![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) நான்காம் பாகம் 27. மேலும் உணவுப் பரிசோதனைகள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் பிரம்மச்சரியத்தை அனுசரிக்க வேண்டும் என்பதில் நான் ஆர்வத்துடனிருந்தேன். அதேபோல் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கே அதிக அளவு என் காலத்தைச் செலவிடவும், தூய்மையை வளர்த்துக் கொண்டு அதற்கு என்னைத் தகுதியுடையவனாக்கிக் கொள்ளவும் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆகையால், என் உணவு சம்பந்தமாக மேலும் பல மாறுதல்களைச் செய்துகொண்டு, எனக்கு நானே அதிகக் கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. முன்னால் செய்த மாறுதல்களெல்லாம் பெரும்பாலும் தேகாரோக்கியத்தை முன்னிட்டுச் செய்தவை. ஆனால், புதிய சோதனைகளோ, சமய நோக்கில் செய்தவை. உண்ணாவிரதமும், ஆகாரக் கட்டுப்பாடும் என் வாழ்க்கையில் இப்பொழுது முக்கியமானவைகளாயின. நாவின் சுவையில் அவாவுடையவனிடமே பெரும்பாலும் காமக்குரோதங்கள் இயல்பாகக் குடிகொள்ளும். என் விஷயத்திலும் அவ்வாறே இருந்தது. காம இச்சையையும் நாவின் ருசியையும் அடக்க முயன்றதில் நான் எத்தனயோ கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி இருந்தது. அவைகளை முற்றும் அடக்கிவிட்டேன் என்று நான் இன்னும் சொல்லிக் கொள்வதற்கில்லை. என்னைப் பெருந்தீனிக்காரனாகக் கருதி வந்தேன். எனது கட்டுத்திட்டம் என்று நண்பர்கள் எதை நினைத்தார்களோ அது கட்டுத்திட்டமாக எனக்கு என்றும் தோன்றவில்லை. நான் இன்று கொண்டிருக்கும் அளவுக்குக் கட்டுத்திட்டங்களை வளர்த்துக் கொள்ளத் தவறியிருப்பேனாயின், மிருகங்களிலும் இழிந்த நிலைக்கு நான் தாழ்ந்துபோய் வெகுகாலத்திற்கு முன்பே நாசமடைந்து இருப்பேன். என்றாலும், என்னுடைய குறைபாடுகளைப் போதிய அளவுக்கு நான் அறிந்திருந்ததால், அவைகளைப் போக்கிக் கொண்டுவிடப் பெரும் முயற்சிகளை நான் செய்தேன். இந்த முயற்சிகளின் பலனாக இவ்வளவு காலமும் இவ்வுடலுடன் காலந்தள்ளி வருவதோடு அதைக் கொண்டு என்னால் இயன்ற பணியையும் செய்து வருகிறேன். என் குறைகளை நான் அறிந்திருந்ததோடு மனத்துக்கு இசைந்த சகாக்களின் தொடர்பும் எதிர்பாராத விதமாக ஏற்பட்டது. ஏகாதசி தினத்தன்று பழங்கள் மாத்திரமே சாப்பிடுவது அல்லது பட்டினி விரதம் இருப்பது என்று ஆரம்பித்தேன். ஜன்மாஷ்டமி முதலிய விரத தினங்களையும் அனுஷ்டிக்கத் தொடங்கினேன். முதலில் பழ ஆகாரத்துடன் ஆரம்பித்தேன். ஆனால், நாவின் சுவையடக்கத்தைப் பொறுத்த வரையில் பழ ஆகாரத்திற்கும் தானிய ஆகாரத்திற்கும் எந்த விதமான வித்தியாசமும் எனக்குத் தோன்றவில்லை. தானிய ஆகாரத்தைப் போலவே பழ ஆகாரத்திலும் நாவின் சுவை இன்பத்திற்கு இடமுண்டு என்பதைக் கண்டேன். பழ ஆகாரத்தில் பழக்கப்பட்டுவிட்டால் அதில் ருசி இன்பம் இன்னும் அதிகமாகிவிடவும் கூடும். ஆகையால், பட்டினி இருப்பது அல்லது விடுமுறை நாட்களில் ஒரே வேளைச் சாப்பாட்டுடன் இருப்பது என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தேன். பிராயச்சித்தம் செய்து கொள்ளுவது போன்ற சந்தர்ப்பம் வந்தால், அதையும் பட்டினி கிடப்பதற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டேன். உபவாசத்தினால் உடலிலிருந்து கழிவுப் பொருள்கள் நன்றாக வெளியேறிவிடுவதால் சாப்பாடு அதிக ருசியாக இருந்தது; நன்றாகப் பசி எடுத்தது. பட்டினியைப் புலன் அடக்கத்துக்கு மட்டுமின்றிப் புலன் நுகர்ச்சிக்கும் சக்தி வாய்ந்த சாதனமாகப் பயன்படுத்தலாம் என்பது அப்பொழுது எனக்குத் தெரிந்தது. நான் கண்ட இந்த திடுக்கிடும் உண்மைக்கு, பின்னால் எனக்கு ஏற்பட்ட இதே போன்ற அனுபவங்களையும், மற்றவர்களின் அனுபவங்களையும் சான்றுகளாகக் காட்டலாம். என் உடல் நிலையை அபிவிருத்தி செய்யவும், அதற்கு பயிற்சி அளிக்கவும் விரும்பினேன். ஆனால், இப்பொழுது எனது முக்கியமான நோக்கம், கட்டுத்திட்டங்களும் சுவையடக்கமுமே. ஆகையால், முதலில் ஓர் ஆகாரத்தையும், பிறகு மற்றோர் ஆகாரத்தையும் தேர்ந்தெடுத்துச் சோதித்தேன். அதே சமயத்தில் அளவையும் குறைத்தேன். ஆனால் சுவை இன்பம் மாத்திரம் எனக்கு முன்பு இருந்ததைப் போன்றே இருந்தது. ஒன்றைவிட்டு மற்றொன்றைச் சாப்பிட ஆரம்பித்த போது, முன்னால் சாப்பிட்டதைவிடப் பின்னால் சாப்பிட்டது புதிதாகவும், அதிக ருசியுள்ளதாகவும் எனக்குத் தோன்றிற்று. இச்சோதனைகளைச் செய்வதில் எனக்குப் பல தோழர்களும் இருந்தனர். இவர்களில் முக்கியமானவர் ஹெர்மான் கால்லென்பாக். இந்த நண்பரைக் குறித்துத் தென்னாப்பிரிக்கச் சக்தியாக்கிரக சரித்திரத்தில் முன்பே எழுதியிருக்கிறேன். ஆகையால், அதைப்பற்றி நான் இங்கே திரும்பச் சொல்லப் போவதில்லை. பட்டினியானாலும் சரி, உணவு மாற்றமானாலும் சரி, கால்லென்பாக் எப்பொழுதும் என்னுடன் இருப்பார். சத்தியாக்கிரகப் போராட்டம் உச்சநிலையில் இருந்தபோது, அவருடைய இடத்தில் நான் அவருடன் வசித்து வந்தேன். எங்கள் உணவு மாறுதல்களைக் குறித்து விவாதிப்போம். பழைய சாப்பாட்டை விடப் புதிய சாப்பாட்டில் அதிக இன்பத்தை அனுபவிப்போம். இப்படிப்பட்ட பேச்சுக்கள் அந்த நாளில் அதிக இன்பமானவைகளாக இருந்தன. அவை தகாத பேச்சுக்களாக எனக்குத் தோன்றவே இல்லை. ஆனால், உணவின் சுவையில் கவனம் செலுத்துவது தவறு என்பதை அனுபவம் எனக்குப் போதித்தது. நாவின் சுவையைத் திருப்தி செய்வதற்காகச் சாப்பிடக் கூடாது; உடலை வைத்திருப்பதற்கு என்று மாத்திரமே சாப்பிட வேண்டும். உணர்ச்சி தரும் ஒவ்வோர் உறுப்பும் உடலுக்கும், உடலின் மூலம் ஆன்மாவுக்கும் ஊழியம் செய்யும்போது அதனதன் இன்ப நுகர்ச்சி மறைந்து போகிறது. அப்பொழுது தான் அதற்கென்று இயற்கை வகுத்திருக்கும் கடமையை அது செய்ய ஆரம்பிக்கிறது. இயற்கையோடு இசைந்த இந்த நிலையை அடைவதற்கு எத்தனைதான் பரிசோதனைகள் நடத்தினாலும் போதுமானவையாக மாட்டா; எந்தத் தியாகமும் இதற்கு அதிகமாகாது. ஆனால், துரதிருஷ்டவசமான இக்காலத்தின் போக்கோ இதற்கு எதிரிடையான திக்கில் பலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அழியும் உடலை அலங்கரிப்பதற்காகவும், மிகச் சொற்ப காலம் அது நீடித்திருப்பதற்கு முயலுவதற்கும், ஏராளமான மற்ற உயிர்களைப் பலியிட நாம் வெட்கப்படுவதில்லை. இதன் பலனாக நம்மையே உடலோடும், ஆன்மாவோடும் மாய்த்துக் கொள்ளுகிறோம். பழைய நோய் ஒன்றைப் போக்கிக் கொள்ள முயன்று, நூற்றுக்கணக்கான புதிய நோய்களுக்கு இடந்தருகிறோம். புலன் இன்பங்களை அனுபவிக்க முயன்று முடிவில் இன்பானுபவத்திற்கான நமது சக்தியையும் இழந்துவிடுகிறோம். இவை யாவும் நம் கண் முன்னாலேயே நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இவற்றைப் பார்க்காமல் இருப்பவர்களைப் போன்ற குருடர்கள் வேறு யாருமே இல்லை. உணவுச் சோதனைகளின் நோக்கத்தையும், அவற்றிற்குக் காரணமாக இருந்த கருத்துக் கோவையையும் இதுவரை எடுத்துக் காட்டினேன். இனி உணவுச் சோதனைகளைக் குறித்துக் கொஞ்சம் விவரமாகவே கூற நினைக்கிறேன். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |