![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) ஐந்தாம் பாகம் 5. மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் துயரங்கள் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள், டிக்கெட்டுகளை வாங்குவதற்கும் கூட என்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பதைப் பர்த்வானில் நாங்கள் நேரில் காண நேர்ந்தது. மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகளை இதற்குள் கொடுக்க முடியாது என்று எங்களுக்குச் சொல்லிவிட்டனர். ஸ்டேஷன் மாஸ்டரைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தாலும் அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் இருக்கும் இடத்தை யாரோ ஒருவர் எனக்கு அன்புடன் காட்டினார். எங்களுக்கு இருந்த கஷ்டத்தை ஸ்டேஷன் மாஸ்டரிடம் எடுத்துக் கூறினேன். அவரும் அதே பதிலைத்தான் சொன்னார். டிக்கெட் கொடுக்கும் இடத்தின் சன்னலைத் திறந்ததும் டிக்கெட்டுகளை வாங்குவதற்கு அங்கே சென்றேன். ஆனால் டிக்கட்டுகளை வாங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. அங்கே வல்லவன் வகுத்ததே சட்டமாக இருந்தது. பலமுள்ளவர்களும், மற்றவர்களைப் பற்றிய கவலையே இல்லாதவர்களுமான பிரயாணிகள், ஒருவர் பின் மற்றொருவராக வந்து என்னை இடித்து வெளியே தள்ளிக் கொண்டே இருந்தனர். ஆகையால், முதல் கும்பலில் கடைசியாக டிக்கெட் வாங்கியவன் நான்தான். ரெயில் வந்து நின்றது. அதில் ஏறுவது மற்றொரு பெரும் சோதனையாகி விட்டது. ரெயிலுக்குள் முன்பே இருந்த பிரயாணிகளும், ஏற முயன்றவர்களும் பரஸ்பரம் திட்டுவதும், பிடித்துத் தள்ளுவதுமாக இருந்தார்கள். பிளாட்பாரத்தில் மேலும் கீழும் ஓடினோம். ஆனால், “இங்கே இடம் இல்லை” என்ற ஒரே பதில்தான் எங்களுக்கு எங்குமே கிடைத்தது. கார்டிடம் போனேன். “முடிந்தால் ஏறிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். முடியாது போனால் அடுத்த ரெயிலில் வாருங்கள்” என்று அவர் கூறினார். “எனக்கு அவசரமான வேலை இருக்கிறதே” என்று நான் மரியாதையுடன் பதில் சொன்னேன். ஆனால், நான் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருக்க அவருக்கு அவகாசமில்லை. இன்னது செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். எங்கே சாத்தியமோ அங்கே ஏறிக்கொள்ளுமாறு மகன்லாலிடம் கூறிவிட்டு நானும் என் மனைவியும் இன்டர் வகுப்பு வண்டியில் ஏறிக்கொண்டோம். நாங்கள் அவ்வண்டியில் ஏறுவதைக் கார்டு பார்த்தார். அஸன்ஸால் ஸ்டேஷனை அடைந்ததும், எங்களிடம் அதிகப்படிக் கட்டணத்தை வசூலிப்பதற்காக அவர் எங்களிடம் வந்தார். அவரிடம் பின்வருமாறு கூறினேன்: “எங்களுக்கு இடம் தேடித் தர வேண்டியது உங்கள் கடமை. எங்களுக்கு இடம் கிடைக்காததால் நாங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறோம். மூன்றாம் வகுப்பு வண்டியில் எங்களுக்கு இடம் கொடுப்பதானால் நாங்கள் அங்கே போய்விடச் சந்தோஷத்துடன் தயாராயிருக்கிறோம்.” இதற்குக் கார்டு, “உம்முடன் விவாதிக்க நான் தயாராயில்லை. உமக்கு நான் இடம் தேடிக்கொடுக்க முடியாது. அதிகப்படியான கட்டணத்தை நீர் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இறங்கி விடும்” என்றார். எப்படியும் புனா போய்ச் சேர்ந்துவிட விரும்பினேன். ஆகையால், கார்டுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க நான் தயாராக இல்லை. அவர் கேட்ட அதிகப்படிக் கட்டணத்தை, அதாவது புனாவரையில் கொடுத்து விட்டேன். என்றாலும், அந்த அநியாயத்தைக் குறித்து ஆத்திரம் அடைந்தேன். காலையில் மொகல்ஸாரைக்குப் போய்ச்சேர்ந்தோம். மூன்றாம் வகுப்பில் மகன்லால் இடம் பிடித்துவிட்டதால் அந்த வண்டியில் போய் ஏறிக்கொண்டேன். டிக்கெட் பரிசோதகருக்கு இந்த விஷயங்களை யெல்லாம் கூறினேன். மொகல்ஸாரையில் மூன்றாம் வகுப்பு வண்டியில் நான் ஏறிக்கொண்டு விட்டதாக எனக்கு அத்தாட்சி கொடுக்குமாறு அவரிடம் கேட்டேன். ஆனால், அதைக் கொடுக்க அவர் மறுத்துவிட்டார். இதில் பரிகாரம் பெறுவதற்காக ரெயில்வே அதிகாரிகளுக்கு எழுதினேன். அதற்குப் பின்வருமாறு எனக்குப் பதில் வந்தது: “அத்தாட்சியை அனுப்பி இருந்தாலன்றி அதிகப் படியாக வசூலித்திருந்த கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பது எங்களுக்கு வழக்கமில்லை. ஆனால், உங்கள் விஷயத்தில் ஒரு விதிவிலக்குச் செய்கிறோம். என்றாலும், பர்த்வானிலிருந்து மொகல்ஸாரை வரையில் வாங்கிய அதிகப்படிக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பது சாத்தியமில்லை.” மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தைக் குறித்து எனக்கு ஏற்பட்ட இந்த முதல் அனுபவத்தை எல்லாம் நான் எழுதுவதாக இருந்தால் அதுவே ஒரு பெரிய புத்தகமாகி விடும். ஆனால், அந்த அனுபவங்களைக் குறித்து இந்த அத்தியாயங்களில் ஆங்காங்கே குறிப்பாகச் சிலவற்றையே நான் சொல்ல முடியும். உடல் நிலை சரியாக இல்லாததன் காரணமாக மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தை நான் கைவிடநேருவது, எனக்கு அதிகத் துயரம் அளித்திருக்கிறது. இது எப்பொழுதும் எனக்கு அதிகத் துயரம் அளிப்பதாகவே இருக்கும். மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் துயரங்களெல்லாம் ரெயில்வே அதிகாரிகளின் திமிரினால்தான் ஏற்படுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை. ஆயினும், பிரயாணிகளின் முரட்டுத்தனம், ஆபாசமான பழக்கங்கள், சுயநலம், அறியாமை ஆகியவைகளையும் குற்றம் கூறாமல் இருப்பதற்கில்லை. இதிலுள்ள பரிதாபம் என்னவென்றால், தாங்கள் தவறாகவும், ஆபாசமாகவும் சுயநலத்தோடும் நடந்துகொள்ளுவதை அவர்கள் உணராமல் இருப்பதே. தாங்கள் செய்வதெல்லாம் இயல்பானதே என்று அவர்கள் கருதுகிறார்கள். இவைகளுக்கெல்லாம் முக்கியமான காரணம், படித்தவர்களாகிய நாம் அவர்களிடம் கொள்ளும் அசிரத்தையே ஆகும். மிகவும் களைத்துப் போய்விட்ட நிலையில் நாங்கள் கல்யாண் போய்ச் சேர்ந்தோம். மகன்லாலும் நானும் ஸ்டேஷன் தண்ணீர்க் குழாயிலிருந்து கொஞ்சம் தண்ணீர் பிடித்துக் குளித்தோம். என் மனைவி குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்வதற்கு நான் போய்க் கொண்டிருந்த போது இந்திய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ கௌல் எங்களைத் தெரிந்துகொண்டார். அவர் எங்களிடம் வந்தார். அவரும் புனாவுக்குத்தான் போய்க் கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்புப் பிரயாணிகள் குளிக்கும் இடத்திற்கு என் மனைவியை அழைத்துப் போவதாக அவர் சொன்னார். மரியாதையோடு அவர் அளிக்க முன்வந்த இந்த உதவியை ஏற்றுக்கொள்ள நான் தயங்கினேன். இரண்டாம் வகுப்புப் பிரயாணிகள் குளிக்குமிடத்தை உபயோகித்துக்கொள்ள என் மனைவிக்கு உரிமை இல்லை என்பதை அறிவேன். என்றாலும், முறையற்ற அச்செய்கைக்கு முடிவில் நானும் உடந்தையானேன். சத்தியத்தை அனுசரிப்பவருக்கு இது அழகல்ல என்பதையும் அறிவேன். அந்த ஸ்நான அறைக்குப் போய்த்தான் குளிக்க வேண்டும் என்று என் மனைவிக்கு ஆவலும் இல்லை. ஆனால், சத்தியத்தினிடம் இருந்த பற்றை, மனைவியினிடம் கணவனுக்கு இருந்த பாசம் வென்றுவிட்டது. சத்தியத்தின் முகம், மாயையின் தங்கத்திரையினால் மூடப்பட்டிருக்கிறது என்று உபநிடதம் கூறுகிறது. மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |