![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) ஐந்தாம் பாகம் 25. கேடாச் சத்தியாகிரக முடிவு இப்போராட்டம் எதிர்பாராத வகையில் முடிவுற்றது. மக்கள் களைத்துப் போய்விட்டனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆகவே, பணியாமல் உறுதியுடன் இருந்தவர்களைச் சர்வ நாசத்திற்குக் கொண்டுபோய் விடுவதற்குத் தயங்கினேன். சத்தியாக்கிரகி ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், கௌரவமான முறையில் போராட்டத்தை முடிப்பதற்கான வழியைத் தேடிக் கொண்டிருந்தேன். எதிர்பாராத வகையில் அத்தகைய வழி ஒன்று தென்பட்டது. நதியாத் தாசில்தார் எனக்கு ஒரு தகவல் அனுப்பினார். பணவசதியுள்ள பட்டாதார்கள் வரியைச் செலுத்திவிட்டால் ஏழைகளிடமிருந்து வரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்றார், அவர். அவ்விதம் செய்யப்படும் என்று எழுத்து மூலம் கொடுக்கும்படி அவரைக் கேட்டேன். அவரும் அப்படியே கொடுத்தார். தாசில்தார், தமது தாலுகாவுக்கு மாத்திரமே பொறுப்பு வாய்ந்தவராக இருக்க முடியும். ஜில்லா முழுவதற்கும் கலெக்டரே உறுதிமொழி கொடுக்க முடியும். முழு ஜில்லாவுக்கும் தாசில்தாரின் உறுதிமொழி அமல் ஆகுமா என்று கலெக்டரிடம் விசாரித்தேன். தாசில்தாரின் கடிதத்தில் கண்ட முறையில் தீர்வை வசூலை நிறுத்தி வைக்குமாறு அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது என்று அவர் பதில் அளித்தார். அது அப்பொழுது எனக்குத் தெரியாது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது உண்மையானால், மக்களின் பிரதிக்ஞை நிறைவேறி விட்டது. இந்தக் காரியத்தை நோக்கமாகக் கொண்டதே அப்பிரதிக்ஞை என்பது நினைவிருக்கலாம். ஆகவே, உத்தரவில் எங்களுக்குத் திருப்தி என்று அறிவித்தோம். என்றாலும், முடிவு நான் மகிழ்ச்சி அடையும்படி இல்லை. ஏனெனில், ஒவ்வொரு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் முடிவையும் தொடர்ந்து வரவேண்டியதான பெருமிதம் அதில் இல்லை. சமரசத்திற்காகத் தாம் எதுவுமே செய்யாதவரைப் போலவே கலெக்டர் காரியங்களைச் செய்து கொண்டு போனார். ஏழைகளிடமிருந்து தீர்வை வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட வேண்டும். ஆனால், அந்தச் சகாயம் அவர்களுக்குக் கிடைக்கவே இல்லை. ஏழைகள் என்பது இன்னார் என்பதை நிர்ணயிப்பது மக்களுக்குள்ள உரிமை. ஆனால், அந்த உரிமையைச் செயல்படுத்த அவர்களால் முடியவில்லை. உரிமையை நிலைநாட்டுவதற்கு வேண்டிய பலம் அவர்களுக்கு இல்லாததைக் குறித்துத் துக்கம் அடைந்தேன். ஆகையால், இப்போராட்டத்தின் முடிவு சத்தியாக்கிரகத்தின் வெற்றி என்று கொண்டாடப்பட்டதாயினும், முழு வெற்றிக்கு வேண்டிய முக்கியமான அம்சங்கள் அதில் இல்லாததனால், அதைக் குறித்து நான் உற்சாகம் அடைய முடியவில்லை. சத்தியாக்கிரகத்தின் முடிவில் சத்தியாக்கிரகிகள் மேலும் பலமுள்ளவர்களாகவும், ஆரம்பத்தில் இருந்ததைவிட அதிக உற்சாகமுள்ளவர்களாகவும் இருக்க முடிந்தால்தான் சத்தியாக்கிரகப் போராட்டம் பயனுள்ளதாயிற்று என்று சொல்ல முடியும். ஆயினும், இப்போராட்டத்தினால் மறைமுகமான பலன்களும் இல்லாது போகவில்லை. இப்பலன்களை இன்று நாம் காணமுடிவதோடு அதன் பயன்களை அனுபவித்தும் வருகிறோம். கேடாச் சத்தியாக்கிரகம், குஜராத் விவசாயிகளிடையே விழிப்பு ஏற்படுவதற்கு ஆரம்பமாக இருந்தது. உண்மையான ராஜீயக் கல்விக்கு அதுவே ஆரம்பமாகும். டாக்டர் பெஸன்டின் சிறந்த சுயாட்சிக் கிளர்ச்சி, உண்மையில் விவசாயிகளிடையே ஓரளவுக்கு விழிப்பை உண்டாக்கி இருந்தது. ஆனால், கேடாப் போராட்டமே, விவசாயிகளின் உண்மையான வாழ்க்கையுடன் தொடர்பு கொள்ளும்படி படித்த பொதுஜன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தியது. விவசாயிகளுடன் சேர்ந்தவர்களே தாங்களும் என்பதை அவர்கள் அறியலானார்கள். தங்கள் வேலை செய்வதற்கு ஏற்ற இடத்தையும் கண்டுகொண்டனர். அவர்களுடைய தியாகத் திறனும் அதிகரித்தது. இந்தப் போராட்டத்தில் தான் வல்லபாய், தம்மைத் தாமே கண்டு கொண்டார் என்பது, அதனளவில் சாமான்யமான பலன் அன்று. அதன் பலன் எவ்வளவு பிரமாதமானது என்பதைச் சென்ற ஆண்டு நடந்த வெள்ள கஷ்ட நிவாரண வேலையில் இருந்தும், இந்த ஆண்டு நடந்த பார்டோலி சத்தியாக் கிரகத்திலிருந்தும் நாம் அறிய முடியும். குஜராத்தில் பொதுஜன சேவை வாழ்க்கை புதிய சக்தியையும், ஊக்கத்தையும் பெற்றது. பட்டாதாரான விவசாயி, தம்முடைய பலத்தை மறக்க முடியாத வகையில் உணரலானார். மக்களின் கதி மோட்சம், அவர்களையும், துன்பங்களை அனுபவிப்பதற்கும் தியாகத்துக்கும் அவர்களுக்குள்ள தகுதியையும் பொறுத்தே இருக்கிறது. இந்தப் பாடம், அழிய முடியாத வகையில் பொதுமக்களின் மனத்தில் பதிந்துவிட்டது. கேடாப் போராட்டத்தின் மூலம் சத்தியாக்கிரகம் குஜராத்தின் மண்ணில் ஆழ வேர் ஊன்றிவிட்டது. ஆகையால், சத்தியாக்கிரகம் முடிவடைந்ததைக் குறித்து நான் உற்சாகமடைவதற்கு எதுவும் இல்லையென்றாலும், கேடா விவசாயிகள் குதூகலமடைந்தார்கள். ஏனெனில், தங்கள் தங்கள் முயற்சிக்கு ஏற்ற பலனை அடைந்து விட்டதாக அவர்கள் அறிந்ததோடு தங்களுடைய குறைகளைப் போக்கிக் கொள்ளுவதற்கு உண்மையான, தோல்வியே இல்லாத ஒரு முறையையும் அவர்கள் கண்டுகொண்டனர். இதை அவர்கள் அறிந்திருந்தது ஒன்றே, அவர்கள் அடைந்த குதூகலம் நியாயமானது என்பதைக் காட்டுவதற்குப் போதுமானது. என்றாலும், சத்தியாக்கிரகத்தின் உட்பொருளைக் கேடா விவசாயிகள் முற்றும் அறிந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைக் கொண்டே இதை அவர்கள் கண்டுகொண்டனர். அதைக் குறித்துப் பின்வரும் அத்தியாயங்களில் கவனிப்போம். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |