சிலையும் நீயே சிற்பியும் நீயே 24. “சேமிக்க வேண்டுமய்யா!” “வரவுக்கு மேல் செலவு செய்பவன் பணக்காரன் ஆனதில்லை. வரவுக்குள் செலவு செய்தவன் ஏழையானதில்லை” என்கிற பொன்மொழியை உதிர்த்தவர் “ஆலிபர்ட்டன்” எனும் மேலை நாட்டு அறிஞர். ஆம், சத்திய பூர்வமான வார்த்தை இது. நடைமுறை வாழ்க்கையில் சிலரைப் பார்த்திருப்பீர்கள். நிறைய வருமானம் வந்து கொண்டிருக்க, தாம்தூம் என்று நிறையவே செலவுகள் செய்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்குப் பற்றாக்குறை என்பது இருந்துகொண்டே இருக்கும். அதே நேரம் குறைந்த வருமானம் சம்பாதித்தாலும், கட்டுச் செட்டாய் வாழ்க்கை நடத்துபவர்கள் கையில் எப்போதும் ஒரு தொகை இருந்து கொண்டிருக்கும். ஆக எது நிறைவான வாழ்க்கை? அளவாக செலவிட்டு, கையில் ஒரு சேமிப்பு வைத்திருப்பவரின் வாழ்க்கையே நிறைவான வாழ்க்கை. நிறைவான வாழ்க்கை வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? சேமிப்பதை மனதில் கொண்டு, பழக்கத்தில் நடைமுறைப் படுத்த வேண்டும். தேனீக்கள் பூவிற்குப் பூ பறந்து சென்று தேனை எடுத்து தேனடையில் சேமிக்கின்றன. எறும்புகள் ஊர்ந்து ஊர்ந்து சென்று மழைக்காலத்திற்காக அதன் உணவை சேமிக்கின்றன. தென்னை மரம் தானுண்ட நீரை மனிதர்களுக்குத் தருவதற்காக இளநீராக மாற்றி தலையிலே சேமிக்கின்றன. இப்படியாக எறும்பு, தேனி போன்றவைகளே சேமிக்க முற்படும் போது நீங்களும் சேமிக்கத் தயாராகலாமே! இன்று நேற்றல்ல, சங்க காலத்திலேயே சேமிப்பைப் பற்றி ஔவை மூதாட்டியார் கூறி இருக்கிறார். சேமிக்காமல் வரவுக்கு மிஞ்சி செலவு செய்பவர்கள் வாழ்க்கையில் எத்தகைய இன்னல்களைச் சந்திக்க நேரும் என்பதை அழகான தமிழ் பாடல் மூலம் விளக்கி இருக்கிறார்.
“ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் இழந்து மதிகெட்டுப் போனதிசை எல்லோர்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.” என்கிறார். இதோ : அமெரிக்கத் தொழில் அதிபர் ‘ஜான்முர்ரே’ பற்றிக் கேள்விப்பட்ட இருவர், தங்களது சேவை நிறுவனத்திற்காக பண உதவி வேண்டி ஒரு நல்ல தொகையை நன்கொடையாகப் பெற விரும்பி அவரைப் பார்க்கச் சென்றனர். வரவேற்பு அறையில் அவரது வருகைக்காகக் காத்து உட்கார்ந்திருந்தனர். ஜான்முர்ரே வந்தார். வந்ததும் அறையில் டேபிள் மேல் ஏற்றி வைக்கப்பட்டிருந்த இரண்டு மெழுகுவர்த்திகளைப் பார்த்தார். “எதற்கு இரண்டு? ஒரு மெழுகுவர்த்தி போதுமே” என்று சொல்லியபடியே ஒரு மெழுகுவர்த்தியை அணைத்து விட்டார். வந்து இருவரும் இவ்வளவு சிக்கனமாக இருக்கிறார். இவர் எங்கே பண உதவி செய்யப் போகிறார் என்று மனதிற்குள் நினைத்தவராய் அமர்ந்திருக்க, “சரி, நீங்கள் இருவரும் என்ன விஷயமாய் வந்தீர்கள்?” என்று முர்ரே வினவ, இருவரும் நம்பிக்கை அற்ற குரலில் தாங்கள் வந்த விஷயத்தைக் கூறினார்கள். கேட்ட ஜான்முர்ரே ஒரு பெரிய தொகைக்கான செக்கைக் கொடுக்க இருவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். வாய்விட்டுக் கேட்டும் விட்டார்கள். “ஸார் நீங்கள் வந்ததும் ஒரு மெழுகுவர்த்தியை அணைத்ததைப் பார்த்தோம். இவ்வளவு சிக்கனமாய் இருப்பவர் எங்கே நமக்குப் பணம் கொடுக்கப் போகிறார் என்று நினைத்தோம் என்று கூறி அதற்கு முர்ரே “நான் இவ்வாறு சிக்கனமாய் இருப்பதால் தான் இந்தத் தொகையை சேமித்து உங்களுக்குத் தர முடிந்தது” என்றார். பண சேமிப்பால் என்னென்ன நன்மைகள்? - உங்களுக்குத் தேவைப்படும் நேரம் அடுத்தவரைத் தேடாமல் உங்கள் சேமிப்பு நிதியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். - யாரையும் கேட்டுக் கொண்டிருக்காமல் விரும்பிய நாடுகளுக்கு விரும்பிய நேரத்தில் செல்லலாம். - உங்கள் மன திருப்திக்காக தர்ம காரியங்கள் சிலவற்றை நீங்கள் நினைத்தபடி செய்யலாம். - திடீர் உடல் ஆரோக்கியக் குறைவு, விபத்துக்கள் போன்றவற்றின் போது சேமிப்பே உங்களுக்குக் கை கொடுக்கும். - குழந்தைகள் படிப்பு, வீடு வாகனம் வாங்குதல் போன்றவற்றிற்கு நம் சேமிப்பு நிதியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறாக பணசேமிப்பு நமக்கு எந்நாளும் தேவையின் போது கைகொடுப்பதைப் போல வேறு சில கை கொடுக்கும் சேமிப்புகளும் உண்டு. அதாவது நேர சேமிப்பு, உடல் சக்தி (எனர்ஜி) சேமிப்பு. ‘நேர சேமிப்பு’ என்பது நேரத்தை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்தி, அனாவசியமாக நாம் வீணாக்கும் நேரத்தை சேமித்து ஒரு ஆக்கப்பூர்வமான விஷயத்திற்குப் பயன்படுத்துவதே. சிலரைப் பாருங்கள். எந்த நேரமும் வேலை, வேலை என்று வேலை செய்து கொண்டிருப்பார்கள். உழைப்பு என்பது மிகவும் அவசியம் என்றாலும் நம் மன ஆரோக்கியத்திற்காக சிலவற்றிற்கு நேரம் ஒதுக்கி அதைப் பயனுள்ள வகையில் செலவிட்டால் வாழ்க்கை அலுப்புத் தட்டாமல் இருக்கும். சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் - அது இதயத்தின் இசை! சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் - அது சக்தியின் பிறப்பிடம்! விளையாட நேரம் ஒதுக்குங்கள்! - அது இளமையின் ரகசியம்! படிக்க நேரம் ஒதுக்குங்கள் - அது அறிவின் ஊற்று! நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் - அது மகிழ்ச்சிக்கு ஒளி! உழைக்க நேரம் ஒதுக்குங்கள் - அது வெற்றியின் விலை! என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் நேரம் ஒதுக்குவது எப்படி? பல்வேறு வேலைகளுக்கு இடையே நீங்கள் நேரத்தை சற்று சேமித்தால் மட்டுமே இவ்வாறு நேரத்தை ஒதுக்க முடியும். எத்தனையோ ஆக்கப்பூர்வமான வேலைகளைத் திறம்பட முடிக்கவல்ல திறமையுள்ள உங்களில் பலர், தொலைக்காட்சி, திரைப்படம் என்று பொழுதுபோக்கு அம்சங்களில் முழுதாக மூன்று நான்கு மணி நேரத்தை அன்றாடம் தொலைக்கிறீர்கள். இதில் இன்னுமொரு வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், அடுத்த அரை மணி நேரம் உறவினர் நண்பர்களிடன் ஃபோன் போட்டாவது அதைப் பற்றி விவாதிப்பது. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், தொலைக்காட்சித் தொடரைப் பற்றி, தொலைபேசியில் அதிக நேரம் பேசும் போது உங்கள் நேரத்தை மட்டும் அல்ல, நீங்கள் உழைத்து சேமித்த பணத்தையும் கணிசமாக இழக்கிறீர்கள்! உங்கள் அன்றாட அலுவல்களிடையே அனாவசியமாக போக்கும் பத்து, பத்து நிமிடங்களாக ஆறு முறை சேமித்தால் கூடப் போதும், கணிசமாக ஒரு மணி நேரம் கிடைத்துவிடும். அதில் உங்கள் உடலினை உறுதி செய்ய யோகாசனம் அல்லது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மனிதனை வளப்படுத்த தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். அடுத்து, உங்கள் உடல் சக்தியை (எனர்ஜியை) சேமித்து உங்கள் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தலாம். உங்களில் சிலர் நல்ல குறிக்கோளுடன் இருக்கிறீர்கள். அதற்கேற்ற இயற்கையில் அமைந்த திறமையும் இருக்கிறது. நடைமுறைப்படுத்த ஆற்றலும் இருக்கிறது. ஆனால் நடைமுறைப் படுத்தியதில் ஒரு குறிப்பிட்ட வெற்றி இலக்கை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்களால் சாதிக்க முடியவில்லை. ஏன்? உங்கள் ஆற்றல் முழுமையாக ஒரே இடத்தில் செலவிடப்படவில்லை. பல்வேறு தேவையற்ற பேச்சுக்கள், விவாதங்கள், கேளிக்கைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் உங்கள் உடலின் சக்தியானது அதாவது எனர்ஜி செலவிடப்பட்டதால், அவசியமான ஒன்றிற்குப் பயன்படுத்த முடியாமல் போகிறது. இவற்றிலெல்லாம் உங்கள் எனர்ஜியை அனாவசியமாக செலவிடாமல் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக சேமித்துப் பாருங்கள். உங்கள் ஆற்றலுக்குப் புது சக்தி கிடைக்கும். சோதனைகள் விரைவில் சாதனைகளாக அங்கீகரிக்கப்படும். அருட்தந்தை வேதாந்திரி மகரிஷி அவர்கள் மனவளக் கலை பயிற்சி மூலமாக, நம் உடலில் ஜீவகாந்த சக்தியை அதிகம் செலவு செய்யாமல் சேமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். ஆரோக்கியமாக உடல்பலமும் மனோபலமும் பெற்று நீண்ட நாள் உயிர்வாழ ஜீவகாந்த சக்திப் பெருக்கத்தையும், சேமித்துக் கொள்ளும் வழிமுறைகளையும் காயகல்பப் பயிற்சி, தீபப்பயிற்சி, கண்ணாடிப் பயிற்சியின் மூலமாக நமக்கு சொல்லித் தருகிறார். அடுத்து ஒவ்வொரு மனிதனும் சேமிக்க வேண்டிய ஒரு முக்கியமான சேமிப்பு ஒன்று இருக்கிறது. அது இப்பிறவியில் மட்டுமின்றி மறுபிறவிக்கும் பயன்படுவதோடு நம் தலைமுறைகள் நிம்மதியாக வாழ வழி செய்கிறது. அது என்ன தெரியுமா? “புண்ணியத்தை சேமித்தல்” புண்ணியத்தை சேமிப்பது எப்படி? நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆண்டவன் இருக்கிறான் என்கிற உணர்வோடு, பிற உயிரையும் தன் உயிர் போல நினைத்து, பிறரையும் தன்னைப் போல மதித்து, கைம்மாறு கருதாமல் வாழும் போது ஆண்டவன் சன்னதி எனும் வங்கியில் புண்ணியம் நம் கணக்கில் நம்மை அறியாமல் டெபாஸிட் ஆகிறது. புண்ணியத்தை சேமிக்க சேமிக்க நம் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வளம் மிக்கதாகிறது. உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறீர்களா? ஒரு உன்னதமான உயர்வை உங்கள் வாழ்நாளில் எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருக்கிறீர்களா? பத்தோடு பதினொன்றாய் வாழாமல் பத்து பேர் மதித்து வரவேற்கும் ஒரு மாமனிதராய் உயர எண்ணம் கொண்டிருக்கிறீர்களா? அப்போது இன்றே, இப்போதே சேமிக்க ஆரம்பியுங்கள். சேமிக்க நினைக்கும் போதே கையில் கணிசமாக சேமிக்க உடனே பணம் கிடைக்காத பட்சத்தில், உங்கள் சேமிப்பை முதலில் நேர சேமிப்பிலிருந்து துவக்குங்கள். எல்லோருக்கும் உள்ள நாள் ஒன்றிற்கு 24 மணி நேரமே உங்களுக்கும் தரப்பட்டிருக்கிறது. நேரத்தை அனாவசியமாக செலவு பண்ணமாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டு, நேர சேமிப்பில் உங்களை ஈடுபடுத்தி, கணிசமாக நேரத்தை சேமித்து கிடைத்த நேரத்தில் யோகாசனம், தியானம் என உங்களை நன்னெறிப்படுத்தி, உடல் சக்தியை எனர்ஜியை சேமித்து சக்தியைப் பெருக்கி ஆக்கப்பூர்வமாக சிந்தித்து வருமானத்தில் ஒரு பத்து சதவீதத்தைப் பண சேமிப்பாக ஒதுக்கி சேமித்த பணத்தில் ஏழை எளியோருக்காக உதவி, புண்ணியத்தைப் பெருக்கி புண்ணிய சேமிப்பில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். புண்ணிய சேமிப்பில் ‘ஆண்டவன் அருள்’ எனும் வட்டி அளவிட முடியாதது. பிறகென்ன முடிசூடா மன்னர் நீங்கள் தான் எனவே... சேமிக்க வேண்டுமய்யா! |