலை பெறாதேயே வாழ்ந்துவந்த அந்தத் தொல்பழங்காலத்திலேயே, மொழி வளத்தைச் செப்பமாகப் பேணும் நினைவினை மேற்கொண்டு, நாடு முழுதும் சிதறிக்கிடந்த சான்றோரின் செய்யுட்களைத் தொகுத்து ஆராய்ந்து, முறையோடே வகைப்படுத்தித்தந்த சிறப்பும் நம் தமிழ் முன்னோர்களுக்கே என்றும் உரியதாகும். போக்குவரத்துச் சாதனங்களும் அச்சுக்கருவிகளும் பங்கிப் பெருகியுள்ள இற்றை நாளினும், பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மிகமிகப் பலவாயுள்ள இற்றை நாளிலும் செய்ய நினையாத, செய்யவியலாத மாபெருந் தமிழ்ப் பணியைத் தலைக் கொண்டு, அதனை என்றும் நின்று நிலைக்கும் இணையிலாச் செழுமையோடு செய்து உதவிய சங்கச் சான்றோர்களுக்கும், அவர்களைப் போற்றிப் புரந்து காத்துநின்ற அந்நாளையத் தமிழ் மன்னர்களுக்கும், வள்ளல்களுக்கும், தமிழினம் மிகப் பெருங் கடன்பட்டிருக்கின்றது.

     சங்கத் தொகை நூற்களுள், எட்டுத்தொகை என்னும் நூல்களுள் ஒன்றாக ஒளிர்வது இந்த ஐங்குறு நூறு என்னும் அமுதத் தமிழ்க்கடல் ஆகும். அடி அளவாற் குறுமையேனும், விரிக்கும் பொருள் நயத்தாலும், விளக்கும் உணர்வுக் களங்களாலும், உரைக்கும் உரைப்பாங்கினாலும், மிக உயர்ந்து நிற்பது இத் தொகை நூல் ஆகும். குறுமுனிவனின் தமிழ்ச் செவ்வியேபோல, இக் குறுநூறுகள் ஐந்தும், உணர உணர உணரும் உள்ளத்தே ஓவியங்களாக விரிந்து விரிந்து, அக்கால மாந்தரோடே நம்மை ஒன்றுகலக்கச் செய்யும் ஒப்பற்ற சொற் சித்திரங்களாகும்.

     ஒத்த அன்பினரான தலைவனும் தலைவியும் தாமே தம்முட் கண்டு காதலித்துக் களவுறவிலேயும் ஒன்று கலந்து விடுகின்ற கலப்பிலே, அவர்பால் எழுகின்ற உணர்வலைகளின் முகிழ்ப்பிலே, அலையாகச் சுழித்து எழுகின்ற எண்ணற்ற நினைவுகளையும், அவற்றின் நடுவாக நின்றியக்கும் பண்பாட்டு மரபினையும், இச்செய்யுட்களிலே நாம் கண்டு கண்டு களிக்கலாம். அந்தக் களவு உறவு பல க ஆரணங்களாலே இடையீடு படப்பட, அவர் தம் நினைவுகள், உணர்வுகள், கனவுகள், மனக்கட்டவிழ்ந்தவாய்ப் பரவி விரித்தலையும், அவற்றால் அந்தக் காதலர்களும் அவருக்கு அணுக்கரானோரும் எய்தும் இன்பதுன்பங்களையும் இந்நூற் செய்யுட்களிலே நாம் காணலாம்.

     இஃதிஃது இன்னதொரு தன்மைத்து என்று புறத்தார்க்கு முற்றவும் புலனாகுமாறு விளக்கிச் சொல்ல இயலாததாய், அவரவரும் தத்தம் உள்ளத்தேயே நுகர்ந்து நுகர்ந்து தோய்வதாய் விளங்குவதே அகப்பொருள் இன்பம் ஆகும். சொற்கடந்து நின்று, மக்களின் வாழ்வியலின் மூலக்களனான மனையறத்துக்கே அடிப்படையாக விளங்கும் இந்த உணர்வெழுச்சிகள், அனைத்து மக்களும் இன்பமாகவும் செம்மையாகவும் வாழல் வேண்டுமென்னும் கருத்தினரான தமிழ்ச் சான்றோரைப் பெரிதும் கவர்ந்தன. அவர்கள் புலமையும், அளவிலா இனிமையே தானாக அமைந்த செழுந்தமிழும், அந்தக் காட்சிகளை மேலும் நயமாக்கியும், சுவைபட எழிலாக்கியும், இலக்கிய வடிவங்களாக்கி நமக்காக வைத்துள்ளன. என்றும் வழிகாட்டும் பான்மையோடு, உணர உணர உள்ளத்தே உவகை பெருக்கும் நுட்பத்தோடு விளங்கும் இச்செயுட்கள் அனைத்தும், தமிழினத்தின் அளப்பரும் பெருப்புகழ்ச் செல்வக் களஞ்சியத்தின் அளப்பரும் பெரும்புகழ்ச் செல்வக் களஞ்சியங்களாகும் என்பதில் எவருக்குமே ஐயம் இருக்க வியலாது.

     இந்த ஐங்குறு நூற்றினைத் தொகுத்து அமைப்பதற்கான பேராறிவாளரைத் தேர்ந்து, பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து, அவர்க்கு வேண்டும் வகையால் எல்லாம் பொன்னும் பொருளும் ஆளும் பிறவும் உதவிய பெருந்தகை, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையாவான்.

     இவன் பழந்தமிழ்க் குடியினரான பொறைகளுள்ளே இரும்பொறை மரபிலே தோன்றியவன், தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும், சோழன் இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் வாழ்ந்த புகழ் மிகுந்த நாளிலே தானும் வாழ்ந்து, தமிழினத்தின் மாண்பைப் போற்றிக் காத்துப் புகழ் கொண்டவன். அந்தணாளரான தமிழ்ச் சான்றோரும், குறிஞ்சித்திணைச் செய்யுட்களைச் செய்தலிலே ஒப்பற்றோரும், வேள்பாரியின் உயிர்நட்பினராக விளங்கியவருமான பெரும் புகழ்க் கபிலரின் நட்பைப் பெற்றவன். ஆராத தமிழன்பும், தீராத பேராண்மையும், தணியாத வள்ளன்மையும், குறையாத தமிழ்ப் புலமையும் தனதாக்கிக் கொண்டவன். குறுங்கோழியூர் கிழாரால் போற்றிப் புகழ்ந்து பாராட்டப் பெற்றவன்.

     சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியோடும். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனோடும் போரிட்டு, அதனால் சோழ பாண்டிய அரசர்களின் பகைமைக்கு உள்ளானபோதும், தாய்த் தமிழின் செவ்விபேண நினைத்தபோது, பாண்டியன் ஆதிக்கத்திலிருந்த மதுரைச் சங்கத்தாருடனும் சோணாட்டாரான பெருங்கோழியூர்க் கிழாரோடும் மனங்கலந்து நெருக்கமான உறவு கொண்டவன். 'தமிழ் மேன்மை' அந்நாளைய தமிழகத்துத் தலைவர்கள்பால் எந்த அளவுக்கு வேரூன்றி நின்றதென்பதையும், அத் பிறபிற உறவு வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி நின்று உயர்ந்திருந்ததென்பதையும், இதனால் நான் உணரலாம்.

     தண்பொதியச் செந்தேனாய் இனிக்கும் சிலப்பதிகாரக் காப்பியத்திலும், இவனைப் பற்றிய செய்திகள் சில கட்டுரை காதையுள் கூறப்பட்டுள்ளன.

     ''வண் தமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
     திண்திறல் நெடுவேற் சேரலன்''

என்னும் இவனைக் காணற் பொருட்டுச் சோணாட்டிலிருந்து சென்றவன் பராசரன் என்பான் ஆவான். இவன் வடமொழியிலே மிகவும் வல்லமை பெற்றவன். இவன் இம்மாந்தரனின் அவைக் கண்ணே சென்று, தன் வடமொழிப் பிலமையை அங்கிருந்த மன்னனும் வட மொழிவாணரும் வியக்க எடுத்துக் காட்டினன். இதனை,

     ''நாவலம் கொண்டு நண்ணார் ஓட்டிப்
     பார்ப்பன வாகை சூடி ஏற்புற
     நன்கலம் கொண்டு''

     இவன் மீண்டதாகச் சிலம்பு கூறுகின்றது. இதனால், செழுந்தமிழ் சிறந்தோங்கிய அந்நாளிலேயே, வடமொழிப் புலமையினும் விஞ்சி நின்றவர் பலர் தமிழகத்தே வாழ்ந்தமையும், அவர்தம் புலமையை மதிப்பீடு செய்து பரிசளிக்கும் அளவிற்கு இம் மாந்தரஞ்சேரல் அம்மொழிப் புலமையும், தன்மொழிப் புலமையோடு பெற்றுத் திகழ்ந்தமையும் நாம் அறியலாம். பராசரன் இவனுடைய அன்பான அளவுக்கு மிஞ்சிய உபசாரங்களாலும், இவன் அளித்த அளவிலாப் பெரும் பரிசில்களாலும், எண்ணியே கண்டிராத பெருவள நிலையினை எய்தி, அதனால், இவனையே எப்போதும் போற்றி மகிழும் சால்புடையோனாகவே விளங்கினான் என்றும் அறிகின்றோம்.

     இவனிடமிருந்து, பெற்ற பரிசில்களோடு, தன் நாடு நோக்கி மீள்பவன், ஒரு நாள் பாண்டியனது திருத்தங்காலிலே இளைபாறுதற் பொருட்டுத் தங்குகின்றான். அப்படித் தங்கியவன், தன் நாட்டு மன்னனையோ, தான் தங்கியுள்ள இடத்திற்கு உரியோனான பாண்டியனையோ வாழ்த்திப் பாடுதலைமறைந்து, தன்னைப் பாராட்டிய சேரமானையே வியந்து வியந்து போற்றி வாழ்த்துகின்றான் என்றால், இச்சேரமானின் உள்ளச் செவ்வி, எத்துணை அளவுக்கு உயர்ந்ததாக இருந்திருத்தல் வேண்டும்.

               - காவல் வெண்குடை
     வளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி!
     கடற்கடம்பு எறிந்த காவலன் வாழி!
     விடர்ச்சிலை பொறித்த விறலோன் வாழி!
     பூந்தண் பொருனைப் பொறையன் வாழி!
     மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்க!

என்று அவன் வாழ்த்தினான் என்கிறது சிலம்பு. பாண்டியனோடு போரிட்டு, அப்போரிலே தோற்றுச் சிறைப்பட்டு, எவ்வாறோ சிறையினின்றும் தப்பிச் சென்றவன் இம் மாந்தரஞ்சேரல் என்றும் குறப்படுகின்றது. இவனைப் பாண்டி நாட்டிலேயே வந்திருந்து வாழ்த்துகின்றான் பாராசரன் எனில், இவனுடைய பிறபிற குணநலன்கள் அத்துணைச் சிறப்பு வாய்ந்தன என்றே நாம் கொள்ளல் வேண்டும்.

     சேரநாட்டுத் தொண்டிப் பட்டினத்திலிருந்து அரசாண்டவன் இவன். யானைக்கட்சேய் எனச் சிறப்புப் பெயரும் பெற்றவன். இவன் தோன்றிய இரும்பொறை மரபினருள் புகழ்பெற்ற பிற மன்னர்கள், செல்வக்கடுங்கோவாழியாதனும், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் ஆவர். யானைகள் தம் கன்றுகளைப் பேணிக் காக்கின்ற பெருவிழிப்போடே தன் ஆட்சிக்கு உட்பட்டவர்களைக் காத்துப் பேணுகின்ற ஆட்சிச் சால்பினன் என்பதனால், இவனை 'யனைக் கண்சேய்' என்று கூறிச் சான்றோர் சிறப்பித்தனர் ஆகலாம்.

     'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன்கண் விடல்' என்னும் செயல்கொள்ளும் பாங்கிலேயும் சிறந்த ஆற்றலினான இவன், இத் தொகை நூலைத் தொகுக்கும் பெருப்பணியினைப் 'புலத்துறை முற்றியவர்' என்னும் பெரும் புகழ்மையினைக் கொண்டவரான கூடலூர் கிழாரிடம் ஒப்பித்தனன். இவர், மலைநாட்டுக் கூடலூரினர் என்று சொல்லப்படுகின்றனர். இதனைக் கம்பத்தையடுத்த மதுரை மாவட்டக் கூடலூராகவே கொள்ளல் மிகவும் பொருந்தும்.

     'வானத்தே ஒரு விண்மீனின் வீழ்ச்சியைக் கண்ட இவர், அது வீழ்ந்த காலநிலையை ஆராய்ந்து, அது வீழ்ந்தது மாந்தரனின் மறைவை முன்னதாக உணரக் காட்டுவதெனவும், அம் மறைவு இன்ன நாளிலே நிகழும் எனவும் தெளிவாகக் கணித்து வைத்திருந்தவர். அவ்வாறே அவனும் அந் நாளிலேயே உறைந்தானாக, பெரிதும் ஆற்றாமையால் இவர் பாடியதே புறநாநூற்றின் 229ஆம் செய்யுள் ஆகும். இதனால், இவர் காலக் கணிதத் திறனும், தம் தமிழ்ப் புலமையோடு சேரப் பெற்றிருந்தனர் என்றும் நாம் அறியலாம். இத் தொகையைச் செய்ததன்றியும், குறுந்தொகையுள் 3 செய்யுட்களையும் இவர் செய்திருக்கின்றனர் என்றும் காண்கின்றோம்.

     இத்தொகை நூற்குக் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்த்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனாரே யாவர். அதன் சிறப்பினை எல்லாம் நூலினுள்ளே காணலாம். இதன், முதல் நூறான மருதம் ஓரம்போகியாராலும், இரண்டாம் நூறான நெய்தல் அம்மூவனாராலும், மூன்றாம் நூறான குறிஞ்சி கபிலராலும், நான்காம் நூறான பாலை ஓதலாந்தையாராலும், ஐந்தாம் நூறான முல்லை பேயானராலும் பாடப் பெற்றுள்ளன. இதனைக் குறிக்கும் பழைய வெண்பா,

     மருதம் ஓரம்போகி; நெய்தல் அம்மூவன்;
     கருதும் குறிஞ்சி கபிலன்; - கருதிய
     பாலை ஓதலாந்தை; பனிமுல்லை பேயனே;
     நூலையோ தைங்குறு நூறு.

என்பதாகும். இவற்றுள் மருதமும் நெய்தலும், ஐங்குறு நூறு தெளிவுரையின் முதற்பகுதியாக இந்நூலுள் அமைந்துள்ளன.

     கூடலூர் கிழார், அவ்வத் திணைச் செயுட்களைச் செய்வதிலே புகழ் படைத்தோரான சங்கத் தமிழ்ச் சான்றோர்களிடம் தம்முடைய பொறுப்பைக் கூறி, அவர்கள் செயுட்களைச் செழுமையோடு ஆக்கித்தர, அவற்றை ஆராய்ந்து, அவற்றுட் சிறந்தவாகத் தாம் கண்ட ஐவர் நூல்களைத் தொகுத்துத் தம்முடைய பணியை எளிதாக்கி வெற்றி கண்டவர் எனலாம். இவர்களின் நட்பையும் அன்பான ஒத்திசைவையும் பெற்றவர் என்றும் கூறலாம்.

     'முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே' என்னும் இலக்கண விதியினை ஒதுக்கி, மருதம் நெய்தல் குறிஞ்சி பாலை முல்லை என முறைப்படுத்தித் தொகுத்து இந்நூலை இவர் தமிழுலகுக்குத் தந்திருக்கின்றனர். வேளாண் குலத்தவராதலால் மருதத்தை முதலிலும் மாந்தரன் நெய்தல் நிலத்துத் தொண்டியிலிருந்தோனாதலின் அதனை அதற்கடுத்தும், நடுநாயகமாகும் சிறப்பினது என்பதால் குறிஞ்சியை நடுவாக வைத்தும், முல்லையின் எழிலைக் கருதி அதனை இறுதியில் வைத்தும், குறிஞ்சியும் முல்லையும் திரிந்தே பாலையென்னும் நிலையை எய்தலால் பாலையைக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையில் வைத்தும் இவர் தொகுத்தனர் என்று கருதலாம். இது நம் ஊகமாக அமையலாமேயன்றி, முறையான காரணம் எனல் பொருந்தாது. ஆனால் விதியை மீறுவோர் அதற்கான காரணமுமுணர்ந்த புலமைச் சால்பினர் என்னும் போது, அதன் காரணம் ஆராய்தற்கு உரியது என்றே நாம் கொள்ளல் வேண்டும். ஆய்வாளர்கள் இம்முயற்சியிலேயே சிறிது மனஞ் செலுத்துவாராக. இத்தொகை நூலையும் தேடியாராய்ந்து செப்பமுற வெளியிட்ட தமிழ் வள்ளன்மையாளர் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களே யாவர். அவர்களின் தமிழார்வமும் முயற்சியுமே தமிழ்ச் செல்வங்களை நாம் எளிதாகப் பெற்று உணர்வதற்கு உதவுகின்றன. டாக்டர் அய்யர் அவர்களின் தமிழ் உள்ளத்தைப் போற்றி நினைந்து வணங்குகின்றேன். அவர்களைத் தமிழகம் வாழ்தற்பொருட்டு உருவாக்கி உதவிகுவரும், அய்யரவர்களுக்கு இப்பணியிலே உதவியவர்களுமான திரிசிரபுரம் மகாவித்துவான் தியாகராசச் செட்டியாராவர்களையும் மனம் நினைந்து போற்றி வணங்குகின்றேன். இவ்விரு தமிழ்ப் பெரியார்கட்கும் நினைவாலயங்களோ, நினைவு அமைப்புகளோ செயல் மறந்த தமிழகம் இன்னும் நிறுவிற்றில்லை என்பதையும், இவர்கள் நினைவுநாட்களைக்கூட ஆயிரமாயிரம் தமிழ்த் துறை மாந்தரும் போற்ற மறந்துள்ளனர் என்பதையும், மிகமிக வருத்தத்தோடே நினைக்கின்றேன். இவர்கள் தமிழால் தாம் வாழாமல், தமிழுக்காகத் தாம் வாழ்ந்த தகுதியாளர்கள் ஆவர்.

     அய்யரவர்கள் பதிப்பிலே பழைய உரையும், செய்யுள் நலத்தைப் புரிந்து கொள்வதற்கான அரியபல குறிப்புகளும் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. நாடெல்லாம் ஐங்குறுநூற்றின் செவ்வியினை அறிந்தறிந்து இன்புற உதவிய சிறப்புக்கு, இப்பதிப்பே முதல் உரிமையுடையதாகும்.

     இதன்பின் மர்ரே கம்பெனியாரின் மூலப்பதிப்பும் சைவ சித்தாந்த சமாசத்தார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்களின் துணையோடு வெளியிட்ட, சங்க இலக்கியப் பெரும் பதிப்பும் அருமையாக வெளிவந்தன.

     இதன்பின், உரைப்பெருங் கடலான சித்தாந்தச் செம்மல் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்களின் மிக விரிவான உரைப் பதிப்பும் வெளிவந்தது.

     எனினும், தமிழார்வத்தார் அனைவரும் எளிதாகக் கற்றறிந்து தமிழின்பப் பயன்பெற உதவும் வகையிலே, தெளிவுரை அமைப்பு ஒன்றும் தேவை என்பதனை நினைந்து, இத்தெளிவுரை அமைப்பை உருவாக்கியுள்ளேன்.

     பிற எட்டுத் தொகை நூற்களுக்கும் யான் எழுதி வந்துள்ள தெளிவுரை மரபையே இதனிடத்தும் கொண்டுள்ளேன். ஆகவே, இந்தத் தெளிவுரை அமைப்பும் தமிழ் அன்பர்க்கும் மாணவர்க்கும் சிறந்த உதவியாக அமையும் என்று நம்புகின்றேன்.

     தமிழ் நலம் நிலவப் பல்லாற்றானும் விருப்போடு உதவிவரும் பண்பாளரும், தமிழன்பும் தமிழ்ச்சால்புமே தாமாக விளங்குபவரும், இத்தெளிவுரைப் பதிப்பை அழகுற வெளியிட்டு உதவுபவரும், என்னுடைய தமிழ்ப்பணிக்கு என்றும் இனிதே துணைநின்று ஊக்கியும் உதவியும் வருபவருமான, பாரி க.அ. செல்லப்பர் அவர்களைப் பெரிதும் போற்றுகின்றேன்; நன்றியோடு நினைந்து வாழ்த்துகின்றேன். தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் இத்தெளிவுரைப் பதிப்பு நல்லதொரு விருந்தாக விளங்கும் என்று நினைந்து, அவர்களையும் மனமுவந்து வாழ்த்திப் போற்றுகின்றேன்.

     வாழ்க தமிழ்!

     வளர்க தமிழார்வம்!

- புலியூர்க் கேசிகன்
*****

கடவுள் வாழ்த்து

     அனைத்துச் செயல்களையும் தொடங்கும்போதில், முதற்கண் கடவுளைப் போற்றியே தொடங்குதல் நலமாகும் என்னும் கொள்கை, எந்த நூலின் தொடக்கத்தும் கடவுள் வாழ்த்து இருந்தாக வேண்டும் என்றொரு முடிவுக்குப் பிற்காலத்திலே வழிவகுத்தது. அந்தப் பழைய நாளில், பாரதம் பாடிய பெருந்தேவனார், சங்கத் தொகை நூல்களுள் கடவுள் வாழ்த்து அமையாதனவற்றுக் கெல்லாம், தாமே கடவுள் வாழ்த்துப் பாடியமைத்தனர். அவ்வாறு, அவர் பாடிச் சேர்த்த கடவுள் வாழ்த்துக்களுள், இந்நூலின் கடவுள் வாழ்த்தும் ஒன்றாகும்.

     வாழ்த்து, வணக்கம், பொருளியல்பு உரைத்தல் என்னும் மூவகை வாழ்த்து மரபுகளுள், இச்செய்யுள் 'பொருளியல்பு உரைத்தல்' ஆகும். இது கடவுளின் இயல்பை மட்டுமே கூறி, 'அவ்வியல்புடையானை வாழ்த்துவோம், போற்றுவோம்' என்றெல்லாம் கூறாமல், அவற்றைப் படிப்பவர்க்கே புலனாகுமாறு விட்டு விடுவதாகும்.

     மிகப் பிற்காலத்துப்போல் விநாயகரை வாழ்த்தியே எதனையும் தொடங்குதல் என்றில்லாமல், தத்தமக்கு விருப்புடைய கடவுளரை வாழ்த்திச் செல்லும் மரபையும், 'உமையொருபாகம் உடையானை' வாழ்த்தும் இச் செய்யுளால் அறியலாம். இவ்வாசிரியரே பல கடவுளரையும் வாழ்த்திப் பாடியுள்ள பொதுநோக்குப் பிற தொகைநூற் கடவுள் வாழ்த்துக்களால் காணப்படும்.

     செய்தமிழ்ப் புலவரான இப்பெருந்தேவனார், வடமொழியாளரோடும் தொடர்பு கொண்டு, அம்மொழியினும் சிறந்த புலமை பெற்ற, அதன் கண்ணுள்ள மகாபாரதக் கதையினைத் தமிழிற் செய்யுள் வடிவிலே பாடினவர். பிறமொழியறிவு பெற்ற பெருந்தமிழர்கள், அவ்வறிவு நலத்தால் தமிழ் நலமே பேணி மிகுத்து வந்தனர் என்பதும், வரவேண்டுவதே கடனென்பதும், இவர் அரும்பணியாற் காணலாம். இவர் செய்த மகாபாரதச் செயுட்கள் இந்நாளில் முற்றவும் மறைந்தனவேனும், இவர் செய்த கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் மட்டும், இன்றும் நின்று, இவர் பெரும் புலமைக்குச் சான்று பகரவும் செய்கின்றன; தமிழுக்கு வளமும் சேர்க்கின்றன.

     'தேவு' என்னும் தமிழ்ச் சொல்லினின்றும் பிறந்து, உமாமகேசனைக் குறித்து வந்த 'பெருந்தேவன்' என்னும் பெயரைப் பெற்றவர் இவர். பிற பெருந்தேவனார்களினும் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டாக, இவர் செயல்களினுள் போற்றுதற்கு உரித்தாக விளங்கிய 'பாரதம் பாடிய' புகழைச் சேர்த்து, இவரைப் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' எனத் தமிழ்ச் சான்றோர் போற்றி வந்தனர். தென்தமிழ் நாட்டின் மறவர் குடியினருக்குள் வழங்கி வரும் 'தேவர்' என்னும் பெயரும், தமிழகப் பெரியோர்களுக்கு வழங்கி வரும் 'நக்கீர தேவர்', 'மெய்கண்ட தேவர்', 'அருணந்தி தேவர்', 'கருவூர்த் தேவர்' என்றாற் போல்வனவும், இச்சொல்லின் பரந்த பழந்தமிழாட்சியைக் காட்டும்.

     பின்னர்த் தோன்றிப், பாரதத்தை வெண்பா யாப்பிலே பாடினவர் மற்றொரு பெருந்தேவனார் என்பவர்; பெயரை நோக்கின், அவரும் இவர் மரபினரே ஆகலாம். அதுவும் பெரும்பகுதி காலச்சேற்றில் கரைந்து மறைந்து விட்டது. அதன் பின்னர், வில்லிப்புத்தூரார் விருத்த யாப்பிலே செய்த வில்லி பாரதமே, இன்று வழக்கிலிருந்து வருகின்ற பாரதத் தமிழ்ச் செய்யுளாக்கமாகும்.

     இச்செய்யுள், 'சிவசக்தி'யாக ஒன்றித் தோன்றும் இறைமையின் அருள் வடிவைக் குறித்துப் போற்றும் சிறந்த ஒரு செய்யுளும் ஆகும். ஆசிரியப்பாவின் இழிவான மூன்றடி எல்லைக்கு நல்ல எடுத்துக்காட்டும் ஆகும்.

     நீலமேனி வாலிழை பாகத்து
     ஒருவன் இருதாள் நிழற்கீழ்
     மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.

     தெளிவுரை: நீலமேனியினளான, தூய அணிகள் பூண்ட தேவியைத் தன் இடப்பாகத்தே உடையவனான ஒப்பற்ற பெருமானின், இரு திருவடிகள் நிழலின் கீழாக, 'மேடு நடு கீழ்' என்னும் மூவகை உலகங்களும், உமறையே, பண்டு தோன்றின.

     கருத்து: அத்தகைய அனைத்துக்கும் மூலவித்தாம் பேராருளாளனின் திருவடி நீழலை, நாமும் வேண்டி, நம் செயற்கும் துணையாகக் கொண்டு உய்வோமாக.

     சொற்பொருள்:வாலிமை - தூய்மை; வாலிழை - தூய அணிகளை உடையாளான அம்பிகை. ஒருவன் - ஒப்பற்றவன்; அவன் ஒருவனே ஒருபாதி ஆணும், மற்றொரு பாதி பெண்ணுமாகி அமைந்தவன் என்பதுமாம். மூவகை உலகு - மேல், நடு, கீழ் என்னும் உலகங்கள்; 'உலகு' எனவே, உலகமும் அதிலுள்ளன யாவும் எனப் பொருள் விரித்தும் கொள்ளலாம்; அவன் அவள் அது எனும் மூவகையாற் சுட்டப்படும் உலகும் ஆம். முறையே - ஒன்றன்பின் மற்றொன்றாக; முதலில் தேவருலகங்களும், அடுத்து மானிட உலகும், இறுதியில் பாதலமும் தோன்றியதெனக் கூறும் தோற்ற முறைமையையும் இது குறிக்கும்.

     விளக்கம்: 'நீலமேனி வாலிழைபாகமான வடிவம்' நினைவிற்கும் பேரின்பம் அளிப்பது; ஒரு பாதி செவ்வண்ணம், மற்றொரு பாதி நீலவண்ணம். ஒளிசெறிந்த இவை தம்முள் கலந்து இணைந்து ஒளிவீசக் காணும் பாவனைக் காட்சியே அளப்பிலாப் பேரின்பமாவதாகும். 'பெண்ணுரு ஒரு திறன் ஆகின்றது' எனப் புறமும் (புறம் 379) இவ்வழகைப் போற்றும். மூவகை உலகமும் முகிழ்த்தற்கு இடனாகிய தாள்நிழல் சேரின், நமக்கும் நலன் விளைதல் உறுதி என்பதும், இதனால் கற்பாரை உணர வைத்தனர். அத் தாள்நிழல் இந்நூலை என்றும் காப்பதாக என்பதும் கூறினர்.

     'அவன் அவள் அது' என்னும் மூவகை உலகமாகக் கொள்ளின் 'முறையே முகிழ்த்தன' என்பதற்கும் அதற்கு இயையவே பொருள் விரித்துக் கொள்க. அவனிலே அவள் தோன்றி, அவளிலே அனைத்துப் பிரபஞ்சமும் அடுத்தடுத்துத் தோன்றின என்னும் சிவசக்தித் தத்துவக் கோட்பாட்டினையும், அப்போது உளத்திலே நினைக்க.

     வாலிமை - தூய்மை; 'வாலறிவன்' என்னும் குறட்சொல்லுக்குத் 'தூய அறிவினன்' என்றே பொருள் உரைக்கப்படும்.

     'இருதாள்' என்று எண்ணம் சுட்டிக் கூறியது, வலது இறைவன் தாளும், இடது இறவி தாளும் என விளங்கும் தனிச்சிறப்பு நோக்கியெனவும், அம்மையும் அப்பனுமாகிய இருவரையும் பணிதல் நோக்கி எனவும் கொள்க.

     'முறையே முகிழ்த்தன' என்றது, முறையே வாழ்ந்தன, வாழ்கின்றன, வாழ்வன என்னும் நிலையையும் உளங்கொண்டு போற்றியதுமாம்.

     இலக்கணம்: ஆசிரியப்பாட்டின் இழிவு மூன்றடி (தொல். செய், 157) என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த, ஈற்றியல் அடி மூச்சீர் பெற்றுவந்த நேரிசை ஆசிரியப்பா இதுவாகும் எனக் காட்டுவர்.

     பாடபேதம்: 'நீலமேனி' என்பது 'மா அமேனி' எனவும் மாமலர் மேனி' எனவும் சொல்லப்படும். இவையும் அம்மையின் மேனி வண்ணத்தை உரைக்கும் சொற்களேயாதல் தெளிக.

*****

I. மருதம்

     அகத்துறையின் ஐந்திணை ஒழுக்கங்களுக், மருதம் பற்றிய செய்யுள்கள் நூறும் இத்தொகை நூலிலே முதற்கண் வைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு ஒரு திணைச் செகயுட்களே தொடர்ந்துவர அமைந்த மற்றொரு தொகைநூல் கலித்தொகை. அதன்கண் 'பாலைக்கலி' முதலாவதாக அமைந்துள்ளது. தனித்திணை பற்றிய முல்லைப் பாட்டும், குறிஞ்சிப் பாட்டும், பட்டினப்பாலையும் பத்துப்பாட்டுள் அமைந்த தனிநெடும் பாட்டுகள் ஆகும்.

     ஒரு திணை பற்றி, ஒரு சான்றோர் செய்த செய்யுட்கள் பல தொடர்ந்து வருவதனால், அத்திணை பற்றி கருத்துத் தெளிவையும், அப்புலவரின் புலமை ஆற்றலையும் உணர்தற்குரிய நல்வாய்ப்பு, கலியாலும், இந்நூலாலும் நமக்குக் கிடைக்கின்றது.

     ஒவ்வொரு திணைக்கும் நூறூ நூறு எனவும், அவற்றைப் பத்துப் பத்துச் செய்யுள்களாகத் தனித்தனித் தலைப்பின் கீழும் அமைத்துள்ள அமைப்புமுறை, எண் வரையறைப்படுத்து அதன்பால் முதன்மை நோக்கோடு நூலமைக்கும் ஒரு மரபினைத் தமிழாசிரியன்மார் மேற்கொண்டிருந்ததனையும் காட்டுவதாகும். 'பதிற்றுப்பத்தும்' இவ்வாறு எண்முறைமை பேணிய வழக்கில் அமைந்ததே. திருக்குறளும் 'பத்துப்பா' எண் மரபையே போற்றுகின்றது. பிற்காலத்தார் நூறு நூறு செய்யுட்களாக எண்ணெல்லை வகுத்துப் பாடிய சதக நூல்களுக்கும், தேவாரம், பிரபந்தம் ஆகியவைகட்கும் இந்நூலமைப்பே முன்னோடியாக வழிகாட்டி இருக்கலாம்.

     'வேந்தன் மேய தீம்புனல் உலகம்' என்னும் மருதம், பல்பொருள் வளமையால் பெருக்கமுற்றிருந்தது போன்றே மக்களின் வாழ்வியல் வகையாலும், பிறநிலத்து மாந்தரினும் தனித்தன்மை பெற்றிருந்தது. மழைநோக்கி வாழ்வாராதலால் சிலகாலத்துக் கடின உழைப்பும், விளைவு பெற்ற பின்னர் சிலகாலத்தே நெடிய ஓய்வும் பெற்ற வாழ்வினராக மருத மக்கள் விளங்கினர். பெருவளம் உடையாரும், அவர்பால் உழைத்துக் கூலியேற்று உண்பாருமாக, மேற்குடியினரும் கீழ்க்குடியினரும் என்னும் பிரிவு தோன்றிற்று. இதனால், ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சார்ந்தே, ஒருவரையொருவர் போற்றியே, ஒருவர்க்கொருவர் உறுதுணை நின்றே வாழ்தலென நிலவிய பழந்தமிழரின் பிறதிணை ஒழுக்க மரபுகளுக்கும் மருதத்தில் ஒழுக்கம் உண்டாயிற்று. பொன்னும் பொருளும் விரும்பி, அதனைப் பெறுதலை வேட்டுப், பிறருக்கு அடித்தொண்டு செய்வாரும், அவற்றை வழங்கி அத்தொண்டேற்று மனம் களிப்பாருமாக, மக்கள் மனநிலையாலும் பிளவுபட்டனர். மருதத்தின் நிலையானது, சமுதாய வாழ்வியல் ஒழுக்கமானது தன் நெறிமையிலே தளர்வுற்று, ஆடவர்க்கு ஒன்றும் பெண்டிர்க்கு மற்றொன்றுமாகவும் கருதப்பட்ட நிலையதாயிற்று. ஆகவே, பரத்தைமை ஒழுக்கம் தோன்றிப் பரவியதும் மருதத்தின் கண்ணேதான். பரத்தமை பழிக்கப் பெற்றாலும், ஒழுக்கவியலினரும் சகித்துப் போகவேண்டிய ஒன்றாகக் கருதிச் சகிக்கப்பட்டதும், மருதத்திணையின் மரபாயிற்று.

     ஆகவே, தலைவன் தலைவியரிடையே அத்தகைய பிரிவுக் காலத்தே எழும் மனவுணர்வுகளின் நுட்பமான தன்மைகளையும், அதிலும் உரிமையுடைய தன்னைத் துறந்து, பிற பொருட் பெண்டிர்களோடு, காமமே நினைவாகக் கருத்தழிந்து திரியும் தலைவனை வெறுத்தாற்போல ஊடினாலும், குடும்பநலம் கருதிப் பொறுத்து ஏற்று வாழும் தலைவியரின் மனச்செழுமையையும், மருதம் நமக்குக் காட்டுகிறது. நம் உள்ளத்தேயும் அக்காட்சிகள் உணர்வெழுச்சிகளைக் கட்டுப்படுத்தத் தூண்டுகின்ற செவ்வியையும், நாம் மருதச் செய்யுட்களாலே அறிந்து மேற்கொண்டு திருந்தலாம்.

ஆசிரியர் ஓரம்போகியார்

     ஐங்குறுநூறான இத்தொகையின் மருதச் செய்யுள்கள் நூறையும் பாடியவர் 'ஓரம்போகிறார்' ஆவர். குறுந்தொகையுள் 10, 70, 122, 127, 384-ஆம் செய்டுக்ளையும்; அகநானூற்றுள் 286, 316-ஆம் செய்யுட்களையும்; நற்றிணையுள் 20, 306ஆம் செய்யுட்களையும்; புறத்துள் 284ஆம் செய்யுளையும் இவர் செய்தவராகவும் காணப்படுகின்றனர்.

     'ஓரம்போகி' என்பது இவரின் ஊர்ப்பெயர் எனவும், இவரது இயற்பெயரே எனவும் சான்றோர் கருத்து வேறுபடுவர். 'ஓர் அம்பு போக்கி' என்னும் வில்லாண்மை குறித்த புகழ்ச் சொல்லே 'ஓரம்போகி' என்றாயிற்று எனவும், 'ஓர் அம்பு ஏவி' என்பது 'ஓரம்பேவி' 'யாகி' 'ஓரம்போகி' என்றாயிற்று எனவும், ஓரம் என்பது உண்மைக்கு மாறாக நீதியை வளைத்துக்கூறல்; அங்ஙனம் கூறாத மனத்திண்மையாளர் இவராதலால் 'ஓரம் போகிலார்' எனப் பெற்றனர்; அஃதே திரிந்து 'ஓரம் போகியார்' என்றாயிற்று எனவும்; 'ஓர் அம் போகியார்' என்னும் 'ஒப்பற்ற அழகிய போகத்தே திளைப்பவர்' என்பதே ஓரம்போகியார் என்று அமைந்தது எனவும், ஆய்வாளர்கள் பலபடக் கூறுவர். 'தனக்கு இழிந்தானைப் பெயர்புற நகுமே' (புறம் 248) எனத் தமிழ் மறவனின் சால்பை ஓவியப்படுத்தும் இவரைத் தமிழ் மறமாண்பிலேயும் சிறந்தார் எனவும், 'ஓர் அம்பு போக்கி' வெல்லும் திறல் பெற்றார் எனவும் கருதுதலே மிகமிகப் பொருந்துவதாகும்.

     இவர் செய்யுட்களிலே, மாந்தர் மனவுணர்வுகளின் ஆழ்ந்தகன்ற நினைவுக்கூறுகளை அறிந்தறிந்து வியக்கலாம்; 'பொன்மொழிகளே' எனப் போற்றிப் பேணத்தகுந்த பல சொற்றொடர்களையும் காணலாம். குருகாற் பற்றப்பட்டு மீண்ட கெண்டையானது, அயலே தோன்றி தாமரையின் முகையினைக் கண்டதும், குருகெனவே கருத்திற் கொண்டதாகி அஞ்சி நடுங்கும் என்று காட்சிப்படுத்தி, அச்சமுறும் மனவியல்புகளைத் தமிழோவியப்படுத்தும் தனித்திறலார் இவர் ஆவர். மருதத்திணை பற்றிய இந்தச் செய்யுட்கள் நூறும், மருதநில மாந்தர் தம் வாழ்வுப் போகிகினையும், இல்லறப் பண்பு நலன்களையும், அகவாழ்வின் ஒழுகலாறுகளையும், நாமும் நன்கு உணரச் செய்வனவாகும்.

     இம் மருதத்துள் - வேட்கைப் பத்து (1) வேழப் பத்து, (2) களவன் பத்து, (3) தோழிக்கு உரைத்த பத்து, (4) புலவிப் பத்து, (5) தோழி கூற்றுப் பத்து, (6) கிழத்தி கூற்றுப் பத்து, (7) புனலாட்டுப் பத்து, (8) புலவி விராய பத்து (9) எருமைப் பத்து, (10) எனப் பத்துப் பத்துகள் உள்ளன.

     ஆதன், எழினி, அவினி, சோழன், கடுமான் கிள்ளி, பாண்டியன், மத்தி, விராஅன் என்போர் குறிக்கப் பட்டுள்ளனர். தேனூர், ஆமூர், இருப்பை, கழாஅர் என்னும் ஊர்கள் பற்றிய செய்திகளையும் காணலாம்.

     இந்நூலின் அமைப்பும், செய்யுட்கள் அமைந்து செல்லும் பாங்கும், அவை விளக்கிச் செல்லும் மனப்போக்குகளும், அவற்றைச் சொல்லாட்சிப்படுத்தும் சொல்நயமும், இந்நூல் அந்நாளைய பெரும்புலவர்கள் ஐவர், ஐந்திணை மரபுகளையும் ஒருங்கே தெளிவுபடுத்தும் பொருட்டாகத் திட்டமிட்டுச் செப்பமாகப் பாடியமைத்த செய்யுட்களின் வகைப்படுத்தித் திணை துறைகளுக்கு ஏற்பத் தொகுத்த அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் தொகை நூல்களினும் பிற்பட்டு எழுந்த தொகை நூலாதல் பொருந்தும். கலித்தொகைக்குப் பின்னர் எழுந்திருக்கலாம் என்றுகூடச் சொல்லக்கூடும்.

     திட்டமிட்டுச் செய்யப்பெற்ற செய்யுட்கள் என்பதால், சொல்லிச் செல்லும் பொருளின் அமைதியிலே இனிமை நயமும், வளமைச் செறிவும் மிகுதியாயிருக்கும் நலத்தினையும், நாம் உய்த்துணர்ந்து மகிழ வேண்டும்; போற்ற வேண்டும்!






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247