![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) முதல் பாகம் 3. குழந்தை மணம் இந்த அத்தியாயத்தை நான் எழுத நேர்ந்திருக்கக்கூடாது என்றே விரும்புவேன். இந்த வரலாற்றைக் கூறி முடிப்பதற்குள் கசப்பானவை பலவற்றை நான் விழுங்கித்தான் ஆகவேண்டும் என்பதை அறிவேன். நான் சத்தியத்தை வழிபடுவனாக இருப்பதென்றால், வேறு விதமாக நடந்து கொள்ளுவதற்கில்லை. எனது பதிமூன்றாவது வயதில் எனக்கு மணமாயிற்று என்பதைத் கூறியாக வேண்டியது, வேதனையோடு கூடிய என் கடமையாகிறது. என்னை சுற்றிலும் என் பராமரிப்பில் இருக்கும் அதே வயதுடைய சிறுவர்களைப் பார்த்துவிட்டு என் விவாகத்தையும் எண்ணும் போது என்னைப் பற்றி நானே பரிதாபப்பட்டுக் கொள்ளத் தோன்றுகிறது. என் கதிக்கு ஆளாகிவிடாமல் தப்பி விட்ட அவர்களை ஆசீர்வதிக்கவும் தோன்றுகிறது. அப்படிப்பட்ட அக்கிரமமான குழந்தைக் கல்யாணம் சரி என்று கூறுவதற்கு ஒழுக்கரீதியான வாதம் எதுவும் இருப்பதாக நான் காணவில்லை. எனக்கு ஆனது விவாகம் அன்றி நிச்சயதார்த்தம் அன்று என்பதை வாசகர்கள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கத்தியவாரில் நிச்சயதார்த்தம், விவாகம் என்ற இரண்டு வெவ்வேறு சடங்குகள் உண்டு. நிச்சயதார்த்தம் என்பது ஒரு பையனுக்கும் ஒரு பெண்ணுக்கும் விவாகம் செய்வதென்று அவ்விருவரின் பெற்றோர்களும் ஆரம்ப நிச்சயம் செய்து கொள்வது. அது மீறிவிட முடியாதது அல்ல. பையன் இறந்து விட்டால் பெண் விதவை ஆகிவிடுவதும் இல்லை. பெற்றோரைப் பொறுத்தவரை செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தமே இது. குழந்தைகளுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்படி நிச்சயதார்த்தம் ஆகியிருக்கிறது என்பதை அநேகமாக அக் குழந்தைகளுக்கு அறிவிப்பதும் இல்லை. எனக்குத் தெரியாமலேயே எனக்கு மும்முறை நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது என்று தெரிகிறது. எனக்கு என்று நிச்சயம் செய்திருந்த இரு பெண்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்டனர் என்பதை அறிந்தேன். எனது ஏழாவது வயதில் மூன்றாவது நிச்சயதார்த்தம் நடந்ததாக இலேசாக நினைவிருக்கிறது. ஆனால், அதைப்பற்றி எனக்கு யாரும் தெரிவித்திருந்ததாக நினைவு இல்லை. இந்த அத்தியாயத்தில் என் விவாகத்தைப் பற்றியே நான் கூறுகிறேன். அதைப் பற்றிய ஞாபகம் எனக்குத் தெளிவாக இருக்கிறது. நாங்கள் சகோதரர்கள் மூவர் என்பது நினைவிருக்கும். மூத்தவருக்கு முன்னாலேயே மணம் ஆகிவிட்டது. அடுத்த சகோதரர் எனக்கு இரண்டு அல்லது மூன்று வயது மூத்தவர். இந்த இரண்டாவது சகோதரருக்கும், எனக்கும், எனக்கு ஒரு வயது மூத்தவரான பெரியப்பா பிள்ளைக்கும் ஒரே சமயத்தில் மணம் முடித்து விடுவது என்று பெரியவர்கள் முடிவு செய்தனர். இப்படி முடிவு செய்ததில் எங்களுடைய நன்மையைக் குறித்தோ, எங்கள் விருப்பத்தைப் பற்றியோ அவர்களுக்குச் சிந்தனையே இல்லை. அவர்கள் சௌகரியத்தையும் சிக்கனத்தையும் மாத்திரம் பற்றிய விஷயம் அது. ஹிந்துக்களின் கல்யாணம் என்றால் சாதாரண விஷயம் அன்று. பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் விவாகத்தினாலேயே தங்களுக்கு நாசத்தைத் தேடிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் சொத்தையும் வீணாக்குகிறார்கள், காலத்தையும் வீணாக்குகிறார்கள். ஆடைகள் தயாரிப்பது, நகைகள் செய்வது, விருந்துகளுக்கு வேண்டிய திட்டங்கள் போடுவது என்ற வகையில் முன்னேற்பாடுகளுக்கே பல மாதங்கள் ஆகிவிடுகின்றன. விருந்துப் பட்சணங்கள் தயாரிப்பதில், அளவிலும் வகையிலும், ஒவ்வொருவரும் மற்றவரை மிஞ்சிவிட வேண்டும் என்று முயல்கிறார்கள். பெண்களுக்குக் குரல் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, ஏகக் கூப்பாடு போட்டுப் பாடுகிறார்கள். நோய் வாய்ப்படவும் செய்கிறார்கள். அண்டை வீட்டுக்காரர்கள் அமைதியோடு இருக்க முடியாத படியும் செய்து விடுகிறார்கள். இத்தகைய கூச்சல், குழப்பங்களையும் விருந்து இலைகளில் மிஞ்சியதையும், குப்பையையும், மற்றும் சகல ஆபாசங்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களும் சகித்துக் கொள்கிறார்கள். ஏனெனில், தாங்களும் அவ்வாறே நடந்து கொள்ளவேண்டிய ஒரு சமயம் வரும் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தத் தொல்லைகளெல்லாம் ஒரே சமயத்தில் தீர்ந்து போவது எவ்வளவோ, நல்லது என்று என் பெரியோர்கள் எண்ணினர். இப்படிச் செய்தால் செலவும் குறைவாக இருக்கும் ஆடம்பரமும் அதிகமாயிருக்கும். மூன்று தடவைகளில் செலவழிப்பதற்குப் பதிலாக ஒரே தடவையில் செலவிடுவதனால் பணத்தையும் தாராளமாகச் செலவிடலாம். என் தந்தைக்கும் பெரியப்பாவுக்கும் வயதாகிவிட்டது. அவர்கள் விவாகம் செய்து வைக்க வேண்டியிருந்த கடைசிக் குழந்தைகள் நாங்கள். தங்கள் கடைசிக்காலத்தில் சந்தோஷமான காரியத்தைச் செய்துவிட்டுப் போவோமே என்றும் அவர்கள் எண்ணியிருக்கக் கூடும். இவற்றையெல்லாம் முன்னிட்டு மூன்று விவாகங்களையும் ஒரே சமயத்தில் முடித்துவிடுவது என்று முடிவு செய்தனர். நான் முன்பே கூறியிருப்பதைப்போல, இவற்றிற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடிப்பதற்கு மாதங்கள் பல ஆயின. இத்தகைய முன்னேற்பாடுகளையெல்லாம் பார்த்த பிறகே, நடைபெற இருக்கும் சம்பவங்களைப்பற்றி நாங்கள் அறியலானோம். உடுத்துக்கொள்ள நல்ல ஆடைகள் கிடைக்கும், மேளதாளங்கள் இருக்கும். கல்யாண ஊர்வலங்கள் இருக்கும், பிரமாதமான விருந்து நடக்கும், இவற்றுடன், சேர்ந்து விளையாடுவதற்கு விசித்திரப் பெண் ஒருத்தியும் கிடைப்பாள் என்பதைத்தவிர, விவாகம் என்பதைப்பற்றி எனக்கு அப்பொழுது வேறோன்றுமே தெரியாது. சிற்றின்ப இச்சை பிறகுதான் ஏற்பட்டது. குறிப்பிடக்கூடிய சில விவகாரங்களைத் தவிர நான் வெட்கப்பட வேண்டிய பிறவற்றை மறைத்துவிடவே விரும்புகின்றேன். இந்த விவரங்களைப் பிற்பாடு சொல்லுகிறேன். ஆனால், இவற்றிற்கும், இந்தக்கதையை நான் எழுதுவதன் முக்கியமான நோக்கத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமிலலை. ஆகவே, என் அண்ணனையும் என்னையும் ராஜகோட்டிலிருந்து போர்பந்தருக்கு அழைத்துச் சென்றனர். முடிவான நாடகத்துக்குப் பூர்வாங்கமாக எங்கள உடம்பெல்லாம் அரைத்த மஞ்சளைப் பூசியது போன்ற சில வேடிக்கையான விவரங்களும் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் நான் கூறாமல் விட்டுவிட வேண்டியதுதான். என் தந்தையார் ஒரு திவான். ஆனாலும் ஓர் ஊழியர்தான். அவரிடம் தாகூர் சாஹிப் விசேஷ அபிமானம் வைத்திருந்ததனால் அவர் கொஞ்சம் அதிகப்படியாகவே ஊழியம் புரிந்தார். தாகூர் சாஹிப் கடைசி நிமிஷம் வரையிலும் என் தந்தையாரைப் போக விடவில்லை. போக அனுமதித்தபோது பிரயாண காலத்தில் இரண்டு தினங்கள் குறைவதற்காக, விசேஷக் குதிரை வண்டிகளை என் தந்தைக்கு ஏற்பாடு செய்ய அவர் உத்தர விட்டார். ஆனால் விதி வேறுவிதமாக இருந்து விட்டது. ராஜகோட்டிலிருந்து போர் பந்தருக்கு 120 மைல்கள். சாதாரண வண்டியில் வந்தால் ஐந்து நாட்கள் ஆகும். என் தந்தையோ மூன்றே நாட்களில் வந்துவிட்டார். ஆனால் மூன்றாவது கட்டத்தில் வந்து கொண்டிருந்தபோது அவர் வந்த குதிரை வண்டி குடை சாய்ந்தது. அவர் பலத்த காயமடைந்தார். காயங்களுக்காக, உடம்பெல்லாம் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தார். நடைபெறவிருக்கும் வைபவத்தில் அவருக்கும் எங்களுக்கும் இருந்திருக்க வேண்டிய சிரத்தையில் பாதி இதனால் போய்விட்டது. ஆயினும் எப்படியும் வைபவம் நடந்தாக வேண்டும். முகூர்த்தத் தேதிகளை மாற்ற முடியுமா? குழந்தைகளுக்குக் கல்யாணத்தில் இயல்பாக ஏற்படும் சந்தோஷம் எனக்கும் ஏற்பட்டிருந்தது. அதில் மூழ்கியதன் காரணமாக, என் தந்தையின் காயங்களால் அடைந்த மனக்கிலேசத்தை மறந்திருந்தேன். என் பெற்றோரிடம் எனக்குப் பக்தியுண்டு. அதே அளவுக்குச் சதை உணர்ச்சிகளிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. என் பெற்றோருக்கு நான் ஆற்ற வேண்டிய பக்தியோடு கூடிய பணிக்காக எல்லாச் சுகங்களையும், இன்பங்களையும் நான் தியாகம் செய்துவிட வேண்டும் என்பதை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. எனினும், இன்ப நுகர்ச்சியில் நான் கொண்டிருந்த ஆசைக்குத் தண்டனையாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்பொழுதிலிருந்து அந்தச் சம்பவம் என் மனத்தில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதைப்பற்றிப் பிறகு சொல்லுகிறேன். ஆசைகளைத் துறக்காமல் ஆசைக்குரிய பொருள்களைத் துறப்பதென்பது, நீ எவ்வளவு முயன்றாலும் அற்பாயுசில் முடிந்துவிடக் கூடியதே என்று நிஷ்குலானந்தர் பாடியிருக்கிறார். இப்பாடலை நான் பாடும்போதெல்லாம், பாடக் கேட்கும் போதெல்லாம், வெறுக்கத்தக்க கசப்பான அந்தச் சம்பவம் உடனே என நினைவுக்கு வந்து, வெட்கப்படும்படி செய்கிறது. என் தந்தைக்குப் பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தும், சமாளித்துக் கொண்டு தைரியமாகவே காணப்பட்டார். மண வைபவங்களிலும் கலந்து கொண்டார். பல தரப்பட்ட சடங்குகளில் அவர் கலந்து கொண்டபோது, எந்த எந்த இடங்களில் உட்கார்ந்திருந்தார் என்பதைக்கூட இன்றும் என் மனக்கண் முன்பு கொண்டுவர முடியும். நான் குழந்தையா இருந்தபோதே எனக்கு விவாகம் செய்துவிட்டதற்காக என்றாவது ஒரு நாள் நான் என் தந்தையைக் கடுமையாகக் குறை கூறுவேன் என்று அப்பொழுது நான் கனவிலும் எண்ணவில்லை. அன்று நடைபெற்றவை யாவும் சரியானவை, நியாயமானவை, மகிழ்ச்சிகரமானவை என்றே அந்த நாளில் எனக்குத் தோன்றியது. விவாகம் செய்துகொண்டுவிட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கே இருந்தது. என் தந்தை செய்வன எல்லாம் சரியான காரியமாகவே அப்பொழுது எனக்குத் தோன்றியதால் அவற்றைப் பற்றிய நினைவு என் ஞாபகத்தில் அப்படியே இருந்து வருகின்றது. மணவறையில் நாங்கள் எவ்விதம் அமர்ந்திருந்தோம், சப்தபதிச் சடங்குகளை எவ்விதம் நிறைவேற்றினோம், புதிதாக மணமான கணவனும் மனைவியும் இனிப்பு கன்ஸாரை எவ்விதம் ஒருவருக்கொருவர் வாயில் ஊட்டிக் கொண்டோம், நாங்கள் இருவரும் எவ்விதம் கூடி வாழத் தலைப்பட்டோம் என்பனவற்றையெல்லாம் இன்றுகூட என் உள்ளத்தில் நினைத்துப் பார்க்க முடியும். மேலும் அந்த முதல் இரவு! எதுவுமே அறியாத இரு குழந்தைகள், எந்தச் சிந்தனையும் இல்லாமல் வாழ்கைச் சாகரத்தில் தாமே குதித்தன. முதல் இரவில் நான் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி என் அண்ணன் மனைவி எனக்கு முழுப் போதனையும் செய்து வைத்திருந்தார். என் மனைவியைத் தயார் செய்திருந்தவர் யார் என்று எனக்குத் தெரியாது. அதைப்பற்றி அவளை நான் கேட்டதே இல்லை; இப்பொழுது கேட்கும் உத்தேசமும் இல்லை. ஒருவரையொருவர் சந்திப்பதில் எங்களுக்கு ஒரே நடுக்கந்தான். இதனைப்பற்றி வாசகர்களுக்குச் சந்தேகமே தேவையில்லை. உண்மையிலேயே எங்களுக்கு அளவு கடந்த கூச்சம். அவளுடன் நான் எப்படிப் பேசுவது? என்ன சொல்லுவது? சொல்லிக் கொடுத்திருந்த பாடம் அந்த அளவுக்கு உதவவில்லை. ஆனால், இத்தகைய காரியங்களில் உண்மையில் எந்தவிதமான போதனையுமே அவசியமில்லை. ஜன்மாந்தர வாசனைகளே எல்லாவிதமான போதனைகளும் அனாவசியமானவை என்று ஆக்கிவிடக்கூடியவை. நாளடைவில் ஒருவரையொருவர் அறிந்து கொண்டோம். ஆனால், கணவன் என்ற அதிகாரத்தை நான் உடனே மேற்கொண்டுவிட்டேன். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |