![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் |
தமிழ் திரை உலகம் (www.tamilthiraiulagam.com) - தற்போதைய வெளியீடு :
எண்ணி இருந்தது ஈடேற - அந்த 7 நாட்கள் (1981) |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காடை - (Quail) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : நூல்கோல் - Knol Khol |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 5 |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 3 - 'நான் பூதுகன் பூதுகன் அந்தப் பெரு மழையில் அதிகம் நனையாமல் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தானே தவிர, அந்தச் சோலையை அடைவதற்கு முன்பே முழுவதும் நனைந்து விட்டானென்றே சொல்ல வேண்டும். அந்தச் சோலைக்குள் செல்லும் வாசல் ஸ்தூபங்களோடு கூடிய சிறிய மண்டபமாகக் காணப்பட்டது. அலங்காரமாகக் கட்டப்பட்டிருந்த அந்த ஸ்தூப வளைவில் அதிக இடமில்லா விட்டாலும் அந்தப் பெரு மழையில் அதிகமாக நனையாமல் நிற்பதற்கு வேண்டிய இடவசதி இருந்தது. புகார் நகரின் எல்லைக்கு வெளியே கடற்கரை ஓரமாக இருக்கும் அந்தப் பூஞ்சோலையைச் சம்பாதி வனம் என்று சொல்லுவார்கள். அந்தப் பூஞ்சோலையினிடையே ஒரு பௌத்த விஹரம் இருந்தது. அந்தப் பௌத்த விஹாரத்தில் அனேக பிக்ஷுக்களும், பிக்ஷுணிகளும் வசித்து வந்தனர் என்பதெல்லாம் பூதுகனுக்குத் தெரியும். எந்நாளும் அவன் அங்கே வருவதற்குப் பிரியப்பட்டதில்லை. ஆனால் அவன் அன்று எதிர்பாராத விதமாக அங்கு வர நேர்ந்ததும் ஏதோ நன்மைக்குத்தான் என்று அவன் மனத்துக்குள் எண்ணினான். மழை சிறிது நின்றது. மழை பூரணமாக நிற்காவிட்டாலும் பிசுபிசுவென்று பொழிந்து கொண்டிருந்தது. மாலை மறைந்து இரவு நெருங்கியது. முன்னிலவு காலமாயிருப்பினும் வானம் முழுவதும் யானைக் கூட்டம் போலக் கருமேகக் குழப்பம் தான் சூழ்ந்து நின்றது. தூரத்தில் தெரியும் கலங்கரை விளக்கின் பிரகாசமான ஒளி கரிய இருளிடையே வானத்தை எட்டிப் பிடித்து அன்று சந்திரனுக்குப் பதிலாகத் தானே ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது போல் காட்சியளித்தது. சம்பாதி வனத்திலுள்ள புத்த விஹாரம் தீப ஒளி செய்யப்பட்டுத் திகழ்ந்தது போல் காட்சியளித்தது. கடலின் அலையோசையினிடையேயும், மழையோசையினிடையேயும், அதர்மத்தின் பெருங் கூச்சலினிடையேயும் தர்மத்தின் இனிய குரல் எழுவது போல் புத்த விஹாரத்திலிருந்து எழுந்த மணியோசை கேட்டது. இது பிரார்த்தனை நேரம் என்பதை மணியோசை மூலமாக அறிந்த பூதுகனுக்கு அந்தப் புத்த விஹாரத்துக்குள் சென்று பார்த்து விட வேண்டுமென்று ஆவல் எழுந்தது. அவன் அந்தச் சோலையின் மத்தியிலே இருந்த புத்த விஹாரத்தை நோக்கிச் சற்று வேகமாகவே நடந்தான். மனத்தைக் கவரும் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த பெரிய கருங்கல் கட்டடமாக அந்தப் புத்த விஹாரம் காட்சியளித்தது. பூதுகன் அந்த விஹாரத்தினுள் நுழைந்த போது முக்கியமான இடங்களில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்களினால் சிறிது ஒளியும் மற்ற இடங்களில் திட்டுத் திட்டாக இருளும் சூழ்ந்திருந்தன. அது மெய்ஞ்ஞான ஒளியை அடைந்த உள்ளத்தின் ஓரங்களிலும் உலக மாயையின் இருள் ஒதுங்கி நிற்பது போலத்தான் இருந்தது. உள்ளே சபா மண்டபம் போன்ற முற்றம். அவைகளைச் சுற்றிலும் நீண்ட தாழ்வாரம். அந்தச் சபா முற்றத்தில் பிரதானமான இடமாக உயரமாக அமைக்கப்பட்ட மேடை. அந்த மேடையின் மேல் ஏறுவதற்கு நான்கு படிகள். புத்த சங்கத்தின் முக்கிய நிவர்த்தி மார்க்கக் கொள்கைகளான துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் இவைகளைக் கடந்து நிர்வாண நிலையை யடையும் நிலையை எடுத்துக் காட்டுவது போல அந்தப்படிகளில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அந்த மேடை மேலே தாமரை மலரில் அமர்ந்திருந்த புத்த பிரானின் பொற்படிவம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படிவத்துக்குப் பின்னால் மிகப் பெரிய தருமச் சக்கரம் ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பொற்படிவத்தின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி விளக்குகளின் ஒளி அந்த இடத்தையே துயர இருள் ஒட்டாத சுவர்க்கமாகக் காட்டியது. அந்தச் சபையைச் சுற்றிலும் சதுரமாக அமைக்கப்பட்ட கூடங்களின் தென்புற அறை வாசலிலிருந்து புத்த பிக்ஷுக்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து வரிசையாக நின்றனர். வடபுறத்தில் இருந்த அறையின் வாசல் வழியாகப் புத்த பிக்ஷுணிகள் வந்து வரிசையாக நின்றனர். தலையை முண்டிதம் செய்து கொண்டு உடல் முழுதும் மறையும் வண்ணம் சீவா ஆடை அணிந்திருக்கும் புத்த பிக்ஷுக்கள் கையில் மலர்க் கொத்துக்களோடு தலை வணங்கி நின்றனர். நீண்ட தடித்த கேசங்கள், முடியப்படாமல் பிரிபிரியாகத் தோளில் தொங்க, சீவா ஆடையால் தங்கள் உடல் அழகுகளையும் வெளிக்குத் தெரியாமல் மிக்க அடக்கமாகப் போர்த்தி மறைத்திருக்கும் புத்த பிக்ஷுணிகள் கையில் மலர்க் கொத்துக்களை ஏந்திச் சிரம் தாழ்த்தி நின்றனர். பிக்ஷுணிகளைக் காட்டிலும் பிக்ஷுக்களே அதிகமாக இருந்தனர். அவ்விடம் இருந்த பிக்ஷுக்கள் இருபத்தைந்திலிருந்து ஏழுபத்தைந்து வயது வரையில் மதிக்கக் கூடியவர்களாயிருந்தனர். பிக்ஷுணிகளிலோ இருபது வயதிலிருந்து நாற்பது அல்லது ஐம்பது வயது வரையில் உள்ளவர்களாக இருந்தனர். அந்த விஹாரத்துக்குள் வந்த பூதுகன் தாழ்வாரத்தில் இருள் நிறைந்த இடத்திலுள்ள ஒரு தூணுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு என்ன நடக்கிறது என்பதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் அவன் பகிரங்கமாகவே போய் நிற்கலாம். எவரும் தடை சொல்ல மாட்டார்கள். ஆனால் அன்னியனான தன்னைக் கண்டால் அவர்கள் தங்களுடைய செய்கைகளை மறைத்துக் கொள்ளக் கூடும் என்று நினைத்தான். அவன் மறைந்து நின்று கொண்டிருந்த அந்த இடம் ஒவ்வொன்றையும் தெளிவாகப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் வசதியாக இருந்தது. வரிசையாக நின்று கொண்டிருந்த ஒவ்வொரு பிக்ஷுவினுடைய முகத்தையும் பிக்ஷுணிகளின் முகத்தையும் அவன் நன்றாகப் பார்க்க முடிந்தது. அந்தப் பிக்ஷுக்களிலும், பிக்ஷுணிகளிலும் யௌவன வயதுடையவர்களாய் இருப்பவர்களைக் கண்டு அவன் மனத்தில் இரக்கமும் பச்சாத்தாபமும் ஏற்பட்டன. இந்த வயதில் சீவா ஆடையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உலகில் வைராக்கியத்தையும் வெறுப்பையும் உண்டாக்கிய விஷயம் எதுவாக இருக்குமென்று அவனுக்குத் தெரியவில்லை. இளம் வயதிலேயே சீவா ஆடையைப் போர்த்தித் திரியும் அவர்கள் மூடத்தனமான கொள்கையையுடைய பக்தர்களாகவோ அல்லது சுயநலம் கருதி வேஷமிடுகிறவர்களாகவோ தான் இருக்க வேண்டுமென்று அவன் கருதினான். 'உலகின் துக்கத்தைத் துடைக்கிறேன்' என்று சொல்லித் தானே வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டு துக்கத்தில் உழலுவதைக் கண்ட அவனுக்கு நகைப்பாகத்தான் இருந்தது. ஒருவன் உண்மையாகத் துறவறத்தை ஏற்றுக் கொண்டாலும் உலகில் அனுபவிக்க வேண்டிய சுகங்களைப் பலியிட்டுக் கொண்டு அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான் என்பது தான் அவனுடைய எண்ணம். புத்த விஹாரத்திலிருந்து 'டாண்! டாண்!' என்று அன்பு நாதத்தை எழுப்பிக் கொண்டிருந்த மதுரமான மணியோசை இன்னமும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தப் பிக்ஷுக்களின் குழுவில் மிகவும் வயதானவரும் முன் வரிசையில் நிற்பவருமான ஒருவர்,
'நமோ தஸ்ய பகவதோ அரஹதோ ஸம்மாஸம் புத்தஸ்ய' என்று சொன்னார். அப் பிக்ஷுவைத் தொடர்ந்து மற்றப் பிக்ஷுக்களும், பிக்ஷுணிகளும்
'புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி' என்றனர். வயதில் நிறைந்த பிக்ஷு முதலில் சொல்லிய சுலோகத்தை மறுமுறையும் சொன்னார்.
'துதியம்பி புத்தம் சரணம் கச்சாமி துதியம்பி தம்மம் சரணம் கச்சாமி துதியம்பி சங்கம் சரணம் கச்சாமி' என்றனர். மறுபடியும் வயோதிகரான பிக்ஷு தம் சுலோகத்தைச் சொன்னார்.
'ததியம்பு புத்தம் சரணம் கச்சாமி ததியம்பு தம்மம் சரணம் கச்சாமி ததியம்பு சங்கம் சரணம் கச்சாமி' என்றனர். முதலில் வயதில் மூத்தவராக இருக்கும் பிக்ஷு நான்கு படிகளையும் கடந்து மேடை மீது ஏறித் தம் கையில் ஏந்தி இருந்த மலர்க் கொத்தைப் புத்தர் சிலையின் பாதார விந்தங்களில் வைத்து வணங்கினார். அவருக்குப் பின்னால் ஒவ்வொருவராக மேடை மீது ஏறி மலரைப் புத்தர் பெருமானின் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டு வந்தனர். எல்லாப் பிக்ஷுக்களும் தங்கள் மலரைப் பகவானின் திருவடியில் சமர்ப்பித்த பிறகு பிக்ஷுணிகள் வரிசையாகச் சென்று தங்கள் கையிலுள்ள மலர்களைப் பகவானுக்கு அர்ப்பணித்தனர். கடைசியில் வயதில் சிறியவளாக இருந்த ஒரு பிக்ஷுணி தன் கையிலுள்ள மலரைப் பகவருக்குச் சமர்ப்பணம் செய்வதற்காக மெதுவாகச் சென்று மேடையின் முதல் படியில் காலை வைத்த போது, "பகவதி, நில்..." என்ற குரல் கேட்டுச் சட்டென்று நின்று விட்டாள். திடீரென்று ஏற்பட்ட இந்தக் குரலைக் கேட்டுப் பிக்ஷுக்கள் கலவரம் அடைந்தவர்களாக நின்றனர். அந்தப் பிக்ஷுக்களினிடையே இருந்த ஒருவர், "இவள் ததாகதருக்கு மலர் சமர்ப்பிக்க அருகதையற்றவள், சங்கத்தில் இருக்கத் தகுதியற்றவள்..." என்றார். வயதில் முதிர்ந்தவராக இருந்த துறவி முன்னால் வந்து நின்று கையைத் தூக்கி வேதனை நிறைந்த குரலில் 'சாந்தி, சாந்தி' என்று இரு தடவைகள் சொல்லி விட்டுச் சில வினாடி நேரம் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் இருப்பவர் போல் இருந்தார். பிறகு கண்களை விழித்துத் துயரம் நிறைந்த குரலில், "இது பிரார்த்தனை நேரம். இந்தச் சமயத்தில் தியானத்தைத் தவிர வேறு எதையும் புத்தர் பெருமான் விரும்ப மாட்டார். பிறர் குறையைக் காண்பது எளிது. தன் குறைகளை முதலில் அறிந்து கொள்கிறவனே பிக்ஷு என்ற பெயரைச் சூட்டிக் கொள்ள அருகதை உள்ளவன். கொலைக் குற்றம் கூடச் செய்திருக்கலாம். ஆனால் புத்தர் பெருமானின் பொன்னடிகளில் மலர்களை வைத்து வணங்க அவர்களை அருகதையற்றவர்கள் என்று யாரும் தடுக்க முடியாது. அன்புருவமும் குற்றம் செய்தவர்களை மறுபடியும் மன்னிக்கும் தயாள குணமும் பொருந்திய ததாகதருக்கு இது உவப்பாகாது. பகவதி ஏதேனும் குற்றங்கள் இழைத்திருக்கலாம். அதை விசாரணை செய்ய வேண்டியது சங்கத்தின் விதி. கணவனைக் கொன்றவளைக் கூடப் பௌத்த சங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. துக்கமடைந்தோரையும், அனாதையானவர்களையும், தீய ஒழுக்கத்தினால் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களையும் ஏற்று அன்பு, அடக்கம், அஹிம்சை இவற்றின் மூலமாக அவர்களை நல்வழியில் புகுத்துவதற்காகத் தான் சங்கம் ஏற்பட்டிருக்கிறது. இதுதான் புத்தர் பெருமானின் முக்கிய விருப்பம். துக்கம் அடைந்தவர்களின் பாதுகாப்பாளர் அவர். துயர மடைந்தோரை மேலும் துயரமடையச் செய்வதற்காக அந்தக் கருணாமூர்த்தி இந்த உலகுக்கு வரவில்லை. அவர் அவதரித்தது இந்த உலகத்தின் துயரைத் துடைப்பதற்காகத்தான். பிக்ஷு என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து கொள்ள வேணும். ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும், ஊழலைக் களைய வேண்டும். நாளைய மறுதினம் பௌர்ணமி - பாடி மோஹ்ஹம் - அன்று பகவதியின் குற்றங்களை விசாரிக்கலாம். இன்று பகவனுக்கு மலர் அர்ப்பணிப்பதைத் தடுக்கும் பாவத்தைப் பிக்ஷுக்களாகிய நாம் ஏற்றுக் கொள்ள வேண்டாம்" என்றார். அமராவதி புத்த விஹாரத்தில் பல வருஷ காலம் பிக்ஷுவாய் இருந்து பயிற்சி பெற்றிருந்த அக்கமகாதேரர் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள அந்தப் பௌத்த சங்கத்துக்கு அப்பொழுது தலைவராக இருந்தார். சங்கத்தில் தேரராவதென்றால் வயதிலும் படிப்பிலும் அனுபவத்திலும் மிகுந்தவராக இருக்க வேண்டும். அக்கமகாதேரர் அசோகனைப் பௌத்த மதத்தில் பற்றுக் கொள்ள வைத்த உபகுப்தர் என்னும் பௌத்த மகானின் வழியில் வந்தவர். நாலந்தா கல்லூரியில் படித்த பேரறிவாளர். அவருடைய அன்பு மார்க்கத்தாலும், ஒழுக்க சீலத்தாலும் பூம்புகார் நகரத்தில் மாத்திரமல்ல, தமிழகமெங்குமே அவர் பெரிய தவசிரேஷ்டராகப் போற்றப்பட்டார். அக்கமகாதேரர் தம் கருணை நிறைந்த பார்வையை அந்தப் பிக்ஷுணியிடம் செலுத்தி, 'பகவனுக்கு மலரைச் சமர்ப்பிக்கலாம்' என்பது போல் மெதுவாகத் தலையசைத்தார். அந்த இளம் பிக்ஷுணி மலர்களைப் பெருமானின் திருவடிகளில் சமர்ப்பித்த பின் அமைதி நிறைந்த இரவில் கடலோசை கேட்பது போல் 'புத்தம் சரணம் கச்சாமி - தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி' என்ற கோஷங்கள் எழுந்தன. மணியோசையும் ஓய்ந்தது. பிக்ஷுக்களும், பிக்ஷுணிகளும் அமைதியாகக் கலைந்தனர். இருளிடையே தூண் மறைவில் நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பூதுகனுக்கு அங்கு நடந்தவைகள் எதுவுமே ஆச்சரியத்தையோ, வியப்பையோ கொடுக்கவில்லை. ஆனால் அவன் மனத்தில் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் உண்டாக்கிய விஷயம் ஒன்று தான். அந்தத் துறவிகளின் கூட்டத்தில் கடைசியில் நின்ற ஒருவருடைய முகம் அவனுக்கு யாரையோ நினைவுப் படுத்தியதுதான் அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இவன் கவனத்துக்கு உள்ளான அந்தப் பிக்ஷு மற்றப் பிக்ஷுக்களைப் போல் பிரார்த்தனைக்குப் பின் அந்த இடத்தை விட்டுச் செல்லாது கரங்களைக் குவித்த வண்ணம், கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனையில் லயித்துப் போயிருந்தார். மற்றவர்களெல்லாம் சென்ற பிறகு அந்தப் பிக்ஷு தனியாக நின்று கொண்டிருப்பது அவனுக்கு ஒரு வாய்ப்பாகவும் பட்டது. அவன் சிறிதும் அச்சமோ தயக்கமோ இன்றிச் சட்டென்று அந்தத் துறவியை நெருங்கி அவர் தோளைத் தொட்டு அசைத்தான். தியானத்திலிருந்த பிக்ஷு கண்களைத் திறந்து எதிரில் நின்றவனைப் பார்த்ததும் பேய் அறைந்தவர் போல் ஆகி விட்டார். ஆனால் கண நேரத்தில் அவர் மனத்தில் திடமும் தெளிவும் ஏற்பட்டு விட்டதை முகத்தின் ஒரு ஒளி காட்டியது. "பூதுகனா...?" என்றார் சிறிது அச்சத்தோடும் ஆச்சர்யத்தோடும். |