![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) முதல் பாகம் 2. குழந்தைப் பருவம் எனக்குச் சுமார் ஏழு வயது இருக்கலாம். ராஜஸ்தானிக மன்றத்தில் உறுப்பினராவதற்காக என் தந்தையார், போர்பந்தரிலிருந்து ராஜகோட்டுக்குச் சென்றார். அங்கே என்னை ஓர் ஆரம்பப் பாடசாலையில் சேர்த்தார்கள். அந்த நாட்களில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த உபாத்தியாயர்களின் பெயர் உட்பட எல்லா விவரங்களுமே எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றன. போர்பந்தரில் இருந்ததைப் போன்றே இங்கும் என்னுடைய படிப்பைப்பற்றி முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது எதுவுமில்லை. சாதாரண நடுத்தர மாணவனாகவே நான் இருந்திருப்பேன். இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து நகரை அடுத்திருந்த ஒரு பள்ளிக்கு என்னை அனுப்பினார்கள். பன்னிரெண்டு வயதாகிவிடவே பிறகு உயர்தரப் பள்ளியில் சேர்த்தனர். இந்தக் குறுகிய காலத்தில் என் ஆசிரியர்களிடத்திலோ, என் பள்ளித் தோழர்களிடத்திலோ ஒரு பொய்யேனும் எப்பொழுதும் நான் சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை. எனக்குக் கூச்சம் அதிகம், யாருடனும் சேரமாட்டேன். என் புத்தகங்களும் என் பாடங்களுமே எனக்கு உற்ற தோழர்கள். சரியான நேரத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவது, பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவது - இதுவே எனது அன்றாடப் பழக்கம். யாருடனும் பேசவே பிடிக்காதாகையால் உண்மையில் ஓட்டமாகத்தான் வீடு வந்து சேருவேன். இல்லா விட்டால் வழியில் யாராவது என்னைக் கேலி செய்து விடுவார்களோ என்று பயம். உயர்தரப்பள்ளியில் நான் படித்த முதல் ஆண்டில் பரீட்சையின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அது இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வி இலாகா இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கைல்ஸ் அப் பள்ளிக்கூடச் சோதனைக்காக வந்திருந்தார். எழுத்துக் கூட்டி எழுதும் பயிற்சிக்காக அவர் எங்களுக்கு ஐந்து சொற்களைக்கூறி அவற்றை எழுதச் சொன்னார். அதில் ஒரு சொல் "கெட்டில்" (Kettle) என்பது. அதை நான் தவறாக எழுதிவிட்டேன். உபாத்தியாயர் தம் கால் பூட்ஸ் முனையால் என் காலைச் சீண்டித் தூண்டினார். நான் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்காமல் பார்த்துக் கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை. இதன் பலன் என்னவெனில், என்னைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்து விட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும் படி செய்வதற்கு ஆசிரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. காப்பி அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை. என்றாலும் என் ஆசிரியரிடம் நான் கொண்டிருந்த மதிப்பை இச்சம்பவம் கொஞ்சமும் குறைத்து விடவில்லை. பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் குருடனாகவே இருந்து விடுவது எனது சுபாவம். இதே ஆசிரியரிடம் வேறு பல குறைபாடுகளையும் பின்னால் அறியலானேன். என்றாலும், அவரிடம் நான் வைத்திருந்த மதிப்பு மாத்திரம் குறையவே இல்லை. ஏனெனில், பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்றுக் கொண்டிருந்தேன். அதே காலத்தில் நடந்த மற்றும் இரு சம்பவங்கள் என் நினைவில் என்றும் அப்படியே இருந்து வருகின்றன. என் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில் எனக்குப் பொதுவாக விருப்பம் இருந்ததில்லை. அன்றாடம் பாடங்களைச் சரிவரப் படித்து விட வேண்டும், ஏனெனில் , சரியாகப் படிக்காததற்காக ஆசிரியரின் கண்டன தண்டனைகளுக்கு ஆளாவது எனக்கு பிடிக்காது என்பதுடன் அவரை ஏமாற்றவும் நான் விரும்பவில்லை. ஆகையால், பாடங்களையே சரியாகப் படிக்காமல் இருக்கும்போது மேற்கொண்டு வேறு புத்தகங்களைப் படிப்பது என்பதற்கே இடமில்லை. ஆனால், என் தந்தையார் வாங்கியிருந்த சிரவணனின் பிதிர் பக்தி நாடகம் (இது சிரவணன் பெற்றோரிடம் கொண்டிருந்த பக்தியைப் பற்றிய நாடகம்) என்ற புத்தகம் என் கண்ணில் எப்படியோ பட்டது. தீவிரமான சிரத்தையுடன் அப்புத்தகத்தைப் படித்தேன். அந்த சமயத்தில் எங்கள் ஊருக்குப் படங்களைக் காட்டுவோரும் வந்திருந்தார்கள். நான் பார்த்த படங்களில் ஒன்று, கண்ணிழந்த தன்னுடைய தாய் தந்தையரைச் சிரவணன் கூடையில் வைத்துக் காவடியாகத் தோளில் சுமந்து கொண்டு போனதைக் காட்டுவது. அப்புத்தகமும் இப்படமும் என் மனத்தில் அழியாத முத்திரை போட்டுவிட்டன. நீ பின்பற்றுவதற்கு இது ஒரு சரியான உதாரணம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சிரவணன் இறந்ததால் புத்திர சோகத்தோடு பெற்றோர் வருந்திப் பிரலாபித்தது என் நினைவில் இன்னும் அப்படியே இருந்து வருகிறது. சோகம் மிகுந்த அந்தக் கீதம் என் உள்ளத்தை உருக்கிவிட்டது. என் தந்தை, எனக்காக வாங்கியிருந்த வாத்தியத்தில் அந்தக் கீதத்தை வாசித்தேன். மற்றொரு நாடக சம்பந்தமாகவும் இதே போன்ற ஒரு சம்பவம் உண்டு. ஏறக்குறைய அதே சமயத்தில், ஒரு, நாடகக் குழுவினர் நடத்தி வந்த ஒரு நாடகத்தைப் பார்க்க என் தந்தையாரின் அனுமதி பெற்றேன். அரிச்சந்திரன் என்ற இந்த நாடகம், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. எத்தனை தரம் அதைப் பார்த்தாலும் எனக்குச் சலிப்பு ஏற்படாது. ஆனால் அதைப் போய் பார்க்க எத்தனை தடவைதான் என்னை அனுமதிப்பார்கள்? அது சதா என் நினைவில் இருந்து வந்தது. எண்ணற்ற சமயங்களில் எனக்குள் நானே அரிச்சந்திரனாக நடித்திருப்பேன். அரிச்சந்திரனைப் போல எல்லோரும் ஏன் சத்திய சீலர்கள் ஆகக்கூடாது? என்று அல்லும் பகலும் என்னை நானே கேட்டுக் கொள்ளுவேன். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும், அதற்காக அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களையெல்லாம் அனுபவிப்பதுமாகிய லட்சியமே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது. அரிச்சந்திரனின் கதை, உண்மையிலேயே நடந்த சமயங்களில் அழுதும் விடுவேன். அரிச்சந்திரன் சரித்திர புருஷனாக இருந்திருக்க முடியாது என்று என் பகுத்தறிவு இன்று எனக்குக் கூறுகிறது. என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் அரிச்சந்திரனும், சிரவணனும் வாழ்வின் உண்மைகள். அந்த நாடகங்களைத் திரும்ப, இன்று நான் படித்தாலும், முன்போலவே என் மனம் உருகிவிடும் என்பது நிச்சயம். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |