![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 24. ‘செய்தி பரவியது’ |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) நான்காம் பாகம் 6. சைவ உணவுக் கொள்கைக்கு இட்ட பலி தியாகம், எளிமை என்ற லட்சியங்கள் என் அன்றாட வாழ்க்கையில் மேலும் மேலும் அதிகமாக நிறைவேறி வந்தன. சமய உணர்ச்சியும் மேலும் மேலும் துரிதமாக எனக்கு ஏற்பட்டு வந்தது. அதே சமயம், சைவ உணவுக் கொள்கையைப் பரப்ப வேண்டுமென்ற ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு கொள்கையைச் சரியானபடி பரப்ப வேண்டுமானால், அதற்கு எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு வழிதான். அந்தக் கொள்கையை நானே கடைபிடித்துக் காட்டுவதும், அறிவை வளர்த்துக்கொள்ள ஆராய்ச்சி செய்பவர்களுடன் விவாதிப்பதுமே அந்த வழி. ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு ஜெர்மானியர் சைவ உணவு விடுதி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். கூனேயின் நீர் சிகிச்சையிலும் அந்த ஜெர்மானியர் நம்பிக்கை உடையவர். நான் அந்த விடுதிக்குப் போவது உண்டு. ஆங்கில நண்பர்களை அங்கே அழைத்துக் கொண்டு போயும் அதற்கு உதவி செய்தேன். ஆனால், அவ்விடுதி என்றுமே பணக் கஷ்டத்தில் இருந்ததால் அது நீடித்து நடக்க முடியாது என்பதைக் கண்டேன். அதற்கு எவ்வளவு தூரம் உதவி செய்யலாமோ அவ்வளவும் செய்தேன். கொஞ்சம் பணத்தையும் அதற்காகச் செலவிட்டேன். ஆயினும், கடைசியாக அதை மூடும் படியாயிற்று. அநேகமாக எல்லாப் பிரம்மஞான சங்கத்தினரும் சைவ உணவுக்காரர்கள். அச்சங்கத்தைச் சேர்ந்த உற்சாகமுள்ள ஒரு பெண்மணி, சைவச் சாப்பாட்டு விடுதி ஒன்றைப் பெரிய அளவில் ஆரம்பிக்க முன் வந்தார். அவர் கலைகளில் அதிகப் பிரியமுள்ளவர். ஊதாரிக் குணமுள்ளவர். கணக்கு வைப்பதைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது. அவருக்கு நண்பர்கள் அநேகர் உண்டு. முதலில் அவ்விடுதியைச் சிறிய அளவில் ஆரம்பித்தார். பிறகு அதை விரிவுபடுத்திப் பெரிய அறைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள விரும்பினார். உதவி செய்யுமாறு என்னைக் கேட்டார். இவ்விதம் அவர் என் உதவியை நாடியபோது அவருடைய செல்வ நிலையைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால், அவருடைய திட்டம் அநேகமாகச் சரியாகவே இருக்கும் என்று நம்பினேன். அவருக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் நான் இருந்தேன். என்னுடைய கட்சிக்காரர்கள் பெருந்தொகைகளை என்னிடம் கொடுத்து வைப்பது வழக்கம். இதில் ஒரு கட்சிக்காரருடைய அனுமதியின் பேரில், என்னிடமிருந்த அவர் பணத்திலிருந்து சுமார் ஆயிரம் பவுனை அப்பெண்மணிக்குக் கொடுத்தேன். இந்தக் கட்சிக்காரர் பெருங்குணம் படைத்தவர்; நம்பக்கூடியவர். ஆரம்பத்தில் இவர் ஒப்பந்தத் தொழிலாளியாகத் தென்னாப்பிரிக்காவுக்கு வந்தவர். “நீங்கள் விரும்பினால் பணத்தைக் கொடுங்கள். இவ்விஷயங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு உங்களைத்தான் தெரியும்” என்றார். இவர் பெயர் பத்ரி. பின்னால் இவர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தீவிரப் பங்கு எடுத்துக் கொண்டதோடு சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். இந்தச் சம்மதமே போதுமானது என்று கருதி அவருடைய பணத்தை அப்பெண்மணிக்குக் கொடுத்தேன். கொடுத்த பணம் வசூலாகாது என்று இரண்டு மூன்று மாதங்களில் எனக்குத் தெரிந்தது. இவ்வளவு பெரிய நஷ்டத்தை நான் பொறுக்க முடியாது. இத்தொகையை வேறு எத்தனையோ காரியங்களுக்கு நான் உபயோகித்திருக்கலாம். கடன் திரும்பி வரவே இல்லை. ஆனால், நம்பிய பத்ரி நஷ்டமடைய எப்படி அனுமதிக்க முடியும்? அவர் என்னை மாத்திரமே அறிவார். எனவே அவர் நஷ்டத்தை ஈடு செய்தேன். இந்தக் கொடுக்கல் வாங்கலைக் குறித்து நண்பரான ஒரு கட்சிக்காரரிடம் நான் கூறியபோது, அவர் நயமாக என் அசட்டுத்தனத்தைக் கண்டித்தார். அதிர்ஷ்டவசமாக நான் அப்பொழுது ‘மகாத்மா’ ஆகிவிடவில்லை. ‘பாபு’ (தந்தை) ஆகி விடவுமில்லை. நண்பர்கள் அன்போடு என்னை ‘பாய்’ (சகோதரர்) என்றே அழைத்து வந்தார்கள். அந்த நண்பர் கூறியதாவது: “நீங்கள் இப்படிச் செய்திருக்கக்கூடாது. நாங்கள் எத்தனையோ காரியங்களுக்கு உங்களை நம்பியிருக்கிறோம். இத்தொகை உங்களுக்குத் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. உங்கள் கையிலிருந்து நீங்கள் அவருக்குக் கொடுத்துவிடுவீர்கள். ஆனால், உங்கள் சீர்திருத்தத் திட்டங்களுக்கெல்லாம் உங்கள் கட்சிக்காரர்களின் பணத்தைக் கொண்டு உதவி செய்துகொண்டே போவீர்களானால், அக் கட்சிக்காரர்கள் அழிந்து போவதோடு நீங்களும் சீக்கிரத்தில் பிச்சையெடுக்கும் நிலைமைக்கு வந்துவிடுவீர்கள். ஆனால், நீங்கள் எங்கள் தருமகர்த்தா. இதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பிச்சைக்காரராகிவிட்டால், நமது பொது வேலைகளெல்லாம் நின்று போய்விடும்.” அந்த நண்பர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதைச் சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தென்னாப்பிரிக்காவிலோ, வேறு எங்குமோ, அவரைப்போலத் தூய்மையானவரை நான் இன்னும் கண்டதில்லை. தாம் யார் மீதாவது சந்தேகம் கொள்ள நேர்ந்து, தாம் சந்தேகித்தது சரியல்ல என்று பிறகு கண்டு கொண்டால், அவர் அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தம் மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுவார். இதை அவர் பன்முறை செய்து நான் பார்த்திருக்கிறேன். அவர் எனக்குச் சரியானபடி எச்சரிக்கை செய்திருக்கிறார் என்பதைக் கண்டேன். ஏனெனில், பத்ரிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நான் ஈடு செய்துவிட்டேனாயினும், இதே போன்ற வேறு நஷ்டத்தை நான் சமாளிக்க முடியாமல் போயிருக்கும். அந்நிலைமையில் நான் கடன்பட நேர்ந்திருக்கும். கடன்படுவது என்பதை என் வாழ்க்கையில் நான் என்றுமே செய்ததில்லை. அத்துடன் கடன்படுவதை எப்பொழுதுமே நான் வெறுத்தும் வந்திருக்கிறேன். ஒருவருடைய சீர்திருத்த உற்சாகம்கூட, அவர் தம் எல்லையை மீறிப் போய்விடும்படி செய்துவிடக் கூடாது என்பதை நான் உணருகிறேன். பிறர் நம்பிக் கொடுத்திருந்த பணத்தை இன்னொருவருக்குக் கடன் கொடுத்ததன் மூலம், கீதையின் முக்கியமான உபதேசத்தை மீறி நடந்து விட்டேன் என்றும் கண்டேன். “பயனை எதிர்பாராது உன் கடமையைச் செய்” என்பதே கீதையின் உபதேசம். இத்தவறு என்னை எச்சரிக்கும் சுடரொளிபோல ஆயிற்று. சைவ உணவுக் கொள்கை என்ற பீடத்தில் இட்ட இந்தப் பலி மனமாரச் செய்ததும் அன்று; எதிர்பார்த்தும் அல்ல; வேறு வழியில்லாமல் நடந்துவிட்டதே அது. மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |