![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) மூன்றாம் பாகம் 22. கொள்கைக்கு நேர்ந்த சோதனை கோட்டையில் அலுவலகத்திற்கு அறைகளையும், கீர்காமில் வீட்டையும் அமர்த்திக்கொண்டேன். ஆயினும் அமைதியாக நிலை பெற்றிருக்க ஆண்டவன் என்னை விடவில்லை. புதிய வீட்டுக்குக் குடிபோனவுடனேயே என்னுடைய இரண்டாவது மகன் மணிலாலுக்குக் கடுமையான அஸ்தி சுரம் (டைபாய்டு) கண்டுவிட்டது. அத்துடன் கபவாத சுரமும் (நிமோனியா) கலந்துகொண்டது. இரவில் ஜன்னி வேகத்தினால் பிதற்றல் போன்ற அறிகுறிகளும் இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னால் இவன் வைசூரியால் கடுமையாகப் பீடிக்கப் பட்டவன். டாக்டரை அழைத்து வந்தேன். மருந்தினால் அதிகப் பயன் ஏற்படாது என்றும், முட்டையும், கோழிக்குஞ்சு சூப்பும் கொடுப்பது நல்லது என்றும் அவர் கூறினார். மணிலாலுக்கு வயது பத்துதான். ஆகையால், அவனுடைய விருப்பத்தைக் கேட்டு எதுவும் செய்வது என்பதற்கில்லை. அவனுக்கு நானே போஷகனாகையால், நான்தான் முடிவுக்கு வரவேண்டும். டாக்டர் பார்ஸி வகுப்பைச் சேர்ந்தவர், மிகவும் நல்லவர். நாங்கள் சைவ உணவே சாப்பிடுகிறவர்கள் என்றும், ஆகவே அவர் கூறிய அந்த இரண்டில் என் மகனுக்கு எதுவும் கொடுப்பதற்கில்லை என்றும் சொன்னேன். எனவே, கொடுக்கக்கூடியதான வேறு எதையாவது அவர் கூறுகிறாரா என்று கேட்டேன். இதற்கு அந்த டாக்டர் கூறியதாவது: “உங்கள் மகனின் உயிர் அபாய நிலையில் இருக்கிறது. பாலில் நீரைக் கலந்து அவனுக்குக் கொடுக்கலாம். ஆனால், அது அவனுக்கு வேண்டிய போஷணையைத் தராது. எத்தனையோ ஹிந்துக் குடும்பங்களில் என்னை கூப்பிடுகிறார்கள். நோயாளிக்குக் கொடுக்கும்படி நான் கூறுவது எதையும் அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. உங்கள் மகன் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு கடுஞ் சித்தத்தோடு இல்லாமல் இருந்தால் நன்றாயிருக்கும் என்று நினைக்கிறேன்.” இதற்கு நான் பின்வருமாறு கூறினேன்: “நீங்கள் கூறுவது முற்றிலும் சரியானதே. டாக்டர் என்ற வகையில் நீங்கள் வேறு எதுவும் செய்வதற்கில்லை. ஆனால், என் பொறுப்பு மிகவும் அதிகமானது. பையன் வயது வந்தவனாக இருந்தால், அவனுடைய விருப்பத்தை அறிய நான் நிச்சயம் முயன்று அதன்படி நடந்திருப்பேன். ஆனால், இப்பொழுதோ அவனுக்காக நானே சிந்தித்து முடிவு செய்ய வேண்டியவனாக இருக்கிறேன். இதுபோன்ற சமயங்களிலேயே ஒருவருடைய நம்பிக்கை சோதனைக்கு உள்ளாகிறது என்று கருதுகிறேன். சரியோ, தவறோ, மனிதன் மாமிசம், முட்டை போன்றவைகளைத் தின்னக்கூடாது என்பதை என்னுடைய மதக் கொள்கைகளில் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கிறேன். நாம் உயிர் வாழ்வதற்கென்று மேற்கொள்ளும் சாதனங்களுக்கும் ஓர் எல்லை இருக்கவேண்டும். உயிர் வைத்திருப்பதற்கு அவசியம் என்றாலும் சில காரியங்களை நாம் செய்யக்கூடாது. இத்தகைய சமயங்களில் கூட, நானோ அல்லது என்னைச் சேர்ந்தவர்களோ மாமிசம், முட்டை போன்றவைகளை உபயோகிப்பதை என் மதம், நான் அறிந்து கொண்டிருக்கிற வரையில், அனுமதிக்கவில்லை. ஆகையால், ஏற்பட்டுவிடக் கூடும் என்று நீங்கள் கூறும் ஆபத்துக்கும் நான் தயாராக இருக்க வேண்டியதுதான். ஆனால், உங்களை ஒன்று வேண்டிக் கொள்கிறேன். உங்களுடைய சிகிச்சையை நான் பயன்படுத்திக் கொள்ள முடியாததனால், எனக்குத் தெரிந்திருக்கும் நீர்ச் சிகிச்சை முறைகளைக் கையாண்டு பார்க்கப் போகிறேன். ஆனால், சிறுவனின் நாடித்துடிப்பு, இருதயம், நுரையீரல் ஆகியவைகளைச் சோதித்துப் பார்த்து நிலையை அறிந்துகொள்ள எனக்குத் தெரியாது. தாங்கள் அவ்வப்போது வந்து அவனைச் சோதித்துப் பார்த்து இருக்கும் நிலையை எனக்கு அறிவிப்பீர்களாயின் நான் நன்றியுள்ளவனாவேன்.” நல்லவரான அந்த டாக்டர் எனக்கிருந்த கஷ்டங்களை உணர்ந்து கொண்டார். என் கோரிக்கைக்கும் சம்மதித்தார். இதில் ஒரு முடிவுக்கு வருவதற்கான வயது மணிலாலுக்கு இல்லையாயினும், நானும் டாக்டரும் பேசிக்கொண்டிருந்ததை அவனுக்குக்கூறி அவன் அபிப்பிராயத்தையும் கேட்டேன். உங்களுடைய நீர்ச் சிகிச்சையையே செய்யுங்கள். எனக்கு முட்டையோ, கோழிக்குஞ்சு சூப்போ வேண்டாம்” என்றான். இந்த இரண்டில் அவனுக்கு நான் எதைக் கொடுத்திருந்தாலும் அவன் சாப்பிட்டிருப்பான் என்பது எனக்குத் தெரியும். என்றாலும், அவன் சொன்னது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. கூனே என்பவரின் சிகிச்சை முறை எனக்குத் தெரியும். நான் அதைச் செய்தும் பார்த்திருக்கிறேன். பட்டினி போடுவதையும் பயனுள்ள வகையில் உபயோகித்துக் கொள்ளலாம் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, கூனேயின் முறைப்படி மணிலாலுக்கு ஆசனக்குளிப்புச் (Hip Baths) செய்வித்தேன். தொட்டியில் அவனை மூன்று நிமிடங்களுக்கு மேல் வைத்திருப்பதில்லை. அத்துடன் ஆரஞ்சுப் பழ ரசத்துடன் தண்ணீர் கலந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தேன். ஆனால், சுரம் குறையவில்லை; 104டிகிரிக்கும் ஏறியது. இரவில் ஜன்னி வேகத்தில் பிதற்றிக்கொண்டிருந்தான். எனக்கு ஒரே கவலையாகிவிட்டது. என்னை ஊரார் என்ன சொல்லுவார்கள்? என்னைப்பற்றி என் தமையனார்தான் என்ன நினைத்துக் கொள்ளுவார்? வேறு ஒரு டாக்டரையாவது கூப்பிடக் கூடாதா? ஆயுர்வேத வைத்தியரை ஏன் கொண்டு வரக்கூடாது? தங்களுடைய கொள்கைப் பித்துக்களையெல்லாம் குழந்தைகள்மீது சுமத்தப் பெற்றோருக்கு என்ன உரிமை இருக்கிறது? இது போன்ற எண்ணங்களெல்லாம் ஓயாமல் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தன. பிறகு இதற்கு நேர்மாறான எண்ணங்களும் தோன்றும். எனக்கு என்னவிதமான சிகிச்சையை நான் செய்து கொள்ளுவேனோ அதையே என் மகனுக்கும் செய்வது குறித்துக் கடவுள் நிச்சயம் திருப்தியடைவார். நீர்ச் சிகிச்சையில் எனக்கு நம்பிக்கை இருந்தது. மாற்று மருந்து கொடுக்கும் வைத்திய முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. குணமாகிவிடும் என்று டாக்டர்களாலும் உத்திரவாதம் அளிக்க முடியாது. அவர்களால் முடிகிற காரியம் பரிசோதனை செய்து பார்ப்பதுதான். உயிர் இருப்பதும் போவதும் கடவுள் சித்தத்தைப் பொறுத்தது. அதை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அவர் பெயரால் எனக்குச் சரியென்று தோன்றும் சிகிச்சை முறையை ஏன் அனுசரிக்கக் கூடாது? இவ்விதம் இருவகையான எண்ணங்களுக்கிடையே என் மனம் அல்லல் பட்டுக்கொண்டிருந்தது. அப்பொழுது இரவு வேளை. மணிலாலின் படுக்கையில் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தேன். ஈரத்துணியை அவன் உடம்பில் சுற்றி வைப்பது என்று தீர்மானித்தேன். எழுந்து ஒரு துப்பட்டியை நனைத்துப் பிழிந்தேன். அதை, அவன் முகத்தை மாத்திரம் விட்டுவிட்டு உடம்பெல்லாம் சுற்றினேன். பிறகு மேலே இரண்டு கம்பளிகளைப் போட்டுப் போர்த்துவிட்டேன். தலைக்கும் ஒரு ஈரத்துணியைப் போட்டேன். பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல அவன் உடம்பெல்லாம் கொதித்தது. ஒரே வறட்சியாகவும் இருந்தது. கொஞ்சங்கூட வியர்வையே இல்லை. நான் மிகவும் களைத்துப் போனேன். மணிலாலைப் பார்த்துக் கொள்ளுமாறு அவன் தாயாரிடம் விட்டுவிட்டு வெளியே கொஞ்சம் உலாவி வரலாம் என்று சௌபாத்தி கடற்கரைக்குப் போனேன். அப்பொழுது இரவு பத்து மணி இருக்கும். அங்கே இரண்டொருவரே நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை நான் பார்க்கக்கூட இல்லை. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினேன். “ஆண்டவனே, இச் சமயத்தில், என் மானத்தைக் காப்பது உன் பொறுப்பு” என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். என் உதடுகள் ராம நாமத்தை உச்சரித்தவண்ணம் இருந்தன. சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டுக்குத் திரும்பினேன். இருதயம் பட படவென்று அடித்துக்கொண்டிருந்தது. மணிலால் படுத்திருந்த அறைக்குள் நான் நுழைந்ததுமே அவன், “வந்துவிட்டீர்களா, பாபு?” என்றான். “ஆம், கண்ணே” என்றேன். “என் உடம்பெல்லாம் எரிகிறது. தயவுசெய்து என்னை வெளியே எடுத்துவிடுங்கள்.” “உனக்கு வேர்க்கிறதா, குழந்தாய்?” “வேர்வையில் ஊறிப் போய்க் கிடக்கிறேன். என்னை வெளியே எடுத்துவிடுங்கள்.” நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன். முத்து முத்தாக வேர்த்திருந்தது. சுரமும் குறைந்துகொண்டு வந்தது. கடவுளுக்கு நன்றி செலுத்தினேன். “மணிலால், உன் சுரம் நிச்சயமாகக் குறைந்துவிடும். இன்னும் கொஞ்சம் வேர்க்கட்டும். பிறகு உன்னை வெளியே எடுத்துவிடுகிறேன்” என்று கூறினேன். “வேண்டாம், அப்பா. இந்த உலையிலிருந்து என்னை இப்பொழுதே எடுத்துவிடுங்கள். வேண்டுமானால், அப்புறம் எனக்குச் சுற்றிவிடுங்கள்” என்றான். வேறு பேச்சுக்கொடுத்துக்கொண்டே மேலும் சில நிமிடங்கள் அப்படியே போர்த்தியவாறு அவனை வைத்திருந்தேன். வேர்வை அவன் தலையிலிருந்து அருவியாக வழிந்தது. அவனுக்குச் சுற்றியிருந்த துணிகளையெல்லாம் எடுத்துவிட்டு, உடம்பு உலரும்படி செய்தேன். ஒரே படுக்கையில் தகப்பனும் மகனும் தூங்கிப் போனோம். இருவரும் மரக்கட்டைபோலவே தூங்கினோம். மறுநாள் காலையில் மணிலாலுக்குச் சுரம் குறைந்திருந்தது. இவ்விதம் நாற்பது நாட்கள் நீர் கலந்த பாலும் ஆரஞ்சு ரசமுமே சாப்பிட்டு வந்தான். இப்பொழுது அவனுக்குச் சுரம் இல்லை. அது மிகவும் பிடிவாதமான வகையைச் சேர்ந்த சுரம். ஆயினும், அது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. என் புதல்வர்களில் மணிலாலே இன்று நல்ல தேக சுகம் உள்ளவனாக இருக்கிறான். அவன் பிழைத்தது கடவுள் அருளினாலா? அல்லது நீர்ச் சிகிச்சையாலா? இல்லாவிட்டால் ஆகாரத்தில் எச்சரிக்கையுடன் இருந்தாலும் நல்ல பணிவிடையாலுமா? இதில் எது என்று யாரால் சொல்ல முடியும்? அவரவர்கள் தத்தம் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் முடிவு செய்து கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரையில் என் மானத்தைக் கடவுளே காப்பாற்றினார் என்றுதான் நான் நிச்சயமாக எண்ணுகிறேன். அந்த நம்பிக்கை இன்றளவும் எனக்கு மாறாமல் இருந்து வருகிறது. மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |