![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) ஐந்தாம் பாகம் 9. ஆசிரமத்தின் ஆரம்பம் கும்பமேளாவிற்காக ஹரித்துவாரத்திற்கு யாத்திரை செய்தது, நான் அந்த இடத்திற்குச் சென்ற இரண்டாவது தடவையாகும். சத்தியாக்கிரக ஆசிரமம் 1915 மே 15-ஆம் தேதி ஆரம்பமாயிற்று. ஹரித்துவாரத்திலேயே நான் தங்கி விடவேண்டும் என்று சிரத்தானந்தஜி விரும்பினார். வைத்தியநாத தாமில் தங்கிவிடலாம் என்று சில கல்கத்தா நண்பர்கள் யோசனை கூறினர். மற்றவர்களோ, ராஜ்கோட்டே சரியான இடம் என்று என்னிடம் வற்புறுத்திக் கூறினர். ஆனால் நான் அகமதாபாத் வழியாகச் சென்றபோது அங்கேயே குடியேறி விடுமாறு பல நண்பர்கள் வற்புறுத்தினர். ஆசிரமத்தின் செலவுக்கு வேண்டியதற்கும், நாங்கள் வசிப்பதற்கு வீட்டுக்கும் ஏற்பாடு செய்வதாகவும் அவர்கள் கூறினர். மற்ற இடங்களையெல்லாம்விட அகமதாபாத் என் மனத்திற்குப் பிடித்திருந்தது. நான் குஜராத்தியானதால் குஜராத்தி மொழியின் மூலம் நாட்டிற்கு அதிக அளவு சேவை செய்ய முடியுமென்று எண்ணினேன். மேலும் அகமதாபாத், கைத்தறி நெசவுக்குப் புராதனப் பெயர் பெற்ற இடமாகையால், கையினால் நூற்கும் குடிசைத் தொழிலுக்குப் புத்துயிர் அளிப்பதற்கு அது வசதியான இடமாக இருக்கும் என்றும் தோன்றியது. குஜராத்திற்கு அந்நகரம் தலைநகரமாகையால், மற்ற இடங்களை எல்லாம்விட அங்குள்ள பணக்காரர்கள் அதிகப் பண உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. அகமதாபாத் நண்பர்களுடன் பல விஷயங்களையும் குறித்து விவாதித்தேன். இயற்கையாகவே தீண்டாமை விஷயத்தைப் பற்றியும் அப்பொழுது விவாதித்தேன். ஒரு தீண்டாதவர் மற்ற வகைகளில் தகுதியுடையவராக இருப்பாராயின் முதல் சந்தர்ப்பத்திலேயே அவரையும் ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நான் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறினேன். “உங்களுடைய நிபந்தனைகளையெல்லாம் திருப்தி செய்யக் கூடிய தீண்டாதார் ஒருவர் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கப் போகிறார்?” என்று ஒரு வைஷ்ணவ நண்பர் கேட்டார். அப்படி ஒருவர் கிடைக்கமாட்டார் என்பது அவருடைய நம்பிக்கை. ஆசிரமத்தை அகமதாபாத்தில் ஆரம்பிப்பது என்று கடைசியாக முடிவு செய்தேன். ஆசிரமத்தை அமைப்பதற்கு இடத்தைப் பொறுத்த வரையில் எனக்கு முக்கியமாக உதவி செய்தவர் அகமதாபாத் பாரிஸ்டரான ஸ்ரீ ஜூவன்லால் தேசாய். தமது கோச்ராப் பங்களாவை வாடகைக்கு விட அவர் முன் வந்தார். நாங்களும் வாடகைக்கு அமர்த்திக் கொள்ளத் தீர்மானித்தோம். ஆசிரமத்திற்கு என்ன பெயர் வைப்பது என்பதை முதலில் முடிவுசெய்ய வேண்டி இருந்தது. ‘சேவாசிரமம்’, ‘தபோவனம்’ முதலிய பெயர்களை வைக்கலாம் என்று கூறினர். ‘சேவாசிரமம்’ என்ற பெயர் எனக்குப் பிடித்திருந்ததெனினும் சேவையின் முறை இன்னதென்பதைப்பற்றிய விளக்கம் அதில் இல்லை. ‘தபோவனம்’ என்பது மிகைப்படுத்திக் கூறும் பெயர் என்று தோன்றியது. ஏனெனில், தவம் எங்களுக்குப் பிரியமானது தான் என்றாலும் நாங்கள் தபஸ்விகள் என்று எண்ணிக்கொண்டு விட முடியாது. சத்தியத்தில் பற்றுடன் இருப்பதே எங்கள் கோட்பாடு. சத்தியத்தை நாடி, சத்தியத்தையே கட்டாயமாக அனுசரிப்பது எங்கள் வேலை. தென்னாப்பிரிக்காவில் நான் கையாண்ட முறையை இந்தியாவுக்கும் அறிமுகப்படுத்த நான் விரும்பினேன். அம் முறையை அனுசரிப்பது இந்தியாவில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதைச் சோதிக்கவும் ஆசைப்பட்டேன். ஆகையால் எங்கள் லட்சியத்தையும், எங்களுடைய சேவையின் முறையையும் காட்டுவதான ‘சத்தியாக்கிரக ஆசிரமம்’ என்ற பெயரையே நானும் என் சகாக்களும் தேர்ந்தெடுத்தோம். ஆசிரமத்தை நடத்துவதற்கு விதிகளையும், ஒழுக்க முறைகளையும் வகுக்க வேண்டியது அவசியமாயிற்று. இதற்கு ஒரு நகலைத் தயாரித்தோம். அதன் மீது நண்பர்களின் அபிப்பிராயத்தையும் கேட்டறிந்தோம். எங்களுக்குக் கிடைத்த அபிப்பிராயங்களில் ஸர் குருதாஸ் பானர்ஜி அனுப்பியிருந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. நாங்கள் தயாரித்த விதிகள் அவருக்குப் பிடித்திருந்தன. ஆனால், இளம் சந்ததியாரிடம் வருந்தத்தக்க வகையில் அடக்கம் என்பது இல்லாமல் இருப்பதால் ஒழுக்க முறைகளில் அதையும் ஒன்றாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் யோசனை கூறியிருந்தார். இக்குறைபாட்டை நானும் கவனித்து வந்திருக்கிறேன். ஆயினும், அடக்கம் என்பது விரதமாகக் கொள்ள வேண்டிய விஷயமாகிவிடும் என்று அஞ்சினேன். ‘நான்’ என்ற அகந்தையைப் போக்கிக்கொண்டு விடுவதுதான், அடக்கம் என்பதற்குரிய உண்மையான பொருள். ‘நான்’ என்பது அற்றுப் போவதே மோட்சம். இது அதனளவில் ஓர் ஒழுக்க முறையாக இருக்க முடியாதெனினும் இதை அடைவதற்கு மற்ற ஒழுக்க முறைகளை அனுசரிப்பது அவசியமாகும். மோட்சத்தை அடைய விரும்புகிறவரின், அல்லது ஒரு தொண்டரின் நடவடிக்கைகளில் அடக்கமோ, அகந்தையின்மையோ இல்லையென்றால், மோட்சத்திலோ அல்லது தொண்டிலோ அவருக்கு ஆர்வம் இல்லை என்றே ஆகும். அடக்கமில்லாத சேவை, சுயநலமும் அகம்பாவமுமே அன்றி வேறல்ல. அச்சமயத்தில் எங்கள் கோஷ்டியில் பதின்மூன்று தமிழர்கள் இருந்தார்கள். ஐந்து தமிழ் இளைஞர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து என்னுடன் வந்தவர்கள். மற்றவர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து சேர்ந்தனர். நாங்கள் மொத்தம் ஆண்களும் பெண்களுமாக இருபத்தைந்து பேர். இவ்வாறே ஆசிரமம் ஆரம்பமாயிற்று. எல்லோருக்கும் பொதுவான ஒரே சமையலுடன் ஒரே குடும்பமாக வாழ முயன்று வந்தோம். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |