![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) ஐந்தாம் பாகம் 2. புனாவில் கோகலேயுடன் கவர்னர் என்னைப்பார்க்க விரும்புகிறார் என்று நான் பம்பாய் வந்து சேர்ந்ததுமே கோகலே எனக்குத் தகவல் அனுப்பியிருந்தார். நான் புனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னால் கவர்னரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவது நல்லது என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி கவர்னரைப் போய்ப் பார்த்தேன். சுகங்களைக் குறித்து வழக்கமாக விசாரிப்பது முடிந்த பிறகு என்னிடம், “உங்களை நான் ஒன்று கேட்டுக் கொள்ளுகிறேன். அரசாங்க சம்பந்தமாக நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளுவதற்கு முன்னால் நீங்கள் என்னை வந்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார். அதற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன்: “அந்த வாக்குறுதியை எளிதில் நான் உங்களுக்கு அளிக்க முடியும். ஏனெனில், எதிராளியின் கருத்து இன்னது என்பதை அறிந்து கொண்டு, சாத்தியமான வரையில் அவருடன் ஒத்துப்போவது என்பதே சத்தியாக்கிரகி என்ற முறையில் என்னுடைய தருமமாகும். இந்தத் தருமத்தைத் தென்னாப்பிரிக்காவில் கண்டிப்பான வகையில் அனுசரித்து வந்தேன். இங்கும் அப்படியே செய்வதென்றும் இருக்கிறேன்.” லார்டு வில்லிங்டன் எனக்கு நன்றி தெரிவித்துவிட்டுக் கூறியதாவது: “நீங்கள் விரும்பும் போதெல்லாம் என்னிடம் வரலாம். என் அரசாங்கம் வேண்டுமென்று எந்தத் தவறையும் செய்யாது என்பதை நீங்கள் காண்பீர்கள்.” அதன் பிறகு நான் புனாவுக்குப் போனேன். அந்த அருமையான நாட்களைப் பற்றிய என் நினைவுகளை எல்லாம் இங்கே கூறி விடுவது என்பது இயலாத காரியம். கோகலேயும், இந்திய ஊழியர் சங்கத்தின் மற்ற அங்கத்தினர்களும் என்னைத் தங்கள் அன்பு வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டனர். என்னைச் சந்திப்பதற்காக அவர்களையெல்லாம் கோகலே அங்கே வரவழைத்திருந்தார் என்றுதான் எனக்கு ஞாபகம். எல்லா விஷயங்களைப் பற்றியும் அவர்களுடன் நான் மனம் விட்டுத் தாராளமாக விவாதித்தேன். அச்சங்கத்தில் நான் சேர்ந்துவிட வேண்டும் என்பதில் கோகலே ஆவலுடன் இருந்தார். எனக்கும் அந்த விருப்பம் இருந்தது. ஆனால், என்னுடைய கொள்கைகளுக்கும் வேலை முறைக்கும் அவர்களுடையவைகளுக்கும் அதிகப் பேதம் இருந்ததால் அச்சங்கத்தில் நான் சேருவது சரியன்று என்று மற்ற அங்கத்தினர்கள் கருதினர். கோகலேயோ, என்னுடைய கொள்கைகளில் நான் பிடிவாதமாக இருந்தபோதிலும், அவர்களுடைய கொள்கைகளைச் சகித்துக் கொள்ளவும் என்னால் முடியும் என்றும், நான் தயாராய் இருக்கிறேன் என்றும் நம்பினார். அவர் கூறியதாவது: “சமரசம் செய்துகொள்ளத் தயாராயிருக்கும் உங்கள் குணத்தைச் சங்கத்தின் அங்கத்தினர்கள் இன்னும் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் கொள்கையில் பிடிவாதமுள்ளவர்கள்; சுயேச்சைப் போக்குள்ளவர்கள்! உங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்றே நம்புகிறேன். உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு உங்களிடம் மதிப்பும் அன்பும் இல்லை என்று ஒரு கணமேனும் நீங்கள் எண்ணிவிடக்கூடாது. அவர்கள் உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள். அதற்கு எங்கே பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினாலேயே உங்களை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்குகிறார்கள். நீங்கள் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும், சேர்த்துக் கொள்ளப்படா விட்டாலும் உங்களை ஓர் அங்கத்தினர் என்றே நான் பாவிக்கப் போகிறேன்.” என்னுடைய உத்தேசங்கள் யாவை என்பதைக் கோகலேயிடம் கூறினேன். என்னை இந்திய ஊழியர் சங்கத்தில் அங்கத்தினனாகச் சேர்த்துக்கொண்டாலும், சேர்க்காது போயினும், ஓர் ஆசிரமத்தை அமைத்து, அதில் என் போனிக்ஸ் குடும்பத்துடன் வாழ விரும்பினேன். குஜராத்தில் எங்காவது ஆசிரமத்தை அமைப்பதே உத்தேசம். நான் குஜராத்தியாகையால், குஜராத்துக்குச் சேவை செய்து அதன் மூலம் நாட்டுக்குச் சேவை செய்ய எண்ணினேன். இந்த என் உத்தேசம் கோகலேக்குப் பிடித்திருந்தது. அவர் கூறியதாவது: “நீங்கள் நிச்சயம் அப்படியே செய்யவேண்டும். அங்கத்தினர்களுடன் நீங்கள் பேசியதன் பலன் எதுவாக இருந்தாலும் சரி, உங்கள் ஆசிரமத்தை என் சொந்த ஆசிரமமாகவே கருதுவேன். ஆசிரமத்தின் செலவுக்கு நீங்கள் என்னையே எதிர்பார்க்க வேண்டும்.” இதைக் கேட்டு நான் அளவுகடந்த ஆனந்தமடைந்தேன் நிதி திரட்டும் பொறுப்பிலிருந்து விடுபடுவது ஓர் ஆனந்தமே. அதோடு, நான் தன்னந்தனியாக இந்த வேலையில் ஈடுபட வேண்டியதில்லை என்றும், எனக்குக் கஷ்டம் ஏற்படும்போது நிச்சயமான துணை எனக்கு இருக்கிறது என்றும் எண்ணிய போது பெரிய பாரம் நீங்கியதுபோல இருந்தது. ஆகவே, காலஞ்சென்ற டாக்டர் தேவ் என்பவரைக் கோகலே அழைத்து எனக்காகச் சங்கத்தில் கணக்கு வைக்கும் படியும், ஆசிரமத்திற்கும் பொதுச் செலவிற்கும் எனக்குத் தேவைப்படுவதை எல்லாம் கொடுக்கும்படியும் கூறினார். அதன் பிறகு சாந்திநிகேதனத்திற்குப் புறப்படத் தயாரானேன். நான் புறப்படுவதற்கு முன்னால் கோகலே எனக்கு ஒரு விருந்து வைத்தார். அதற்குக் குறிப்பிட்ட சில நண்பர்களை மாத்திரம் அழைத்திருந்ததோடு எனக்குப் பிடித்தமான பழங்களுக்கும், கொட்டைப் பருப்புகளுக்கும் ஏற்பாடு செய்து இருந்தார். அவருடைய அறையிலிருந்து சில அடி தூரத்திலேயே இந்த விருந்து நடந்தது. என்றாலும், அந்தக் கொஞ்ச தூரமும் நடந்துவந்து அவ்விருந்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில் அவர் இருந்தார். ஆனால், என்னிடம் கொண்டிருந்த அன்பினால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் விருந்துக்கு வந்தே தீருவதென்று பிடிவாதமாக இருந்தார். அப்படியே வந்தும் விட்டார். ஆனால், அவர் மூர்ச்சையடைந்து விடவே அவரைத் தூக்கிச் செல்லும்படி நேர்ந்தது. இவ்விதம் அவர் மூர்ச்சையடைந்து விடுவது புதிதல்ல. எனவே, தமக்குப் பிரக்ஞை வந்ததும் விருந்தைத் தொடர்ந்து நடத்தும்படி எங்களுக்குச் சொல்லி அனுப்பினார். இந்த விருந்து, சங்கத்தின் விருந்தினர் விடுதிக்கு எதிரில் திறந்த வெளியில், நண்பர்களுடன் கலந்து பேசுவதற்கு வாய்ப்பளிப்பதற்காக நடந்ததேயன்றி வேறன்று. அதில் நண்பர்கள் நிலக்கடலை, பேரீச்சம்பழம், மற்றும் பழங்கள் இவற்றைச் சாப்பிட்டுக்கொண்டே ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசினர். ஆனால், திடீரென்று கோகலே மூர்ச்சை அடைந்தது, என் வாழ்க்கையில் சாதாரணமான சம்பவமாகி விடவில்லை. மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |