கி.ரா.கோபாலன்

     தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு கி.ரா. கோபாலன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல; நல்ல கவிஞருமாவார். சித்திரக் கலையிலும் மிகுந்த அனுபவம் உள்ளவர். "காட்டூர் கண்ணன்" "கோணல்" "துதிக்கையார்" முதலிய புனைபெயர்களில் நீண்ட காலமாகக் கல்கி பத்திரிகையில் எத்தனையோ கவிதைகளையும், ஹாஸ்யக் கட்டுரைகளையும், அரசியல் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவருடைய எண்ணற்ற சிறுகதைகளையும் ராணி மாதவி, ராஜாளி மடம், அபலை அஞ்சுகம் முதலிய அருமையான பெரிய நாவல்களையும் வாசகர்கள் படித்து மகிழ்ந்திருப்பார்கள். "மாலவல்லியின் தியாகம்" என்ற சரித்திரத் தொடர்கதை கல்கியில் வெளிவந்த போது படித்துப் பாராட்டாதவர்கள் இல்லை. பின்னால் இந்தக் கதையில் அவர் எழுதி வைத்திருக்கும் திடுக்கிடும் சம்பவத்தைப் போலவே திரு. கி.ரா. கோபாலன் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர தினத்தன்று அனைவரையும் திடுக்கிடும்படி செய்துவிட்டு மறைந்துவிட்டார். அவருடைய இளம் மனைவியையும் எட்டு வயதிலிருந்து மூன்று மாதக் குழந்தை வரையில் இருக்கும் உலகம் தெரியாத ஐந்து குழந்தைகளையும் தனியே விட்டு விட்டு சென்ற அவரின் மறைவு வேதனை அளிப்பதாகும். அவருடைய மறைவு தமிழ் நாட்டுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் மிகப் பெரிய நஷ்டமாகும்.

புதினங்கள்