![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) நான்காம் பாகம் 10. புனித ஞாபகமும் பிராயச்சித்தமும் எனது வாழ்க்கையில் ஏற்பட்ட பலவிதமான சம்பவங்கள், பல மதங்களையும் பல சமூகங்களையும் சேர்ந்தவர்களுடன் நான் நெருங்கிய தொடர்பு கொள்ளும்படி செய்துவிட்டன. இவர்களுடனெல்லாம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து நான் ஒன்று கூற முடியும். உறவினர் என்றோ, வேற்று மனிதர் என்றோ, என் நாட்டினர் என்றோ, பிற நாட்டினர் என்றோ, வெள்ளையர் வெள்ளயரல்லாதார் என்றோ, ஹிந்துக்கள் மற்ற மதத்தினரான இந்தியர் என்றோ, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள், யூதர்கள் என்றோ வேற்றுமை உணர்ச்சி எனக்கு இருந்ததே இல்லை. இவ்விதப் பாகுபாடு எதையும் கற்பித்துக்கொள்ள முடியாததாக என் உள்ளம் இருந்தது என்று சொல்லலாம். இது என் சுபாவத்தோடு ஒட்டியதாகவே இருந்ததால், இதை எனக்கு இருந்த விசேட குணம் என்று நான் கூறிக்கொள்ளுவதற்கில்லை. என்னளவில் எந்தவிதமான முயற்சியும் இல்லாமலேயே அது எனக்கு ஏற்பட்டதாகும். ஆனால், அகிம்சை, பிரம்மச்சரியம், அபரிக்கிரகம் (உடைமை வைத்துக் கொள்ளாமை), புலனடக்கம் ஆகிய நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுவதற்காக நான் இடைவிடாது முயன்று வந்தேன் என்பதையும் முற்றும் உணர்ந்திருக்கிறேன். டர்பனில் நான் வக்கீல் தொழில் நடத்தி வந்தபோது, என் அலுவலகக் குமாஸ்தாக்கள் பெரும்பாலும் என்னுடனேயே தங்குவார்கள். அவர்களில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இருந்தனர். மாகாணவாரியாகச் சொல்லுவதாயின், அவர்கள் குஜராத்திகளும் தமிழர்களும் ஆவார்கள். அவர்களும் என் உற்றார் உறவினர்களே என்பதைத் தவிர அவர்களை வேறுவிதமாக நான் எப்பொழுதாவது கருதியதாக எனக்கு ஞாபகம் இல்லை? என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே அவர்களைப் பாவித்து நடத்தி வந்தேன்; இவ்விதம் நான் நடத்துவதற்கு என் மனைவி எப்பொழுதாவது குறுக்கே நின்றால், அப்பொழுது எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படும். குமாஸ்தாக்களில் ஒருவர் கிறிஸ்தவர்; தீண்டாத வகுப்பைச் சேர்ந்த பெற்றோருக்குப் புதல்வராகப் பிறந்தவர். நான் குடியிருந்த வீடு மேற்கத்திய நாகரிகத்தையொட்டிக் கட்டப்பட்டிருந்தது. அறைகளிலிருந்து அழுக்கு நீர் வெளியே போவதற்கு அவற்றில் வழி வைக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால், ஒவ்வோர் அறையிலும் அழுக்கு நீருக்கு எனத் தனித்தனிப் பானைகள் உண்டு. இப்பானைகளை வேலைக்காரரோ, தோட்டியோ சுத்தம் செய்வதற்குப் பதிலாக அந்த வேலையை என் மனைவியோ, நானோ செய்து வந்தோம். வீட்டில் இருந்து பழகி விட்ட குமாஸ்தாக்கள், அவரவர்கள் அறையிலிருக்கும் பானைகளை அவர்களே சுத்தம் செய்து கொள்ளுவார்கள். ஆனால், கிறிஸ்தவ குமாஸ்தாவோ புதிதாக வந்தவர். அவருடைய படுக்கை அறையைக் கவனித்துக் கொள்ள வேண்டியது, எங்கள் வேலையாயிற்று. மற்றவர்களுடைய பானைகளையெல்லாம் சுத்தம் செய்வதில் என் மனைவிக்கு ஆட்சேபமில்லை. ஆனால் பஞ்சமராக இருந்த ஒருவர் உபயோகித்த பானையைச் சுத்தம் செய்வதென்பது அவருடைய வரம்புக்கு மீறியதாக இருந்தது. ஆகவே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்பானைகளை நான் சுத்தம் செய்வது என்பதையும் அவளால் சகிக்க முடியவில்லை. பானையும் கையுமாக அவள் ஏணியின் வழியாக இறங்கி வந்துகொண்டிருந்தாள். என்னைக் கடிந்து கொண்டாள். கோபத்தில் அவளுடைய கண்களெல்லாம் சிவந்திருந்தன. அவளுடைய கன்னங்களில் முத்துபோலக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அந்தக் காட்சியை நான் இன்றும் அப்படியே நினைவு படுத்திக் கொள்ள முடியும். நானோ, அன்போடு கொடூரமும் நிறைந்த கணவன். அவளுக்கு நானே உபாத்தியாயர் என்று கருதி வந்தேன். எனவே, அவளிடம் எனக்கு இருந்த குருட்டுத்தனமான அன்பின் காரணமாக அவளை மிகவும் துன்பப்படுத்தினேன். அவள் பானையை எடுத்துச் சென்றதனால் மாத்திரம் நான் திருப்தியடைந்துவிடவில்லை. அவள் அவ்வேலையைச் சந்தோஷத்துடன் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆகவே, உரத்த சப்தத்துடன், “அம்மாதிரியான மடத்தனத்தையெல்லாம் என் வீட்டில் சகிக்க மாட்டேன்” என்றேன். இச் சொற்கள் கூறிய அம்புகளாக அவள் உள்ளத்தில் தைத்து விட்டன. “உங்கள் வீட்டை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், என்னைத் தொலைத்துவிடுங்கள்” என்று அவள் திருப்பிக் கூச்சல் போட்டாள். நான் என்னையே மறந்துவிட்டேன். என் உள்ளத்திலிருந்த இரக்க ஊற்று வற்றிப் போய்விட்டது. அவள் கைகளைப் பிடித்து அத்திக்கற்ற மாதை ஏணிக்கு எதிரிலிருந்து வாயிற்படிக்கு இழுத்துக்கொண்டு போனேன். அவளை வெளியே பிடித்துத் தள்ளி விடுவதற்காகக் கதவைத் திறக்கப் போனேன். அவளுடைய கன்னங்களின் வழியே கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. அழுது கொண்டே அவள் கூறியதாவது: “உங்களுக்கு வெட்கம் என்பதே இல்லையா? இப்படியும் உங்களுக்குச் சுய உணர்வு அற்றுப் போய் விடவேண்டுமா? எனக்குப் போக்கிடம் எங்கே இருக்கிறது? எனக்குப் புகலிடம் அளிப்பதற்கு இங்கே என் பெற்றோர்களாவது உறவினர்களாவது இருக்கிறார்களா? நான் உங்கள் மனைவி என்பதனால் அடித்தாலும் உதைத்தாலும் நான் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று நினைக்கிறீர்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகிறது, நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். கதவை மூடுங்கள். நம்மைப் பார்த்து யாராவது சிரிக்கப்போகிறார்கள்!” இதைக் கேட்ட நான் என் முகத்தைக் கம்பீரமாக வைத்துக் கொண்டேன். ஆனால், உண்மையில் வெட்கமடைந்தேன். கதவையும் மூடினேன். என்ன விட்டு என் மனைவி போய்விட முடியாது என்றால், அவளை விட்டு நானும் பிரிந்துவிடமுடியாது. எங்களுக்குள் எத்தனையோ சச்சரவுகள் இருந்திருக்கின்றன. ஆனால், அவற்றின் முடிவில் எங்களுக்குள் சமாதானமே நிலவும். சகிப்புத் தன்மையின் இணையில்லாத சக்தியினால் எப்பொழுதும் வெற்றி பெறுகிறவள், மனைவியே. இச்சம்பவம், அதிர்ஷ்டவசமாக நான் கடந்துவெளிவந்து விட்ட ஒரு காலத்தைப் பற்றியது. ஆகையால், இச்சம்பவத்தை எந்தவிதமான பற்றுமில்லாமல் சொல்லக்கூடிய நிலையில் நான் இன்று இருக்கிறேன். குருடனான, வெறிகொண்ட கணவனாக நான் இப்பொழுது இல்லை; என் மனைவியின் உபாத்தியாயராகவும் இல்லை. கஸ்தூரிபாய் விரும்பினால், நான் முன்னால் அவளுக்கு எவ்வளவு தொல்லை அளித்து வந்தேனோ அவ்வளவு தொல்லையும் அவள் எனக்கு இன்று அளிக்க முடியும். சோதனைக்கு உட்பட்டுத் தேறிய நண்பர்கள் நாங்கள். இப்பொழுது நாங்கள் ஒருவரை ஒருவர் காம இச்சையின் இலக்காகக் கருதவில்லை. நான் நோயுற்றிருந்த போதெல்லாம் அவள் எனக்குப் பக்தியுள்ள தாதியாக இருந்து, எவ்விதக் கைம்மாறையும் எதிர்பாராமல் பணிவிடை செய்து வந்திருக்கிறாள். மேலே நான் சொன்ன சம்பவம் 1898-இல் நடந்தது. பிரம்மச்சரிய எண்ணமே எனக்கு இல்லாமல் இருந்த காலம் அது. கணவனுக்கு மனைவி உதவியாகவுள்ள சிநேகிதி, தோழி, கணவனின் இன்ப துன்பங்களில் பங்காளி என்பதற்குப் பதிலாக அவள் கணவனின் காம இச்சைக்குரிய அடிமை, கணவன் இட்ட வேலையைச் செய்வதற்கென்றே பிறந்திருப்பவள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த காலம், அது. 1900-ஆம் ஆண்டில்தான் இக் கருத்துக்கள் தீவிரமான மாறுதலை அடைந்தன. ஆனால், அதைப்பற்றி அதற்கேற்ற சந்தர்ப்பத்தில் சொல்லலாம் என்று இருக்கிறேன். ஒன்று மாத்திரம் இப்பொழுது சொன்னால் போதும். காமப் பசி என்னிடமிருந்து நாளாவட்டத்தில் மறைய மறைய, என்னுடைய குடும்ப வாழ்க்கை மேலும் மேலும் அமைதியாகவும் இனிமையானதாகவும், சந்தோஷகரமானதாகவும் ஆயிற்று; ஆகிக்கொண்டிருக்கிறது. புனிதமான இந்த நினைவைப் பற்றிய வரலாற்றைக் கொண்டு நானும் என் மனைவியும் பிறர் பின்பற்றுவதற்கான லட்சியத் தம்பதிகளாக இருந்தோம் என்றோ எங்களுக்கு லட்சியத்தில் ஒரேவிதமான கருத்து இருந்தது என்றோ யாரும் எண்ணிக்கொண்டு விடவேண்டாம். எனக்கு இருந்த லட்சியங்களைத் தவிர தனக்குத் தனியாக ஏதாவது லட்சியம் இருந்ததுண்டா என்பது ஒருவேளை கஸ்தூரிபாய்க்கே தெரியாமல் இருக்கலாம். நான் செய்யும் காரியங்கள் பல இன்றுகூட அவளுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவைகளைக் குறித்து நாங்கள் விவாதிப்பதே இல்லை. அவைகளை விவாதிப்பதில் எந்தவித நன்மை இருப்பதாகவும் நான் காணவில்லை. ஏனெனில், அவளைப் படிக்க வைத்திருக்க வேண்டிய சமயத்தில் அவளுடைய பெற்றோரும் படிக்க வைக்கவில்லை; நானும் அதைச் செய்யவில்லை. ஆனால், அவளிடம் ஒரு பெரிய அருங்குணம் மிகுந்த அளவில் இருக்கிறது. ஹிந்து மனைவிகள் பெரும்பாலாரிடம் ஓரளவுக்கு இருக்கும் குணமே அது. அதாவது, விரும்பியோ விரும்பாமலேயோ, அறிந்தோ அறியாமலேயோ என் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தான் நடப்பதே தனக்குப் பாக்கியம் என்று அவள் கருதி வந்திருக்கிறாள். புலனடக்க வாழ்க்கையை நடத்த நான் செய்த முயற்சிக்கு அவள் எப்பொழுதும் குறுக்கே நின்றதே இல்லை. ஆகையால் அறிவுத் துறையில் எங்களுக்கிடையே அதிகப் பேதம் இருந்தபோதிலும், எங்களுடைய வாழ்க்கை திருப்தியும், சந்தோஷமும், முற்போக்கும் உள்ளதாக இருந்து வருகிறது என்றே நான் எப்பொழுதும் உணர்கிறேன். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |