![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) முதல் பாகம் 25. எனது சக்தியின்மை பாரிஸ்டர் ஆகிவடுவது எளிதாகவே இருந்தது. ஆனால், பாரிஸ்டர் தொழிலை நடத்துவதுதான் மிகக் கஷ்டமாக இருந்தது. நான் சட்டங்களைப் படித்திருந்தேன். ஆனால், சட்டவாதம் செய்யும் முறையைக் கற்றுக் கொள்ளவில்லை. சட்டக் கோட்பாடுகளையெல்லாம் சிரத்தையுடன் படித்திருந்தேன். அவற்றை என் தொழிலில் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளுவது என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை. மற்றவர்களின் சொத்துக்களுக்குக் கெடுதல் ஏற்படாத வகையில் உன் சொத்தைப் பயன்படுத்திக் கொள் என்பது அத்தகைய கோட்பாடுகளில் ஒன்று. ஆனால், ஒரு கட்சிக்காரரின் நலனுக்கு ஏற்றவாறு இந்தக் கோட்பாட்டை எப்படிப் பயன்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தக் கோட்பாட்டின் மேல் எழுந்த முக்கியமான பெரிய வழக்குகளின் விவரங்களையெல்லாம் படித்துப் பார்த்தேன். என்றாலும் வழக்குகளில் அதை அனுசரிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை. இதுவல்லாமல், இந்தியச் சட்டத்தைக் குறித்து நான் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை. ஹிந்து, முகமதியச் சட்டங்களைப் பற்றியோ எனக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு பிராதைத் தயாரிப்பது எப்படி என்பதையும் நான் தெரிந்து கொள்ளவில்லை. எனவே, திக்குத்திசை தெரியாமல் தவித்தேன். ஸர் பிரோஸ்ஷா மேத்தா, கோர்ட்டுகளில் சிங்கம் போல் கர்ஜிப்பவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். அந்த வித்தையை இங்கிலாந்தில் அவர் எப்படிக் கற்றுக் கொண்டிருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டேன். அவருடைய சட்டஞானத்தை, நான் என்றாவது அடைய முடியும் என்பதற்கே இடமில்லை. ஆனால், இந்தத் தொழில் என் ஜிவனத்திற்கு வேண்டியதாவது கிடைக்குமா என்பதே எனக்குச் சந்தேகமாக இருந்தது. நான் சட்டம் படித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சந்தேகங்களும் கவலைகளுமே என்னைப் பிய்த்துக் கொண்டு இருந்தன. என்னுடைய இக்கஷ்டங்களை நண்பர்கள் சிலரிடம் கூறினேன். தாதாபாய் நௌரோஜியிடம் போய். அவர் யோசனையைக் கேட்க வேண்டும் என்று ஒரு நண்பர் எனக்குக் கூறினார். நான் இங்கிலாந்துக்கு சென்றபோது தாதா பாய்க்கும் ஓர் அறிமுகக் கடிதம் வைத்திருந்தேன் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். அதை வெகுகாலம் கழித்தே நான் பயன்படுத்திக் கொண்டேன். பேட்டி காண வேண்டும் என்று அத்தகைய பெரியவரைக் கஷ்டப்படுத்துவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று எண்ணினேன். அவர் எங்காவது பேசப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டால், அக்கூட்டங்களக்கு நான் போவேன். மண்டபத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு, அவர் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு என் கண்களுக்கும் காதுகளுக்கும் கிடைத்த அவ்விருந்தோடு வீடு திரும்புவேன். மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளுவதற்காக அவர் ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். அதன் கூட்டங்களுக்கு நான் போவேன். மாணவர்கள் விஷயத்தில் தாதாபாய் கொண்டிருந்த சிரத்தையையும் அவர்கள் அவரிடம் கொண்டிருந்த மரியாதையும் கண்டு மகிழ்ந்தேன். நாளாவட்டத்தில் தைரியப்படுத்திக் கொண்டு என்னிடம் இருந்த அறிமுகக் கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்தேன். “நீர் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து என் புத்திமதியைக் கேட்கலாம்” என்று அவர் கூறினார். ஆனால், அவர் இவ்விதம் கூறியதைப் பயன்படுத்திக் கொண்டு, நான் ஒரு தரமும் அவரிடம் போகவில்லை. மிக முக்கியமான அவசியம் இருந்தாலன்றி அவருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆகையால், எனக்குள்ள கஷ்டங்களைக் குறித்துத் தாதா பாயிடம் கூறுவது என்ற என் நண்பனின் யோசனையை ஏற்றுக் கொள்ள அச்சமயம் நான் துணியவில்லை. ஸ்ரீ பிரடரிக் பின்கட்டைச் சந்திக்குமாறு எனக்கு யோசனை சொன்னது இதே நண்பர்தானா, வேறு ஒருவரா என்பது எனக்கு நினைவு இல்லை. ஸ்ரீ பின்கட், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் இந்திய மாணவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்போ புனிதமானது. சுய நலமற்றது. பல மாணவர்கள் அவருடைய ஆலோசனையை நாடுவார்கள். உத்தியயோகங்களுக்கும் அவரிடம் மனுச் செய்து கொள்ளுவார்கள். அவரும் வேண்டியதைச் செய்வார். நான் அவரைச் சந்தித்துப் பேசியதை என்றுமே மறக்க மடியாது. ஒரு நண்பனாகவே என்னை அவர் வரவேற்று முகமன் கூறினார். எனக்கு இருந்த நம்பிக்கைகளை நான் சொல்லக் கேட்டதும் அவர் சிரித்து விட்டார். “ஒவ்வொருவரும் பிரோஸ்ஷா மேத்தாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீரா? பிரோஸ்ஷாக்களும் பத்ருதூன்களும் அபூர்வமாகவே இருப்பார்கள். சாதாரண வக்கீலாக இருப்பதற்கு அசாதாரண ஆற்றல் எதுவும் அவசியமில்லை என்பதை நிச்சயமாக நம்பும். பொதுவான யோக்கியப் பொறுப்பும் உழைப்பும் இருந்தால், ஒருவர் தம்முடைய ஜிவனத்திற்குச் சம்பாதித்துக் கொள்ள அவையே போதும். வழக்குகள் எல்லாமே சிக்கலானவை அல்ல. பொது அறிவை வளர்த்துக் கொள்ளுவதற்கு எந்த அளவு படித்திருக்கிறீர்? அதைச் சொல்லும், பார்ப்போம்” என்றார். என்னுடைய சொற்பமான படிப்பை நான் அவருக்குத் தெரிவித்ததும் அவர் ஏமாற்றம் அடைந்தார் என்பதைக் கண்டேன். ஆனால், அந்த ஏமாற்றம் அவருக்குக் கணத்தில் மாறிவிட்டது. உடனே அவர் முகத்தில் அழகிய புன்னகை மலர்ந்தது. அவர் கூறியதாவது, “உமக்குள்ள கஷ்டத்தை நான் அறிகிறேன். உமது பொது அறிவுப் படிப்பு மிகக் கொஞ்சம். ஓரு வக்கீலுக்கு இன்றியமையாததான உலக ஞானம் உமக்கு இல்லை. இந்தியாவின் சரித்திரத்தைக் கூட நீர் இன்னும் படிக்கவில்லை. மனித சுபாவத்தையும் ஒரு வக்கீல் அறிந்திருக்க வேண்டும். முகத்தைப் பார்த்தே ஒருவன் எப்படிப்பட்டன் என்பதைத் தெரிந்து கொள்ள அவரால் முடியவேண்டும். ஒவ்வோர் இந்தியரும் இந்திய சரித்திரத்தை அறிந்திருக்க வேண்டும். வக்கீல் தொழிலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, என்றாலும், இதை நீர் அறிந்திருப்பது அவசியம். 1857 சிப்பாய்க் கலகத்தைக் குறித்துக் கேபியும் மாலிஸனும் எழுதியிருக்கும் சரித்திரத்தைக்கூட நீர் படித்ததில்லை எனக் காண்கிறேன். அதை உடன் படிப்பதோடு, மனித சுபாவத்தை புரிந்து கொள்ளுவதற்கு மற்ற இரு புத்தகங்களையும் படியும் லவேட்டரும் ஷெம்மல் பென்னிக்கும் முகபாவங்களைக் குறித்து எழுதியிருக்கும் புத்தகங்களே அவை இரண்டும்.” மதிப்பிற்குரிய இந் நண்பரிடம் நான் மிகுந்த நன்றியறிதல் உள்ளவனானேன். அவர் முன்னிலையில் எனக்கு இருந்த பயமெல்லாம் பறந்து ஓடிவிட்டதைக் கண்டேன். ஆனால், அவரை விட்டு வந்ததுமே திரும்பக் கவலைப்பட ஆரம்பித்து விட்டேன். வீட்டுக்குத் திரும்புகையில் அவ்விரு புத்தகங்களைப் பற்றி நான் எண்ணியபோது, ஒருவனுடைய முகத்தைக்கொண்டே அவனுடைய குணங்களை அறிவது எப்படி? என்பதே என் மனத்தைச் சதா அலைத்துக் கொண்டிருந்தது. மறுநாள் லவேட்டரின் புத்தகத்தை வாங்கினேன். ஷெம்மல் பென்னிக்கின் புத்தகம் கடையில் கிடைக்கவில்லை... லவேட்டரின் புத்தகத்தைப் படித்தேன். ஈக்விடியைப் பற்றி ஸ்னெல்லின் புத்தகத்தையும் விட இது அதிக கஷ்டமானதாக இருந்ததோடு படிப்பதற்கும் ரசமாக இல்லை. ஷேக்ஸ்பிரியரின் முக பாவத்தைப் பற்றியும் படித்தேன். ஆனால், லண்டன் தெருக்களில் அங்கும் இங்குமாக நடந்தகொண்டிருக்கும் ஷேக்ஸ்பியர்களின் முகபாவத்தைக் கொண்டு அவர்களைப் புரிந்து கொண்டுவிடும் ஆற்றல் எனக்கு ஏற்படவில்லை. லவேட்டரின் புத்தகம் எனக்குப் புதிய அறிவு எதையும் புகட்டிவிடவில்லை. ஸ்ரீ பின்கட்டின் புத்திமதிகள் எனக்கு நேரடியான உதவி எதையும் அளித்துவிடவில்லை. ஆனால், அவருடைய அன்பு எனக்குத் தைரியத்தை ஊட்டியது. அவரது புன்னகை பூத்த கபடமற்ற முகம், என் நினைவில் பதிந்துவிட்டது. ‘வெற்றிகரமான ஒரு வக்கீல் ஆவதற்கப் பிரோஸ்ஷா மேத்தாவுக்குள்ள அறிவுக்கூர்மையும், ஞாபக சக்தியும் ஆற்றலும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, யோக்கியப் பொறுப்பும் உழைப்பும் போதும்’ என்று அவர் கூறிய புத்திமதியில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. கடைசியில் கூறப்பட்ட இவ்விரு குணங்களும் என்னிடம் ஓரளவுக்கு இருந்ததால் நான் ஒருவாறு தைரியம் கொண்டேன். கேயியும் மாலிஸனும் சிப்பாய் கலகத்தைக் குறித்து எழுதிய புத்தகத்தை இங்கிலாந்தில் இருந்தபோது நான் படிக்க முடியவில்லை. ஆனால், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே படித்து விட வேண்டும் என்று எண்ணியிருந்ததால் அவற்றைத் தென்னாப்பிரிக்காவில் படித்தேன். இவ்விதமான மனச்சோர்வுடனும், அற்ப சொற்பமான நம்பிக்கையுடனும், எஸ்.எஸ். அஸ்ஸாம் என்ற கப்பலில் நான் பம்பாய் வந்து இறங்கினேன். துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்தது. ஒரு நீராவிப் படகும் மூலமே கப்பலிலிருந்து கரைசேர்ந்தேன். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |