![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) நான்காம் பாகம் 37. கோகலேயைச் சந்திக்க தென்னாப்பிரிக்கா பற்றிய நினைவுகள் பலவற்றைக் கூறாமல் விட்டுவிட்டே நான் மேலே செல்ல வேண்டும். 1914-இல் சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவடைந்த சமயம், லண்டன் வழியாக இந்தியாவுக்குத் திரும்புமாறு கோகலே எனக்கு அறிவித்திருந்தார். ஆகவே, ஜூலையில் நானும் கஸ்தூரிபாயும் கால்லென்பாக்கும் இங்கிலாந்துக்குப் பிரயாணமானோம். சத்தியாக்கிரகத்தின்போது மூன்றாம் வகுப்பு வண்டியில் பிரயாணம் செய்ய ஆரம்பித்தேன். ஆகவே, இந்தப் பிராயணத்திற்கும் மூன்றாம் வகுப்பிலேயே ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால், இந்த வழியில் செல்லும் கப்பல்களில் மூன்றாம் வகுப்பில் இருக்கும் வசதிகளுக்கும், இந்தியாவில் கடலோரக் கப்பல்களிலும் ரெயில் வண்டிகளிலும் மூன்றாம் வகுப்பில் இருக்கும் வசதிகளுக்கும் அதிகமான வித்தியாசம் உண்டு. இந்தியாவிலிருக்கும் மூன்றாம் வகுப்பில் தூங்குவதற்கு மாத்திரமல்ல, உட்காருவதற்குக்கூடப் போதுமான இடம் இல்லை. சுத்தமும் கிடையாது. ஆனால், இதற்கு மாறாக லண்டனுக்குச் சென்றபோது, கப்பலில் மூன்றாம் வகுப்பில் போதுமான இடவசதி இருந்ததோடு சுத்தமாகவும் இருந்தது. கப்பல் கம்பெனியாரும் எங்களுக்கு விசேஷ வசதிகளைச் செய்து கொடுத்தனர். கம்பெனியார், எங்களுக்கென்று தனிக் கக்கூசு வசதியைச் செய்து கொடுத்தனர். நாங்கள் பழ உணவு மாத்திரமே சாப்பிடுகிறவர்களாகையால் பழங்களும் கொட்டைப் பருப்புகளும் மாத்திரம் எங்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். வழக்கமாக மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளுக்குப் பழமும் கொட்டைகளும் தருவதில்லை. இந்த வசதிகளெல்லாம் இருந்ததால் எங்கள் பதினெட்டு நாள் கப்பல் யாத்திரை சௌகரியமாகவே இருந்தது. இப்பிரயாணத்தின்போது நடந்த சில சம்பவங்கள் குறிப்பிடத்தக்கவை. தொலைவிலுள்ளதைப் பார்க்க உபயோகிக்கும் ‘பைனாக்குலர்’ என்ற தூரதிருஷ்டிக் கண்ணாடிகளில் ஸ்ரீ கால்லென்பாக்குக்கு விருப்பம் அதிகம். அவர் இரண்டொரு விலையுயர்ந்த தூரதிருஷ்டிக் கண்ணாடிகள் வைத்திருந்தார். இவற்றில் ஒன்றைக்குறித்து நாங்கள் தினமும் விவாதித்து வந்தோம். இவைகளை வைத்துக்கொண்டிருப்பது, நாங்கள் அடைய ஆசைப்பட்டுக் கொண்டிருந்த எளிய வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பதை அவர் உணரும்படி செய்யவேண்டும் என்று நான் முயன்று வந்தேன். ஒரு நாள் நாங்கள் எங்கள் அறையின் காற்றுத் துவாரத்திற்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது இந்த வாதம் உச்சநிலைக்கு வந்து விட்டது. “நமக்குள் இத்தகராறுக்கு இடம் தருவதாக இத்தூர திருஷ்டிக் கண்ணாடிகள் இருந்து வருவதைவிட இவற்றைக் கடலில் எறிந்துவிட்டு அதோடு ஏன் விவகாரத்தை முடித்து விடக்கூடாது?” என்றேன். “இந்தச் சனியன்களை எறிந்தே விடுங்கள்” என்றார் ஸ்ரீ கால்லென் பாக். “நான் சொல்லுவதும் அதுதான்” என்றேன். “நானும் அதைத்தான் சொல்லுகிறேன்” என்று உடனே பதில் சொன்னார் அவர். அதை உடனே கடலில் நான் வீசி எறிந்துவிட்டேன். அக்கண்ணாடியின் பெறுமானம் ஏழு பவுன்தான். ஆனால் ஸ்ரீ கால்லென்பாக்குக்கு அதன்மீது இருந்த மோகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஏழு பவுன் மிகக் குறைவான விலை மதிப்புத்தான். என்றாலும் அதை விட்டொழித்த பிறகு அதற்காக அவர் வருத்தப்படவே இல்லை. ஸ்ரீ கால்லென்பாக்குக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட சம்பவங்கள் பலவற்றுள் ஒன்றுதான் இது. நாங்கள் இருவரும் சத்திய மார்க்கத்தில் செல்ல முயன்று வந்ததால் இவ்விதமாக ஒவ்வொரு நாளும் நாங்கள் ஏதாவது ஒரு புதிய உண்மையை அறிந்து வந்தோம். சத்தியத்தை நாடிச் செல்லும் போது கோபம், சுயநலம், துவேஷம் முதலியன இயற்கையாகவே நீங்கிவிடுகின்றன. ஏனெனில், அவை நீங்காவிட்டால் சத்தியத்தை அடைவது இயலாததாகும். ஒருவர் மிகவும் நல்லவராக இருக்கலாம்; உண்மையே பேசுகிறவராகவும் இருக்கக் கூடும். ஆனால், காமக் குரோத உணர்ச்சிகளுக்கு மாத்திரம் வயப்பட்டவராக அவர் இருந்தாராயின் சத்தியத்தை அவர் காணவே முடியாது. அன்பு பகை, இன்பம்-துன்பம் ஆகிய இந்த இரண்டு வகையானவைகளிலிருந்தும் முற்றும் விடுபடுவது ஒன்றே சத்தியத்தை வெற்றிகரமான வகையில் தேடுவதாகும். நாங்கள் இந்தக் கப்பல் யாத்திரை புறப்பட்டபோது, நான் உண்ணாவிரதமிருந்து அதிக காலம் ஆகிவிடவில்லை. பழைய பலத்தை நான் இன்னும் அடைந்துவிடவில்லை. எனக்கு நல்ல பசி எடுக்க வேண்டும் என்பதற்காகவும், சாப்பிட்டது ஜீரணமாக வேண்டும் என்பதற்காகவும், தேகாப்பியாசம் இருக்கட்டும் எனக் கருதிக் கப்பலின் மேல் தளத்தில் கொஞ்சம் உலாவி வருவேன். ஆனால், இந்த நடையைக் கூட என் உடல் தாங்கவில்லை. கெண்டைக் கால்களில் வலி ஏற்பட்டுவிடும். ஆகவே, நான் லண்டன் சேர்ந்தபோது என் தேக நிலை நன்றாக இருப்பதற்குப் பதிலாக மோசமாகவே இருந்தது. அங்கே டாக்டர் ஜீவராஜமேத்தா எனக்கு அறிமுகமானார். எனது உண்ணாவிரதத்தின் சரித்திரத்தையும், அதன் பிறகு எனக்கு ஏற்பட்ட வலியைப் பற்றியும் அவரிடம் கூறினேன். “சில தினங்களுக்கு நீங்கள் முழு ஓய்வு எடுத்துக் கொள்ளாது போனால் உங்கள் கால்கள் முற்றும் பயனற்றவைகளாகி விடக் கூடும்” என்று அவர் சொன்னார். நீண்ட உபவாசம் இருந்து விட்ட பிறகு இழந்த பலத்தைத் திரும்பப் பெற அவசரப்படக் கூடாது, பசியைக்கூடக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அப்பொழுது தான் நான் அறிந்துகொண்டேன். உண்ணாவிரதம் இருந்துகொண்டிருக்கும்போது இருப்பதை விட அதிக எச்சரிக்கையும், கட்டுத் திட்டங்களும் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு வேண்டும். எந்த நேரத்திலும் பெரும் போர் மூண்டுவிடக் கூடும் என்று மடீராவில் நாங்கள் கேள்விப்பட்டோம். ஆங்கிலக் கால்வாயில் எங்கள் கப்பல் போய்க் கொண்டிருந்தபோது யுத்தமே மூண்டு விட்டது என்ற செய்தி கிடைத்தது. எங்கள் கப்பல் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆங்கிலக் கால்வாய் நெடுக நீர் மூழ்கிக் கப்பல்கள் கடற்கண்ணிகளைப் போட்டிருந்தன. அவற்றில் மோதி விடாமல் கப்பலை ஓட்டிச் செல்லுவது எளிதான காரியமன்று. ஆகவே, சௌதாம்டன் போய்ச் சேர இரண்டு நாட்களாயின. யுத்தம் ஆகஸ்டு நான்காம் தேதி பிரகடனமாயிற்று. நாங்கள் ஆறாம் தேதி லண்டன் சேர்ந்தோம். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |