![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) இரண்டாம் பாகம் 12. இந்தியருடன் தொடர்பை நாடினேன் கிறிஸ்தவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தைக் குறித்து மேற்கொண்டும் எழுதுவதற்கு முன்னால், அதே சமயத்தில் எனக்கு உண்டான மற்ற அனுபவங்களையும் நான் குறிப்பிட வேண்டும். நேட்டாலில் தாதா அப்துல்லாவுக்கு என்ன அந்தஸ்து இருந்ததோ அதே அந்தஸ்து, சேத் தயாப் ஹாஜி முகமதுக்கும் பிரிட்டோரியாவில் இருந்தது. அவர் இல்லாமல் பொதுஜன காரியம் எதுவும் அங்கே நடவாது. முதல் வாரத்திலேயே நான் அவரை அறிமுகம் செய்துகொண்டேன். பிரிட்டோரியாவில் இருக்கும் ஒவ்வோர் இந்தியருடன் தொடர்பு வைத்துக்கொள்ள நான் விரும்பியதைக் குறித்து அவரிடம் கூறினேன். அங்கே இந்தியரின் நிலைமையைத் தெரிந்துகொள்ள நான் ஆசைப்படுவதாகவும் அவருக்குத் தெரிவித்தேன். இந்த முயற்சியில் எனக்கு அவருடைய உதவி வேண்டும் என்றும் கோரினேன். உதவியளிக்க அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். பிரிட்டோரியாவில் இருக்கும் எல்லா இந்தியரையும் கூட்டி வைத்து, டிரான்ஸ்வாலில் அவர்களுக்கு இருந்த நிலையை எடுத்து கூறுவது என்பது எனது முதல் வேலை. இக்கூட்டம், சேத் ஹாஜி முகமது ஜூஸப் வீட்டில் நடந்தது. அவருக்கு என்னை அறிமுகப்படுத்தும் கடிதம் ஒன்றும் என்னிடம் இருந்தது. இக்கூட்டத்திற்கு மிகச் சில ஹிந்துக்களும் வந்திருந்தனரெனினும் பிரதானமாக மேமன் வர்த்தகர்களே வந்திருந்தார்கள். உண்மையில் பிரிட்டோரியாவில் இந்துக்கள் மிகச் சிலரே இருந்தனர். இக்கூட்டத்தில் நான் ஆற்றிய சொற்பெருக்கே என் வாழ்க்கையில் நான் செய்த முதல் பிரசங்கம் எனலாம். அங்கே பேசுவதற்குச் சுமாராக விஷயத்தைத் தயார் செய்து கொண்டே போனேன். நான் பேசிய விஷயம் வியாபாரத்தில் உண்மையைக் கடைப்பிடித்தலைப் பற்றியது. வியாபாரத்தில் உண்மையாக நடந்து கொள்ளுவதென்பது சாத்தியமானதே அல்ல என்று வர்த்தகர்கள் கூறிவருவதை நான் எப்பொழுதும் கேட்டு வந்திருக்கிறேன். அப்படிச் சாத்தியமில்லை என்று நான் அப்பொழுது நினைத்ததில்லை, இப்பொழுதும் நினைக்க வில்லை. வியாபாரமும் உண்மையும் ஒன்றுக்கொன்று பொருந்தாதவை என்று சொல்லும் வர்த்தக நண்பர்கள் இன்றும் இருக்கிறார்கள். வியாபாரம், முற்றும் உலக விவகாரம் என்றும், சத்தியமோ மதத்தைப் பற்றியது என்றும் சொல்லுகிறார்கள். உலக விவகாரத்திற்கு மத விஷயம் முற்றும் வேறானது என்றும் வாதிக்கின்றனர். வியாபாரத்தில் சுத்தமான உண்மைக்கே இடமில்லை. உசிதமான அளவுக்குத்தான் அதில் உண்மை பேச முடியும் என்கின்றனர். அவர்களுடைய அந்தக் கொள்கையை நான் என்னுடைய சொற்பொழிவில் பலமாக எதிர்த்தேன். வர்த்தகர்களுக்கு அவர்களுடைய கடமை உணர்ச்சியை எழுப்பினேன். அக்கடமை இரு வகையானது. அங்குள்ள சில இந்தியரின் நடத்தையே அவர்களுடைய தாய் நாட்டின் கோடிக்கணக்கான சகோதர மக்களின் தன்மையை இந்நாட்டார் அறிவதற்கு அளவு கோல் ஆகிறது. ஆகையால், ஓர் அந்நிய நாட்டில் உண்மையுள்ளவர்களாக, இருக்க வேண்டிய பொறுப்பு, அவர்களுக்கு மேலும் அதிகமாகிறது. சுற்றிலும் இருந்த ஆங்கிலேயருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் மக்களின் பழக்கங்கள், சுகாதாரக் குறைவாக இருந்ததைக் கவனித்திருந்தேன். ஆகையால் அதை அங்கே கூடியிருந்தவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். ஹிந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், குஜராத்திகள், மதராஸிகள், பஞ்சாபிகள், சிந்திகள், கச்சிக்காரர்கள், சூரத்காரர்கள் என்றெல்லாம் இருக்கும். பாகுபாடுகளையெல்லாம் மறந்துவிட வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்தினேன். முடிவாக, மற்றொரு யோசனையும் கூறினேன். குடியேறியிருக்கும் இந்தியரின் கஷ்டங்களைக் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையிட்டுக் கொள்ளுவதற்கு ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ளவேண்டும் என்றேன். அச்சங்கத்திற்குச் சாத்தியமான அளவுக்கு என் நேரத்தையும் சேவையையும் அளிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் அறிவித்தேன். என்னுடைய சொற்பொழிவு அங்கே கூடியிருந்தவர்களின் மனத்தை நன்கு கவர்ந்தது என்பதைக் கண்டேன். என் பேச்சைத் தொடர்ந்து விவாதம் நடந்தது. எனக்கு வேண்டிய விவரங்களையும் சேகரித்துக் கொடுப்பதாகச் சிலர் முன்வந்தனர். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. என் சொற்பொழிவைக் கேட்டவர்களில் மிகச் சிலருக்கே ஆங்கிலம் தெரியும் என்பதையும் அறிந்தேன். அந்நாட்டில் ஆங்கிலம் தெரிந்திருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதியதால் அவகாசம் இருப்பவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுமாறு யோசனை கூறினேன். அதிக வயதாகிவிட்ட பிறகும்கூட ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு விடுவது சாத்தியமே என்று நான் அவர்களுக்குச் சொன்னதோடு, அப்படிக் கற்றுக்கொண்ட சிலரைப் பற்றியும் உதாரணமாக எடுத்துக் கூறினேன். அதைச் சொல்லிக் கொடுப்பதற்கென்று ஒரு வகுப்பை ஆரம்பித்தால் அதில் வந்து போதிக்கிறேன் என்றேன். விரும்பினால் நானே அவர்கள் வீட்டுக்குப் போய்ச் சொல்லிக் கொடுக்க தயார் என்றும் கூறினேன். இம்மொழியைப் போதிக்க வகுப்பு எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், தங்களுக்கு இருக்கும் வசதியைப் பொறுத்துக் கற்றுக்கொள்ளத் தாங்கள் தயாராய் இருப்பதாக மூன்று இளைஞர்கள் அறிவித்தனர். இதற்கு அவர்கள் விதித்த நிபந்தனை, அவர்களுடைய இடத்திற்கு நான் போய்ச் போதிக்க வேண்டும் என்பது. அவர்களில் இருவர் முஸ்லிம்கள் - ஒருவர் நாவிதர் மற்றொருவர் குமாஸ்தா, - மூன்றாமவர் ஹிந்து. இவர் ஒரு சில்லைரைக் கடைக்காரர். அவர்களுடைய சௌகரியப்படி போய்ச் சொல்லிக் கொடுக்க ஒப்புக்கொண்டேன். சொல்லிக் கொடுப்பதில் எனக்குள்ள தகுதியைப்பற்றி எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. என் மாணவர்கள் சளைத்துப் போனாலும் போகலாமே ஒழிய, நான் சளைக்கமாட்டேன். சில சமயங்களில் நான் அவர்கள் இருக்கும் இடத்திற்குப் போகும்போது அவர்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். என்றாலும் பொறுமையை இழந்து விடுவதில்லை. ஆங்கிலத்தில் புலமை பெறும் வகையில் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இம்மூவரில் எவருக்கும் விருப்பம் இல்லை. ஆனால், இவர்களில் இருவர் சுமார் எட்டு மாத காலத்தில் நல்ல அபிவிருத்தியை அடைந்தனர் என்று சொல்லலாம். இருவர், கணக்கு எழுதவும், வியாபார சம்பந்தமான சாதாரணக் கடிதங்களை எழுதவும் போதுமான அளவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொண்டார்கள். ஆனால் , நாவிதருக்கோ இம்மொழியைக் கற்பதிலிருந்த ஆசை, தமது வாடிக்கைகாரர்களிடம் பேசக்கூடிய அளவிற்குத் தெரிந்தால் போதும் என்பதோடு நின்றது. இவ்விதம் படித்ததனால், இம்மாணவர்களில் இருவர், நல்ல வருமானம் பெறுவதற்கான தகுதியை அடைந்தனர். முன்னால் கூறிய பொதுகூட்டத்தின் பலன் எனக்குத் திருப்தி அளித்தது. இத்தகைய பொதுக்கூட்டங்களை வாரத்திற்கு ஒரு முறை கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது என்றே எனக்கு ஞாபகம். மாதம் ஒருமுறை கூட்டுவது என்றும் முடிவு செய்திருக்கக்கூடும். அநேகமாகத் தவறாமல் கூட்டங்கள் நடந்து வந்தன. அச்சமயங்களில் அவரவர்களின் அபிப்பிராயங்களைத் தாராளமாக எடுத்துக் கூறி வந்தனர். இதன் பலன் என்னவென்றால், பிரிட்டோரியாவில் எனக்குத் தெரியாத இந்தியர் எவருமே இல்லை என்று ஆகிவிட்டதுதான். அவர்களின் ஒவ்வொருவரின் நிலைமையையுங்கூட நான் அறிந்திருந்தேன். பிரிட்டோரியாவில் இருக்கும் பிரிட்டிஷ் ஏஜண்டு ஜேகோபஸ் டி வெட்டுடனும் பழக்கம் வைக்துக் கொள்ள வேண்டும் என்று இது என்னை ஊக்குவித்தது. இந்தியரிடம் அவருக்கு அனுதாபம் உண்டு. ஆனால் அவருக்கு இருந்த செல்வாக்கோ மிகச் சொற்பம். என்றாலும் தம்மால் இயன்றவரை உதவி செய்வதாக அவர் ஒப்புக் கொண்டார். நான் விரும்பும் போது தம்மை வந்த பார்க்கும்படியும் என்னை அழைத்தார். பிறகு ரெயில்வே அதிகாரிகளுக்கு எழுதினேன். ரெயில்வே பிரயாணம் செய்வது சம்பந்தமாக இந்தியருக்கு இருந்து வரும் கஷ்டங்கள், ரெயில்வேக்களின் விதிகளின் படியும் நியாயமற்றவை என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டினேன். ரெயில்வே அதிகாரிகளிடமிருந்து எனக்குப் பதில் வந்தது. தக்க உடையுடன் இருக்கும் இந்தியருக்கு, முதல் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று அந்தப் பதிலில் கூறியிருந்தார்கள். சரியானபடி ஒருவர் உடையணிந்திருக்கிறார் என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் ஸ்டேஷன் மாஸ்டரிடமே இருப்பதால் அந்தப் பதில் இந்தியருக்குப் போதுமான கஷ்ட நிவாரணம் அளிப்பதாக இல்லை. இந்தியர் சம்பந்தமான சில தஸ்தாவேஜுகளைப் பிரிட்டிஷ் ஏஜண்டு எனக்குக் காட்டினார். இதே போன்ற தஸ்தாவேஜுகளைத் தயாப் சேத்தும் எனக்குக் கொடுத்தார். ஆரஞ்ச் பிரீ ஸ்டேட்டிலிருந்து இந்தியர் எவ்வளவு கொடூரமாக விரட்டியடிக்கப் படுகிறார்கள் என்பதை அவைகளைக் கொண்டு அறிந்துகொண்டேன். சுருங்கச் சொன்னால், டிரான்ஸ்வாலிலும் ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டிலும் இருக்கும் இந்தியரின் சமூக, பொருளாதார, ராஜீய நிலையைக் குறித்து நன்றாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளுவதற்கு நான் பிரிட்டோரியாவில் இருந்தது வசதியளித்தது எனலாம். இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் எனக்கு மதிப்பதற்கரிய உதவியாக இருக்கப் போகிறது என்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. ஆண்டு முடிவிலோ, ஆண்டு முடிவதற்கு முன்னாலேயோ, வழக்கு முடிந்துவிட்டால் அதற்கும் முன்பே, நான் இந்தியாவுக்குத் திரும்பி விடலாம் என்றே நினைத்து வந்தேன். ஆனால், கடவுளின் சித்தமோ வேறுவிதமாக இருந்துவிட்டது. மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |