![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 11 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) நான்காம் பாகம் 31. பட்டினி விரதம் பால் சாப்பிடுவதையும், தானிய வகைகள் உண்பதையும் விட்டுவிட்டுப் பழ ஆகார சோதனையை ஆரம்பித்த அதே சமயத்தில், புலனடக்கத்திற்கு ஒரு சாதனமாகப் பட்டினி விரதம் இருக்கவும் தொடங்கினேன். இதில் என்னுடன் ஸ்ரீ கால்லென் பாக்கும் சேர்ந்து கொண்டார். இதற்கு முன்னால் அவ்வப் போது நான் பட்டினி விரதம் இருந்து வந்ததுண்டு. ஆனால், அந்த விரதம் முற்றும் தேக ஆரோக்கியத்திற்காகத்தான். புலனடக்கத்திற்கும் பட்டினி அவசியம் என்பதை ஒரு நண்பரின் மூலம் அறிந்தேன். நான் வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவனாதலாலும், என் தாயாரும் கடுமையான விரதங்களை எல்லாம் அனுசரித்து வந்ததாலும், இந்தியாவில் இருந்தபோது ஏகாதசி போன்ற விரதங்கள் இருந்திருக்கிறேன். ஆனால், அப்பொழுதெல்லாம் என் தாயாரைப் போல் நடக்க வேண்டும் என்பதற்காகவும், என் பெற்றோரை மகிழ்விப்பதற்காகவுமே அந்த விரதங்கள் இருந்தேன். பட்டினி விரதத்தின் நன்மை அந்தக் காலங்களில் எனக்குத் தெரியாது. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால், நான் மேலே குறிப்பிட்ட நண்பர், பிரம்மச்சரியத்திற்குச் சாதனமாகப் பட்டினி விரதத்தை அனுசரித்து நன்மை பெற்றிருக்கிறார் என்பதை அறிந்ததும், அந்த உதாரணத்தை நானும் பின்பற்றி ஏகாதசி விரதம் இருந்து வந்தேன். ஹிந்துக்கள் இத்தகைய விரத தினங்களில் பாலும் பழமும் மாத்திரம் சாப்பிடுவது உண்டு. ஆனால், இந்த விரதத்தை நான் தினமும் அனுசரித்து வந்ததால், நீரைத் தவிர எதுவும் சாப்பிடுவதில்லை என்று விரதத்தைத் தொடங்கினேன். இந்தச் சோதனையை நான் ஆரம்பித்தபோது, ஹிந்துக்களின் சிராவண மாதமும், முஸ்லிம்களின் ரம்ஜான் மாதமும் ஒரே சமயத்தில் வந்தன. காந்தி வம்சத்தினர், வைஷ்ணவ விரதங்களை மட்டுமின்றிச் சைவ விரதங்களையும் அனுசரிப்பது உண்டு. சிவ ஆலயங்களுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் போவார்கள். குடும்பத்தைச் சேர்ந்த சிலர், சிராவண மாதத்தில் பிரதோஷ விரதம் (மாலை வரையில் பட்டினி இருப்பது) அனுசரிப்பதும் உண்டு. இந்த விரதத்தை நானும் அனுசரிப்பது என்று தீர்மானித்தேன். இந்த முக்கியமான சோதனைகளையெல்லாம் டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோதே மேற்கொண்டோம். அங்கே ஸ்ரீ கால்லென்பாக்கும் நானும் சில சத்தியாக்கிரகிகளின் குடும்பங்களுடன் இருந்தோம். சில இளைஞர்களும் குழந்தைகளும் கூட எங்களுடன் இருந்தார்கள். இக்குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வைத்திருந்தோம். அவர்களில் நான்கு, ஐந்து பேர் முஸ்லிம்கள். தங்கள் மத சம்பந்தமான நோன்புகளையெல்லாம் அனுசரித்து வருமாறு அவர்களை நான் உற்சாகப்படுத்தி வந்தேன். நாள்தோறும் அவர்கள் நமாஸ் செய்து வருமாறும் கவனித்துக் கொண்டேன். கிறிஸ்தவ, பார்ஸிச் சிறுவர்களும்கூட அங்கே இருந்தார்கள். அவர்களும் தங்கள் தங்கள் மத சம்பந்தமானவைகளை அனுசரிக்கும்படி செய்ய வேண்டியது என் கடமை என்று கருதினேன். ஆகையால், அந்த மாதத்தில் ரம்ஜான் பட்டினி விரதத்தை அனுசரிக்கும்படி முஸ்லிம் சிறுவர்களைத் தூண்டினேன். என் அளவிலோ, பிரதோஷ விரதமிருப்பதென்று தீர்மானித்தேன். ஆனால், ஹிந்து, கிறிஸ்தவ, பார்ஸிச் சிறுவர்களையும் என்னுடன் சேர்ந்து விரதமிருக்கும்படி கூறினேன். விரதானுஷ்டானம் போன்றவைகளில் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ளுவது நல்லது என்று அவர்களுக்கு விளக்கிக் கூறினேன். பண்ணையில் இருந்தவர்கள் பலர் என் யோசனையை வரவேற்றார்கள். ஹிந்து, பார்ஸிச் சிறுவர்கள், விரதத்தின் எல்லாச் சிறு விவரங்களிலும் முஸ்லிம்களைப் பின்பற்றவில்லை; அது அவசியமும் அல்ல. பகலெல்லாம் பட்டினி இருந்துவிட்டுச் சூரியன் மறையும்போதே முஸ்லிம் சிறுவர்கள் சாப்பிடுவார்கள். ஆனால் மற்றவர்களோ அப்படி சூரிய அஸ்தமனத்திற்குக் காத்திருப்பதில்லை. ஆகவே, இவர்கள் தங்கள் முஸ்லிம் நண்பர்களுக்கு இனிய பண்டங்களைத் தயாரித்துப் பரிமாற முடிந்தது. அதோடு மறுநாள் காலையில் சூரியன் உதயமாவதற்கு முன்னால் முஸ்லிம் குழந்தைகள் சாப்பிடுவார்கள். அதே போல ஹிந்து, பார்ஸிக் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் பகலில் தண்ணீர் குடிப்பார்கள். இந்தச் சோதனைகளின் பலனாக, பட்டினி விரதத்தின் நன்மையை எல்லோரும் உணர்ந்தார்கள். இவர்களிடையே அற்புதமான தோழமையும் வளர்ந்தது. டால்ஸ்டாய் பண்ணையில் நாங்கள் எல்லோருமே சைவ உணவு சாப்பிடுகிறவர்கள். இதில் எல்லோரும் என் உணர்ச்சியை மதித்து நடந்து கொண்டதை நான் நன்றியறிதலுடன் ஒப்புக் கொள்ளவே வேண்டும். முஸ்லிம் சிறுவர்கள் வழக்கமாகச் சாப்பிட்டு வந்த மாமிச உணவை ரம்ஜான் காலத்தில் விட்டுவிட வேண்டிவந்தது. ஆனால், அதைக் குறித்து அவர்களில் யாரும் என்னிடம் குறை சொன்னதே இல்லை. சைவச் சாப்பாட்டை அவர்கள் சுவைத்துச் சாப்பிட்டு இன்புற்றனர். பண்ணையின் எளிய வாழ்வை அனுசரித்து, ஹிந்து இளைஞர்கள் அவர்களுக்கு அடிக்கடி சைவப் பட்சணங்கள் செய்து கொடுப்பார்கள். இந்த இன்பகரமான நினைவுகளை நான் வேறு எந்த இடத்திலும் கூறமுடியாதாகையால், வேண்டுமென்றே பட்டினி விரதத்தைப் பற்றிய இந்த அத்தியாயத்தின் மத்தியில் கூறி இருக்கிறேன். என்னுடைய ஒரு குணாதிசயத்தையும் நான் மறைமுகமாகக் கூறியிருக்கிறேன். அதாவது நல்லது என்று எனக்குத் தோன்றியவைகளிலெல்லாம் என் சக ஊழியர்களும் என்னைப் பின்பற்றும்படி செய்வதில் எனக்கு எப்பொழுதுமே ஆசை. அவர்களுக்குப் பட்டினி விரதம் புதியது. ஆனால், பிரதோஷ, ரம்ஜான் விரதங்களின் காரணமாகப் புலனடக்கத்திற்கு ஓர் உபாயமாகப் பட்டினி இருப்பதில் அவர்களுக்கு சிரத்தை ஏற்படும்படி செய்வது எனக்கு எளிதாயிற்று. இவ்வாறு புலனடக்கச் சூழ்நிலை இயற்கையாகவே பண்ணையில் தோன்றிவிட்டது. பண்ணைவாசிகள் யாவரும் எங்களுடன் சேர்ந்து அரைப் பட்டினி, முழுப் பட்டினி விரதங்களையெல்லாம் அனுசரித்தார்கள். இது முற்றும் நன்மைக்கே என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். ஆனால், இந்த விரதங்கள் எவ்வளவு தூரம் அவர்களுடைய உள்ளங்களைத் தொட்டு, உடலின்ப இச்சையை அடக்குவதில் அவர்களுக்கு உதவியாக இருந்தன என்பதை நான் திட்டமாகக் கூறிவிட முடியாதென்றாலும், என்னளவில் உடல் சம்பந்தமாகவும், ஒழுக்க சம்பந்தமாகவும் நான் அதிக நன்மையை அடைந்தேன் என்பது நிச்சயம். பட்டினியும் மற்ற கட்டுத் திட்டங்களும் எல்லோரிடத்திலும் அதே விதமான பலனை உண்டாக்க வேண்டும் என்பதில்லை. இதையும் நான் அறிவேன். புலனடக்கத்தையே நோக்கமாகக் கொண்டு பட்டினி விரதமிருந்தால் தான் மிருக இச்சையை அடக்குவதற்கு அது பயன்படும். இத்தகைய விரதங்களுக்கு பின்னால் நாவின் ருசிப் புலனும் மிருக இச்சையும் அதிகரித்து விட்டதை என் நண்பர்கள் சிலர் தங்கள் அனுபவத்தில் கண்டுமிருக்கிறார்கள். அதாவது, புலனடக்கத்தில் இடையறாத ஆர்வமும் சேர்ந்து இருந்தாலன்றிப் பட்டினி விரதத்தினால் மாத்திரம் எவ்விதப் பயனுமில்லை. இதன் சம்பந்தமாகப் பகவத்கீதை இரண்டாவது அத்தியாயத்தின் பிரபலமான சுலோகம் குறிப்பிடத்தக்கதாகும். “இந்திரியங்களைத் தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்கள் அற்றுப் போய்விடுகின்றன. ஆனால், ஆசை எஞ்சி நிற்கிறது. பரமாத்மாவைத் தரிசித்தபின் அவனுடைய ஆசையும் அழிகிறது.” ஆகையால் பட்டினி விரதமிருப்பதும் அதுபோன்ற கட்டுத் திட்டங்களும் புலனடக்கத்திற்கான சாதனங்களில் ஒன்றாகும். அதுவே எல்லாமும் அல்ல. உடலோடு சேர்ந்து உள்ளமும் பட்டினி விரதத்தை அனுஷ்டிக்காவிட்டால், அது நயவஞ்சகத்திலும், அழிவிலுமே முடியும். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |