![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) ஐந்தாம் பாகம் 23. கேடாச் சத்தியாக்கிரகம் கொஞ்சம் ஓய்ந்து மூச்சு விடுவதற்கும்கூட எனக்கு அவகாசமில்லை. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுற்றுவுடனேயே நான் கேடாச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட வேண்டியதாயிற்று. கேடா ஜில்லாவில் எங்கும் விளைச்சல் இல்லாது போய்விட்டதனால், பஞ்சம் வரக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அந்த ஆண்டு நிலவரி வசூலை நிறுத்தி வைத்துவிடும்படி செய்வது எப்படி என்பதைக் குறித்துக் கேடாப் பட்டாதார்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். விவசாயிகளுக்கு நான் திட்டமான ஆலோசனையைக் கூறுவதற்கு முன்பே ஸ்ரீ அமிர்தலால் தக்கர் அங்கிருந்த நிலைமையைப் பற்றி விவாதித்தறிந்து, அப்பிரச்னையைக் குறித்துக் கமிஷனருடன் நேரில் விவாதித்திருந்தார். ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவும், ஸ்ரீ சங்கரலால் பரீக்கும் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீ வித்தல்பாய் பட்டேல். காலஞ் சென்ற ஸர் கோகுலதாஸ் ககன் தாஸ் பரீக் ஆகியவர்களைக் கொண்டு பம்பாய்ச் சட்டசபையில் கிளர்ச்சியையும் ஆரம்பித்திருந்தனர். இது சம்பந்தமாகப் பன்முறை கவர்னரிடமும் தூது சென்றனர். இந்தச் சமயத்தில் நான் குஜராத்தி சபைக்குத் தலைவனாக இருந்தேன். இச்சபை, அரசாங்கத்திற்கு மனுக்களையும் தந்திகளையும் அனுப்பியது. கமிஷனர் செய்த அவமரியாதைகளையும், கமிஷனரின் மிரட்டல்களையும் சகித்துக் கொண்டது. இச்சந்தர்ப்பத்தில் அதிகாரிகளின் நடந்தை மிகக் கேவலமாகவும் கேலிக்கூத்தாகவும் இருந்தது. அவை, இன்று நம்பக் கூடாத அளவுக்கு அவ்வளவு மோசமானவை. விவசாயிகளின் கோரிக்கை, பட்டப்பகல் போல அவ்வளவு தெளிவானது; மிகவும் மிதமானது. ஆகவே, அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் நியாயமாக இருந்தது. மகசூல், சாதாரணமாகக் கிடைக்க வேண்டியதில் கால்வாசியும் அதற்குக் குறைவாகவுமே இருந்துவிடுமானால், அந்த ஆண்டுக்கு நிலத் தீர்வை வசூலை நிறுத்தி வைக்கும்படி, நிலத்தீர்வை விதிகளின்படி விவசாயிகள் கேட்கலாம். கால்வாசிக்கும் அதிகமாக மகசூல் இருக்கிறது என்பது சர்க்காரின் கணக்கு. விவசாயிகளோ, கால்வாசிக்கும் குறைவாகவே மகசூல் கிடைத்திருக்கிறது என்றார்கள். ஆனால், இவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொள்ளும் மனப்போக்கில் அரசாங்கம் இல்லை. மத்தியஸ்தர் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்ற பொதுஜனக் கோரிக்கை, தங்களுடைய கௌரவத்திற்குக் குறைவானது என்று அரசாங்கம் கருதியது. முடிவாக மனுக்களும் கோரிக்கைகளும் பயனில்லாது போய் விடவே, நான் என் சக ஊழியர்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு, சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளுமாறு பட்டாதார்களுக்கு யோசனை கூறினேன். இந்தப் போராட்டத்தில் கேடாத் தொண்டர்களே அன்றி எனக்கு முக்கியமான தோழர்களாக இருந்தவர்கள் ஸ்ரீ வல்லபாய் பட்டேல், சங்கரலால் பாங்கர், ஸ்ரீ மதி அனுசூயா பென், ஸ்ரீ இந்துலால் யாக்ஞிக், மகாதேவ தேசாய் முதலியவர்களும் மற்றோரும் ஆவர். இப்போராட்டத்தில் சேர்ந்ததால் ஸ்ரீ வல்லபாய் பட்டேல், ஏராளமான வருமானத்தை அளித்ததும், வளர்ந்து கொண்டு வந்ததுமான தமது வக்கீல் தொழிலை நிறுத்தி வைத்து விட நேர்ந்தது. பிறகு அத்தொழிலை அநேகமாக அவர் மேற்கொள்ள முடியாமலே போய்விட்டது. நதியாத்திலிருந்த அனாதாசிரமத்தை எங்கள் தலைமை ஸ்தலம் ஆக்கிக் கொண்டோம். நாங்கள் எல்லோரும் தங்குவதற்குப் போதுமானதாக இதைவிடப் பெரிய இடம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சத்தியாக்கிரகிகள் கீழ்க்கண்ட பிரதிக்ஞையில் கையெழுத்திட்டனர். “எங்கள் கிராமங்களில் மகசூல் கால் பாகத்திற்கும் குறைவாக இருக்கிறது என்பதை அறிந்தே அடுத்த ஆண்டுவரையில் நிலத் தீர்வை வசூலை நிறுத்தி வைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டோம். ஆனால், எங்களுடைய வேண்டுகோளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையால், கீழே கையொப்பம் இட்டு இருப்பவர்களாகிய நாங்கள், இவ்வருஷத்திற்கு முழுத் தீர்வையையோ பாக்கியாக இருக்கும் தீர்வையையோ அரசாங்கத்திற்கு நாங்களாகக் கொடுப்பதில்லை என்று இதன் மூலம் சத்தியம் செய்து கொள்கிறோம். அரசாங்கம், தனக்குச் சரியெனத் தோன்றும் எல்லாச் சட்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதோடு நாங்கள்தீர்வை செலுத்தாததால் ஏற்படக்கூடிய விளைவுகளை மகிழ்ச்சியுடனும் அனுபவிப்போம். எங்கள் நிலங்கள் பறிமுதல் ஆகிவிட விட்டு விடுவோமேயன்றி நாங்களாக வலியத் தீர்வையைச் செலுத்தி, எங்கள் கட்சி பொய்யானது என்று கருதப்பட்டு விடுவதற்கோ, எங்கள் சுயமதிப்புக்கு இழுக்கு நேர்ந்து விடுவதற்கோ, நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்றாலும், ஜில்லா முழுவதிலும் நிலத் தீர்வையின் இரண்டாவது தவணையை வசூலிப்பதை நிறுத்தி வைக்க அரசாங்கம் சம்மதிக்குமானால், எங்களில் வரி செலுத்துவதற்குச் சக்தியுள்ளவர்கள், முழு நில வரியையோ அல்லது பாக்கியாக இருக்கும் நிலத்தீர்வையின் மீதத்தையோ செலுத்தி விடுவோம். தீர்வையைச் செலுத்தி விடக் கூடியவர்கள், இன்னும் செலுத்தாமல் இருந்து வருவதற்குக் காரணம், அவர்கள் செலுத்தி விட்டால் ஏழைகளாக இருக்கும் விவசாயிகள் பீதியடைந்து தங்கள் தீர்வைப் பாக்கியைச் செலுத்துவதற்காகத் தங்களிடமிருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களை யெல்லாம் விற்றோ, கடன்பட்டோ தங்களுக்கு மேலும் துயரத்தைத் தேடிக்கொண்டு விடுவார்கள் என்பதே. இந்த நிலைமையில் ஏழைகளின் நன்மையை முன்னிட்டு வரி செலுத்தச் சக்தியுள்ளவர்கள் கூட, நிலத்தீர்வையைச் செலுத்தாமல் இருப்பது அவர்கள் கடமை என்று நாங்கள் உணருகிறோம்.” இந்தப் போராட்டத்தைக் குறித்துப் பல அத்தியாயங்களை நான் எழுதுவதற்கில்லை. ஆகையால், இதன் சம்பந்தமான அநேக இனிமையான நினைவுகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு நான் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த முக்கியமான போராட்டத்தைக் குறித்து முழுவதையும் விவரமாகத் தெரிந்து கொள்ள விரும்புவோர், கேடாவிலுள்ள கத்தலாலைச் சேர்ந்த ஸ்ரீ சங்கரலால் பரீக் எழுதியிருக்கும் ஆதாரபூர்வமான கேடாச் சத்தியாக்கிரகம் என்ற நூலைப் படிப்பார்களாக. மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |