உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
நவநீத நடனார் இயற்றிய நவநீதப் பாட்டியல் நவநீதப் பாட்டியல் என்பது ஒரு தமிழ்ப் பாட்டியல் நூலாகும். பாட்டியல் என்பது தமிழில் உள்ள பிரபந்தங்களின் இலக்கணம் பற்றிக் கூறுவது. நவநீதப் பாட்டியல் தமிழில் அமந்த பல்வேறு பிரபந்தங்களைப் பற்றிக் கூறுகிறது. இந்நூல் மூன்று உறுப்புக்களைக் கொண்டு அமைந்துள்ளது. இவை, பொருத்தவியல், செய்யுண் மொழியியல், பொது மொழியியல் என்பனவாகும். இந்நூல், கலித்துறை என்னும் பாவகையால் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் இதனைக் கலித்துறைப் பாட்டியல் என்னும் பெயராலும் குறிப்பிடுவது உண்டு. இந் நூலில் 108 கலித்துறைப் பாடல்கள் காணப்படுகின்றன. இந் நூலை எழுதியவர் நவநீத நடனார் என்பவர் ஆவார். அகத்தியர் எழுதிய பாட்டியல் நூலொன்றை அடியொற்றியே தாம் இந் நூலை எழுதியதாக நவநீத நடனார் அதன் சிறப்புப் பாயிரத்தில் கூறியுள்ளார். இந் நூலின் படிகளை உ. வே சாமிநாத ஐயர் அவர்கள் சேகரித்தார். நூல் 1. பாயிரம் திருமால் வாழ்த்து கார் கொண்ட மேனிக் கறை கொண்ட நேமிக் கமலக் கண்ணன் பார் கொண்ட பாதத்தை ஏத்திப் பகருவன் பாட்டியலைத் தேர் கொண்ட அல்குல் துடி கொண்ட சிற்றிடைச் செந்துவர் வாய் வார் கொண்ட பூண்முலை வேல் கொண்ட வாள் விழி வாணுதலே. 1.1 - 1 அவை அடக்கம் சகத்தினில் முத்தமிழ் தன்னை உண்டாக்கி முச்சங்கத்திலும் அகத்திய மாமுனி ஆக்கிய பாட்டியல் ஆன பௌவம் நிகழ்த்துகை மின்மினி ஆதித்தனுக்கு நிகர் ஒக்கும் என்று உகப்பது போலும் அன்றே புலவோர் முன் உரைப்பதுவே. 1.2 - 2 சிறப்புப் பாயிரம் ஈட்டிய எண்எண் கலையோடு இயல் இசை நாடகமும் காட்டிய போதக் குறுமுனி ஆதி கலைஞர் கண்ட பாட்டியல் ஆனவை எல்லாம் தொகுத்துப் பயன்படவே நாட்டிய வேதத்தவன் நவநீதநடன் என்பரே. 1.3 - 3 2. பொருத்த இயல் பத்து வகை முதல் மொழி சீர்மை மங்கலம், சொல், எழுத்து, எண்ணிய தானம், வரும் இருபால் பொங்கிய உண்டி வருணம் வகுத்திடு நாள் பொருத்தம் தங்கிய நால் கதி எண் கணம் என்று தமிழ் தெரிந்தோர் இங்கு இவை பத்தும் முதல் மொழியாம் என்று இயம்புவரே. 2.1 - 4 மங்கலச் சொற்கள் திரு மணி பூ திங்கள் ஆரணம் சொல் சீர் எழுத்துப் பொன் தேர் வருபுனல் கார் புயல் மாநிலம் கங்கை மலை உலகம் பரி கடல் யானை பரிதி அமுதம் புகழ் முதல் சீர்க்கு உரிய நல் மங்கலச் சொல் என்று நாவலர் ஓதினரே. 2.2 - 5 சொல் - பொருத்தம் கங்கையும் மானும் கடுக்கையும் திங்களும் காப்புடைய துங்க முகில் நிற வண்ணனும் வேலையில் தொல் கதிரும் ஐங்கரத்து அற்புதன் தன்னையும் ஆறுமுகத்தனையும் பங்கயத்தோனையும் கூறுக பாவில் பரிவுடனே. 2.3 - 6 சொல் - பண்புகள் முதல் சீரில் நீக்க சொல் பொருள் தெரியாமை சிறப்ப்¢ன்றி நிற்றல் பொருள் பலவாய் வருமொழி ஆதல் வகைஉளி சேர்தல் வரும் சீருடன் முரிதரும் ஈறுடைத்தாதல் எடுத்த அச்சீர் செய்யுமேல் சரிவளையாய் அவை தாம் அமையா என்று சாற்றுவரே. 2.4 - 7 முதல்சீர்எழுத்து எண்ணின் 3,5,7,9 வரின் பொருந்தும் மூன்று ஐந்து ஏழு ஒன்பது எழுத்தாம் வியநிலையாய் முதல்சீர் தோன்றிடின் அன்றி இரண்டுஈரிண்டு ஆறுஎட்டு எழுத்துத் தொன்நூல் சான்றவர் கொள்ளார் &சமநிலையாம் என்று தாழ்குழையை மான்தரு கோல மதர் விழி ஓட்டிய வாணுதலே. 2.5 - 8 தான வகை ஐந்து குறில் ஐந்தும் தன்நெடில் கூட்டி ஐ ஔ எ ஒ கொண்ட அடைவே முறைமையில் பாலன் குமரன் அரசன் மூப்பே மரணம் இறைவன்தன் பெயர்தான் பாலனாம் என எண்ணி வந்த நெறிமையில் மூப்பும் மரணமும் பாடிடல் நீக்குவரே. 2.6 - 9 பால் வகை மூன்று குற்றெழுத்து ஆடூஉ மகடூஉ நெடில் அல்ல என்று கொள்வர் மற்றெழுத்தாம் உயிர்மெய்க் குறில் ஆண் நெடில் அவ்வகையே ஒற்றெழுத்து ஆய்தம் அலி என்று பாட்டின் மன் ஓத ஒட்டார் பொன் தொடிச் சிற்றிடைப் போர்வேல் நயனப் புணர் முலையே. 2.7 - 10 உண்டிப் பெருத்தம் சாற்றும் தலைவன் இயல் பெயருக்குத் தகும் வகையே தோற்றும் வியன் வரில் ஆநந்தம் ஆகும் சொல்லா எழுத்தாம் ஏற்ற எழுத்து வரினும் இசைந்த இயல் பெயர்கே ஆற்றும் பொருத்தம் அனைத்தும் சமநிலையாம் என்பரே. 2.8 - 11 நஞ்செழுத்தும் இயலும் கூறும் அளபும் மகரக் குறுக்கமும் யரலவின் ஏறுமா ஓவும் யரலவ ஒற்றொடும் ஏழ் நெட்டெழுத்தும் வேறுள ஆய்தமும் நஞ்செழுத்தாகும் வெல் பாதி பத்தின் ஈறும் முதலும் இயலப் பெறா என்பர் ஏந்திழையே. 2.9 - 12 அமுத எழுத்தும் இயலும் அறிவோர அமுத எழுத்தாம் என்று அறைவர் தசாங்கத்து அயல் குறில் முதல் நான்கும் கசதநபமவக் குற்றளவும் உறுவன் ஆயின் உலகோர் புகழ் நன்மை எய்தும் என்பர் சிறுமுறுவல் செங்குமுதத் துவர்வாய் திருந்திழையே. 2.10 - 13 எழுத்தும் அதன் தேவதைகளும் விதியவன் முன்நான்கு உயிர்தரச் செய்ய விரிசடைமேல் நதியவன் நாரணன் சேய் இந்திரன் ஞாலம் சூழவரும் கதியவன் சேமன் தருமன் வருணன் கனகநிதிப் பதியவன் என்று இவர் மூஆறு உடம்பும் படைத்தனரே. 2.11 - 14 குல எழுத்தும் தேவதைகளும் காலையன் சந்திரன் இந்திரன் கண்டன காவலர்க்கு மாலையன் சேய் அரன் மாமறையோர்க்கு நிதி சாலையன் அந்தகன் கண்டன ஆகும் வணிகருக்கு வேலையன் கண்டன வேளாளருக்கு விலக்கல்லவே. 2.12 - 15 நாள் பொருத்தம் அகர முதல் நான்கும் கார்த்திகை மற்றவற்றின் அடைவே உகர முதல் ஐந்தும் பூராடமாம் என ஓதுவார் காண் ஒகர முதல் மூன்றும் ஓர் உத்தராடம் உயிர் மெய்யி ககர முதல் நான்கும் ஓணம் என்று ஓதுவர் கற்றவரே. 2.13 - 16 இதுவும் அது ஏனைக்கு உகரம் முதலிரண்டும் திருவாதிரையாம் ஆன அவற்றின் இடை ஒரு மூன்றும் புனர்பூசமுமாய் போனபின் நின்றன மூன்றெழுத்தும் பூசம் என்ப பொய்யா வானக் கருங்குழல் வம்பார் வனமுலை வாணுதலே. 2.14 - 17 இதுவும் அது ஏய்ந்த சகரம் முதல் நாலெழுத்தும் இரேவதியாம் ஆய்ந்த சுகரம் முதல் ஐந்தெழுத்தும் அசுபதியாம் பாய்ந்த சொகரம் முதல் மூன்றெழுத்தும் பரணி என்பர் வேய்ந்த ஞகர ஞொகர ஞா வான அவிட்டம் இனனே. 2.15 - 18 இதுவும் அது ஓதும் தகர உயிர்மெய் இரண்டேழு முன்றடைவே சோதி விசாகம் சதயமுமாம் மென் தொடர் நகரம் ஆதியில் ஆறும் அனுடம் அல்லாதன ஆறெழுத்தும் ஏதமில் கேட்டை பூரட்டாதியான இருவகையே. 2.16 - 19 இதுவும் அது சொல்லும் பகரத்துள் உத்தரநாள் முதல் முன்றும் பற்றிச் செல்லும் ஒருநான்கிரண்டாவது சென்ற பின் மவ்வருக்கம் புல்லும் மகம் இருமூன்றும் மூன்று ஆயில்யம் புயலும் அல்லும் பொருங்குழல் அல்லாதன பூரம் ஆயினவே. 2.17 20 இதுவும் அது யகரத்துள் யாவும் உத்திரட்டாதியாம் என்று அறைவர் இன்னும் பகர்வுற்ற மூலம் யூகார யோகாரத்தின் பாற்படுமால் வகரத்தொடு நான்கு ரோகிணி ஏனை மகயிரமாம் சிகரப் பணைமுலைச் சிற்றிடை பேரல்குல் தேமொழியே. 2.18 - 21 இதுவும் அது மொழிந்த அந்நாட்களை மூ ஒன்பதாக்கி அவற்றின் முன்னர் இழிந்தன ஒன்றும் மூன்றுஐந்து ஏழ்இரண்டு நாலாறுஎட்(டு)ஒன்பான் அழிந்தன அல்லன வட்டம் ராசி வைநாசிகமும் கழிந்தன நின்றன தாம் இயல் பாகக் கருதுவரே. 2.19 - 22 கதிப் பொருத்தம் வல்லினம் குற்றெழுத்து தீதின்றியே வரின் வானோர் கதி மெல்லினம் ஈறின்றி மேவும் நெடில் முதல் நான்கும் வந்தால் சொல்லினர் மக்கள் கதி எனச் சொன்ன மொழி முதற்கண் புல்லும் எனின் இவை எல்லாப் புலவரும் போற்றுவரே. 2.20 - 23 இதுவும் அது பன்னொன்று பத்துயிர் அம் முதல் மூன்று பன்னேழ் பதினைந்து என்னும் அவையே விலங்கின் கதியாம் பா எழுத்துத் தன்னை நரக கதி என்று சாற்றுவர் தரமுணர்ந்தோர் முன்னை மொழிக்கண் வரத்தகா என்று மொழிவார்களே. 2.21 24 கணப் பொருத்தம் நேரசை மூன்றும் அமரன் நிரைப் பின்பு நேரிரண்டு சேர்வன திங்கள் நிரையசை மூன்றும் செழு நிலமாம் நேரசைப் பின்பு நிரை இரண்டாய் வரின் நீர்க்கணமாம் தேரிய அல்குல் திருவே இவை நல்ல சீர்க்கணமே. 2.22 - 25 தீய கணம் நிரை இரண்டாய் பின்பு நேரிறின் அந்தரம் நேரிரண்டாய் நிரையிறின் மாருதம் நேர்நடுவாகி நிரைஇருபால் விரைதரு கோதை வெந்தீக்கணம் நேரிரண்டின் நடுவே நிரைவருமாயில் பருதி இந்நாற்கணம் நீக்கினரே. 2.23 - 26 பத்துவித அங்கம் மலை ஆறு நாடு ஊர் மலர் தார் வயப்பரி வார் மதத்த கொலைஆர் களிறு கொடி முரசு ஆணை குலவும் பத்தும் தலையான நூலோர் தசாங்கமது என்ப தமதயலே கொலையான சொல் பொருள் தோன்றிடின் ஆநந்தம் கூறுவரே. 2.24 - 27 தசாங்க முறையில் ஓன்று உன்னும் தசாங்கம் ஒருசீர் அதனுள் உரைப்பதன்றிப் பின்நின்ற சீரோடு சேர்ந்து பிளவு படில் பிழையாம் இன்னும் அவைதாம் புணர் மொழி ஆயின் இயல்பு பெறும் மின்னும் வெளியும் துடியும் நிகர் இ¨டு மெல்லியலே. 2.25 - 28 3. செய்யுள் மொழி இயல் பிள்ளைக்கவி - முன்மொழி வினை பூவின்திருவைப் புணர்தலின் பொன் முடி பூண் கடகம் மேவப் படுதலின் வெண்சங்கம் ஆழி விரும்புதலின் காவல் கடவுளைக் கார் முகில் வண்ணனைக் காசினியோர் பாவுக்கு முன்னே பகருவர் காப்பாய் பனிமொழியே. 3.1 - 29 இதுவும் அது விரிசடைப் பிஞ்ஞகன் வேய்த் தோள் எழுவர் முன் காக்க என்ன அருள் பெறக் கூறின் அவரவர் செய்யும் கொலை அகற்றி உரிய நல்கங்கை உமையாள் மதி ஊர்விடை கடுக்கை விரைமலர்த்தார் மற்று மங்கலமாக விளம்பினரே. 3.2 - 30 இதுவும் அது பதினோரு மூவரும் பங்கயத்தோனும் பகவதியும் நீதி முதலோனும் பரிதியும் சாத்தனும் நீள்அமரர்க்கு அதிபதிதானும் அறுமுகத்து ஐங்கரத்து அற்புதனும் மதிபுனை வேணி வடுகனும் காவல் செய் வானவரே. 3.3 - 31 பிள்ளைக்கவி - 10 பருவங்கள் முன்தந்த காப்புச் செங்கீரை தால் சப்பாணி முத்தத்தொடு மற்றந்த வாரானை அம்புலி வாய்ந்த சிறுபறையே சிற்றில் சிதைத்தல் சிறு தேர் உருட்டுதல் சேர்ந்த பத்தும் சுற்றத்தளவும் கவிக்கு எல்லையாய்க் கொண்டு சொல்லுவரே. 3.4 - 32 10 பருவ வரையறை மூன்று முதல் இருபத்தொரு திங்கள் முடிவு அளவாய்த் தோன்று நிலைபத்தும் சொல்லுவர் தோகையர் தங்களுக்கும் ஆன்ற புகழ்ச்சிக்கும் அவ்வகையாம் என்பர் ஐந்தேழ் என ஏன்ற நல் யாண்டின் அகவரை தானும் இயம்புவரே. 3.5 - 33 பருவங்கள் - பாடல் பகுஎண் சொன்ன சிறுபறையே முதல் மூன்றும் சுருங்கி வரும் மன்ன விருத்தம் வகுத்த ஈரெண்கலை வண்ணச் செய்யுள் அன்னவை ஓர் ஐம்பதில் அ·காது எல்லை அறைவர் கற்றோர் பொன்னும் மணியும் நற்போகமும் ஈன்ற புணர் முலையே. 3.6 - 34 ஓர் புறநடை சிறுபறையே முதல் மூன்றும் தெரியில் அப் பேதையர்க்குப் பெறுவன அல்ல இளையனே ஆயினும் வேந்தன் பெறான் மறுவில் முடிசூடின் பிள்ளைக்கவி காப்பு மாலை முன்னே அறிபவர் ஒன்பதும் பன்னொன்றும் ஆக அறைவர்களே. 3.7 - 35 கலம்பகம் - அமை உறுப்புகள் மூலம் ஒருபோகு வெண்பாக் கலித்துறை முன் உறுப்பாய் ஏலும் *புயத்தோடு அம்மானை பொன்ஊசல் யமகம் விற் கோல #மறம் குறம் சிந்து நல்கைக்கிளை கொண்ட தூது காலம் மதங்கி களி சம்பிரதம் கலம்பகமே. 3.8 - 36 கலம்பக பா யாப்பு சொன்ன கலம்பகம் தொக்க அச்செய்யுள் துடியை வென்ற மின் இடை வெண்துறை வெண்பா வகுப்பு அகவல் விருத்தம் இன்இசை ஆசிரியம் ஆசிரிய விருத்தம் எல்லாம் மன்னு மருள்பா வஞ்சித்துறை வஞ்சி விருத்தம் என்னே. 3.9 - 37 கலம்பக பா எண் வரையறை தேவர்க்கு நூறு முனிவர்க்கு *இழிஐந்து சேண் நிலத்தே காவற்குரிய அரசற்குத் தொள் நூறு காவலரால் ஏவல் தொழிலவர்க்கு எண்பது எழுபது இருநிதியம் மேவப்படும் அவர்க்கு ஐம்பது முப்பது மிக்கவர்க்கே. 3.10 - 38 மும்மணி மாலை / கோவை, நான்மணிமாலை முன் ஆசிரியம் பின் வெண்பா கலித்துறை முப்பது என்று சொன்னார்கள் மும்மணிக்கோவைக்கு மும்மணிமாலை சொல்லின் அன்னான்மறைப்பாக் கலித்துறை ஆசிரியம் விருத்தம் இந்நால் வகைச் செய்யுள் நாற்பது நான்மணிமாலை என்னே. 3.11 - 39 இருபாஇருப·து, இணைமணி / இரட்டைமணி மாலை இருபா இருபது வெண்பா அகவல் இரட்டைமணி தருபா இருபது வெண்பா கலித்துறை தாம்இவயாம் வருபா இரண்டு இரண்டாய்த் தம்முள் மாறின்றி நூறுவரின் பொருமான் விழியாய் இணைமணிமாலை புகல்வார்களே. 3.12 - 40 பல்சந்தம், வெண்பா / கலித்துறை அந்தாதி, தெகைவெண்பா பத்தாதி நூறு அந்தம் பல்சந்தமாலை அந்தாதி வெண்பா வைத்தார்கள் நூறு கலித்துறை தன்னையும் மற்ற வெண்பா ஒத்தான ஐம்பது எழுபது தொள்நூறும் பேர்பெற்றதாய் இத்தாரணியில் புலவோர் எல்லாம் இயம்புவரே. 3.13 - 41 ஒலியந்தாதி, பன்மணிமாலை ஈட்டிய ஈரெண்கலை வண்ணச் செய்யுள் இயைந்த முப்பான் கூட்டிய நீடு ஒலியந்தாதி கூறும் கலம்பகத்தின் ஆட்டிய அம்மானை ஊசல் ஒருபோகும் அற்று வந்தால் பாட்டியல் பல்மணிமாலை என்று ஓதுவர் பாவலரே. 3.14 - 42 சின்னப்பூ, தசாங்கம் நேரும் தசாங்கத்தை நேரிசை வெண்பாவின் ஈரைம்பது சேர ஓர் தொள் நூறு எழுபதோடு ஐம்பது செப்பிடும்கால் ஆரியர் சின்னப்பூ என்றே உரைப்பர் அவை ஒருபான் சாரில் தசாங்கம் என உரையாநிற்பர் சான்றவரே. 3.15 - 43 யானை / குதிரை / வேல் / வில் / வாள் / குடை / கோல்-விருத்தம், ஊர்வெண்பா ஆனை குதிரை எழில்வேல் வில் வாள் குடை கோல் இவற்றின் ஈனமில் நாடு நகரம் திறம் என்பர் மேவியபால் ஆன திறத்து ஆசிரிய விருத்தம் ஈரைந்து வந்தால் ஊனமில் வெள்ளை பத்து ஊர்வெண்பாவாக உரைப்பார்களே. 3.16 - 44 அலங்காரபஞ்சகம், கைக்கிளை வெண்பா கலித்துறை ஏறுஆசிரியம் விருத்தம் வண்ணம் பண்பால் வருவன அலங்கார பஞ்சகமாம் பகர்த்த நண்பால் ஒருதலைக் காமம் நவின்ற விருத்தம் வந்தால் பெண்பால் வரின் கைக்கிளையாம் எனறு பேசுவரே. 3.17 - 45 பாதாதிகேசம், கேசாதிபாதம், அங்கமாலை கடிதல் இல்லாக் கலிவெண்பா பகரும் அவயவங்கள் முடிவது கேசம் அக்கேசம் முதலடி ஈறும் வந்தால் படி திகழ் பாதாதி கேசமும் கேசாதி பாதமும் ஆம் மடிதல் இல் வெண்பா விருத்தம் பல அங்கமாலை என்னே. 3.18 - 46 மேற்படி பாவினில் வரும் 32 உடல் உறுப்புகள் அகம் கால் உகிர் விரல் மீகால் பரடு கணை முழந்தாள் மிகும் கால் நிதம்பமும் உந்தி உதரம் அரை முலையும் நகம் சார் விரல் அங்கை முன்கை தோள் கண்டம் முகம் நகை வாய் நகும் காது இதழ் மூக்குக் கண் புருவம் நெற்றி தாழ்குழலே. 3.19 - 47 உலா, தூது, குழமகன் தெருவினில் பேதை முதல் எழுவோர்கள் திறத்து வகை ஒருவனை ஏத்தும் கலிவெண்பா தூது உலா ஒண்தொடியாய் மருமலர்க் கையில் குழமகன் மேல் வைத்த மன்னவர்க்குத் தரு கலிவெண்பாக் குழமகனாம் என்று சாற்றுவரே. 3.20 - 48 மகடூஉ பருவங்கள் பேதை முதல் எழுவோர்க்குப் பிராயங்கள் பேசிடும்கால் ஆதியில் ஐந்து ஏழ் பதினொன்று பன்மூன்று பத்தொன்பதே மீதுஇருபத்தைந்து முப்பத்தொன்றாகிய நாற்பது என ஓதுவர் தொல்நூல் பருணிதர் எல்லாம் உணர்ந்து கொண்டே. 3.21 - 49 மடல் பொருள் அறம் வீடு பழித்து இன்பமே பொருளாக்கி நல்லார் அருள்பெறு வேட்கை மடல் மிக ஊர்தலில் பாட்டுடையோர்க்கு உரிதரு பேரில் பெயருக்கு இசைந்த எதுகையினால் வரு கலிவெண்பாத் தனை மடலாக வகுத்தனரே. 3.22 - 50 நாம / புகழ்ச்சி / வஞ்சி மாலை பாதம் பல மயங்கும் வஞ்சி ஆடவரைப் பரவி ஓதும் அது நாம மாலை உரைத்த தவச்செய்யுளினால் மாதரை ஏத்தின் புகழ்ச்சிநன்மாலை மற்று எப்பொருளும் நீதியினால் சொல்லின் அப்பெயரால் வஞ்சி நேர்ந்தனவே. 3.23 - 51 யானை விருத்தம் பிறந்த நிலம் குலம் ஓக்கம் அளவு பிராயம் எழில் சிறந்த மாக் கோபக்கிரமத்தில் விட்ட கதிர்சினத்தில் இறந்து உயர் கோடல் செயக்கண்டு இறை கந்தினில் பிணித்தல் உறைந்திடும் வஞ்சி உரமுடை யானைத் தனித் தொழிலே. 3.24 - 52 நயன / பயோதர பத்து - பொன்னூசல் அரசர் விருத்தம் கலித்துறை ஈறைந்து கண் முலைமேல் பரசின் நயனம் பயோதரம் சேர்ந்த விருத்தம் என்ப வரன்முறை சுற்றத்(து) அளவாம் பொன்னூசல் வடிவுதுற்றே உரைசெய் கலித்தாழியை பொன்னூசல் என்று ஓதுவரே. 3.25 - 53 அரசன் விருத்தம் அரசன் விருத்தம் கலித்துறை ஈறைந்து அகன் மலைமேல் விரவிய நாடு நகர் சிறப்பாய விருத்த முப்பான் உரைசெய் கலித்தாழிசையும் வாள்மங்கலம் ஓதுவது புரவலர் ஆயவர்க்காம் என்றுரைப்பர் புலவர்களே. 3.26 - 54 அட்டமங்கலம், நவமணிமாலை, தசாங்கம் இறைவனை ஏத்திய எட்டு ஆசிரிய விருத்தம் வண்ணம் மறைமுதலோர் அட்டமங்கலம் என்ப மற்(று)ஒன்பது அவை நறைவளர் கோதை நவமணிமாலை பத்தான் வரினே குறை(வு)இல்லது தசங்கூறில் தசப்பிராதுற்பவமே. 3.27 - 55 மெய்கீர்த்தி, ஆற்றுப்படை சிறந்த மெய்கீர்த்தி அரசர் செயல் சொற்றனவாறு செய்யுள் அறைந்த(து) ஓர் சொல் சீரடியாம் புலவர்கள் வாழ்த்து நலம் நிறைந்த பொருநரைக் பாணரைக் கூத்தரை நீள் நிதியம் பெறும்படி ஆற்றுப்படுப்பன ஆசிரியம் பெறுமே. 3.28 - 56 கோவை, நாழிகைக்கவி பொருளதிகாரத் திறத்தைப் புகன்று கலித்துறைகள் வருவது நானூறு கோவை என்று ஆகும் அவ்வானவர்க்கும் அரசர் தமக்கும் அறிய உரைத்த கடிகைகவி உரை செய்யுள் முப்பத்திரண்டு வெண்பா என ஓதுவரே. 3.29 - 57 மருட்பா பிரபந்தம் புறநிலை வாயுறை வாழ்த்து புவியில் ஒருவன் செவி அறிவே உறுத்தல் அகப்புறக் கைக்கிளை ஆன இந்த நெறியில் பொருள்களை அன்றி மருட்பா நிகழ்த்தினால் அறிய இந்நாற்செய்யுள் அல்லாத பாவினும் ஆம் என்பரே. 3.30 - 58 பரணி புறநடைசேர் குரவைப் பொருள் மேல் இங்கு இருவர் மன்னர் திறனுடைய யானை படை செற்று வென்ற ஒருவன் செய்கை நெறிபடு நேரடியே முதல் நீண்டன ஈறடியாய்ப் பெறல் அரும் தாழிசையால் பரணிப்பெயர் பேசுவரே. 3.31 - 59 இதுவும் அது மற்றது வானவர் வாழ்த்துக் கடை வாழ்த்துப் பாலை நிலப் பெற்றி பிறைமுடி சூடு இறையோன் பெருந்தேவி மகிழ்ந்து உற்று உறை கோயல் அவளை உரைத்தல் அலகைக் குழாம் சுற்றிய வண்ணம் அவைதம் பசியைப் பின் சொல்லுதலே. 3.32 - 60 இதுவும் அது ஆங்கு கனாத்துள் நிமித்தம் வகை அறிவித்திடவே பாங்கில் பனிமொழி பொன்முடி மன்னவர் தம்பகையார் தீங்கில் செருச் செய்தொருவன் திறல் வாகை சென்னி வைத்தல் ஈங்(கு) உற்றிடவே(று) ஒரு பேய் உவகை இசைத்திடலே. 3.33 - 61 இதுவும் அது உண்டாம் உவகைதனை அவரால் மகிழ்ந்து ஓலக்கத்தில் கொண்டாடல் கூறிய பேயினைக் கூவிக் கொலைக் களம்தான் கண்டு ஆர்ப்(பு) உறல் களம் வாழ்த்துதல் கைம்மலை வெண்மருப்புத் தண்டால் உலந்தவர்தம் பல் தரளம் தடுக்குதலே. 3.34 - 62 இதுவும் அது முடி அடுப்பில் தோல் வயிற்றுக் குழிசியில் மொய் குருதி நெடு உலை ஏற்றி நிணம் பெய்து கோப நெருப்(பு) எரித்துத் தொடி உடை தோள் துடுப்பில் துழாய்ப் போய் ஊட்டஅம்மை உண்டு அங்கு அடுதிறல் மன்னனை பன் ஊழி வாழ அருளதலே. 3.35 - 63 இதுவும் அது இன்னும் அப்பேய்கள் இயற்றிய கூழ் பசி தீர உண்டு துன்னி நின்று ஆடுதல் சூழும் கவந்தங்கள் தாம் ஆடுதல் மன்னும் புறப்பொருள் நூலோர் உரைவழுவா வகையே முன்னும் மொழிந்தபடியே புணர்த்திக் கொள் மொய் குழலே. 3.36 - 64 பெரும் காப்பியம் முன்னம் வணக்கம் அறம் முதல் நான்கின் திறம் உரைத்தல் தன்நிகர் இல்லாத் தலைவனைக் கூறல் தசாங்கங்களை வன்னித்தல் வாய்ந்த பருவம் இருசுடர் தோற்றங்கள் தாம் இன்னன கூறல் பெரும் காப்பியத்துக்(கு) இலக்கணமே. 3.37 - 65 இதுவும் அது பொன்முடி சூடல் பொழில் விளையாடல் புனல் ஆடுதல் நல்மணம் செய்தல் நறவு ஊண் களிப்புக் கலவி துனி மன்னும் புதல்வர்ப் பெறுதல் நல் மந்திரம் தூது செல்லல் இன் இகல் வென்றி வகை சந்திக் கூறல் இக் காப்பியமே. 3.38 - 66 இதுவும் அது விருப்பம் தரும் சுவை பாவ விகற்பம் இரு பாக்களால் உரைத்த இனத்தால் உரையோடு உடன்பட மெல்ல வந்து சருக்கம் இலம்பகமாம் பரிச்சேதம் என்னும் பெயரே தெரித்து வருவது செப்பிய காவியம் தேமொழியே. 3.39 - 67 காப்பியம் - புறநடை நெறி அறிந்து அவ்வாறு இயற்றியவாறு நிலை நிற்றலும் பெறும் பெயர் என்பது பேசும் அறம் முதல் நான்கினும் தான் குறைவரினும் முன்கூறிய காவியம் கோகனகச் செறிமலர் அல்லிப் பொகுட்டினில் வாழும் திருந்திழையே. 3.40 - 68 தொகைநிலைச் செய்யுள் பாட்டு பொருள் இடம் காலம் தொழில் பாட்டளவின் எண்ணின் நாட்டித் தொகுத்தவும் செய்தவன் செய்வித்தவன் தம்பேர் மூட்டித் தொகுத்தவும் ஆகி முதல் நூல் மொழிந்த நெறி கேட்டுத் தெரிந்து கொள் கிஞ்சுக செவ்வாய்க் கிளி மொழியே. 3.49 - 69 சித்திரக்கவி நெறி சக்கரமே முதல் சித்திரச் செய்யுள் தசாங்கங்களை அக்குஅற கூறுபடுப்பினும் ஆநந்தம் அல்லவற்றின் இக்குணம் இல்லாமை ஆனவை சொன்ன இவையும் அன்றி மிக்குள யாவையும் இமையோர்க்கு இலக்கு விலக்கிலவே. 3.50 - 70 இசை செய்யுள் திறம் - புறநடை பா ஆனவை இசைதம்மில் பயிறல் அப்பா இனத்தில் தாவாத வெண் செந்துறை சந்தம் *தாண்டகம் தாம் அனைத்தும் மேவாத வல்ல வினைப்பாத் தமிழ் வெற்பின் வேதமுனி நா ஆர் தமிழ் நடைக்கே புணர்திக் கொள்க நல்நுதலே. 3.51 - 71 4. பொது மொழி இயல் பொதுப் பாயிரம் தன்சிறப்புப் பாயிரம் ஈவார்இயல்பு அவை ஈகைமுறைமை இவை உணர்தல் ஆவார் திறம் இவை கேளாயலாதி இந்நாற் பகுதி தாவாது உரைத்தல் பொதுப் பாயிரம் தனி வானவரை ஓவாது இறைஞ்சி அதிகாரம் உன்ன உரைப்பார்களே. 4.1 - 72 சிறப்புப் பாயிர இயல் செய்தான் செயப்பட்டது செய்பொருளது செய்திறத்தோடு எய்தும் பயன் இன்னதன் வழி எல்லை என ஓர் எட்டும் ஐயம் இல் காலம் அவை காரண்மாக பத்தோடு ஒன்றும் மெய் தெரியில் சிறப்புப் பாயிரம் என்ன வேண்டுவரே. 4.2 - 73 இதுவும் அது நூல் பெயர் நூல் செய்த ஆசிரியன் பெயர் நூல் விளங்கித் தேற்றிடச் செய்தற்கு காரணம் யாப்புத் தொல்நூலின் வழி பால்படும் எல்லை அறிதல்பயன் இவையும் சிறப்பின் மேற்படு பாயிரம் என்று ஆசிரியர்கள் வேண்டுவரே. 4.3 - 74 நூல் வகை அடக்க உறுப்பு பண்பு முதல் வழி சார்பு என மூவகைத் தந்திரம் சூத்திரமும் உதவு விருத்தி உயர் தருமம் முதல் நான்(கு) ஏழ்வரை மதவிகற்பம் பத்துக்குற்றத்தும் தீர்ந்து பத்துகுணத்தின் நுதலும் பதின்மூன்றுள் முப்பத்தி இரண்டு உள நூல் நெறியே. 4.4 - 75 அந்தணர் பொருள் கோல் குடை கோவணம் நான்மறை முத்தீக் குசை தருப்பை மால் கழல் வாழ்த்தல் இரண்டுபிறப்பு மணை சமிதை தோல் ஐந்துவேள்வி கரகம் அரவிந்தம் தோல் கோத்திரம் நூல் இருமூன்று அங்கம் அந்தணர்க்கு ஓதுவர் நூலவரே. 4.5 - 76 அந்தணர் கடன் ஈதலும் வேட்டலும் ஓதலும் வேதம் இயற்றுவிப்பார் ஆதலும் அங்கி அயனோடு உவமை அவர் எனவே ஓதலும் பூசுரர் என்றலும் நான்மறையோர்க்கு உரிய போதினும் வெற்பினும் நாவினும் மேவும் புனை இழையே. 4.6 - 77 மன்னவர் பண்பு பூவைநிலை பகலோன் கழல் போற்றல் புனைதல் முடி தேவர் உவமை சிங்காதனம் செங்கோல் குடை கவரி காவல் நிகழ்த்தல் எரிவேட்டல் ஓதல் கடல் அமுதம் மேவல் அடுகளம் வேட்டல் பண்பாயின வேந்தர்க்கே. 4.7 - 78 மன்னவர் கடன் விளங்கிய நூல் கற்றல் வேத நெறியில் நின்று அறுசமயம் உளம் கொண்டு போற்றல் அமைச்சர் உரைகொளல் ஓர்ந்து குடி தளர்ந்தன தாங்கல் முறைமை கெடாது தனம் பெருக்கல் அளந்து பெரும்படை சேர்த்தல் அரசர்க்கு அடுத்தனவே. 4.8 - 79 வணிகர்க்கு உரிய இருபிறப்பு ஓதல் எரிவேட்டல் ஈதல் இருநிதியம் வருதிறத்தால் நல்ல வாணிபம் செய்தல் நிரை வளர்த்தல் பேருநிதிக்கோன் கழல் பேணல் அவன் என்று பேச நிற்றல் உரிமை தப்பா வணிகர்க்கு இயல்பாம் என்பர் ஒள்நுதலே. 4.9 - 80 வணிகர் கடன் உறுவது கோடல் வருபயன் தூக்கல் உழவின் தொழில் இறுவது அஞ்சாமை இடரில் தெளிதரல் ஈட்டுதற்கு நெறிபல போதல் முனிவு இலன் ஆதல் நிரை வளையயாய் குறி எனல் ஆகும் குலவணிகர்க்குக் குவலயத்தே. 4.10 - 81 வேளாளர் இயல்பு திருந்திய நல்அறம் தீராத செல்வம் ஒழுக்கம் மேன்மை வருந்திய சுற்றத்தை ஆற்றல் மன்னர்க்கு இறை இறுத்தல் பொருந்திய ஒற்றுமை கோடல் புகழும் வினை தொடங்கல் விருந்து புரம்தரல் வேளாண்குடிக்கு விளம்புவரே. 4.11 - 82 வேளாளர் கடன் வாணிபம் செய்தல் உபகாரம் ஆசாரம் ஆய்ந்த செயல் பேணி உழுதல் இருபிறப்பாளர் நெறி வழுவா ஆணை வழி நிற்றல் ஆன்நிரை போற்றல் அகன்ற அல்குல் பூண்முலையாய் இவை வேளாண் குடிக்குப் புகன்றனரே. 4.12 - 83 பாட்டியற்றல் ஓர் முறை தானைத் தலைவரை ஏவல் பெற்றோரைத் தனிவெண்குடைக் கோனை அடுத்த பகைவரைக் கூறலும் கோன் தொழிலால் ஏனைக்குறுநில மன்னவர் தங்களை மன்னர் என்ன மானப் புகழ்தலும் செய்யுள் மொழியின் மரபு என்பரே. 4.13 - 84 பாடல்களை நோக்குநிலை வேதியன் வேந்தன் வணிகன் வேளாளன் என முறையே ஓதுவர் வெண்பா அகவல் கலி வஞ்சி ஓத அவற்றின் பேதமும் அவ்வகையானே வரும் என்ப பெய்தகட்டால் தாதுஅலரும் குழல்தாமரைச் செய்ய சரிவளையே. 4.14 - 85 புலவர் திறம் சாற்றும் தலைவனின் இயல்பெயர் ஊர்க்குத்தக எதுகை தோற்றினும் அப்பொயர் சொல்லும் அப்பாகங்கள் துன்னும் அச்சீர் ஏற்ற எழுத்து வரினும் இயைந்ததற்கு இயல் பெயர்க்கே ஆற்றும் பொருத்தம் அனைத்தும் பொருந்துதலாம் சிறப்பே. 4.15 - 86 உறுப்பழிந்த பாடல் தெற்ற வழக்கொடு தேர்ந்துணர்வார்க்கு இன்பம் செய்தலின்றிப் பற்றின் வடநூல் எழுத்துக்களே பழைபோர் உரையின் மற்(று) இவை இல்லை என்று ஓதல் உடன்படல் மரபியலாய்ப் பெற்றி உடைச் சொல் பழித்த உறுப்(பு) என்று பேசுவரே. 4.16 - 87 இளைமகளிர் - உவமை மரபு மான் இளங்கன்று மஞ்ஞையின் பிள்ளை மதிக்குழவி தேன் இன்அமுதம் தெள்ளா நறவம் செழும் கற்பகம் பூங் கால் நிற நீர்வல்லி கல்லாத கிள்ளை கரும்பின் முளை ஊன்நிற வேல்கண் மடவார்க்கு இயைந்த உறுப்புகளே. 4.17 - 88 மேலும் உவமை மரபு முருகன் உவமை முந்நான்கு முதல் எண்ணிரண்டு வரை அரசர்க்(கு) உரித்(து) அவர்தம்மோடு அமையல் அல்லார்க்(கு) உரித்துத் திருவொடு உவமை அரிவை முதலிய சேயிழையார் பருவத்(து) உரித்து என்ன ஓதுவர் தொல் நூல் பருணிதரே. 4.18 - 89 கவிஞர் / கவி வகை வாய்ந்தகவி கமகன் வாதி வாக்கி வகை வனப்பும் ஆய்ந்தவல் ஆசு மதுரமும் சித்திர வித்தாரமுமே ஏய்ந்த வகை நான்கும் கள்ளக் கவிமுதல் ஈறிரண்டும் தேய்ந்த பிறை நுதல் சேயிழையாய் இன்று தேர்ந்து கொள்ளே. 4.19 - 90 நல்ல அவை அறம் திறம் பா நல்அறிவோர் அறுபத்து நாற்கலையும் திறம் தெரிந்தோர் சினம் செற்றம் பொய் காமம் சிதைக்கும் சித்தம் மறந்தும் ஒர்கால் ஒருபால் படாதவர் மற்றும் குற்றம் துறந்தவர் தாங்களும் நல் அவையாம் என்று சொல்லுவரே. 4.20 - 91 நிறை உடை அவை பாங்காய் ஒருதிறம் பற்றாதவர் பல்கலைப் பொருளும் ஆங்கே உணர்ந்தோர் அடக்கம் உடையார் அவரவர்கள் தாம் காதலித்து மொழிவன கேட்போர் தரும நெறி நீங்காத நாவர் இருந்திடு கூட்டம் நிறைஅவையே. 4.21 - 92 தீய அவை சொற்றபடி சொற்றம்பு எய்பவர் சொல்லும் நல்சொல்லினையும் குற்றம் இ(து) என்று குலாவி உரைப்பர் கூறும் பரிசு உற்ற(து) உணர்ந்தோர் ஒருபால் படுபவர் பொய் உரைப்போர் செற்றம் சினத்தொடு செர்ந்தோர் இருப்பது தீ அவையே. 4.22 - 93 குறையுடை அவை பாடவம்பேசிப் பலகால் நகை செய்து பாங்(கு) உரைத்து நாடகம் காட்டி ஓர் நாயகம் இன்றி நவிலும் நல்நூல் ஏடகம் நோக்காது இகலே பெருக்கி அறத்தை விட்டுக் கூடகம் செய்து பொய் கூறா இருக்கும் குறை அவையே. 4.23 - 94 வேண்டுகோள் / பதில் ஓலை இயல் குற்றம் இல்லா ஓலைதன்னில் குலவு வெண்பா மன்னனைச் சொற்றதோர் பாவலர் அரசைப் பேசி பொருள் திறத்தின் உற்றவை என்று ஒன்று தன்னால் உரைப்பவன் தன்னைச் சொல்லி மற்றவன் தன்னையும் பின்னே உரைத்தல் மரபென்பவே. 4.24 - 95 வாதினில் வல்லோர் கதம்படல் இன்றிக் கருதிய மேற்கோளும் எய்துவிக்கும் மதம்படக்கூறி எடுத்துக்காட்டு ஏற்றி அளவை நெறி விதண்டை வாதம் சற்பம் என்னும் இவற்றின் மேல் உரைத்த மதங்க நெறி சொல்ல வல்லவர் வாதினில் வெல்லுவரே. 4.25 - 96 வாதினில் நீக்க பொருளல கூறல் புனருத்தி தோன்றுதல் புன்சொற்களால் மருள வழங்கல் வழுப்படச் சொல்லுதல் மற்றொன்றினைத் தெருள உரைத்தல் பயனில சொல்லுதல் செய்யில் தொல்நூல் தெரிபவர் எல்லாம் அவன் தொலைந்தான் என்று செப்புவரே. 4.26 - 97 அவைதனில் நீக்க கோணத்து இருப்பினும் கோபம் பெருக்கினும் குற்றம் என்று நாணத் தகும் அவை நாவில் பயிலினும் நாடி நல் நூல் ஆணைப்படி அன்றி அல்லவை சேய்யினும் ஆங்(கு) இருந்தோன் காணப் பொய் கூறினும் தோல்வி என்று ஓதுவர் கற்றவரே. 4.27 - 98 வென்றி தோல்வி நிலைப்பாடு நல் அவை கண்ணும் நிறை அவை கண்ணும் நயந்து ஒருவன் சொல்லிய வாதினில் தோற்றான் ஆனும் தொலைவல் என்ப வெல்லுவன் என்னின் மிகச் சிறப்(பு) எய்தி விளங்கும் என்ப அல் அவை தன்னின்முன் வெல்லினும் ஆகும் அவர் கீழுக்கே. 4.28 - 99 புலவர் தகுதி இயல்இசை நாடகம் மெய்யே உணர்ந்தோர்கள் எப்பொருளும் மயல் அற வாய்ந்தோர் வருணங்கள் நான்கினும் வந்துதித்தோர் உயர்நெறி நின்றார் அவை ஐயற்று ஓர் தெய்வத்தையே முயல்தரு சித்தத்தர் செய்யும் முன் பாடம் ஒழிந்தவரே. 4.29 - 100 இதுவும் அது இருபதிற்றாண்டினில் ஏறி எழுபதில் ஏறல் இன்றி வரு பருவத்தவர் வன்பிணி இல்லவர் மற்று உறுப்பில் ஒருகுறை அற்றவர் நாற்கவி வல்லவர் ஓங்கு அறத்தின் பரசுடை யாளர்கள் செய்யுளின் பாடல் பகர்பவரே. 4.30 - 101 புலவர் ஆகாதவர் மூன்று தமிழின் முறை உணராதவர் நாற்குணத்தின் சான்றவர் அல்லர் தாழ்ந்த உறுப்பினர் தாம் பிணியில் தோன்றும் துயரத்தர் தெய்வம் தொழாதவர் தூய்மை இல்லோர் ஆன்றவர் பாடிடில் ஆநந்தமாம் என்று அறைவார்களே. 4.31 - 102 புலவராவோர் - ஓர்துறை இறப்பு நிகழ்வு எதிர் ஆன முக்காலத்தில் எப்பொருளும் திறத்துணர்ந்தேர் வாழ்வு சாவுரைக்கும் செந்நாப்புலவர் அறத்துறை நீங்கா அருளினர் நான்கு வருணத்தினும் பிறப்பிழிந்தோர் என்னினும் அவர் பாடில் பெருநலனே. 4.32 - 103 உரைக்கும் களம் புகழ்ந்த நல்நாளில் புகன்ற முகூர்த்தத்தில் புள் பொருந்தின் திகழ்ந்த நல்மங்கலச்சொல் முதல் யாவும் அறிந்துடனே பகர்ந்தவர் செய்யுளைப் பல்கலை வல்லோர் தமக்குணர்த்தி இகழ்ந்தன நீக்கி முறையே வகுத்தல் முறை என்பாரே. 4.33 - 104 இதுவும் அது நல்லிடம் மெழுகி இல் விளக்கேற்றி நறுமலர்த் தூஉய் நெல்லும் பரப்பி மேல் விதானித்து நிறைகுடம் நிறுத்தி பல்வகை யான பிரம்பும் கொணர்ந்து பயனும் அறிய வல்லவர் கூடி கலைமகள் பாதம் வணங்கு வோரே. 4.34 - 105 இதுவும் அது ஆங்குத் தலைவன் பலபடியானும் அலங்கரித்துப் பாங்கில் பெருந்தவப் பாட்டியல் பாட்டினை நன்குணர்ந்து பூங்கற்பகம் போல் நவமணி ஆடைகள் பொன் பொழிந்து வாங்கிக் கவிமுறை வந்தனை செய்கை மரபென்பரே. 4.35 - 106 பரிசில் ஈயார்க்கு உறுவது பரவிய பாவலர் பாக்கொண்டவர்க்கு பரிசில் திறம் வரிசையில் நல்காது ஒழியில் ஆநந்தமாம் மற்றவர்கட்கு உரை செய்த எல்லாம் வசையாய் உயர்ந்தோர் விரும்பல் இன்றித் தரையில் நிற்கும் பெரும்பழி என்று சாற்றுவரே. 4.36 - 107 இதற்குப் புறநடை இறப்ப உயர இறப்ப இழிய இசைக்கும் செய்யுள் திறத்தன யாவையும் தீதென்(று) உரைப்பர் செப்ப(து) ஒழிந்த புறத்(து) உள ஆயினும் தொல் நூல் நெறிமேல் புகலப்படும் நிறத்தில் குவளையும் காவியும் போலும் நெடுங் கண்ணியே. 4.37 - 108 நவநீதப் பாட்டியல் முற்றிற்று |