![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 11 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) நான்காம் பாகம் 33. இலக்கியப் பயிற்சி டால்ஸ்டாய் பண்ணையில் தேகப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ததோடு தற்செயலாகத் தொழிற் கல்வியும் போதித்து வந்ததைக் குறித்து முந்திய அத்தியாயத்தில் கவனித்தோம். எனக்குத் திருப்தியளிக்கக் கூடிய வகையில் இவை நடந்தன என்று சொல்ல முடியாவிட்டாலும் ஏறக்குறைய வெற்றிகரமாக நடந்தன என்றே சொல்லலாம். ஆனால், இலக்கியக் கல்வி அளிப்பது அதிகக் கஷ்டமான விஷயமாக இருந்தது. அதற்கு வேண்டிய வசதிகளோ, தேவையான இலக்கிய ஞானமோ என்னிடம் இல்லை. அதோடு, இத்துறையில் செலவிட வேண்டும் என நான் விரும்பிய அளவு அவகாசமும் எனக்குக் கிடைக்கவில்லை. உடல் உழைப்பில் நான் ஈடுபட்டு வந்ததால், மாலையில் முற்றும் களைத்துப் போய் விடுவேன். இவ்விதம் எனக்கு ஓய்வு மிகவும் அவசியம் என்றிருக்கும் நேரத்தில்தான் வகுப்புகளை நான் நடத்த வேண்டியிருந்தது. ஆகையால், வகுப்புகளை நடத்துவதற்கு எனக்கு மன உற்சாகம் இராது. தூங்கி விடாமல் விழித்துக் கொண்டிருப்பதற்கே அதிகச் சிரமப்பட வேண்டியதாயிற்று. காலை நேரமெல்லாம் பண்ணை வேலைக்கும், வீட்டு வேலைகளுக்கும் சரியாகப் போய்விடும். எனவே, மத்தியானச் சாப்பாட்டிற்குப் பிறகே பள்ளிக்கூடத்திற்குரிய நேரமாக வைத்துக் கொள்ளவேண்டியதாயிற்று. இதைத் தவிரப் பள்ளிக்கூடத்திற்குத் தகுதியான நேரம் கிடைக்கவில்லை. இலக்கியப் பயிற்சிக்கு அதிகப் பட்சம் மூன்று பாட நேரங்களை ஒதுக்கினோம். ஹிந்தி, தமிழ், குஜராத்தி, உருது மொழிகள் போதிக்கப்பட்டன. சிறுவர்களின் மொழியிலேயே அவர்களுக்குப் பாடங்களைப் போதித்தோம். ஆங்கிலமும் கற்பித்து வந்தோம். குஜராத்தி ஹிந்துக் குழந்தைகளுக்குக் கொஞ்சமாவது சமஸ்கிருதமும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாயிற்று. எல்லாக் குழந்தைகளுக்குமே சரித்திரம், பூகோளம், கணக்கு இவைகளில் ஆரம்பப் பாடங்களையாவது போதிக்க வேண்டியிருந்தது. தமிழும் உருதும் சொல்லிக் கொடுப்பதை நான் ஏற்றுக் கொண்டேன். எனக்குத் தெரிந்த சொற்பமான தமிழ், என் கப்பல் பிரயாண காலத்திலும், சிறையிலும் கற்றுக் கொண்டதாகும். போப் என்பவர் எழுதிய சிறந்த தமிழ்ப் பாடப் புத்தகத்தைத் தவிர வேறொன்றையும் நான் படித்ததில்லை. ஒரு கப்பல் பிரயாணத்தில் நான் கற்றுக்கொண்டதே, உருது எழுத்துக்களைக் குறித்து எனக்கு இருந்த ஞானம். முஸ்லிம் நண்பர்களுடன் பழகியதால், நான் தெரிந்துகொண்ட சாதாரணமான பர்ஸிய, அரபுச் சொற்களே உருதுவில் எனக்குத் தெரிந்ததெல்லாம் ஆகும். உயர்தரப் பள்ளியில் நான் படித்ததற்கு மேல் எனக்குச் சமஸ்கிருதமும் தெரியாது. பள்ளிக் கூடத்தில் படித்துக் கற்றுக் கொண்டதற்கு அதிகமானதுமல்ல, என் குஜராத்தி மொழி ஞானம். இத்தகைய மூலதனத்தைக் கொண்டே நான் சமாளித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இலக்கியத் தகுதியில் என் சகாக்கள் என்னைவிட அதிக வறுமையில் இருந்தனர். ஆனால், என் நாட்டு மொழிகளில் எனக்கு இருந்த ஆசை, உபாத்தியாயராக இருக்க முடியும் என்பதில் எனக்கு இருந்த நம்பிக்கை, என் மாணவர்களின் அறியாமை. அதைவிட அவர்களுடைய தாராள மனப்பான்மை ஆகியவைகளெல்லாம் சேர்ந்து என் வேலையை எளிதாக்கின. தமிழ்ச் சிறுவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள். ஆகையால், அவர்களுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் எழுத்துக்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது. ஆகவே, அவர்களுக்கு நான் தமிழ் எழுத்துக்களையும் ஆரம்ப இலக்கண விதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இது மிகவும் எளிதானதே. தமிழில் பேசுவதில் என்னை எப்பொழுதும் தாங்கள் தோற்கடித்துவிட முடியும் என்பதை என் மாணவர்கள் அறிவார்கள். ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் என்னைப் பார்க்க வந்தபோது அம்மாணவர்கள் என் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர். எனக்கிருந்த அறியாமையை என் மாணவர்களுக்குத் தெரியாமல் மறைக்க நான் என்றுமே முயன்றதில்லையாகையால், நான் சந்தோஷமாகவே சமாளித்து வந்தேன். உண்மையாகவே எல்லா விஷயங்களிலும் நான் எவ்விதம் இருக்கிறேன் என்பதை அவர்களுக்குக் காட்டி வந்தேன். ஆகையினால், அம்மொழியில் எனக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தபோதிலும் அவர்களுடைய அன்பையும் மரியாதையையும் மாத்திரம் நான் என்றுமே இழந்ததில்லை. முஸ்லிம் சிறுவர்களுக்கு உருது சொல்லிக் கொடுப்பது இதைவிட எளிதாக இருந்தது. அம்மொழியின் எழுத்துக்கள் அவர்களுக்குத் தெரியும். படிக்கும்படியும், கையெழுத்தை விருத்தி செய்துகொள்ளுமாறும் அவர்களை உற்சாகப்படுத்துவதே நான் செய்ய வேண்டியிருந்ததெல்லாம். இச்சிறுவர்களில் பெரும்பாலானவர்கள், எழுத்து வாசனையையே இதற்கு முன்னால் அறியாதவர்கள்; பள்ளிக்கூடங்களுக்குச் சென்றும் அறியாதவர்கள். ஆனால், அவர்களுக்கு இருந்த சோம்பலைப் போக்கி, அவர்கள் படிக்கும்படி மேற்பார்வை பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியது அதிகமில்லை என்பதை அனுபவத்தில் கண்டேன். இவ்வளவோடு நான் திருப்தியடைந்து விட்டதால், பல வயதையுடையவர்களையும், வெவ்வேறு பாடங்களைப் படிப்பவர்களையும் ஒரே வகுப்பில் வைத்துச் சமாளிப்பது சாத்தியமாயிற்று. பாடப் புத்தகங்களின் அவசியத்தைக் குறித்துப் பிரமாதமாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. கிடைத்த பாடப் புத்தகங்களைக்கூட நான் அவ்வளவாகப் பயன்படுத்திக் கொண்டதாக எனக்கு நினைவு இல்லை. ஏராளமான புத்தகங்களைப் பிள்ளைகளின் மேல் சுமத்துவது அவசியம் என்பதையும் நான் காணவில்லை. மாணவருக்கு உண்மையான பாடப் புத்தகம் உபாத்தியாயரே என்பதை நான் எப்பொழுதும் உணர்ந்து வந்தேன். என் உபாத்தியாயர்கள் புத்தகங்களிலிருந்து எனக்குச் சொல்லிக் கொடுத்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை. ஆனால், புத்தகங்களைக் கொண்டல்லாமல் தனியாக அவர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்ததெல்லாம் இப்பொழுதும் கூடத் தெளிவாக என் நினைவில் இருக்கின்றன. எப்பொழுதுமே குழந்தைகள் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொள்ளுவதை விட அதிகமாகவும், கஷ்டமின்றியும் காதால் கேட்டுத் தெரிந்து கொள்ளுகின்றனர். என் பையன்களுடன் நான் எந்தப் புத்தகத்தையும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரையில் படித்து முடித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், பல புத்தகங்களிலும் நான் படித்துத் தெரிந்து கொண்டவைகளை எல்லாம் என்னுடைய சொந்த நடையில் அவர்களுக்குச் சொல்லி வந்தேன். அவை இன்னும் அவர்கள் ஞாபகத்தில் இருந்து வருகின்றன என்று நான் தைரியமாகச் சொல்லுவேன். புத்தகங்களிலிருந்து படிப்பவைகளை நினைவில் வைத்துக் கொள்ளுவது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. ஆனால், நான் வாய்மொழியாகச் சொன்னவைகளை யெல்லாம் வெகு எளிதாக அவர்கள் திரும்பச் சொல்லி விட முடிந்தது. புத்தகத்தைப் படிப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது. ஆனால், சொல்லுகிற விஷயத்தை அவர்களுக்குச் சுவையாக இருக்கும்படி மாத்திரம் நான் சொல்லி விடுவேனாயின், அவைகளைக் கேட்பதே அவர்களுக்கு இன்பமாக இருந்தது. நான் பேசியதைக் கேட்டுவிட்டு, அதன்பேரில் அவர்கள் கேட்ட கேள்விகளிலிருந்து, அவர்கள் நான் கூறியதை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நான் அளந்தறிய முடிந்தது. மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |