![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) இரண்டாம் பாகம் 16. நானொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது வழக்கு முடிவடைந்துவிட்டதால் நான் பிரிட்டோரியாவில் இருப்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. ஆகவே, நான் டர்பனுக்குத் திரும்பினேன். தாய்நாட்டுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானேன். ஆனால், அப்துல்லா சேத் பிரிவுபசாரம் எதுவும் இல்லாமல் என்னை அனுப்பிவிட இசைபவர் அல்ல. சைடன்ஹாமில் அவர் எனக்கு ஒரு பிரிவுபசார விருந்து நடத்தினார். அன்று நாள் முழுவதையும் அங்கேயே கழிப்பது என்பது ஏற்பாடு. அங்கே கிடந்த பத்திரிகைகளை நான் புரட்டிக் கொண்டிருக்கையில், அதில் ஒன்றின் ஒரு மூலையில், இந்தியரின் வாக்குரிமை என்ற தலைப்பில் ஒரு சிறு செய்தி என் கண்ணில் பட்டது. அப்பொழுது சட்டசபை முன்பிருந்த ஒரு மசோதாவைப் பற்றியது, அச்செய்தி. நேட்டால் சட்டசபைக்கு மெம்பர்களைத் தேர்ந்தெடுக்க இந்தியருக்கு இருந்த உரிமையைப் பறிப்பதற்கென்று கொண்டு வரப்பட்டது, அந்த மசோதா. அம்மசோதாவைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. விருந்துக்கு வந்திருந்தவர்களுக்கும் தெரியாது. அதைக் குறித்து அப்துல்லா சேத்தை விசாரித்தேன். அவர் கூறியதாவது: “இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் எங்களுக்கு என்ன தெரிகிறது? எங்கள் வியாபாரத்தைப் பாதிக்கும் விஷயம் மாத்திரமே எங்களுக்குப் புரிகிறது. ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டில் எங்கள் வியாபாரம் எல்லாம் அடியோடு போய்விட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள், அதைக் குறித்துக் கிளர்ச்சி செய்தோம், ஒன்றும் பயனில்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருப்பதால் நாங்கள் முடவர்களாகத்தான் இருக்கிறோம். அன்றாட மார்க்கெட் நிலவரம் போன்றவைகளைத் தெரிந்து கொள்ளுவதற்கு மாத்திரமே பொதுவாக நாங்கள் பத்திரிகைகளைப் பார்க்கிறோம். சட்டங்கள் செய்யப்படுவதைக் குறித்து எங்களுக்கு என்ன தெரியும். எங்களுக்கு கண்களாகவும் காதுகளாகவும் இருப்பவர்கள் இங்கிருக்கும் ஐரோப்பிய அட்டர்னிகளே.” “இங்கே பிறந்து, படித்தும் இருக்கும் வாலிப இந்தியர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வதில்லையா?” என்று கேட்டேன். “அவர்களா?” என்று மனம் சோர்ந்து அப்துல்லா சேத் கேட்டார். “அவர்கள் எங்களைப் பொருட்டாக நினைத்து எங்களிடம் வருவதே இல்லை. உங்களிடம் உண்மையைச் சொல்லுகிறேன். அவர்களை நாங்களும் சட்டை செய்வதில்லை. அவர்கள் கிறிஸ்தவர்களாதலால் வெள்ளைக்காரப் பாதிரிகளின் கைக்குள் இருக்கின்றனர். அப்பாதிரிகளோ, அரசாங்கத்திற்கு உட்பட்டவர்கள்” என்றார். அவர் இவ்விதம் கூறியது என் கண்களைத் திறந்தது. இந்த வகுப்பினரை நம்மவர்கள் என்று நாம் உரிமை கொண்டாட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. கிறிஸ்தவம் என்பதற்குப் பொருள் இதுதானா? அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டதனால் இந்தியர்களாக இல்லாது போய்விட்டனரா? ஆனால், நானோ தாய்நாட்டுக்குத் திரும்பும் நிலையில் இருந்தேன். அகவே, இவ் விஷயத்தில் என் மனத்தில் தோன்றிய எண்ணங்களை வெளியில் கூறத் தயங்கினேன். “இந்த மசோதா சட்டமாகிவிட்டால், நமது கதியை அது இன்னும் அதிகக் கஷ்டமானதாக்கி விடும். நமது சவப்பெட்டியில் அடிக்கப்படும் முதல் ஆணி இது. நமது சுயமதிப்பின் வேரையே இது தாக்குகிறது” என்று மாத்திரம் அப்துல்லா சேத்திடம் கூறினேன். உடனே அவர் கூறியதாவது: “நீங்கள் சொன்ன நிலைமை ஏற்படலாம். வாக்குரிமை வரலாற்றை உங்களுக்குக் கூறுகிறேன். அதைப்பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது. எங்களுடைய சிறந்த அட்டர்னிகளில் ஒருவரான ஸ்ரீ எஸ்கோம்புதான் இதைப்பற்றி எங்களிடம் சொன்னார். அது நடந்த விதம் இதுதான். அவர் தீவிரமாகப் போராடுகிறவர். அவருக்கும் கப்பல் துறை இன்ஜீனீயருக்கும் பரஸ்பரம் பிடிக்காது. இன்ஜீனீயர், தமக்கு வோட்டுகள் இல்லாதபடி செய்து, தம்மைத் தேர்தலில் தோற்கடித்துவிடுவார் என்று ஸ்ரீ எஸ்கோம்பு நினைத்தார். ஆகையால், எங்களுடைய நிலைமையை எங்களுக்கு அவர் எடுத்துச் சொன்னார். அவர் கூறிய யோசனையின் பேரில் நாங்களெல்லோரும் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டு. அவருக்கு வோட்டுப் போட்டோம். நீங்கள் அந்த வாக்குரிமை முக்கியமானது என்கிறீர்கள். ஆனால், அது எங்களுக்கு எவ்விதம் முக்கியமல்ல என்பதை நீங்கள் இப்பொழுது அறியலாம். என்றாலும், நீங்கள் கூறுவது. எங்களுக்குப் புரிகிறது சரி, அப்படியானால் நீங்கள் கூறும் யோசனை தான் என்ன?” விருந்துக்கு வந்திருந்த மற்றவர்களும் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர், “செய்யவேண்டியது என்ன என்பதை நான் சொல்லட்டுமா? இந்தக் கப்பலில் நீங்கள் புறப்படுவது என்பதை ரத்துச் செய்துவிடுங்கள். இன்னும் ஒரு மாதம் இங்கே இருங்கள். நீங்கள் கூறுகிறபடி நாங்கள் போராடுகிறோம்” என்றார். மற்றவர்கள் எல்லோரும் “அதுதான் சரி, அதுதான் சரி அப்துல்லா சேத் காந்தியை நிறுத்திவையுங்கள்” என்றனர். சேத் மிகவும் சாமர்த்தியம் உள்ளவர். அவர் கூறியதாவது: “இப்பொழுது நான் அவரை நிறுத்தி வைப்பதிற்கில்லை. அவரை நிறுத்திவைப்பதற்கு எனக்கு இருக்கும் உரிமை இப்பொழுது உங்களுக்குத்தான் இருக்கிறது. ஆனால், நீங்கள் சொல்லுவது என்னவோ முற்றும் சரியானதே. இங்கே இருக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் அவரைக் கேட்டுக் கொள்ளுவோம். அவர் ஒரு பாரிஸ்டர் என்பது உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். அவருக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்திற்கு என்ன ஏற்பாடு?” கட்டணம் என்று சொல்லப்பட்டது எனக்கு வேதனை அளித்தது. எனவே, நான் குறுக்கிட்டுச் சொன்னதாவது: “அப்துல்லா சேத், என் கட்டணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பொது ஜன ஊழியத்திற்கு கட்டணம் இருக்க முடியாது. நான் தங்குவதாயின் உங்கள் சேவகன் என்ற முறையில் தங்க முடியும். இந்த நண்பர்கள் எல்லோருடனும் எனக்குப் பழக்கம் இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நீங்கள் நம்பினால் மேற்கொண்டு ஒரு மாதம் தங்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். என்றாலும் ஒரு விஷயம் இருக்கிறது. எனக்கு நீங்கள் எதுவும் கொடுக்க வேண்டியதில்லையென்றாலும், நாம் எண்ணுவதைப் போன்ற வேலையை, ஆரம்பத்திலேயே ஏதாவது ஒரு நிதி இல்லாமல் செய்ய முடியாது. நாம் தந்திகள் அனுப்ப வேண்டி வரலாம், சில பிரசுரங்களைம் அச்சிடவேண்டி வரும். கொஞ்சம் சுற்றுப் பிரயாணமும் அவசியமாவதோடு உள்ளூர் அட்டர்னிகளையும் கலந்து ஆலோசிக்க நேரலாம். இங்குள்ள சட்டங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாதாகையால் அவைகளைப் பார்க்கச் சில சட்டப் புத்தகங்களையும் வாங்க வேண்டியிருக்கும். இவற்றை எல்லாம் பணம் இல்லாமல் செய்ய முடியாது. மேலும் இந்த வேலைக்கு ஒருவர் மாத்திரம் போதாது என்பதும் தெளிவானது. எனக்கு உதவி செய்யப் பலர் முன்வர வேண்டும்.” உடனே ஏககாலத்தில பல குரல்கள் எழுந்தன. “அல்லாவின் மகிமையே மகிமை! அவன் அருளே அருள்! பணம் வந்துவிடும் உங்களுக்கு. எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு ஆட்களும் இருக்கிறார்கள். தயவு செய்து நீங்கள் தங்குவதற்கு ஒப்புக் கொள்ளுங்கள். எல்லாம் நன்றாகிவிடும்.” இவ்விதம் பிரிவுபசார கோஷ்டி, காரியக் குழுவாக மாறியது. விருந்து முதலியவைகளைச் சீக்கரமாக முடித்துக் கொண்டு வீடு திரும்பிவிடுவோம் என்று யோசனை கூறினேன். இந்தப் போராட்டத்திற்கு என் மனத்திற்குள்ளேயே ஒரு திட்டம் போட்டுக் கொண்டேன். வாக்காளர் ஜாபிதாவில் யார் யாருடைய பெயர்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டேன். மேற்கொண்டும் ஒரு மாத காலம் தங்குவதென்றும் தீர்மானித்தேன். இவ்விதம் தென்னாப்பிரிக்காவில் என் வாழ்க்கைக்குக் கடவுள் அடிகோலியதோடு தேசிய சுயமரியாதைக்காக நடத்திய போராட்டத்திற்கு விதையையும் ஊன்றினார். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |