![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) ஐந்தாம் பாகம் 6. நயந்துகொள்ள முயற்சி நாங்கள் புனா வந்து சேர்ந்தோம். சிரார்த்தச் சடங்குகளெல்லாம் முடிந்த பிறகு இந்திய ஊழியர் சங்கத்தின் எதிர்காலத்தைக் குறித்தும் விவாதங்கள் எழுந்தன. அச்சங்கத்தில் நான் அங்கத்தினனாவது என்ற விஷயம் எனக்கு மிகவும் சங்கடமான பிரச்னையாக இருந்தது. கோகலே இருந்த போது அதில் அங்கத்தினன் ஆவதற்கு நான் முற்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர் விருப்பம் எதுவோ அதை அப்படியே பணிவுடன் நிறைவேற்றி வந்திருப்பேன். அத்தகையதோர் நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரியமும். இந்தியப் பொது வாழ்க்கை என்ற கொந்தளிப்பான கடலில் பிரயாணம் செய்வதற்குச் சரியான மாலுமி ஒருவர் எனக்குத் தேவைப்பட்டார். கோகலேயை நான் அத்தகைய மாலுமியாகக் கொண்டிருந்ததோடு, அவர் இருக்கப் பயமில்லை என்ற தைரியத்துடனும் இருந்தேன். இப்பொழுதோ, அவர் போய்விட்டதால் என் சக்தியைக் கொண்டே நான் இருக்க வேண்டியவனாகி விட்டேன். ஆகவே அச்சங்கத்தில் அங்கத்தினனாகி விட வேண்டியது என் கடமை என்பதை உணர்ந்தேன். அப்படிச் செய்தால் கோகலேயின் ஆன்மாவும் திருப்தியடையும் என்று எண்ணினேன். ஆகவே, தயக்கம் எதுவும் இல்லாமல், அதே சமயத்தில் உறுதியுடனும், அச்சங்கத்தின் அங்கத்தினர்களை நயந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். இச்சமயத்தில் அச்சங்கத்தின் அங்கத்தினரில் பெரும்பாலானவர்கள் புனாவில் இருந்தார்கள். என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டேன். என்னைக் குறித்து அவர்களுக்கு இருந்த பயத்தையெல்லாம் போக்குவதற்கும் முயன்றேன். ஆனால், என்னைச் சேர்த்துக் கொள்ளும் விஷயத்தில் அவர்களிடையே பிளவு இருந்தது என்பதைக் கண்டேன். அவர்களில் ஒரு பகுதியினர், என்னைச் சேர்த்துக் கொள்ளுவதற்கு ஆதரவாக இருந்தார்கள். மற்றொரு பகுதியினரோ, அதைப் பலமாக எதிர்த்து வந்தனர். என்னிடம் கொண்டிருந்த அன்பில் இந்த இருசாராரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நான் அறிவேன். ஆனால், சங்கத்தினிடம் அவர்களுக்கு இருந்த விசுவாசம், என்னிடம் அவர்கள் கொண்டிருந்த அன்பைவிட அதிகமாக இருந்திருக்கலாம்; என்மீது கொண்ட அன்பை விடக் குறைவாகவாவது இல்லாமல் இருந்திருக்கும். ஆகையால், எந்த விதமான மனக்கசப்புமின்றியே விவாதித்து வந்தோம். அந்த விவாதம் முழுவதும் கொள்கையைப் பற்றியதாகும். என்னை அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளுவதை எதிர்த்தவர்கள், அநேக விஷயங்களில் நானும் அவர்களும் வடதுருவம் தென்துருவம் போல் வெகு தொலைவில் இருப்பதாகக் கூறினர். என்னை அங்கத்தினனாகச் சேர்த்துக் கொண்டு விட்டால், எந்த நோக்கத்திற்காக அச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கே ஆபத்து நேர்ந்துவிடும் என்று எண்ணினார்கள். இயற்கையாகவே இத்தகைய ஆபத்தை அவர்களால் தாங்க முடியாதுதான். நீண்ட நேரம் விவாதித்த பிறகு நாங்கள் கலைந்து விட்டோம். முடிவான தீர்மானத்திற்கு வரும் விசயம் பிந்திய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. அதிகப் பரபரப்பு அடைந்துவிட்ட நிலையிலேயே நான் வீடு திரும்பினேன். பெரும்பான்மை வோட்டுக்களின் மூலம் நான் அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளப்படுவது எனக்குச் சரியா? கோகலேயிடம் நான் கொண்டிருந்த பக்திக்கு அது பொருத்தமானதாக இருக்குமா? ஒரு விஷயம் எனக்குத் தெளிவாகத் தோன்றியது. என்னை அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளுவதில் அச்சங்கத்தின் அங்கத்தினர்கள் இடையே அபிப்பிராய பேதம் இவ்வளவு கடுமையாக இருக்கும்போது, சேர்த்துக்கொள்ளக் கோரும் என் மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டு என்னை எதிர்ப்பவர்களுக்கு இருக்கும் சங்கடத்திலிருந்து அவர்களைத் தப்புவிப்பது ஒன்றே நான் செய்யக்கூடிய சரியான காரியம். சங்கத்தினிடமும் கோகலேயிடத்திலும் நான் கொண்டிருந்த பக்திக்கு ஏற்ற காரியமும் அதுதான் என்று எண்ணினேன். இந்த யோசனை பளிச்சென்று எனக்குத் தோன்றியதும், ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தைக் கூட்டவே வேண்டாம் என்று உடனே ஸ்ரீ சாஸ்திரிக்கு எழுதினேன். என் மனுவை எதிர்த்தவர்கள், நான் செய்த தீர்மானத்தை முற்றும் பாராட்டினர். இது, ஒரு சங்கடமான நிலையிலிருந்து அவர்களைக் காப்பாற்றியது. எங்களுக்குள் நட்பையும் இன்னும் அதிகப் பலமானதாக்கியது. மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டது, உண்மையில் என்னை அச்சங்கத்தின் அங்கத்தினனாக்கியது. அச்சங்கத்தில் சாதாரணமாக நான் அங்கத்தினன் ஆகாமலிருந்தது சரியானதே. நான் அங்கத்தினன் ஆவதை ஆட்சேபித்தவர்களின் எதிர்ப்பும் நியாயமானதே என்பதை, அனுபவம் இப்பொழுது தெளிவாக்குகிறது. கொள்கையைப் பற்றிய விஷயங்களில் எங்கள் கருத்துக்கள் முற்றும் மாறுபட்டவை என்பதையும் அனுபவம் காட்டிவிட்டது. ஆனால், இந்த மாறுபாட்டை அறிந்ததனால் எங்களிடையே எந்தவிதமான மனஸ்தாபமோ, மனக் கசப்போ இல்லை. சகோதரர்களாகவே இருந்து வந்திருக்கிறோம். புனாவிலுள்ள சங்கத்தின் இல்லம் எனக்கு என்றுமே யாத்திரைக்குரிய புண்ணிய ஸ்தலமாகவே இருந்து வருகிறது. அச்சங்கத்தின் விதிகளின்படி நான் அதில் அங்கத்தினன் ஆகவில்லை என்பது உண்மை. ஆனால், ஆன்ம உணர்ச்சியில் என்றும் அதன் அங்கத்தினனாகவே இருந்து வருகிறேன். ஸ்தூல தொடர்பை விட ஆன்ம தொடர்பு அதிக மேன்மையானது. ஆன்ம தொடர்பில்லாத வெறும் ஸ்தூல தொடர்பு உயிரில்லாத உடல் போன்றதேயாகும். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |