சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய

குறுந்தொகை

... தொடர்ச்சி - 14 ...

261. குறிஞ்சி

பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள்,
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்,
நள்ளென் யாமத்து, 'ஐ' எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதினானும், என் கண்
துஞ்சா வாழி-தோழி!-காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.
இரவுக்குறிக்கண் தலைமகள் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது
கழார்க் கீரன் எயிற்றி

262. பாலை

ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க, தன் மனை; யானே,
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு,
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்,
கரும்பு நடு பாத்தி அன்ன,
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே.
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது
பாலை பாடிய பெருங்கடுங்கோ

263. குறிஞ்சி

மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க,
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி,
'பேஎய்க் கொளீஇயள் இவள்' எனப்படுதல்
நோதக்கன்றே-தோழி!-மால் வரை
மழை விளையாடும் நாடனைப்
பிழையேம் ஆகிய நாம் இதற்படவே.
'அன்னை வெறி எடுக்கக் கருதாநின்றாள்; இனி யாம் இதற்கு என்கொலோ செயற் பாலது?' எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது
பெருஞ்சாத்தன்

264. குறிஞ்சி

கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை,
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி,
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே.
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவள்' என்றது
கபிலர்

265. குறிஞ்சி

காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது,
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல, இடன்விட்டு,
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக,
தான் நாணினன், இஃது ஆகாவாறே.
வரையாது பிரிந்த இடத்து, 'அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்' எனத் தோழி தலைமகட்குக் கூறியது
கருவூர்க் கதப்பிள்ளை

266. பாலை

நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ-
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?-
வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது
நக்கீரர்

267. பாலை

இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம்
ஒருங்குடன் இயைவது ஆயினும், கரும்பின்
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க்
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய,
ஆள்வினை மருங்கில் பிரியார்-நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன்இல் கோள் நன்கு அறிந்திசினோரே.
'மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும் பொருட்குப் பிரிதும்' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையும் அருமையும் கூறி, செலவு அழுங்கியது
காலெறி கடிகையார்

268. குறிஞ்சி

'சேறிரோ?' எனச் செப்பலும் ஆற்றாம்;
'வருவிரோ?' என வினவலும் வினவாம்;
யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின்
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு
நடு நாள் என்னார், வந்து,
நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது
கருவூர்ச் சேரமான் சாத்தன்

269. நெய்தல்

சேயாறு சென்று, துனைபரி அசாவாது,
உசாவுநர்ப பெறினே நன்றுமன் தில்ல-
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு,
'இனி வரின் எளியள்' என்னும் தூதே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது
கல்லாடனார்

270. முல்லை

தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென
வீழ் உறை இனிய சிதறி, ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகி, குவளைக்
குறுந்தாள் நாள் மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல் அணையேமே.
வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது
பாண்டியன் பன்னாடு தந்தான்

271. மருதம்

அருவி அன்ன பரு உறை சிதறி
யாறு நிறை பகரும் நாடனைத் தேறி,
உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று-அது
தவப் பல் நாள் தோள் மயங்கி,
வெளவும் பண்பின் நோய் ஆகின்றே.
தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது
அழிசி நச்சாத்தனார்

272. குறிஞ்சி

தீண்டலும் இயைவதுகொல்லோ-மாண்ட
வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த
நனந் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட, தன்னையர்சிலை
மான் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக்
குருதியொடு பறித்த செங் கோல் வாளி
மாறு கொண்டன்ன உண்கண்,
நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே!
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது
ஒருசிறைப்பெரியன்

273. பாலை

அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்
பெருங்காடு உளரும் அசைவளி போல,
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே!
நொந்தனஆயின், கண்டது மொழிவல்;
பெருந்தேன் கண்படு வரையில் முது
மால்புஅறியாது ஏறிய மடவோன் போல,
ஏமாந்தன்று, இவ் உலகம்;
நாம் உளேம் ஆகப் பிரயலன் தெளிமே.
"பிரிவர்" எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
சிறைக்குடி ஆந்தையார்

274. பாலை

புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர,
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு,
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர்நசை வேட்கையின் நாள் மென்று தணியும்
இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே.
பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது
உருத்திரன்

275. முல்லை

முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!-
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர் மணற் காட்டாறு வரூஉம்
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே.
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது
ஒக்கூர் மாசாத்தியார்

276. குறிஞ்சி

பணைத் தோட் குறுமகள் பாவை தைஇயும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று-இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தற் கடவின் யாங்கு ஆவது கொல்?
பெரிதும் பேதை மன்ற-
அளிதோதானே-இவ் அழுங்கல் ஊரே!
தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது
கூழிக் கொற்றன்

277. பாலை

ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ,
நீயே-"மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக்கால் வருவது?" என்றி;
அக்கால் வருவர், எம் காதலோரே.
தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது
ஓரிற் பிச்சையார்

278. பாலை

உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார்
கொடியர் வாழி-தோழி!-கடுவன்
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து,
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது
பேரிசாத்தன்

279. முல்லை

திரிமருப்பு எருமை இருள் நிற மைஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு அசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ-
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்
இரும்பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது
மதுரை மருதன் இளநாகனார்

280. குறிஞ்சி

கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்,
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே.
கழற்றெதிர்மறை
நக்கீரர்