![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) மூன்றாம் பாகம் 17. கோகலேயுடன் ஒரு மாதம் - 1 நான் கோகலேயுடன் வசிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் சொந்த வீட்டில் வசிப்பதுபோல் நான் உணரும்படி அவர் செய்துவிட்டார். தமது சொந்தத் தம்பியைப் போன்றே பாவித்து அவர் என்னை நடத்தினார். என் தேவைகள் யாவை என்பதை எல்லாம் அறிந்து கொண்டார். எனக்கு வேண்டியவை யாவும் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். அதிர்ஷ்டவசமாக எனக்குள்ள தேவைகளோ மிகக் கொஞ்சம். அதோடு எனக்கு வேண்டியதை எல்லாம் நானே செய்துகொள்ளுவது என்ற பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டிருந்தேன். ஆகையால், வேலைக்காரரின் உதவி எனக்குத் தேவையே இல்லை. என் காரியங்களையெல்லாம் நானே செய்துகொண்டதும், நான் சுத்தமாக இருந்ததும், என்னிடமிருந்த விடாமுயற்சி, ஒழுங்கு முதலிய குணங்களும் அவர் மனத்தைக் கவர்ந்து விட்டன. அவர் அடிக்கடி என்னை மிகவும் புகழ்ந்து பேசுவார். தமது காரியம் எதையும் எனக்குத் தெரியாமல் அவர் ரகசியமாக வைத்திருந்ததாகத் தெரியவில்லை. தம்மைப் பார்க்க வரும் முக்கியமானவர்களிட மெல்லாம் என்னை அறிமுகம் செய்து வைப்பார். இவ்விதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்களில் என் நினைவில் முக்கியமாக நிற்பவர் டாக்டர் (இப்பொழுது ஸர்) பி.ஸி. ராய். கோகலேயின் ஜாகைக்கு வெகு கிட்டத்திலேயே அவர் வசித்து வந்தார் ஆகையால், அடிக்கடி வருவார். “இவர் தான் பேராசிரியர் ராய். இவருக்கு மாதச் சம்பளம் ரூ. 800. அதில் தமக்கென்று ரூ.40 வைத்துக்கொண்டு மீதியைப் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்துகிறார். இவருக்கு விவாகம் ஆகவில்லை. விவாகம் செய்துகொள்ள விரும்பவும் இல்லை” என்று சொல்லி அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். டாக்டர் ராய், இன்று இருப்பதற்கும் அன்று இருந்ததற்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. அவருடைய ஆடையும் இப்பொழுது இருப்பதுபோலவே அப்பொழுதும் எளிமையானதாக இருந்தது. ஆனால், ஒரு வித்தியாசம் உண்டு. அந்த நாளில் இந்திய மில் துணி ஆடை அணிந்துவந்தார். இப்பொழுது கதர் உடுத்துகிறார். கோகலேயும் டாக்டர் ராயும் பேசிக் கொண்டிருப்பதை எவ்வளவு நேரம் கேட்டாலும் எனக்கு அலுப்புத் தட்டுவதே இல்லை. ஏனெனில், அப் பேச்சு பொதுநன்மையைப் பற்றியதாக இருக்கும். இல்லாவிட்டால் அறிவை ஊட்டுவதாக இருக்கும். சில சமயங்களில் இப் பேச்சு, பொது ஜனத் தலைவர்களின் நடத்தையைக் கண்டிப்பதாகவும் இருக்கும். அப்பொழுது அதைக் கேட்பது, மனத்திற்கு வேதனையைத் தரும். இதன் பயனாக, முக்கியமான வீரர்களாக எனக்குத் தோன்றி வந்தவர்களில் சிலர், மிகவும் சின்ன மனிதர்களாகத் தோன்ற ஆரம்பித்தனர். கோகலே, வேலை செய்வதைப் பார்ப்பது இன்பம் தருவதாக மாத்திரமின்றி, ஒரு போதனையாகவும் இருக்கும். ஒரு நிமிட நேரத்தைக்கூட அவர் வீணாக்குவதில்லை. அவருடைய தனிப்பட்ட உறவுகள், நட்புகள் எல்லாமே பொது நன்மையை உத்தேசித்துத் தான் இருக்கும். அவர் பேசுவதெல்லாம் நாட்டின் நன்மையைக் குறித்தே. அதில் உண்மையல்லாததையோ, கபடமானதையோ ஒரு சிறிதேனும் காணமுடியாது. அவருக்கிருந்த பெரிய கவலையெல்லாம், இந்தியாவின் வறுமையும் அடிமைத்தனமும் எப்படி ஒழியும் என்பதே ஆகும். வேறு பல விஷயங்களிலும் அவருக்குச் சிரத்தை உண்டாகும்படி செய்யப் பலர் முயல்வார்கள். ஆனால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் பின் வருமாறு ஒரே பதிலேயே அவர் கூறுவார்: “அக் காரியத்தை நீங்களே செய்யுங்கள். என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் விரும்புவதெல்லாம் நாடு சுதந்திரமடைய வேண்டும் என்பதே. இதில் வெற்றி பெற்று விடுவோமானல் மற்றவைகளைப்பற்றி நான் சிந்திக்கலாம். இன்று என் முழு நேரத்தையும் பக்தியையும் ஈடுபடுத்துவதற்கு இந்த ஒன்றே போதுமானது.” ரானடேயிடம் அவர் கொண்டிருந்த அபார பக்தியை ஒவ்வொரு நிமிடமும் காணலாம். ஒவ்வொரு விஷயத்திலும் ரானடேயின் கருத்துத்தான் இவருக்கு வேத வாக்காக இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் ரானடேயின் கருத்தை எடுத்துக் காட்டுவார். நான் கோகலேயுடன் தங்கியிருந்தபோது, ரானடேயின் சிரார்த்த தினம் (அல்லது பிறந்த தினமா என்பது எனக்கு நினைவு இல்லை) வந்தது. கோகலே, இத்தினத்தைத் தவறாமல் அனுசரித்து வந்தார். அப்பொழுது அவருடன் என்னைத் தவிர அவருடைய நண்பர்களான பேராசிரியர் கதாவடே, ஒரு சப்ஜட்ஜ் ஆகியவர்களும் இருந்தனர். இத் தின வைபவத்தில் கலந்து கொள்ள எங்களைக் கோகலே அழைத்தார். அப்பொழுது அவர் பேசியபோது, ரானடேயைப் பற்றிய தமது நினைவுகளை எங்களுக்கு எடுத்துக் கூறினார். அச்சமயம் ரானடே, திலாங், மண்டலிக் ஆகியவர்களை ஒப்பிட்டுச் சொன்னார். திலாங்கின் அழகிய எழுத்து நடையைப் பாராட்டினார். சீர்திருத்தவாதி என்ற வகையில் மண்டலிக்கின் பெருமையைச் சொன்னார். இவர், தமது கட்சிக்காரர்களின் விஷயத்தில் எவ்வளவு சிரத்தை காட்டி வந்தார் என்பதற்கு ஓர் உதாரணத்தையும் குறிப்பிட்டார். அவர், வழக்கமாகப் போக வேண்டிய ரெயில் ஒரு நாள் தவறிவிட்டதாம். தமது கட்சிக்காரரின் நன்மையை முன்னிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் தாம் கோர்ட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தனி ரெயிலுக்கு ஏற்பாடு செய்துகொண்டு போய்ச் சேர்ந்தாராம். ஆனால், இவர்கள் எல்லோரையும் விட ரானடே தலைசிறந்தவர் என்றும், எல்லாவற்றிலும் சிறந்த மேதாவி என்றும் கோகலே சொன்னார். அவர் சிறந்த நீதிபதி என்பது மாத்திரம் அல்ல, அதேபோல் சிறந்த சரித்திராசிரியரும் பொருளாதார நிபுணரும், சீர்திருத்த காரருமாவார் என்றார். அவர் நீதிபதியாக இருந்தும், கொஞ்சமும் பயப்படாமல் காங்கிரஸ் மகாநாட்டிற்குச் சென்றார். அவருடைய அறிவாற்றலில் எல்லோருக்கும் நம்பிக்கை உண்டாகையால் அவர் கூறும் முடிவுகளை, எல்லோரும் எந்தவித ஆட்சேபமும் கூறாமல் ஏற்றுக்கொண்டு விடுவார்களாம். தமது குருவின் உள்ளத்திலும் அறிவிலும் இருந்த இந்த அபூர்வ குணாதிசயங்களை விவரித்துக் கூறும்போது கோகலேக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அந்த நாளில் கோகலே ஒரு குதிரை வண்டி வைத்திருந்தார். குதிரை வண்டி அவருக்கு என்ன காரணத்தினால் அவசியமாயிற்று என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, இதைக்குறித்து அவரிடம் வாதாடினேன். “தாங்கள் டிராம் வண்டியில் போய் வரக்கூடாதா? அப்படிப் போய் வந்தால், தலைவர் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமா?” என்றேன். இக்கேள்வி அவருக்குக் கொஞ்சம் மனவருத்தத்தையே உண்டாக்கிவிட்டது. அவர் கூறியதாவது: “அப்படியானால் நீங்களும் என்னை அறிந்துகொள்ளத் தவறிவிட்டீர்கள்! கவுன்ஸில் அங்கத்தினர் என்பதற்காக எனக்குக் கிடைக்கும் படிப்பணத்தை நான் சொந்தச் சௌகரியத்திற்காக உபயோகித்துக் கொள்ளுவதில்லை. டிராம் வண்டிகளில் போய் வருவதில் உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேன். அப்படி நானும் போய் வர முடியவில்லையே என்று வருத்தப்படுகிறேன். என்னைப் போல் நீங்களும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் வகையில் விளம்பரத்தைப் பெற்றுவிடும் துர்பாக்கியத்தை அடைந்துவிடும் போது, டிராம் வண்டிகளில் நீங்கள் போய் வருவது அசாத்தியம் என்று ஆகாவிட்டாலும் கஷ்டமானதாகவே இருக்கும். தலைவர்கள் செய்வதெல்லாம் தங்கள் சொந்தச் சௌகரியத்திற்காகவே என்று ஊகித்துக்கொண்டு விடுவதற்கு எவ்விதமான காரணமும் இல்லை. உங்களுடைய எளிய பழக்கங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. என்னால் இயன்ற வரை எளிய வாழ்க்கையை நடத்தி வருகிறேன். ஆனால், என்னைப்போன்ற ஒருவருக்குச் சில செலவுகள் தவிர்க்க முடியாதவை.” என்னுடைய புகார்களில் ஒன்றுக்கு இவ்வாறு அவர் திருப்தியளிக்கும் வகையில் பதில் சொல்லிவிட்டார். ஆனால், மற்றொரு புகாருக்கோ எனக்குத் திருப்தி உண்டாகும் வகையில் அவரால் பதில் சொல்லிவிட முடியவில்லை. “நீங்கள் உலாவுவதற்குக் கூடப் போவதில்லை! நீங்கள் எப்பொழுதும் நோயுற்றே இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? பொதுவேலையில் ஈடுபடுவதனால் தேகாப்பியாசத்திற்கு நேரமே இல்லாது போக வேண்டுமா?” என்றேன். “உலாவப் போவதற்கு எனக்கு எங்காவது நேரம் இருப்பதைப் பார்க்கிறீர்களா?” என்று பதிலளித்தார். கோகலே. கோகலேயிடம் எனக்கு அபாரமான மதிப்பு இருந்தது. ஆகையால், அவரை எதிர்த்துப்பேச எனக்குத் துணிவு வருவதில்லை. மேற்கண்ட பதில் எனக்குத் திருப்தியளிக்கவில்லையெனினும் மௌனமாக இருந்துவிட்டேன். ஒருவருக்கு என்னதான் அதிகமான வேலை இருந்தாலும் சரி, அவர் சாப்பிடுவதற்கு எப்படி நேரம் வைத்துக் கொள்ளுகிறாரோ அதே போலத் தேகாப்பியாசம் செய்வதற்கும் அவகாசம் தேடிக்கொள்ள வேண்டும் என்று அப்பொழுது கருதினேன். இன்றும் அவ்வாறே கருதுகிறேன். அப்படிச் செய்வது, ஒருவனுடைய வேலை செய்யும் சக்தியைக் குறைத்து விடுவதற்குப் பதிலாக அதிகப்படுத்தவே செய்கிறது என்பது எனது பணிவான அபிப்பிராயம். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |