சிலையும் நீயே சிற்பியும் நீயே 18. “உழைப்பே உயர்வு” லியர்னடோ டாவின்சி எழுதி இருக்கிறார், “இரும்பை பயன்படுத்தாவிட்டால் துருப்பிடித்து போகும். தேங்கிய நீர் தூய்மை இழந்து விடும். அதே போல் செயல்படாமை மனதின் சக்தியை உறிஞ்சிவிடுகிறது.” செயல்படாமை என்றால் உழைக்காமல் இருத்தல் என்று பொருள். சாதனையாளர் பட்டியலில் உங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என்று மனதார விரும்புகிறீர்களா? அதற்கு நீங்கள் எப்போதும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டிய ஒரு நான்கெழுத்து மூலமந்திரம் ஒன்று இருக்கிறது அதுதான் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. உங்களிடம் என்னதான் சிறப்பான திறமை இருந்தாலும், குறிக்கோள் ஒன்றைத் தீர்மானித்து இருந்தாலும், குறிக்கோளை செயல்படுத்த வசதி வாய்ப்புகள் நிறையவே இருந்தாலும் “உழைப்பு” என்கிற ஒன்றுமட்டும் இல்லாமல் போகுமேயானால் மேலே சொல்லப்பட்ட அனைத்தும் வாய்க்கப்பட்டிருந்தாலும் அவை இல்லாததற்குச் சமமேயாகும். உங்களில் எத்தனையோ பேர்களுக்குத் திறமை இருக்கலாம். ஆற்றல் இருக்கலாம், வசதிகள் இருக்கலாம், குறிக்கோளும் இருக்கலாம். பிறகு... நீங்கள் ஏன் இன்னமும் மற்றவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப்படாமல், பத்தோடு பதினோராவது மனிதராய் சாமான்யராய் இருக்கிறீர்கள்? ஏன் தெரியுமா? உங்களிடம் உழைப்பு இல்லை. அதாவது கடுமையான கண்ணுக்குத் தெரியாத போட்டி நிறைந்த இந்த உலகில் போட்டியில் ஜெயிப்பதற்குத் தேவையான உழைப்பை நீங்கள் இன்னும் உழைக்கவில்லை. உழைப்பையே சுவாசமாகக் கொண்ட பலர் நிச்சயமாக சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். கவியரசு கண்ணதாசனின் தாயார் அடிக்கடி சொல்வாராம், “உலகில் நீ எந்த வேலையை வேண்டுமானாலும் செய். குப்பை அள்ளுகிற வேலையாக இருந்தாலும் உன்னை விட அதை வேறு யாரும் சிறப்பாகச் செய்ய முடியாது என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைத்து செயல்படு.” அதன்படி வாழ்ந்து மறைந்த கவிஞரின் உழைப்பை உலகம் அறியும். திறமை இருந்தும் உழைக்காமல் இருந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான கவிதைகளை எழுதித் தள்ளி இருக்க முடியுமா? “சரியாகவும், உண்மையாகவும் உழைப்பதே கடவுளிடம் கூட்டிச் செல்லும் தங்கப்பாதை” என்கிறார் ஜே.ஜி. ஹாலண்டு. ஆம்... நன்கு உழைக்கும் போது கிடைக்கும் மனநிறைவில் கடவுளையே காணலாம். “ஒரு சதவீதம் அறிவு. 99 சதவீதம் உழைப்பு” வெற்றி என்கிற வார்த்தைக்கு தாமஸ் ஆல்வா எடிசன் தந்த விளக்கம் இதுதான். வெற்றி பெற்ற மனிதர்களது வாழ்க்கையைப் புரட்டிப் பாருங்கள். கடும் உழைப்பு ஒன்றே அவர்கள் சாதனையின் ஆணிவேராக இருந்திருக்கும். தனது கடின உழைப்பால் சாதனை புரிந்த சாதனையாளர்கள் சிலரை நினைவு கூர்வோமா? நாவல் புத்தக விற்பனையில் 70 கோடி பிரதிகள் வரை தொட்ட ஹெரால்டு ராபின்ஸ் தனது சாதனைக்காக தொடர்ந்து 40 ஆண்டுகள் கடுமையாக உழைத்தவர். கிடைத்த எல்லா வேலைகளையும் பார்த்து கடும் உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டு முன்னேறி சாதனையாளரானவர் கோடீஸ்வரர் ராக்பெல்லர். மனித குலத்திற்கு சேவை செய்வதையே மூச்சாகக் கொண்டு இறுதிவரை உழைத்தவர் மதர் தெரஸா. மாதம் 50 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையைத் துவக்கி, பிற்காலத்தில் உலகெங்கும் 35 மாபெரும் ஹோட்டல்களுக்கு அதிபதியாகி உயர்ந்த எம்.எஸ்.ஓபராய் சாதனையாளரானது தனது கடின உழைப்பின் மூலமாக. திரைப்பட நடிப்புத் துரையில் ஒரு துரோணாச்சாரியாராக இன்றளவும் போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உழைப்பு உலகம் அறியும். சுதந்திரப் போராட்டத்திற்காகக் கடுமையாக உழைத்த நம் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை உலகம் மறக்குமா என்ன? மருத்துவத் துறையில் அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் ஜென்னர், தனது கடற்பயணத்தால் பல நாடுகளைக் கண்டறிந்த கொலம்பஸ் - இப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் ஏன்? எத்தனையோ பேர் உங்கள் கண்ணெதிரே கடின உழைப்பால் உயர்ந்து ஒரு உன்னத நிலைக்கு வந்துவிட்டவர்களைப் பார்த்திருப்பீர்கள். திறமை இருந்தும், ஆற்றல் இருந்தும் சிலருக்கு உழைப்பு இல்லாமல் போவது எதனால் என்று பார்ப்போமா? - முதல் காரணம் “தன்னம்பிக்கையின்மை”. “ஆமாம்... உழைச்சா மட்டும் கிடைச்சிடப் போகுதா என்ன? அதெல்லாம் விதிப்படிதான் நடக்கும். உழைச்சவங்களெல்லாம் மேலே வந்துட்டாங்களா என்ன?” என்று தனக்குச் சாதகமாய் ஒரு வேதாந்தம் பேசிக் கொண்டு தன் மேலேயே நம்பிக்கை வைக்காமல் இருப்பவர்கள் உழைக்கத் தயங்குவார்கள். - அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பிக்கொண்டு, ஜோதிடர் வாக்கை தேவவாக்காக எடுத்துக் கொண்டு, “அடுத்த வருடம் ஜூலைக்கு மேலேதான் எனக்கு நல்ல நேரம். அதுவரை எதிலேயுமே கைவைக்க மாட்டேன்” என்று தன் உழைப்பின்மைக்கு சாதகமாக ஜோதிடர் வாக்கை எடுத்துக் கொள்பவர்கள். - இயல்பாகவே சிறு குழந்தையிலிருந்தே சோம்பேறியாக இருந்து பழக்கப்பட்டவர்கள். “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பதற்கு இணங்க சிறு வயது முதலே எந்த விஷயத்திலும் உழைக்கத் தயங்குவார்கள். இவர்கள் தாங்களாகவே தங்கள் சுறுசுறுப்பின்மையை உணர்ந்து உழைக்கப் பழகிக் கொண்டால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும். - பிறர் உழைப்பில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் தாமாகவே உழைக்க நினைப்பதில்லை. - வாழ்க்கையில் எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் ‘ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம்’ என்று வாழ்பவர்களும் உழைப்பில் அக்கறை காட்டுவதில்லை. - மனதளவில் தைரியம் இல்லாதவர்கள், சிறு நஷ்டம் தோல்விக்கே துவண்டு போய் விடுபவர்கள் ஒருமுறை சிறு சரிவு ஏற்பட்டால் அதையே நினைத்து கலங்கிப் போய் விடுபவர்கள் ‘உழைத்தும் பிரயோஜனமில்லை’ என்று பேசிக் கொண்டு உழைக்கத் தயங்குவார்கள். - உடல் நிலையில் சிறிது கோளாறு ஏற்பட்டாலும் அதையே பெரிய வியாதியாக நினைத்து வீண் கற்பனை செய்து கொண்டு, உழைத்தால் மேலும் உடற்கோளாறு ஏற்படும் என்று தாமாகவே முடிவு செய்து கொண்டு உழைக்க அஞ்சுவார்கள். - மூட நம்பிக்கையில் ஊறியவர்களும் உழைப்பில் அவ்வப்போது தேக்கம் காட்டுவார்கள். “இன்னிக்கு கடை திறக்கவே பயமா இருக்கு. காலையிலே சகுனமே சரியில்லே.” “இன்று வெளியே போகப் போறதில்லை. ஏதோ கெட்ட சகுனமா மனசுக்குப் படுது” - இதெல்லாம் இவர்கள் பேசும் பேச்சுக்கள். - வாழ்க்கையில் பெரிய இழப்பை சந்தித்தவர்களும் உழைக்கப் பிடிக்காமல் விரக்தியடைந்த நிலையில் இருப்பார்கள். பெரிய பொருள் இழப்பு, உயிர் இழப்பு இப்படி எதையாவது சந்தித்தவர்கள் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை இழந்து உழைப்பில் அக்கறை காட்டுவதில்லை. இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் உழைப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வாழ்க்கையில் உயர நினைப்பவர்கள் முதலில் உழைப்பை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். உழைப்பையே சுவாசமாகக் கருத வேண்டும். உழைப்பையே தவமாகக் கருத வேண்டும். உழைப்பையே தியானமாகக் கொள்ள வேண்டும். ஆன்மீக ஞானி கபீர்தாஸர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்: ஆன்மீக ஞானி கபீர் தனது ஆஸ்ரமத்தில் எப்போதும் தறியில் நெசவு வேலை செய்து கொண்டிருப்பார். வயதான பிறகு விழிகள் மங்கி, விரல்கள் தடுமாறிய பிறகும் கூட அவர் நெசவு வேலை செய்வதை நிறுத்தவில்லை. அவரது சீடர்கள் இதனால் வருத்தமடைந்ததுடன், ‘தங்கள் குருநாதர் தீட்சை தருகிறார், தவம் செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் தங்களுக்குப் பெருமையாக இருக்குமே. அதை விடுத்து நெசவு செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டி இருக்கிறதே’ என்று வருந்தினர். ஆஸ்ரமத்தில் செல்வ நிலையும் நன்றாகவே இருந்தது. அவர்கள் கபீரிடம் சென்று, “குருநாதரே, நல்ல செல்வ நிலையில் இருக்கிறீர்கள். மேலும் தேவையென்றாலும் தருவதற்கு சீடர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம். நெசவு செய்வதை நிறுத்திவிடக் கூடாதா?” என்று கேட்டனர். அதைக் கேட்ட கபீர் சிரித்தார். “நான் என் வயிற்றுப் பிழைப்புக்காக நெசவு மேற்கொள்ளவில்லை. இந்தப் பணி தான் என்னை உயிரோடு பிணைத்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஆடையையும் நான் நெய்யும் போது இறைவனே அணிந்து கொள்ளப் போவதாக நினைக்கிறேன். இந்த உழைப்பு எனக்கு மிகவும் பழகிப் போய் விட்டது. இந்த உழைப்பை நிறுத்தி விட்டால் என் உயிரும் நின்று விடும். என் கைகள் தறியிலிருந்து பிரியும் போது என் உயிரும் இந்த உடலை விட்டு நீங்கி இருக்கும்” என்றார். கபீர்தாசர் உழைப்பை எந்த அளவிற்கு மதித்துப் போற்றியிருந்தால் இவ்வாறு சொல்லியிருப்பார்? “நிலத்திற்கு மாத்திரம் மதிப்பில்லை. உழைப்பு மூலம் தான் மதிப்படைகிறது” என்கிறார் ஹென்றி ஜார்ஜ் எனும் அறிஞர். ஒரு மனிதனின் தலை சிறந்த நண்பர்கள் அவர்களது பத்து விரல்கள் தான் என்கிறார் ஜேம்ஸ் ஆலன். எனவே முடிந்தவரை ஒவ்வொரு நிமிடமும் உழையுங்கள் உழைப்பின் பெருமையை உணர்ந்து செயல்படுங்கள். ஒருவர் ஒரு மகத்தான வெற்றி பெற்றால் அதற்குப் பின் அவரது வருடக்கணக்கான உழைப்பை நினைத்துப் பாருங்கள். நீங்களும் வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்ட விரும்பினால் உழைக்கத் தயங்காதீர்கள். நபிகள் நாயகம் சொல்கிறார், “துடுப்புப் போடாமலேயே படகில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியுமா? பாடுபட்டு உழைக்காமலேயே வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற முடியுமா?” என்கிறார். மேலும் நீங்கள் கடினமாக உழைத்து உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் உழைப்பையும் மதித்து அவர்களுக்கு உதவுங்கள். “வேலை செய்து முடித்த பிறகு தொழிலாளியின் நெற்றியிலிருந்து வியர்வை நிலத்தில் விழுவதற்கு முன்னால் அவரின் கூலியைக் கொடுத்திடு” இதுவும் நபிகள் நாயகத்தின் மொழிகள் தான். நீங்கள் மற்றவர்களின் உழைப்பை மதிக்க மதிக்க உங்கள் உழைப்பிற்கு ஆண்டவன் ஆசியில் உலகில் தனி அங்கீகாரம் கிடைக்கும். எனவே உழைக்காமல் ஒரு போதும் சும்மா இருக்காதீர்கள். “இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். சும்மா இருக்கக் கூடாது” என்பதன் அவசியத்தை பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மிக அழகாகச் சொல்கிறார். ஒவ்வொரு மனிதனும் தன் உள்ளத்தில் பொன் எழுத்துக்களால் பொறித்துக் கொள்ள வேண்டிய வாசகம் இது. அர்ஜுனனிடம் சொல்கிறார். “மூவுலகிலும் நான் செய்ய வேண்டும் என்று ஒன்றும் இல்லை. ஏனென்றால் நான் அடையாத ஒன்றை அடைய வேண்டும் என்கிற நிலையில் இல்லை. இருப்பினும் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். அதாவது செய்ய வேண்டுவதை நான் செய்து கொண்டிருக்கிறேன். உனக்குத் தேரோட்டுவதைப் போல.” பரம்பொருளே இயக்கத்தை நிறுத்தாமல் இயங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் ஏன் உழைப்பைக் குறைக்கிறீர்கள்? இயக்கத்தை நிறுத்துகிறீர்கள்? உழைப்பே உயர்வு! |