உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 8 ... 141. குறிஞ்சி
"வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர் செல்க" என்றோளே, அன்னை என, நீ சொல்லின் எவனோ?-தோழி!-கொல்லை நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும் ஆர் இருள் நடு நாள் வருதி; சாரல் நாட, வாரலோ எனவே. இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு
வரும் ஏதம் அஞ்சி, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து,
சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது
மதுரைப் பெருங்கொல்லனார்
142. குறிஞ்சி
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ, புனக் கிளி கடியும் பூங் கட் பேதை தான் அறிந்தன்றோ இலளே-பானாள் பள்ளி யானையின் உயிர்த்து, என் உள்ளம், பின்னும், தன் உழையதுவே! இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகள் சொல்லியது;
தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம்
கபிலர்
143. குறிஞ்சி
அழியல்-ஆயிழை!-அன்பு பெரிது உடையன்; பழியும் அஞ்சும், பய மலை நாடன்; நில்லாமையே நிலையிற்று ஆகலின், நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின் கடப்பாட்டாள னுடைப் பொருள் போலத் தங்குதற்கு உரியது அன்று, நின் அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே. வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது
மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்
144. பாலை
கழிய காவி குற்றும், கடல வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர, இவ் வழிப் படுதலும் ஒல்லாள்-அவ் வழிப் பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ- செல் மழை தவழும் சென்னி விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே! மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது
மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன்
145. நெய்தல்
உறைபதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி- கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி, ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள் துஞ்சாது உறைநரொடு உசாவாத் துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே. வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது
கொல்லன் அழிசி
146. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?- தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர், "நன்றுநன்று" என்னும் மாக்களோடு இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே. தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, "வரைவு
மறுப்பவோ?" எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது
வெள்ளிவீதியார்
147. பாலை
வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை, நுண் பூண், மடந்தையைக் தந்தோய் போல, இன் துயில் எடுப்புதி-கனவே!- எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே. தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது
கோப்பெருஞ்சோழன்
148. முல்லை
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக் காசின் அன்ன போது ஈன் கொன்றை குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும், "கார் அன்று" என்றிஆயின், கனவோ மற்று இது? வினவுவல் யானே. பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, "பருவம் அன்று" என்று
வற்புறுத்த தலைமகள் சொல்லியது
இளங்கீரந்தையார்.
149. பாலை
அளிதோ தானே-நாணே நம்மொடு நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே, வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு, தாங்கும் அளவைத் தாங்கி, காமம் நெரிதரக் கைந் நில்லாதே. உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது
வெள்ளிவீதியார்
150. குறிஞ்சி
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி வான மீனின் வயின்வயின் இமைக்கும் ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம் உள்ளின், உள் நோய் மல்கும்; புல்லின், மாய்வது எவன்கொல்?-அன்னாய்! இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது
மாடலூர் கிழார்
151. பாலை
வங்காக் கடந்த செங் கால் பேடை எழால் உற வீழ்ந்தென, கணவற் காணாது, குழல் இசைக் குரல குறும் பல அகவும் குன்று உறு சிறு நெறி அரிய என்னாது, "மறப்பு அருங் காதலி ஒழிய இறப்பல்" என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே. பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது
தூங்கலோரி
152. குறிஞ்சி
யாவதும் அறிகிலர், கழறுவோரே- தாய் இல் முட்டை போல, உட்கிடந்து சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே? யாமைப் பார்ப்பின் அன்ன காமம், காதலர் கையற விடினே. வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள், 'நீ ஆற்றுகின்றிலை'
என்று, நெருக்கிய தோழிக்குச் சொல்லியது
கிள்ளிமங்கலங் கிழார்
153. குறிஞ்சி
குன்றக் கூகை குழறினும், முன்றிற் பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும், அஞ்சுமன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே, ஆர் இருட் கங்குல் அவர் வயின் சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே. முற்பொருள் கங்குல் வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி,
'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர்
வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது
கபிலர்
154. பாலை
யாங்கு அறிந்தனர் கொல்-தோழி!-பாம்பின் உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து, இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி, பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத் தயங்க இருந்து, புலம்பக் கூஉம் அருஞ் சுர வைப்பின் கானம் பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே? பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு
உரைத்தது
மதுரைச் சீத்தலைச் சாத்தன்
155. முல்லை
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர் விதைக் குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான் வந்தன்றே; 'மெழுகு ஆன்று ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு, மாலை நனி விருந்து அயர்மார் தேர் வரும்' என்னும் உரை வாராதே. தலைமகள் பருவம் கண்டு அழிந்து சொல்லியது
உரோடகத்துக் கந்தரத்தன்
156. குறிஞ்சி
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! செம் பூ முருக்கின் நல் நார் களைந்து தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே! எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ ? மயலோ இதுவே. கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்
157. மருதம்
'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர் துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்- தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே. பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது
அள்ளூர் நன்முல்லை
158. குறிஞ்சி
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக் காலொடு வந்த கமஞ் சூல் மா மழை! ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை இமயமும் துளக்கும் பண்பினை; துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே? தலைமகள் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது
ஒளவையார்
159. குறிஞ்சி
'தழை அணி அல்குல் தாங்கல் செல்லா நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக, அம்மெல் ஆகம் நிறைய வீங்கிக் கொம்மை வரி முலை செப்புடன் எதிரின; யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?' என்னும் அவல நெஞ்சமொடு உசாவாக் கவலை மாக்கட்டு-இப் பேதை ஊரே. தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது; உயிர்
செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம்
வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
160. குறிஞ்சி
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு, தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர் கையற நரலும் நள்ளென் யாமத்துப் பெருந் தண் வாடையும் வாரார்; இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே? வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி 'வரைவர்'
என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது
மதுரை மருதன் இளநாகன்
|