![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) நான்காம் பாகம் 43. தாய்நாடு நோக்கி இந்தியாவுக்குப் போவதற்காக ஸ்ரீ கால்லென்பாக் என்னுடன் இங்கிலாந்துக்கு வந்தார். இருவரும் ஒன்றாகவே வசித்து வந்தோம். ஒரே கப்பலிலேயே புறப்படவும் விரும்பினோம். அப்பொழுது ஜெர்மானியர் மீது கண்காணிப்புக் கடுமையாக இருந்து வந்தது. ஆகையால், ஸ்ரீ கால்லென்பாக்குக்குப் பிரயாண அனுமதிச் சீட்டுக் கொடுப்பதற்கு ஸ்ரீ ராபர்ட்ஸ் ஆதரவாக இருந்தார். இதைக் குறித்து வைசிராய்க்கும் அவர் தந்தி கொடுத்தார். “வருந்துகிறோம். அத்தகைய அபாயம் எதற்கும் உட்பட இந்திய அரசாங்கம் தயாராயில்லை” என்று லார்டு ஹார்டிஞ்சிடமிருந்து நேரடியான பதில் வந்துவிட்டது. அந்தப் பதிலில் அடங்கியிருந்த நியாயத்தை நாங்கள் எல்லோரும் உணர்ந்து கொண்டோம். ஸ்ரீ கால்லென்பாக்கை விட்டுப் பிரிவது எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. அவருக்கு இருந்த துயரம் இன்னும் அதிகம் என்பதைக் கண்டேன். அவர் இந்தியாவுக்கு வர முடிந்திருந்தால், அவர் இன்று ஒரு குடியானவனாகவும், நெசவாளியாகவும் இன்பமான எளிய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார். இப்பொழுது அவர் தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார். அவர் பழைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு கட்டிடச் சிற்பியாக நல்ல வருமானத்துடன் தொழில் நடத்தி வருகிறார். கப்பலில் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்யவே விரும்பினோம். ஆனால், பி. அண்டு ஓ. கம்பெனிக் கப்பல்களில் மூன்றாம் வகுப்பு இல்லாததால் இரண்டாம் வகுப்பில் சென்றோம். தென்னாப்பிரிக்காவிலிருந்து நாங்கள் கொண்டு வந்திருந்த உலர்ந்த பழங்களை உடன்கொண்டு போனோம். இவை கப்பலில் கிடைக்கமாட்டா. ஆனால், புதுப் பழங்கள் தாராளமாகக் கிடைக்கும். என் விலா எலும்புகளுக்கு டாக்டர் ஜீவராஜ மேத்தா, ‘மெடேஸ் பிளாஸ்திரி’ போட்டுக் கட்டி விட்டதோடு செங்கடல் போகும் வரையில் அதை நீக்கக் கூடாது என்றும் சொன்னார். இதனால் உண்டான தொல்லையை இரண்டு நாள் சகித்துக் கொண்டுவிட்டேன். அதற்கு மேல் என்னால் சகிக்க முடியவில்லை. அதிகச் சிரமப்பட்டே அந்த பிளாஸ்திரியை அவிழ்க்க என்னால் முடிந்தது. அதன் பிறகு உடம்பைச் சுத்தம் செய்து கொள்ளவும் குளிக்கவும், மீண்டும் சுதந்திரம் பெற்றேன். பெரும்பாலும் பழங்களையும் கொட்டைப் பருப்புகளையுமே சாப்பிட்டு வந்தேன். நாளுக்கு நாள் குணம் அடைந்து வருவதாக உணர்ந்தேன். சூயஸ் கால்வாய்க்குள் பிரவேசித்த போது, அதிக தூரம் குணமடைந்து விட்டதாக எனக்குத் தோன்றிற்று. நான் பலவீனமாகவே இருந்தேனாயினும் ஆபத்தைக் கடந்துவிட்டதாக எண்ணினேன். என் தேகாப்பியாசத்தையும் நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டு வந்தேன். நடுத்தரமான வெப்பமுள்ள பிரதேசத்தின் சுத்தமான காற்றே என் தேக நிலையில் ஏற்பட்ட அபிவிருத்திக்குக் காரணம் என்று கருதினேன். கப்பலிலிருந்து இந்தியப் பிரயாணிகளும் ஆங்கிலப் பிரயாணிகளும் நெருங்கிப் பழகாமல் தொலைவாகவே இருந்து வந்ததைக் கவனித்தேன். தென்னாப்பிரிக்காவிலிருந்து நான் கப்பலில் சென்ற சமயங்களில் கூட, இப்படி இருந்ததாக நான் கண்டதில்லை. எனக்கு இவ்விதம் தோன்றியது முந்திய அனுபவங்களினாலா, வேறு காரணத்தினாலா என்பது எனக்குத் தெரியாது. சில ஆங்கிலேயருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், அது வெறும் சம்பிரதாயப் பேச்சே. தென்னாப்பிரிக்கக் கப்பல்களில் சென்றபோது இருந்ததைப் போன்ற அன்னியோன்யமான சம்பாஷணைகளே இந்தத் தடவை இல்லை. இதற்கு ஒன்று காரணமாக இருக்கக் கூடும் என்று நான் எண்ணுகிறேன். தாங்கள் ஆளும் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம், அறிந்தோ அறியாமலேயோ, ஆங்கிலேயரின் உள்ளத்திற்குள் இருந்திருக்கக் கூடும். அடிமைப்பட்ட இனத்தினர் தாங்கள் என்ற எண்ணம் இந்தியரின் உள்ளத்திற்குள்ளும் இருந்து இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையிலிருந்து விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்து விடவேண்டும் என்று நான் அதிக ஆர்வத்துடனிருந்தேன். ஏடன் சேர்ந்ததுமே தாய்நாட்டுக்கு வந்துவிட்டதைப் போன்ற உணர்ச்சி எங்களுக்கு உண்டாயிற்று. ஸ்ரீ கெகோபாத் காவாஸ்ஜி தின்ஷா, ஏடனைச் சேர்ந்தவர். அவரை டர்பனில் சந்தித்திருக்கிறோம். அவருடனும் அவர் மனைவியோடும் நெருங்கிப் பழகியும் இருக்கிறோம். ஆகையால், ஏடன் வாசிகளைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். சில தினங்களுக்கெல்லாம் பம்பாய் வந்தடைந்தோம். பத்து ஆண்டுகள் பிற நாடுகளில் இருந்துவிட்ட பின்பு தாய் நாட்டிற்குத் திரும்பியது பெரிய ஆனந்தமளித்தது. கோகலேயினுடைய யோசனையின் பேரில் பம்பாயில் எனக்கு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். தமது தேக நிலை சரியாக இல்லாதிருந்தும் கோகலேயும் பம்பாய்க்கு வந்திருந்தார். அவரோடு நான் ஐக்கியமாகி விடுவதன் மூலம் கவலையற்றிருக்கலாம் என்ற திடமான நம்பிக்கையுடனேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். ஆனால், விதியோ முற்றும் வேறுவிதமாக இருந்துவிட்டது. மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |